கூண்டுக்கிளி-கவிதை-பவானி தம்பிராஜா

நீயின்றி நானில்லை என்று நீ என்னிடம் கூறிய நாட்கள்

பவானி தம்பிராஜா

மலையை மறைத்து நகரும் கார்மேகங்கள்
மழைநீரை உறுஞ்சிச்சிலிர்த்து நிற்கும் மரங்கள்
மெல்லெனத் தாலாட்டிச் செல்லும் தென்றல்
அனைத்தையும் நாம் ஒன்றுகூடி ரசித்த நாட்கள்
காதலில் மலர்நத மொட்டு பூவாய் விரிந்த நாட்கள்
நான் கைக்குழந்தையுடன் கர்ப்பந்தரித்திருக்கையில்
காதலை மீறி காமம் கரைபுரண்டோடியதோ?
நீ பட்டாம்பூச்சியாய் மலர்விட்டு மலர்தாவுவதை
அறிந்து மௌனமாய் மனதுள் அழுத நாட்கள்
மனச்சாட்சி உறுத்தியதோ? குடிபோதை!
குடிபோதையில் நீ கதவுதைக்கையில் பயந்த நாட்கள்
உன் கைகளினிடையே கசங்கிய நாட்கள்
நீ என்னைப் பந்தாடிப் பரிகசித்த நாட்கள்
எல்லாம் கடந்து போன நாட்கள்
ஆனால் வேலியே புல்லை மேயுமென
நான் எதிர்பார்க்கவேயில்லை – உன்
மரபணுவில் மலர்ந்தமலரையே நீ கொய்ய
முயன்றபோதுதான் நான் விழித்துக் கொண்டேன்
கூடு கலைந்தது குஞ்சுகளுடன் பறந்தேன்
நானோ இரை தேடும் பறவையாக!
நீயோ மலர் தாவும் வண்டாக!
என்றும் சமாந்தரமாக!

000000000

கூண்டுக்கிளி

எல்லாவற்றையும் கடந்து
வந்துவிட்டேன் ஆனால்
உன்னைமட்டும் கடந்துசெல்ல
என்னால் முடியவில்லை
காலம் செல்லச்செல்ல
தூரமும் ஏனோ அதிகரித்தே
சென்றது ஆனால் இதயங்கள்
மட்டும் ஒன்றாக ஒருமித்து

சந்தித்தகணங்களில் நாம்
உதிர்த்த கண்ணீர் பூமியின்
வெப்பநிலை அதிகரிப்பாலும் உலரவில்லை
நீ என்னைத் தேடிவந்த நேரங்களில் எல்லாம்
நம்மைமறந்து கூடிக்குலவியிருந்தோம்

நான் என்னை முழுமையாக
உனக்குத் தந்தகணங்கள்
நீ எனை ஏற்று எடுத்த கணங்கள்
மீண்டும் பிரிந்துசென்ற நேரங்களில்
நம் இதயத்தின் வலி
ஏனோ பன்மடங்காய் அதிகரிக்க
நாம் மரங்களில் செதுக்கி வைத்த
நம் காதல் சோகங்களும்
விம்மிப் பொருமி வெடித்துப்
பெருந்தளும்புகளாக நம்கதை கூறியது

பல ஆண்டுகள் காட்டிலே வாழ்ந்தோம்
பறவைகளுக்கும் நம்கதை தெரியும்
நேற்று நான் தனியாகக் காடு சென்றேன்
நீ எங்கேயெனப் பறவைகள் கேட்டன
நீ பறந்து சென்று விட்டாய் என்றேன்
நம் இறகொடித்துத் தருகின்றோம்
நீயும் பறந்துவிடு என்றன
பறக்க நினைத்தேன் முடியவில்லை
வலி குறையும் என நினைத்து
அழுவதில் எந்தப் பலனுமில்லை
சிரிக்கலாம் என நினைத்தால்
அதுவும் முடியவில்லை
நடிக்கலாம் என நினைத்தால்
பாத்திரம் கிடைக்கவில்லை
சென்றுவிடலாம் என நினைத்தால்
கடமை விடவில்லை
என்ன செய்வதென்றே தெரியாமல்
கூண்டுக்கிளியாய் வாழ்க்கை தொடர்கிறது

00000000000

நீ அணைந்தாலும் உன் சுடர் என்னுள் ஒளியேற்றும்
வழிகள் பல திறந்திருந்தும் வழிதெரியாது நின்றபோது
வழிகாட்டியாய் நீ இருந்தாய்….
எந்தவழியும் முடிவதில்லை, முடிவதுபோல்த் தோன்றினாலும்
இன்னொரு வழி தானாய்ப் பிறக்கும் என்றாய்

அராஜகத்தின் ஆதிக்கத்தைத் தகர்த்தெறி என்றாய்
அநியாயம் செய்வோரைத் தட்டிக்கேள் என்றாய்
சட்டத்தின் முன் இழுத்துச் செல் சத்தியம் வெல்லும் என்றாய்,
ஆனால் சட்டமோ ஒரு இருட்டறை.

ஒவ்வொரு ஏணிப்படிகளிலும் ஏறத் தயங்கியபோது
என் பாதங்களைத் தூக்கி மேற்படியில் வைத்தாய்
இறங்காதே என எச்சரிக்கையும் விடுத்தாய்
விழமாட்டாய் வீழ்ந்தால் மீண்டும் என்மடியில் என்றாய்.

நீ நோயுற்ற போது கண்கலங்கி நின்றேன்
இறப்பு என்றால் என்ன என்று விளக்கமும் தந்தாய்
விளக்கம் நன்றாகத்தான் இருந்தது ஆனால்
ஆற்றொணாத் துயரம் நெஞ்சை நெருடியது.

நோயின் கொடும்பிடிக்குள் நீ சிக்கியது எந்த விதத்திலும் ஞாயமில்லை
அதைப் பார்த்துக்கொண்டு இருக்கவும் என்னால் முடியாது
நோயை நீ என்னுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியாது
நீ அணைந்தாலும் உன் சுடர் என்னுள் ஒளியேற்றும்

பவானி தம்பிராஜா- ஹொலண்ட்

பவானி தம்பிராஜா

 

 809 total views,  1 views today

(Visited 351 times, 1 visits today)