குளிரின் கொதிநிலை-சிறுகதை-ஸிந்து ஜா

சிந்துஜாபிச்சமூர்த்தி முன்தினம் மகள் வீட்டுக்கு வந்திருந்தார்.  அவரது பேத்திக்குப்  பத்து நாள் விடுமுறை என்றும் அவர் சென்னையிலிருந்து வந்தால் பேத்தியுடன் நிறைய நேரம் செலவழிக்கலாம் என்றும் கூப்பிட்டாள். சென்னையில் அவர் மகன் குடும்பத்துடன்தான் ரிட்டையரானதுக்குப் பிறகு இரண்டு வருஷமாக இருந்து வந்தார். பெங்களூர் வந்த உடனேயே தெரிந்து விட்டது, வீட்டுக்குள் இருக்கும் போது கூட ஸ்வெட்டர், கையுறை காலுறை  இல்லாமல் நடக்க  உட்கார படுக்க முடியாது என்று. பாவம் அறுபது வயது ஆகிறதே  என்று குளிர் அவரைப் பார்த்துப் பரிதாபப்படவில்லை.

மறுநாள்தான் அவர் கவனித்தார், பக்கத்து வீட்டிலிருந்து ஓயாமல் இருமல் சப்தம் வருகிறதே என்று. பொறுக்க முடியாமல் பெண்ணிடம் கேட்டார்.

“பாவம் கிழவர். வயசு எழுபத்தெட்டு ஆறதாம். இது சொந்த வீடுன்னு இங்க ஒண்டியா இருந்துண்டு தடுமார்றார். அடுத்த தெருல பையன் குடும்பத்தோடஇருக்கான். பெரிய வீடு. அவனோடதும் சின்னக் குடும்பம். வசதியா போய்த் தங்கலாம். ஆனா அவன்கிட்ட போக மாட்டேங்கிறார். ஏன்னு தெரியல. கார்த்தால அவரே காபி போட்டுண்டு, டிபனுக்கு உப்புமா, ஓட்ஸ்ன்னு பண்ணி சாப்பிடறார்.. மத்தியானம் மாமி மெஸ்லேர்ந்து சாப்பாடு வரது.  அதுவே  ராத்திரிக்கும்  காணுங்கறார். அடிக்கடி உடம்புக்கு வேற வந்துடறது  அவருக்கென்ன சின்ன வயசா தாங்கிண்டு நிக்க ? ஆனா அடம்னா அப்பிடி ஒரு அடம்” என்று காயத்ரி சிரித்தாள்.

பிச்சமூர்த்திக்கு அடுத்த வீட்டுக்காரரைப் போய்ப் பார்க்க வேண்டும் போல இருந்தது. ஆனால் என்னவென்று அறிமுகப்படுத்திக் கொண்டு அங்கே போய் நிற்பது? சாயங்காலம் ஐந்து மணிக்கு காயத்ரி அவரிடம் வந்து “ரெண்டு மணி நேரமா அவாத்துலேர்ந்து ஒரு சத்தமும் இல்லையே . கவனிச்சேளா?” என்று கேட்டாள். பக்கத்து வீட்டு சாத்திய கதவின் முன் நின்று “தாத்தா! தாத்தா!” என்று கூப்பிட்டாள். பதில் எதுவும் வரவில்லை.

“அவாத்து சாவி எதுக்கும் ஒண்ணு நம்பாத்ல இருக்கட்டும்னு பிள்ளை குடுத்து வச்சிட்டு போயிருக்கான்” என்று சாவியை எடுத்துக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள். பிச்சமூர்த்தியும் அவள் கூடச் சென்றார். ஹாலில் இருந்த டி.வி.யில் தியேட்டரில் ஓடாத படம் ஒன்று அழுது கொண்டிருந்தது. கிழவர் கண்ணில் படவில்லை. வலது பக்கம் சார்த்தப்படாத அறையில் இருந்த பெரிய கட்டிலில் ஒரு சிறிய உருவம் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தது. காயத்ரி அவரருகே சென்று அழைத்தபடி தோளைத் தொட்டாள்.

அவர் கண் திறந்து பார்த்து “என்ன வேணும்?” என்று கேட்டார்.

காயத்ரி “எனக்கொண்ணும் வாண்டாம். சத்தமே இல்லையேன்னுதான் கவலைப்பட்டுண்டு வந்தேன்” என்றாள். அவர் முகத்தில் அரைச் சிரிப்பு ஒன்று மிதந்து வந்தது.

“எனக்கென்ன நன்னாத்தானே இருக்கேன்” என்றார் கமறிய குரலில். அவர் பார்வை பிச்சமூர்த்தியை அளவெடுத்தது.

“எங்கப்பா. ஊர்லேந்து வந்திருக்கார்” என்றாள் காயத்ரி.

“எங்க மெட்றாஸ்ட்லேந்தா? இல்ல லால்குடியா?” என்று பிச்சமூர்த்தியைப் பார்த்து கையசைத்துக் கேட்டார்.

“லால்குடி சொந்த ஊர்னு எப்பவோ  சொன்னதை எப்படி ஞாபகம் வச்சிண்டிருக்கார் பாருங்கோ?” என்று காயத்ரி வியந்தாள்.

“மெட்றாஸ்லேந்துதான். நேத்தி வந்தேன்.” என்றார் பிச்சமூர்த்தி.

“நாளைக்கே ஊருக்கு திரும்பிப் போகணும் போல இருக்குமே!” என்றார் பிச்சமூர்த்தி அணிந்திருந்த ஸ்வெட்டரையும் கையுறையையும் பார்த்து.

பிச்சமூர்த்தி  ஒன்றும் பதில் பேசாமல் புன்னகை புரிந்தார்.

“கண்ணெல்லாம் இடுங்கிருக்கே” என்றாள் காயத்ரி. “ஜொரம் இருக்கோ?” என்று நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.

“ஆமா. கொதிக்கிறதே!” என்று திடுக்கிட்ட குரலில் கூறினாள்.

“கொஞ்சம் வெந்நீர் போட்டுக் குடேன்” என்றார் கிழவர். “நாக்கெல்லாம் வறண்டு இருக்கு.”

காயத்ரி சமையலறைக்குள் நுழைந்து வெந்நீர் போட்டுக் கொண்டு வந்தாள். “மருந்து ஏதாவது வச்சிருக்கேளா?” என்று படுக்கை அருகில் இருந்த மேஜையைப் பார்த்தாள்.

“மேல் ட்ராயர்ல டோலோ சிக்ஸ் பிஃப்ட்டி இருக்கும் பாரு” என்றார். அவள் மாத்திரையை  எடுத்து அவர் வாயில் போட்டு வெந்நீர் நிரம்பிய தம்ளரைக் கொடுத்தாள். அவர் நீரை வாயில் ஊற்றிக் கொண்டார்.

“சரி. நான் போன் பண்ணி உங்க பையனை வரச் சொல்றேன்” என்றாள் காயத்ரி. “இந்த மாதிரி உடம்புக்கு வந்ததுன்னா அவனுக்கு போன் பண்ணச் சொல்லிருக்கான்.”

“நீ அப்படீன்னா லண்டனுக்குத்தான்   கால் போடணும். முந்தா நேத்துதான் கிளம்பிப் போனான்” என்றார் அவர்.

காயத்ரி “அடக் கண்றாவி !” என்றாள்.  “அப்ப நானே ராத்திரி சாப்பிடறதுக்கு கஞ்சி போட்டுத் தரேன்” என்றாள்.

“அதெல்லாம் வாண்டாம். உனக்கெதுக்கு சிரமம்?” என்று அவர் மறுத்தார்,

“அப்படீன்னா நான் உங்க மாட்டுப் பொண்ணை வந்து கூட்டிண்டு போகச் சொல்றேன். நீங்க வேண்டாம்னு ஒண்ணும் சொல்ல வேண்டாம்” என்று கூறி விட்டுக் கிளம்பினாள்.

பிச்சமூர்த்தி அவரிடம் “ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ. நான் அப்பறமா வந்து பாக்கறேன்” என்று விடை பெற்றுக் கொண்டார்.

காயத்ரி போன் பண்ணிஅரை மணியில் மாட்டுப்பெண் வந்து விட்டாள். “வா பூமா” என்று வரவேற்ற காயத்ரியையும் கூட்டிக் கொண்டு மாமனாரின் வீட்டுக்குள் நுழைந்தாள். பிச்சமூர்த்தியும் உடன் சென்றார். உள்ளே கிழவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவர் நெற்றியில் வேர்வை படர்ந்திருந்தது. காயத்ரி படுக்கை அருகில் கிடந்த மெல்லிய துவாலையை எடுத்து மென்மையாக அவர் முகத்தைத் துடைத்து விட்டாள்.

அவர்கள் ஹாலில் இருந்த இருக்கைகளில் உட்கார்ந்து கொண்டார்கள். டி.வி.யில் யாரோ ஒரு பெண் தமிலில் கடவுல்

 வால்த்து பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள்

“ரெண்டு நாளா இருமிண்டு இருக்கார். கொஞ்ச நாழியா ஒரு சத்தத்தையும் காணுமேன்னு வந்து பாத்தா சுருண்டு படுத்திண்டிருக்கார். கார்த்தாலேர்ந்து ஜுரம் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். அதுக்குத்தான் உனக்கு போன் பண்ணேன்” என்றாள் காயத்ரி.

“ரெண்டு நாளா எதுக்கு இருமலை வச்சு கொண்டாடிண்டு இருக்கணும்?” என்றாள் பூமா. “வான்னா மாட்டேன்னு அப்படி ஒரு வறட்டுப் பிடிவாதம். உங்களுக்குத்தான் தெரியுமே மாமி. ஒரு நாளைக்கி ஒரு தடவைதான் போன் பண்ணனும். அதுவும் நாங்க பண்ணிடப்படாது. அவர்தான் கூப்பிடுவார். இப்பன்னு பாத்து இவரும் ஊர்ல இல்ல. லண்டன் போயிருக்கார். இவ்வளவு உடம்பு முடியாததுக்கு வந்து எங்களோட இருக்கப்படாதா? எல்லாருக்கும் கஷ்டம்” என்றாள் தொடர்ந்து.

“யாரு?” என்று கிழவரின் குரல் கேட்டது. பேச்சுச் சப்தம் அவரை எழுப்பிவிட்டது போலும். எல்லோரும் அவர் அறைக்குச் சென்றார்கள். பூமாவைப் பார்த்ததும்.”ஓ, நீயும் வந்துட்டியா? குழந்தையை தனியாவா விட்டுட்டு வந்திருக்கே?” என்றார்.

“உங்களை கூட்டிண்டு போலாம்னுதான் வந்தேன். குழந்தையை பாத்துக்க அங்க வேலக்காரி இருக்கா” என்றாள் பூமா.

“எனக்கென்ன இப்ப? ஜொரம்லாம் விட்டு போச்சு. நீயே பாரு!” என்று தன் கையை நெற்றியில் வைத்துப் பார்த்தார். “ஜில்லுன்னு இருக்கு.”

“ஒரு நாள்ல ஆளையே ஓடிச்சு போட்டிருக்கு. நாலு நாள் போய் ரெஸ்ட் எடுத்துண்டுட்டு வாங்கோ.”என்றாள் காயத்ரி.

“அ ! நாலு நாளா? ” என்றார் கிழவர். பூமாவிடம் “வந்ததுக்கு கஞ்சி போட்டுக் குடு. வாய்க் கசப்புக்கு அதான் சரி” என்றார்.

அவர் பூமாவுடன் போகமாட்டார் என்று தெளிவாகத் தெரிந்தது.

“சரி, ராத்திரி நான் இவரோட படுத்துக்கறேன். நீங்க கவலைப்படாம போங்கோ” என்றார் பிச்சமூர்த்தி.

“அதெல்லாம் எதுக்கு?” என்று ஆரம்பித்த கிழவரிடம் பிச்சமூர்த்தி “நாங்க சொல்றத நீங்க கேக்காத மாதிரி நீங்க சொல்றதை நான் கேக்கப் போறதில்லே” என்றார்.

கிழவர் பிச்சமூர்த்தியின் கையைப் பற்றிக் கொண்டார்.

பூமா கஞ்சி போட்டு அவரிடம் சாப்பிடக் கொடுத்து விட்டுக் கிளம்பிப் போனாள். பிச்சமூர்த்தி பெண்ணின் வீட்டில் போய் இரவு டிபனை முடித்து விட்டு கிழவரின் வீட்டுக்கு வந்த போது அவர் ஹாலில் சோபாவில் உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்.

பிச்சமூர்த்தி கிழவருக்கு எதிர்புறம் இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.

படுத்துக் கொண்டிருந்த போது சிறிய உருவம் என்று நினைத்தது தப்பு என்பது போலக் கிழவர்  வித்தியாசமாக இருந்தார். ரொம்பவும் உயரமில்லை. ஆனால் நிச்சயம் குட்டையுமில்லை. அணிந்திருந்த சட்டையும் ஸ்வெட்டரும் அவரைப் பூசினாற் போலக் காட்டின. தலையில் இன்னும் கொத்து மயிர் வெள்ளையும் கறுப்புமாக இருந்து பிச்சமூர்த்திக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது. திருத்தமான முகம். இளம் வயதில் பல பெண்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும். எப்போது வேண்டுமானாலும் வெளிப்படுவேன் என்று உதட்டில் புன்னகை காத்துக் கொண்டிருந்த மாதிரி இருந்தது.

“நாள் பூரா கத்திண்டு இருக்கே ” என்றார் பிச்சமூர்த்தி டி.வி.யைப் பார்த்து.

“ஆமா. ஒண்டியா இருக்கறச்சே அது கத்திண்டிருந்தா யாரோ கூட இருக்கற மாதிரி இருக்கும் எனக்கு ” என்றார் கிழவர்.

பிச்சமூர்த்திக்கு தனக்குள் ஏதோ புரண்டு எழுந்து அடங்குவது போலிருந்தது.

கிழவர் திடீரென்று “உங்களுக்கு என்ன வயசாறது?” என்று கேட்டார்.

“அறுபது.”

“பாத்தா தெரியலையே. ஏதோ அம்பது அம்பத்தஞ்சு மாதிரின்னா இருக்கு” என்றார். அவர் முகமனாகச் சொல்லவில்லை என்று பிச்சமூர்த்திக்குத் தோன்றியது.

“அப்ப என் தம்பி வயசுதான். நா இனிமே உன்னைன்னு கூப்பிடட்டுமா? பாக்கறதுக்கு என் தம்பி மாதிரிதான் அசப்புல நீ இருக்கே” என்று ஒருமையில் பேசி இருவருக்குமிடையில் இருந்த தூரத்தை வெட்டி எறிந்தார்.

“தாராளமா அப்பிடியே கூப்பிடுங்கோ. உங்க தம்பி இப்போ எங்கேயிருக்கார்?” என்று கேட்டார் பிச்சமூர்த்தி.

கிழவர் வலது கையை உயர்த்தி வானத்தைக் காண்பித்தார். பிச்சமூர்த்தி கண்கொட்டாமல் அவரைப் பார்த்தார்.

“இந்த மே வந்தா ஒரு வருஷமாகப் போறது. ஒரே தம்பி. ஆளு கிண்ணுனுதான் இருந்தான். கவர்மெண்ட் சர்வீஸ். ரெண்டு வருஷம் பாக்கி இருந்தது. ஒரு நாள் சாயங்காலம் முதுகுவலின்னு வந்து படுத்தான். கார்த்தாலே எழுந்திருக்கலை. தூக்கத்திலேயே போயிட்டான். வரவா போறவா எல்லாம் நல்ல சாவுன்னு சொன்னா. துக்கத்திலே நல்ல துக்கம் கெட்ட துக்கம்னு இருக்கா என்ன?”பிச்சமூர்த்தி எழுந்து போய்க் கிழவரின் அருகில் உட்கார்ந்து கொண்டார்.

பேச்சை மாற்ற அவர் கிழவரிடம் “உங்களுக்கு தஞ்சாவூரா?” என்று கேட்டார்.

“ஆமா. திருநாகேச்வரம். முகத்தில எழுதி ஒட்டி வச்சிருக்கா  என்ன? எதுக்கு கேக்கற?” என்று சிரித்தார்.

“பளார் பளார்னுன்னா வார்த்தை வந்து தெறிக்கிறது!”

“விருதாப் பேச்சுங்கற ! நீயும் அந்தப் பக்கம்தான,  என்ன கொஞ்சம் தள்ளிப் போயிட்டே” என்றார்.

கிழவர் பிச்சமூர்த்தியின் குடும்பத்தைப் பற்றி விஜாரித்தார். பேச்சு போய்க் கொண்டிருந்தது. ஒன்பதரைக்கு படுத்துக் கொள்கிறேன் என்றார்.அவர் இருந்த அறைக்கு எதிரே இருந்த அறையில் பிச்சமூர்த்தி படுத்துக் கொள்ளலாம் என்றார். ஏதாவது நடு ராத்திரியில் வேண்டியிருந்தால்  உன்னை எழுப்பித்  தொந்திரவு செய்கிறேன் என்று படுக்கப் போனார்.

வெகு நேரம் கிழவரைப் பற்றி யோசித்தபடி படுக்கையில் கிடந்தார் பிச்சமூர்த்தி.

காலையில் காயத்ரி ஆறரை மணிக்கு காப்பியுடன் வந்து அவர்களை எழுப்பினாள். கிழவரின் முகம் இரவு எடுத்த ஓய்வில் தெளிவாக இருந்தது. காபியை உறிஞ்சிக் குடித்தார்.

“காபி ஜோரா இருக்கு. நான் காப்பி போட்டு நீ குடிச்சா அப்புறம் இந்தக் காப்பி எல்லாம் வேண்டாம்னு போயிடுவே” என்றார் பிச்சமூர்த்தியிடம்.

“ரொம்ப டேமேஜிங் ஸ்டேட்மென்ட் தாத்தா” என்று காயத்ரி பொய்யாக முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.

“அதான் முதல்லயே சொல்லிட்டேனே உன் காப்பி நன்னா இருக்குன்னு” என்று கிழவர் கண்களைச் சிமிட்டிச் சிரித்தார்.

“நான் போய் குளிச்சிட்டு டிபன் வாங்கிண்டு வரேன்” என்று எழுந்தார் பிச்சமூர்த்தி.

“வாங்கிண்டு வரணுமா?” என்று காயத்ரியைப் பார்த்தார்.

“ஆமா. நேத்திக்கே பேத்தி தாத்தாகிட்ட சொல்லிட்டா, அவளை ஹோட்டலுக்கு அழைச்சுண்டு போய் டிபன் வாங்கித் தரணும்னு” என்றாள் காயத்ரி.

“இங்க பக்கத்லதான் போறேன். அடையார் ஆனந்த பவனுக்கு.”

“ஒரே கூட்டமா இருக்கும். சீக்கிரமா போயிட்டு சீக்கிரமா வாங்கோ. தாத்தாவுக்கு நாலு இட்லி வாங்கிண்டு வாங்கோப்பா” என்றாள் காயத்ரி.

“இங்கேர்ந்து காவேரிய கொஞ்சம் அனுப்புடான்னா  மாட்டேங்கறான். அங்கேர்ந்து அடையாரை அழைச்சுண்டு வந்து கட்டிப் பிடிச்சுக்கிறான். இது தர்மம். நடக்க மாட்டேங்கிறது. அது வியாபாரம். செழிச்சிண்டு போறது” என்றார் கிழவர்.

“எனக்கு ரெண்டு இட்லி போறும். அதுவே உள்ள போறதுக்கு நான் மன்னாடனும்.”

அவர்கள் கிளம்பும் போது போன் வந்தது. கிழவர் எடுத்துப் பார்த்து “பையன்” என்றார். பிறகு “ஹலோ?. ராத்திரி நன்னா  தூங்கினேன், கார்த்தால காயத்ரி தேவி புண்யத்தில காப்பி கடை ஆச்சு, இப்ப ஓட்டல்லேர்ந்து என் தம்பி டிபன் வாங்கிண்டு வரப் போறான், ஓ, உனக்கு என் தம்பி யார்னு சொல்லலையோ, அது ஒரு பெரிய கதை. அப்புறம் நீ நேர வரச்சே சொல்றேன். சரி உடம்பை பாத்துக்கறேன். உனக்கு வேலை ரொம்ப ஜாஸ்தியா? சரி சரி போய் வேலைய பாரு” என்று  போனைக் கீழே வைத்தார்.

காலை டிபன் மத்தியான சாப்பாடு, சாயங்காலம் காபி என்று சாப்பாடும் பேச்சுமாக பிச்சமூர்த்திக்குக் கிழவருடன் பொழுது கழிந்தது. காயத்ரி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டாள். இரவு சாப்பிட்டு விட்டு இருவரும் ஹாலில் உட்கார்ந்தார்கள்.

“நீ ரொம்ப கொடுத்து வச்சவன்” என்றார் கிழவர்.

பிச்சமூர்த்தி புருவத்தை உயர்த்தி கிழவரைப் பார்த்தார்.

“காயத்ரி ரொம்ப நல்ல பொண்ணு. இங்கிதம் ஜாஸ்தி. உன்னைப் பாத்துக்கற மாதிரின்னா என்னையும் பாத்துக்கறா” என்றார்.

பிச்சமூர்த்தி அவர் குரலில் ஏக்கம் வழிகிறதா என்று தேடினார்.

மறுநாள் காலையில் பிச்சமூர்த்தி எழுந்திருக்கும் போது சமையல் அறையில் பாத்திரங்கள் உருளும் ஓசை கேட்டது.

அவர் எழுந்து சென்று பார்த்தார்.

அடுப்பில் பால் கொதித்துக் கொண்டிருக்க கிழவர் அதன் எதிரே நின்று கொண்டிருந்தார். பிச்சமூர்த்தியைப்  பார்த்ததும் “ஓ எழுந்துட்டியா? சரி. பல் தேச்சிட்டு வா. சூடா காப்பி தரேன்” என்றார். அடுப்பில் இருந்த பாலை கரண்டியை வைத்துக் கிளறும் போது அவர் கை நடுங்கியதைப் பிச்சமூர்த்தி பார்த்தார்.

“என்ன அவசரம்? காயத்ரிட்ட சொன்னா காப்பி போட்டு கொண்டு வரா. நீங்க எதுக்கு உடம்பு முடியாம இருக்கறச்சே சிரமப் படணும்?” என்றார் பிச்சமூர்த்தி.

“நன்னாயிருக்கு. ஒரு காப்பி கூடப் போட முடியாதவனா ஆயிட்டேனா என்ன?” என்றார் கிழவர்.

பிச்சமூர்த்தி பல் தேய்த்து முகம் கழுவிக் கொண்டு மறுபடியும் கிழவர் இருந்த இடத்துக்கு வந்த போது “சக்கரை போடலாமோல்லியோ?” என்று கேட்டபடி வலது மூலையில் இருந்த பாத்திர ஸ்டாண்டுக்குப் போனார். அங்கேயிருந்து ஒரு டம்ளரும் டவராவும் எடுத்துக் கொண்டு வந்தார். நடந்து வரும் போது உடம்பு அவரைத் தள்ளிக் கொண்டு வந்தது.

பிச்சமூர்த்தி ஒரு கணம் அவர் கீழே விழுந்து விடுவாரோ என்று பயந்து விட்டார்.

அவர்கள் ஹாலில் உட்கார்ந்து காப்பி குடிக்கும் போது கிழவர் “இன்னிக்கி உப்புமா பண்ணிடவா? என் கை சமையலை நீயும் ஒரு பிடி பிடிச்சுப் பாரேன்” என்றார்.

பிச்சமூர்த்தி  “அந்தப் பேச்சே வாண்டாம். உங்களுக்கு உடம்பு இன்னும் முழுசா சரியாப் போகலை. இன்னிக்கும் நாளைக்கும் காயத்ரி எல்லாம் பண்ணிக் கொடுப்ப. எங்களோட இருந்து சாப்பிடுங்கோ.  பேசிண்டிருக்கறதுக்கு நான் கம்பனி கொடுக்கறேன்” என்று கிழவரை மேலே பேசாமல் செய்து விட்டார்.

அடுத்த இரண்டு நாள் பிச்சமூர்த்தி சொன்னது போலவே எல்லாம் நடந்தது. நாலாம் நாள் காலையில் பிள்ளை தன்னிடம் பேசியதாகக்  கிழவர் சொன்னார். கிழவருக்கு உடம்புசரியில்லை என்று காயத்ரி போன் பண்ணிய அன்று அடுத்த தெருவிலிருந்து வந்த அவருடைய நாட்டுப் பெண் அதற்குப் பிறகு வரவில்லை என்று அப்போது பிச்சமூர்த்திக்கு ஞாபகம் வந்தது.

சிந்துஜா-இந்தியா  

சிந்துஜா

 

 409 total views,  1 views today

(Visited 112 times, 1 visits today)
 

One thought on “குளிரின் கொதிநிலை-சிறுகதை-ஸிந்து ஜா”

Comments are closed.