அச்சம்-சிறுகதை-ஸிந்து ஜா 

ஸிந்துஜா ள்ளே மீனாட்சியம்மன் சன்னதியில் தரிசனத்தின் போது இருந்த கூட்டம் இப்போது வெளிப்பிரகாரத்தில் அலைந்தது. வெளிப் பிரகாரத்தைச் சுற்றிக் கொண்டு வரும்போது தான் சிவலிங்கம் பாப்பாவைப்  பார்த்தார். அவருக்குப் பத்தடி முன்னால்  பாப்பாவும் அவள் கணவரும், போய்க் கொண்டிருந்தார்கள். பாப்பாவின் கணவர் ஒரு சிறு குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்தார். சிவலிங்கம் பாப்பாவைப் பக்கவாட்டில் பார்த்த போதே அவள் பாப்பாதான் என்று மனம் நிச்சயம் செய்து விட்டது.

அவளைக்  கடைசியாகப் பார்த்து இருபது வருஷங்கள் இருக்குமா? பக்கவாட்டில் தெரிந்த அரை ஆரஞ்சுச் சுளை உதடு, ஏய் என்று கூப்பிட்டுக் கேட்கும் நாசி, பளீரென்ற பொன்னிறத்தில் நெற்றி என்று எல்லாமாய்ச் சேர்ந்து பாப்பாதான் என்று அடித்துச் சொல்லின. பச்சையும் சிவப்பும் கலந்த பட்டுப் புடவையும், பச்சை ரவிக்கையும் அணிந்திருந்தாள். இன்னும் இறுக்கமும் கட்டும் கொண்ட உடலை அவை பற்றிக் கொண்டு பெருமிதமாய்ப் பளபளத்தன.

அவர் நாலைந்து தப்படிகள் எட்டிப் போட்டு அவளை நோக்கி நடந்தார். உள்ளுணர்வால் உந்தப்பட்டவள் போலப் பாப்பாவும் பின்பக்கம் திரும்பி அவரைப் பார்த்தாள். அவர் அவளைப் பார்த்துப் புன்னகை செய்தார். அவளும் இதழ் பிரியாமல் ஒரு அரைப் புன்னகையையும், கண்களில் லேசான குழப்பத்தையும் தீற்றிக் கொண்டு அவரைப் பார்த்தாள்.

” பாப்பா?” என்றார் சிவலிங்கம். இப்போது அவர்கள் பக்கத்தில் நின்றார்.

மூவரும் அவரை நோக்கினார்கள். “சிவசுவா?” என்று கேட்டுச் சிரித்தாள் பாப்பா. அவள் கணவரும் அடையாளம் கண்டு கொண்டவர் போல சிவலிங்கத்தைப் பார்த்து வெள்ளையாகச் சிரித்தார். குழந்தை தன் பங்குக்கு அவரைப் பார்த்துச் சிரித்தது !  சிவலிங்கம் செல்லமாக அதன் கன்னத்தைத் தட்டிக் கொடுத்தார்.

“இவரு அண்ணாரு பேத்தி” என்றாள் பாப்பா. “நேத்து இவரு பிரண்டோட மக கலியாணம்னு வந்தோம்” என்றாள்.

“நானும் என் கலீகோட மகன் கலியாணமின்னுதான் வந்தேன்” என்றார் சிவலிங்கம். “கம்பனி கெஸ்ட் ஹவுஸ் காந்தி மியூசியம் கிட்ட

இருக்குன்னு அங்கதான் தங்கி இருக்கேன்.”

“அட நாங்களும் அதுக்குப் பக்கத்துலதான், கலெக்டர் ஆபீஸ் ரோடுல. எங்க அண்ணாரு வீடு” என்றார் பாப்பாவின் கணவர்.  அவர் பெயர் பச்சையப்பன் என்று சிவலிங்கத்துக்கு  நினைவு வந்தது.

அவர்கள் ஆடி வீதி வழியாக வெளியே வந்தார்கள். பசுமடம் வெளி வாசலில் நாலு பேர் உட்கார இடமிருந்தது. சுள்ளென்ற வெயிலிலிருந்து அந்த இடம் தப்பித்து நிழலைப் போர்த்திக் கொண்டு இருந்தது.

“உங்க ஒசரம் காமிச்சுக் குடுத்திருச்சு” என்றார் பச்சையப்பன்.

“ஆமா..இந்த ஒசரமும் மணிக்கட்டுல தொங்கற பந்தும் நீதான்னு

சொல்லிக் காமிச்சிருச்சு” என்றாள் பாப்பா அவரை மேலும் கீழும் நோக்கியபடி. அவர் தன்னை ஒரு முறை ஏற  இறங்கப் பார்த்தார். உயரம்தான். வளைசல் எதுவும் இல்லாத நேர் கோடென  நிற்கும்  அவரது  உடலைப் பார்த்தால் இன்னும் உயரமாகவே யாருக்கும் தோன்றும்.

அவர் தனது வலது கை மணிக்கட்டைப் பார்த்தார். அவரைப் பார்த்த அரைக் கணத்திலேயே இந்தப் பந்தையும்  கவனித்து விட்ட பாப்பாவின் சுறு சுறு அவருக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை. அவள் இயல்பே அதுதான்…அவள் கேட்டாள் என்று சிவலிங்கம் அவன் வீட்டுத் தோட்டத்திலிருந்த மாமரத்தின் மீது ஏறி நாலைந்து காய்களைப் பறித்துக் கீழே போட்டான். அவன் நின்றிருந்த இடத்துக்குப் பக்கத்தில் இருந்த கிளையில் இன்னும் சற்றுப் பெரிதான மாங்காய்கள் அவனைக் கூப்பிட்டுத் தங்களையும் பறிக்கச் சொல்லின. சற்று எம்பிப் பறிக்க முயலுகையில் பிடி நழுவி  ஏதோ பூமியில் இருந்து முளைத்த மாதிரி நின்று கொண்டிருந்த ஒரு பெரிய கல் மீது விழுந்தான். அது வலது கை மணிக்கட்டைப் பதம் பார்த்து ரத்தம் கொட்ட ஆரம்பித்து விட்டது. வலியில்  உயிர் போயிற்று.

பாப்பா அதைப் பார்த்து விட்டு அவனருகே ஓடி வந்தாள். ரத்தம் வரும் இடத்தில் கையை வைத்து நிறுத்தப் போனவளின் கை  செந்நிறம் கொண்டது. அவள் திடுக்கிட்டுத் தனது தாவணியில் ஒரு ஓரத்தைக் கிழித்துக் காயத்தின் மேல் வைத்து ரத்தப்போக்கை நிறுத்த முயன்றாள். வேகம் குறைந்தாலும் வருவது நின்று விடவில்லை. நாலைந்து கட்டிடம் தள்ளியிருந்த கம்பவுண்டர் பிச்சையிடம் சிவலிங்கத்தையும்  இழுத்துக் கொண்டு ஓடினாள்.

“சிவசு என்னடா ஒரே ரத்த விளாறா இருக்கு?” என்று கேட்டபடி சிவசுவை அவரது அறையில் இருந்த கட்டிலில் படுக்க வைத்தார். வெந்நீரைப் போட்டு ஓரு வெள்ளைத் துணியால் அடிபட்ட இடத்தைத் துடைத்தார். பிறகு காஸை எடுத்து இரண்டு சுற்று சுற்றி, ரத்தம் வரும் இடத்தில் நாலைந்து முறை வைத்தெடுத்து உதிரப் போக்கை நிறுத்தினார்.

“எப்படி ஆச்சு?” என்று சிவலிங்கத்திடம் கேட்டார்.

அவன் பாப்பாவைப் பார்த்தான். அவள் மரமேறிய  கதையைச் சொன்னாள்.

“டேய் இட்லி குண்டா, ஏண்டா கிளைய நம்பி ஏறினே? மரமே உன் வெயிட்டைத் தாங்காதேடா?” என்றார் பிச்சை.

“நீங்க அவனுக்கு அஞ்சு வயசாகறப்ப வச்ச பட்டப் பேரை இப்பவும் சொல்லிக் கேலி பண்ண வேணாம். எவ்வளவு ஸ்லிம்மா இருக்கான்!” என்றாள் பாப்பா.  அப்போது சிவலிங்கத்துக்குப் பதினேழு வயது. பாப்பாவுக்குப் பதினெட்டு.

“அட, அவனைச் சொன்னா நீ எதுக்கு குதிச்சிகிட்டு வரே?” என்று சிரித்தார் பிச்சை. “உனக்காக அவன் மரத்துல ஏறினான்னு உனக்குக் குத்த உணர்ச்சியா !”

“அவன்தான் பறிச்சுத் தரேன்னான். இல்லாட்டா நானே ஏறிப்பறிச்சிருப்பேன்”  என்றாள் பாப்பா. “எனக்கென்ன பயம்?”

“நீ செஞ்சிருவே. பெரியவங்கெல்லாம் என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா? பொம்பளைப் பிள்ளைங்களுக்கு  அச்சம் மடம்,…”

அவள் இடைமறித்து “நாணம், பைப்பு குழாய் இதெல்லாம் எங்கிட்டே கெடைக்காது” என்று சிரித்தாள்.

“பயங்கிற ஊர்லயே பொறக்காதவ நீ” என்று பிச்சை அவளைக் கனிவுடன் நோக்கினார். பேசிக் கொண்டே நியோஸ்பிரின் ஆயின்ட்மென்டை எடுத்து காயத்தின் மேல் சதும்பத் தடவினார். சில நிமிடங்கள் கழித்து பேண்டேஜ் போட்டு விட்டு “ரெண்டு மூணு நாளைக்கு டெய்லி இங்க வந்து புது பேண்டேஜ் போட்டுகிட்டுப் போகணும். சரியா?” என்றார். அவன் தலையை ஆட்டினான்.

பிச்சை பாப்பாவைப் பார்த்து “சோத்த கைல எடுத்து அவனால தூக்கிச் சாப்பிட முடியாது. வலிக்கும். அதனால நீயே  அவனுக்கு ஊட்டி விட்டிரு” என்று கேலி செய்தார்.

திரும்ப வீட்டுக்குப் போகிற வழியில் பாப்பா அவனது காயம் படாத இடது கையைப் பிடித்துக் கொண்டாள். மென்மையும் குளிர்ச்சியும் கொண்ட நீண்ட விரல்களுடன் இருந்த அவள் கை அவனைத் தீண்டியது கூச்சத்தை உண்டாக்கிற்று.கையை  இழுத்துக் கொள்ள முயன்றும் அவள் விடவில்லை.

“ச், பேசாம இரு. என்ன யாரோ மாதிரியெல்லாம் வெக்கப்பட்டுக்கிட்டு !” என்று சிரித்தாள்.

“ரொம்ப தேங்க்ஸ் பாப்பா” என்றான்  சிவலிங்கம்.

“எதுக்கு? பிச்சை மாமா என்னைய உனக்கு ஊட்டி விட்டிருன்னு சொன்னதுக்கா?” என்றாள். அவன் கையை இறுக்கினாள். அவனுக்கு ரத்தம் விர்ரென்று எகிறுகிற மாதிரி இருந்தது.

அவள் சொல்வதைக் கேட்க அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் வெளியே சொல்ல அவனுக்கு வாய் வரவில்லை. இவள் மட்டும்  எல்லாவற்றையும் பட்டுப் பட்டென்று போட்டு உடைக்கிறாள்.  ……

பாப்பாவின் குரல் அவர் சிந்தனையைக் கலைத்தது.

” நீ இப்போ எங்க இருக்கே?”என்று கேட்டாள் பாப்பா.

சிவலிங்கம் “பெங்களூருக்கு வந்திட்டேன். டெல்லியை விட்டு வந்து ஆறு மாசமாச்சு” என்றார்.

“அப்ப அடிக்கடி இனிமே மதுரைக்கு வருவேன்னு சொல்லு” என்றாள்  பாப்பா சிரித்தபடி. அந்தச் சிரிப்பில் இன்னும் தென்பட்ட இளமை அவரைச் சற்று அயர வைத்தது

சிவலிங்கம் “அப்பப்ப வரேனே இங்க” என்றார். “ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு தடவை இங்க வந்து மீனாச்சியப் பாத்து எப்பிடி இருக்க்கீங்கன்னு கேட்டுட்டுப் போவேன்.”

பச்சையப்பனும் பாப்பாவும் சிரித்தார்கள்.

“நீங்க இப்ப எங்கே இருக்கீங்க” என்று அவர் பச்சையப்பனிடம் கேட்டார். பாப்பாவின் பார்வை தன்னை விட்டு விலகாமல் இருப்பதை சிவலிங்கம் கவனித்திருந்தார். அதனால் கொஞ்சம் கூச்சமாகக் கூட இருந்தது.

“தஞ்சாவூர்ல.”

“முன்னால திருச்சில இருந்தீங்கல்ல?” என்று கேட்டார்  சிவலிங்கம்.

“ஆமா. இருபது வருஷத்துக்கு முன்னால. அப்பதான் உங்களை மொதல் தடவையா நிதானமா பாத்தது. பாப்பாவோட   தங்கச்சி கலியாணத்தில் பாத்தோம், உங்களுக்கு ஞாபகமிருக்குதா ?”

ஞாபகம் இல்லாமல் எப்படிப் போகும்? உடலின் வாதை மனதின் வலியாக மாறிப் பிழிந்தெடுத்த தினம். எல்லோரையும் போல சிவலிங்கம் ஏன் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலத்துடன் கோயிலுக்குச் செல்லவில்லை? எதற்காக மறந்து விட்டுச் சென்ற சந்தனக் கிண்ணத்தை எடுக்க,  கல்யாண மண்டபத்துக்கு அவள் அம்மா பாப்பாவை அனுப்ப  வேண்டும்? அல்லது முண்டிக் கொண்டு அவளே அவன் தனியாக இருப்பான் என்று தெரிந்து வந்தாளா?

சிவலிங்கம்  இருந்த அறை மாடியில் இருந்தது. கீழே சத்தங்களை எழுப்பிக் கொண்டிருந்த சமையல் வேலைகள், ஹாலில் இரவுப் பந்திக்காக டேபிள், சேர்கள் நகர்த்தப்பட்டு ஒழுங்கு படுத்தப்படும் ஓசைகள் என்று ஆள் நடமாட்டத்தை அறிவித்தன. ஆனால் மாடி நிசப்தமாக இருந்தது. வெளியே  காற்றில் ஆட இலைகள் தங்களுக்குள் கிசுகிசுக்கும் ஒலிகள் துல்லியமாகக் கேட்டன.சிவலிங்கத்தின் அறையைத் தவிர மற்றவைகளில் இருந்தவர்கள் ஊர்வலத்துடன் போயிருக்க வேண்டும், அல்லது காலியான அறைகளாக சில இருக்கக் கூடும். மற்றும் சிலவற்றில் , சிவலிங்கத்தைப் போல உள்ளவர் அறையின் உள்ளே இருந்து ஒய்வு எடுத்துக் கொண்டு இருக்கலாம் …

கதவைத் தட்டிய சத்தம் கேட்டு சிவலிங்கம் திறந்தான்.  பாப்பா நின்றாள். உதடுகளில்  புன்னகை எதுவும் காணப் படவில்லை..வந்தவள் கதவைச் சார்த்தினாள். ஒரு வார்த்தை பேசாமல் அவனை இறுக அணைத்தாள். வெளியில் அந்த நேரத்திலும் இனிமையாக ஒரு குருவி சத்தமிடுவது அவனுக்குக் கேட்டது. வழி தவறிய பறவையாக இருக்க வேண்டும்.

அனுமதியின்றி உள்ளே வந்த காற்று அவர்கள் இருவரிடையே செல்ல முடியாது  திகைத்தது.

“ஒரேயடியா மறந்துட்டே இல்லே?” என்று கேட்டாள்  அவள் குரலில் கோபத்தின் சாயை தென்பட்டது.

அவன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. அவளின் நெருக்கமும், உடலின் உஷ்ணமும்  பிரக்ஞையைக் கட்டிப் போட்டு விட்டது போல உணர்ந்தான்.

“நான் மறக்கணும்னு நீ ஆசைப்படறியா என்ன?” என்று கேட்டான்.

“என் கல்யாணத்தன்னிக்கு உன்னைப் பாத்தது. அதுக்கப்புறம் இந்த அஞ்சு வருஷத்திலே ஒரு தடவை கூட நீ என்கூட பேசல. ஒரு போன் பண்ணக்கூட முடியலே இல்லே? அட்லீஸ்ட் ஒரு புது வருஷ க்ரீட்டிங்ஸ் கூட உன்னால அனுப்ப முடியாதா” என்றாள் அவள்.

“நடைப் பொணத்துக்கு நிகழ்காலம் எதிர்காலம் எல்லாம் இருக்கா என்ன?”

“நீயாத்தானே என்னை விட்டுப் போனே?” என்றாள்  பாப்பா ஆத்திரத்துடன். தனது வலது கையை நீட்டி அதனை உற்றுப் பார்த்தாள். கூடவே அவனது இடது கையையும் பிடித்து அவளது வலது கையின் மேல் வைத்துக் கொண்டாள்.  . “இந்த ரெண்டையும் வெட்டிப் போட்டுருக்கணும். அப்ப  இவ்வளவு மன உளைச்சல் இல்லாம போயிருக்கும்” என்றாள். சொல்லிக் கொண்டே அவள் விரல்கள் அவன் விரல்களைக் கவ்வித் திலாவிற்று.

சிவலிங்கத்துக்கு உடல் உதறியது. அவன் மனதில் வலியை ஏற்படுத்திவிட்டுப் போக வேண்டும் என்று வந்தாளா? இப்போது அவள்விட்டெறிந்த அம்பு, காலம் பூராவும் அவனைக் குதறிக் கொண்டிருக்கப் போகிறது என்பதை உணராமலா சொன்னாள்?

அப்போது “பாப்பா, பாப்பா” என்று கீழிருந்து கூப்பிடும் சத்தம் கேட்டது. பாப்பா அவனை ஒரு க்ஷணம் தீர்க்கமாகப் பார்த்தாள். பின்னர் அங்கிருந்து வெளியே சென்றாள்…..    அப்போது குழந்தை சிணுங்கி அவரை எழுப்பிற்று.. பாப்பா குழந்தையைச் சமாதானப்படுத்த முயன்றாள். அது சிணுங்கலை நிறுத்தவில்லை.

“கார்ல பால் இருக்கு. கோயில் தரிசனம் முடிஞ்சவுடனே போயிடுவோமேன்னு நினச்சு கையோட எடுத்துட்டு வரல. நான் போய் எடுத்துட்டு வந்திரட்டா?” என்று கேட்டாள் பாப்பா.

பச்சையப்பன் தான் போய் எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லி விட்டுச் சென்றார். அவர்களிடையே சில அடி தூரமே இருந்தாலும், சிவலிங்கத்துக்கு அவளோடு நெருக்கமாக இருப்பது போலத்  தோன்றிற்று. அவர்திடுக்கிட்டு அவளைப் பார்த்தார். அதே சமயம் அவள் உடல் சிலிர்த்தது போல ஒரு நடுக்கம் அவள் உடலில் ஓடி மறைவதைக் கவனித்தார்.

பாப்பா இப்போது அவரை உற்று நோக்கினாள். அந்தப் பார்வையையும், அவள்  முகத்தின் ஒளியையும் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் அவருக்கு இருந்தது. அவர் மனதில் ஓடுவதைப் புரிந்து கொண்டவள் போல அவள் உதட்டைக் கடித்தபடி பார்வையை அவரிடமிருந்து விலக்காது உட்கார்ந்திருந்தாள்.

பிறகு பாப்பா சிவலிங்கத்திடம் “ரத்னா, கொழந்தை ரெண்டு பேரும்

சவுக்கியமா சிவசு? குழந்தைக்கு என்ன பேரு வச்சிருக்கே?” என்று கேட்டாள்.

அவர் உடனே பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தார். பிறகு “நல்லாத்தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்” என்றார்.

“என்னது?”

“ஆமா.கலியாணமாயி அஞ்சு வருசம் சேந்து இருந்தோம். ஒரு கொழந்தை பொறந்துச்சு. கிருஷ்ணான்னு பேரு.அதுக்கு மூணு வயசு ஆகறப் போ அதையும் தூக்கிட்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா” என்றார்.

“அடப் பாவி! நம்பவே முடியலியே. உன்னோட கூட ஒருத்தர் இப்படியெல்லாம் சண்டை போட முடியுமா என்ன?” என்று கேட்டாள் பாப்பா.

அவள் கேலி செய்கிறாளா என்று அவர் அவளை உற்று நோக்கினார்.

அவள் முகம் வேதனையையும் அதிர்ச்சியையும் தெரிவிக்கும் முகமாகத் தான் இருந்தது. ஆனால் அவர் அவளைப் பார்த்தவிதத்தைப் பார்த்த பின் பாப்பாவின் முகம் விழுந்து விட்டது. பழைய ஞாபகம் நினைவுக்கு வந்து அவளைத் தின்ன முயலுகிறதா?…..

மாமர விபத்து நடந்து ஒரு வருஷம் ஆகியிருக்கும். ஒருநாள் திடீரென்று அவர்களுக்குள் சண்டை வந்து விட்டது. அவன் கல்லூரியிலிருந்து  வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்.  பாப்பா அவள் வீட்டு வாசலில் நின்று எதிர் வீட்டில் இருந்த ரமணனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.  ரமணன் டாக்டருக்குப் படித்துக் கொண்டிருந்தான்.

சிவலிங்கம் அவளைப் பார்த்த போது அவள் அவனைக் கவனிக்காது ரமணனிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் இது வழக்கமாகி விட்டது என்று சிவலிங்கம் கோபத்துடன் நினைத்தான்.

ஒரு நிமிடம் தன் வீட்டு வாசலில் நின்ற சிவலிங்கத்துக்கு எரிச்சல் ஏற்பட்டது. அவன் வீட்டுக்குள் சென்றான். அன்று மாலை வேறு எதோ வேலையாக பாப்பா அவனது அம்மாவைத் தேடி வந்த போது ஹாலில்  உட்கார்ந்திருந்தவன் எழுந்து அவனுடைய அறைக்குள்  சென்று அவள் காதுக்குக் கேட்கிற மாதிரி தாழ்ப்பாளைப் போட்டான். சற்றுக் கழித்து அவள் அவன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டு போகும் சத்தம் கேட்டது. அதற்குப் பிறகு அரை மணி கழித்து அவன் தன்  அறையை விட்டு வெளியே வந்தான்.

ஆனால் மறுநாள் கல்லூரியிலிருந்து திரும்பி வரும் போது அவனை அவள் நடுத்தெருவில் மடக்கி விட்டாள். அவள் குரல் அவனுக்குப் பின்னால் கேட்டது. அவன் காதில் விழாதது போல முன்னே நடந்து சென்றான். அவள் பின்னாலிருந்து ஓடி வந்து அவன் கையை இழுத்தாள். தெருவில் போய் வந்து கொண்டிருந்தவர்கள் இந்த நாடகத்தைப் பார்த்தபடியே சென்றார்கள்.

“என்ன இது?” என்று அவன் அவளை முறைத்தான்.

“என்னது என்ன இது?” என்று கேட்டபடி அவளும் அவன் கூட நடந்தாள்.

“ரோட்டுல எல்லாரும் பாக்கறபடி.”

“எனக்கென்ன அதைப் பத்திக் கவலை? அதுலே யாராச்சும் வந்து உன்னோட கோபத்தைக் கலைச்சு என்னோட பேச வைக்கப் போறாங்களா?” என்றாள் பாப்பா. “எதுக்கு இப்ப திடீர்னு கோபம்?”

“கோபமும் இல்ல மண்ணும் இல்ல” என்றான் அவன்.

“தலையில இருக்கிறதுதான் தெரியுமே ! மனசில இருக்கிறதை இறக்கி வை” என்றாள்.

அவனால் அவளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அவர்கள் சேர்ந்து நடந்தார்கள்.

“எதுக்குன்னு நீ சொன்னாத்தானே என் தப்புன்னு ஏதாவது இருந்தா நான் திருத்திக்க முடியும்?” என்றாள் பாப்பா .

அவள் அவன் வாயைப் பிடுங்காமல் விட மாட்டாள் என்று அவன் நினைத்தான்.

“நேத்திக்கு நீ எதுக்கு ஈன்னு இளிச்சி பேசிட்டிருந்தே? நான் நிக்கறதக் கூடப் பாக்காம?”

“ஒண்ணும் புரியலியே? நான் எப்ப சிரிச்சேன், நீ எப்ப வந்து நின்னே?” என்று கேட்டாள் அவள்.

“அதான் நேத்தி அந்த ரமணனோட” என்றான் சிவலிங்கம்.

பாப்பா நடப்பதை நிறுத்தி விட்டாள். அதைப் பார்த்து அவனும்.

“நான் செஞ்சதிலே என்ன தப்பு? நான் யார் கூடவும் பேசி சிரிக்கக் கூடாதா?”

“நான் உன்னைப் பாத்துகிட்டு நிக்கிறதைக் கூடக் கவனிக்காம” என்றான் அவன்.

“நான் நிஜமாவே உன்னப் பாக்கலே. பாத்திருந்தா உன்னையும்  பேச வான்னு கூப்பிட்டிருப்பேனே” என்றாள் பாப்பா.

அவள் இயல்பாக இருந்தது அவனைக் கொஞ்சம் ஆட்டிப் படைத்தது.

“இப்ப கேக்கற மாதிரி நேத்திக்கே கேட்டிருக்கலாம்ல? அதுக்குப் பதிலா எதுக்கு முறுக்கிகிட்டு போகணும்?” என்று கேட்டாள் பாப்பா

“எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலே” என்றான் சிவலிங்கம்.

“எது? நான் ரமணங்கூட பேசினதா?”

அவன் பதில் பேசாமல் நடந்தான்.

“இது என்னவோ ஆதி காலத்துக்குப் போயிட்ட மாதிரில்ல இருக்கு” என்றாள் பாப்பா.

“ஆமா. நான் காட்டுமிராண்டிதான்” என்றான் அவன்.

“ஐ டோன்ட் திங்க் திஸ் வில் ஒர்க்” என்றாள் பாப்பா. அவள் குரலில் கடுமை தெறித்தது.

அவள் தண்மையாக, அவனைச் சமாதானப்படுத்தும் விதத்தில் பேசுவாள் என்று எதிர்பார்த்த அவனுக்கு அவள் கடுமை ஏமாற்றத்தையும் அதன் உடன் நிகழ்வாக சீற்றத்தையும் ஏற்படுத்தின.

“எஸ். இட் ஓன்ட் ஒர்க்” என்று அவனைச் சமீபத்த தன் வீட்டுக்குள் சென்றான்.

அதற்குப் பின் அவர்களுக்குள் இருந்த தோழமை – காதல் என்று சொல்ல முடியுமா? – ஒதுங்கி விட்டது. அவர்களின் நெருக்கத்தை எவரும் அறிந்திராத நிலையில் இப்போது அவர்களின் விலகல்களும் மற்றவர்களுக்குப் புலப்படவில்லை. மற்றவர்கள் முன் சந்திக்க நேரிடுகையில் சில ஹலோக்கள், புன்னகைப் பரிமாறல்கள், வாழ்த்துகள் அவர்களிருவரிடையே வழக்கம் போல இருந்தன. யாரோ எழுதிய ஒரு கவிதையில் கூறியபடி ‘இரு ஈகோ குதிரைகள் கட்டிய வண்டியில் இருவரும் அறியாது இழந்ததைப் பார்த்தபடி மௌனமாய்ப் பிரயாணித்தது காலம்.’ ….

குழந்தை அழும் குரல் அவரை நனவுலகத்துக்குக் கொண்டு வந்தது.

“இப்ப ஏன் உன்னைப் பார்த்தேன்னு இருக்கு” என்றாள் பாப்பா. “உன்னைக்  கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வந்தேன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா இப்ப நானே என்னை ஏமாத்திகிட்டு இவ்வளவு நாளா இருந்தேனோன்னு… “.

“எனக்கும்தான்” என்றார் சிவலிங்கம் மெல்லிய குரலில்.

பாப்பாவின் உடம்பு நடுங்கிற்று. அது சிலிர்ப்பா பயமா என்று தெரியவில்லை.

குழந்தை வாயில் விரலைப் போட்டுக் கொண்டு சிணுங்கியது. நல்ல வேளையாக .அப்போது பச்சையப்பன் கையில் பால்  பாட்டிலுடன் வந்து விட்டார்.

பாப்பா அதை வாங்கிப் பாலைக் குழந்தைக்குக் கொடுக்கத் தொடங்கினாள்..

பச்சையப்பன்  சிவலிங்கத்திடம் ” என் தங்கச்சி மகன் பெங்களூர்லதான் இருக்கான். எலக்ட்ரானிக் சிட்டி கிட்ட ஆபீசுன்னு அங்க எங்கையோ அதுக்குப் பக்கத்திலேயே ஜாகை போட்டிருக்கான்” என்றார்.

“நான் ஜலஹள்ளியிலே இருக்கேன்” என்றார் சிவலிங்கம்.

“ரெண்டுக்கும் ரொம்ப தூரமோ?”

“ஆமா. ஒரு வழிக்கு முப்பத்தி அஞ்சு கிலோமீட்டர்.”

“அடேயப்பா  ரொம்ப தூரம்தான்” என்றார் பச்சையப்பன்.

“சொந்த வீடுன்னு அங்கே இருக்க வேண்டியிருக்கு. தூரத்தை  விடப்

போயிட்டு வரதுதான் கண்ராவி. வழி பூரா காரு பஸ், ஸ்கூட்டர், ஆட்டோன்னு எல்லாம் இஞ்சு இஞ்சா நகர்ந்து போகும். நரகம்தான்” என்றார்.

“ஒரு ட்ரிப்பு  பெங்களூருக்கு வரணும்” என்று பச்சையப்பன் சிரித்தார்.

“அவசியம் வரணும். வாங்க” என்றார் சிவலிங்கம்.

பாப்பா  அவர்கள் பேசியது எதுவும் காதில் விழாதது மாதிரி குழந்தைக்குப் பாலைக் கொடுத்துக் கொண்டிருப்பதை சிவலிங்கம் பார்த்தார்..

குழந்தை திடீரென்று வீறிட்டு அலறியது.  பாப்பா எழுந்து நின்று ” சரி, கிளம்பிறலாம். அது  அம்மாவத் தேடுது”  என்றாள் பச்சையப்பனைப் பார்த்து.

பச்சையப்பன் “தெக்கு வாசல் வழியாப் போயிறலாம். அங்கதான் டிரைவர் காரை நிறுத்தி வச்சிருக்கான்” என்றார்.

சிவலிங்கம் அவர்களைக் காரில் ஏற்றி விட உடன் சென்றார். போகும் வழியில் ‘இருந்தாலும் பாப்பா அந்தக் குழந்தையின் தொடையில் கிள்ளி அதை அழ விட்டிருக்க வேண்டாம்’ என்று நினைத்தார்.

ஸிந்துஜா-இந்தியா

சிந்துஜா

(Visited 174 times, 1 visits today)