இறுதிச் சமையல்-கவிதை-லறீனா அப்துல் ஹக்

இறுதிச் சமையல்

லறீனா

அவள் சொல்கிறாள்,

உப்புத் தீர்ந்துவிட்டது
தானியங்கள்,
நாற்றெமெடுக்கத் தொடங்கிவிட்டன
மரக்கறிகள் அழுகிவிட்டன
சட்டியின் அடியிலிருந்து
ஒழுகிய எண்ணெய் தீர்ந்துபோய்விட்டது.

அவள் சொல்கிறாள்,

அணிவதற்கு ஆடைகளில்லை
குறட்டை ஒலிகள்
உறக்கத்தைக் கெடுக்கின்றன
ஊதியமற்ற வேலைகளைச் செய்து
உடலெங்கும் கடுக்கிறது
அடிபட்ட பாம்பு போன்று
பாதிக் கட்டில் சொரணையற்றுக் கிடக்கிறது.

அவள் தொடர்கிறாள்,

கெட்ட கனவுகள்
என்னைத் துரத்துகின்றன
பூங்கொத்துகளை நீட்டியபடி
இராஜகுமாரர்கள் வலம் வருகின்றனர்.
அதுவரை காலமும் செவிடனைப் போலிருந்தவனுக்கு
சட்டென்று காது கேட்கத்தொடங்கியது.

சமையலறைக்குள் நுழைந்து
சோதித்துப் பார்க்கிறான்.
படுக்கையறையை ஆய்வு செய்கிறான்
அவள் சொன்னதுபோல்
எந்தக் குறையையும் காணவில்லை.
வீண் கனவுகளுக்காகவும், கற்பனைகளுக்காகவும்
அவளை வசைபாடுகிறான்.

அவள் சொல்கிறாள்,

எனக்குப் பரிச்சயமான உருவகங்களால்
எனதுணர்வுகளை வெளிப்படுத்தினேன்
சூட்சுமமாகக் குறிப்புணர்த்துதலே
பெண்ணுக்கான அறம் என்றெல்லாம்
கற்பிக்கப்பட்ட சமிக்ஞைகளால்
எனது காதலை,
எனது காமத்தை,
எனது விருப்பங்களை
காய்கறிகளைப் போன்று நறுக்கி
உனக்குப் பிடித்த உப்பும்
மிளகுத் தூளும் தூவி
சொற்களால் பரிமாறினேன்.

சொல்லி முடிப்பதற்குள்,
”அவ்வளவு கொழுப்பா?
வாயை மூடு சனியனே!”
கத்தியபடியே ஓங்கி அறைந்தான்

அன்று அவள் வீட்டில்
விடிய விடிய
அடுப்பெரிந்து கொண்டிருந்தது.

லறீனா-இலங்கை

லறீனா

(Visited 285 times, 1 visits today)