சகித்திருத்தல் அல்லது சத்தமின்றிப் பிரிந்துவிடல்-கவிதை-நுஹா

சகித்திருத்தல் அல்லது சத்தமின்றிப் பிரிந்துவிடல்

நுஹா

நெருக்கமாய் கிளைத்த ஆலமரத்தடியில்
கிர் கிர்ரென ஓயாத வெடிச்சத்தம்
மங்கல நாண் அந்தரத்தில் ஊசலாடுகிறது

சூழ்ந்துள்ள பலமான விழுதுகள்
பற்றிக் கொள்ளுமாறு காட்டிய சமிக்ஞைகள்
கடலில் கொட்டிய உப்பாகின

எத்தனை விழுதுகள் தழுவத்துடித்தபடி
ஒரு நாண் அறுந்துவிடாதிருப்பதற்கான பிடிமானங்களாக

சூரியன் பச்சைவாசனையை நகலெடுத்துக் கொண்டிருக்கும் போது
அகங்காரம் இரு சோடி குருட்டு விழிகளின் மாயச்சுழலாகிறது

மப்பும் மந்தாரமுமான பின் மாலையில்
இரண்டு போர்க்கோழிகள்
சுட்டு விரலில் ஏகே 47
சிவப்பேறிய சொண்டுகளில்
ஆட்டிலெறி எப்போதும் பாயத் தயார்நிலையில்

கண்களைமூடி வரைந்த ஓவியத்தில்
இதழோரம் புன்னகையின் சாரலொன்றை
புஷ்பிக்கக்கூடிய ஒரு பொறிகூடவா நிகழ்ந்திருக்காது

அந்தத் திவலையின் நூல்பிடித்து வாழ்கிறது
அதிர்வலைகளின் சுழியத்துள் வலிந்து நீந்தும் பறவைகள் இரண்டு

சாத்தியமின்மையின் சகதியில் மேலும் புதையப் பிடிப்பற்று
சத்தமின்றி வலம் இடமாக பறந்துவிட்டன
என்னை ஆச்சரியத்துள் அமிழ்த்திய வேறிரண்டு

உள்ளார்ந்த அன்பின் தவிப்பில் காரணம் கேட்கப்பட்ட போது
நிராயுதபாணியாய் பதில் கசிந்தது
சரிவருமென்று தோன்றவில்லை பிரிந்துவிட்டோம் டொட்.

000000000000000000000000000

அம்மாவாகிப் போனேன்

பொழுது திமிங்கிலத்தின் வயிற்றுள் விழுங்கப்பட்டு
நிலவுகள் தணலாய் கனன்றுகொண்டிருக்கிறது

பனிப்புகாரின் அடர் சாம்பலுள் துளாவி
மலங்க மலங்க விழித்து ஆழிச் சுழியத்து
கருநீலப் புள்ளியில் சுடராய் விளைகிறேன்

விழிகளில் கருணைநதி ததும்ப
என் மீன்குஞ்சுகள் அலையெழுப்பித்துள்ளி நீந்த
நெஞ்சின் சாரல் ஆங்காங்கே
பொன்னூஞ்சல் வரைகிறது

கடமைகள் இமயமாய் முதுகை அழுத்த கூனிடாதபடியே
கவனமாய் என் பாடலை சிகரத்தில் பறக்கவிடப் போராடுகிறேன்

சிக்கலான சந்தங்களுக்குள் லாவகமாய் சுதிசேர்த்து
இனிமையென உணரவைப்பது
அத்தனை சுலபமல்ல

என் தேன்சிட்டிகளுக்கு இது இறகுகள் துளிர்க்கும் பருவம்
பறத்தலுக்கான பயிற்சியளிக்கையில் என் சிறகுகளின் தீராத வலியை வழிந்தோடாமல் என் விழிகளே உள்ளிழுத்துக் கொள்ளும்
தீராத நம்பிக்கையின் தாரகை ஒளிரும்

என் தூக்கணாங்குருவிக்கூட்டின் தனித்தனி உள்அறைகளுள்
தனித்துவமான அட்டவணைகள் மினுங்கித் தொங்கும்
அவை என் சிந்தைக்குள் சதாவும் சுழன்றடிக்கும்
ஒரு எழுத்துப்பிளை நிகழ்ந்துவிடக்கூடாதென
என்கற்பூரத்தில் தீபமேற்றி பதங்கமாகிறேன்
வாசனை சுழன்றடிக்க
நான் பூரண நிறைவுடன் அம்மாவாகிப்போனேன்

ஆயினும் என்ன
ஒரு மொட்டு முகிழ்க்கும் போது
ஒரு புன்னகை வருடும் போது
கோடை வெயிலில் ஒரு கற்றை மேகம் கடக்கும் போது
கண்கள் மினுங்கும் சாம்பல்நிறத்துப் பூனை
அடுக்களையில் அரூபமாய் அலைப்புறும் போது
பச்சை நத்தையின் கண்கள் தணலாய் கொதிக்கும்போது
கவிதையின் மடியில் குழந்தையாகி துவண்டு கரைகிறேன்

நுஹா-இலங்கை

நுஹா

(Visited 121 times, 1 visits today)