வெட்டியான்-கவிதை-நுஹா

வெட்டியான்

நுஹா
ஓவியம்: சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

புராதன மேன்மை கொண்ட நீலப்பச்சைக் காடு
உப்புமலர்க்கொத்துகளைப்
பிளந்து வெளிப்படுவான் அவன்
தினமும் பிணங்களை எரிப்பதில்
அவனது வயிறுவாடாமல் காலம் தள்ளுகிறான்
தீ அதீதங்களை அருளும் மந்திரப் பூ
தீயின் தாளம் புரிந்து சுற்றிச்சுற்றி நடனமிடுவான்
பார்க்க சற்று நகைச்சுவையாய் கூட இருக்கும்
தீக்கோழியாய் அவன் முகம் மாறும்போதெல்லாம்
மண்தான் அவனது புகலிடமானது
பூனையின் முகத்தை தத்தெடுத்த கணத்தில்
கண்கள் இறுக மூடியிருந்தன
ஒளி அப்பாலானதாய் நாம் நம்பவேண்டியிருந்தது
மீண்டும் தீப்பந்தத்தை
காமுறும் இயல்பு வெடித்துக் கிளம்பியது
அது அவன் தேர்ந்தெடுத்த தொழில்
எரியும் பிணங்களின் சதைத்துண்டங்கள்
அவன் பசிக்கு உணவாவதில் எந்தப்பகுதி
அவனை ஈர்த்திருக்கக் கூடும்?
அவனுக்கு வெட்டியான் என்று பெயர்

0000000000000000000000000000000000

உன் நிழல் என்னைத் தாண்டிச் செல்கையில்
என் கண்களை நான் வெறுக்கிறேன்
கால்விரல் தடயங்களில் தளைத்த காளான்களில்
நேசத்தின் சில்வண்டுகள்
சிறகுலர்த்த சிருங்காரிக்கின்றன

இசையால் கோர்த்த மணி ஊஞ்சலில்
கடற்கன்னி தழும்பி ஆடும் அந்தியில்
நீர்த்திவலைகள் பிணைந்து ஐந்துதலை
நாகங்களின் அரங்கேற்ற மேடையென
நீயும் நானும் தொடுவானை நிறைத்துக் கிடந்தோம்
புராதன சுவடுகளென எம் நேசம் பகுப்பாயப் பட்டபோது
வெதுவெதுப்பான நிலவொன்றை அது பிரசவித்திருந்தது

ராட்சசனின் தலைகீழ்விம்பத்துடன் சமரிட்டுக் களைத்த
சாம்பல் விழிகளை
நட்சத்திரங்களால் பிரதியிட்டு
பதனம் செய்கிறது
தணல் நொதித்த பனிப்பறவை

நுஹா-இலங்கை

நுஹா

(Visited 183 times, 1 visits today)