கல்லுயிரி…-கவிதை- எஸ்.நளீம்

எஸ்.நளீம்

எஸ்.நளீம்
ஓவியம் : எஸ்.நளீம்

எங்கள் கல் வலியது
விசாலத்தில்; பெரியது
என்றோஅனாதரவாய்ப் போனது
கல் கல்லில்லை
அது உயிரி… கல்லுயிரி

நான் கண்டேன் அதில்
பூப்பிடரி சிலிப்பிய சிங்கங்கள் கர்ச்சிக்க…
அம்பிரண்டாய்
வேட்டைப் பல்லிளித்த
புலிகள் உறும…
கிளிகளும் மைனாக்களும்
இசைத்துக் கூடிக் கும்மாளமிட…
நான் கண்டேன்
அது கல்லில்லை.

அன்றில் பல்லுயிர்கள் சங்கமித்த
சரனாலயத்தைக் கண்டேன்
அது கல்லில்லை
கல்லுயிரி

தெருக்கோடியில்
கல்லின் எல்லைப் புறத்திலிருந்து
ஒரு ஏழை கேட்கிறான்
சரனாலயம் வேண்டாம்
வேறு எதுவும் வேண்டாம்
எம் கல்லிலிருந்து
ஒரு சிங்கத்தை
ஒரு புலியை
செதுக்க மாட்டீரோ?
எமக்கான காவலரனாய்…

தேர்தல் கால அலப்பறையுடன்
ஒரு நாள்
கல்லே கல்லைச் செதுக்கி முடிக்கையில்
எவ்வித சப்தமுமின்றி
சீறக்கூட திராணியற்றுப் படுத்திருந்தது
ஒரு பூனை
வெறுங் கல்லாய்…

அங்கே செதுக்கிய உளியின்
சிதறிய சிதிலங்களாய்
விரவிக் கிடந்தன
புலிகளும்… சிங்கங்களும்…
ஏமாற்றங்களுடன்…
பரிதாபத்துக்குரியது கல்.

எஸ்.நளீம் -இலங்கை

(Visited 66 times, 1 visits today)