ஃபஷ்றி கவிதைகள்-ஃபஷ்றி

ஃபஷ்றி
ஓவியம்: சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

காற்று கதைத்துக் கொண்டிருந்தது இலையுடன்
ஒட்டுக் கேட்டேன்
காதல் மொழியில் குழைந்து குழைந்து பேசியது
பறவையொன்று வந்தமர்ந்தது கிளையில்
நிசப்தம் நிலவியது

00000000000000000000000000000

நிர்வாணமாக பறவையை ஏற்றிச் சென்றது காற்று
இலை களைப்புற்று வேர்த்துக் கீழே கிடந்தது
என்ற வரிகளை என் கவிதைத் தொகுதியில் வாசித்துக் கொண்டிருக்கிறேன்
பனி பூத்திருந்தது முற்றத்துச் செடி இலைகளில்

2
அவனது காதலி மேற்சட்டையையும் காற்சட்டையையும் அயன் பண்ணித் தருகிறாள்
மூத்தவன் பாடசாலை சென்றுவிட்டான்
முன் பள்ளி சென்று வந்த மகள் இடுப்புப் பட்டியை எடுத்துக் கொடுக்கிறாள் “இன்னாங்க வாப்பா” என்று
ஒன்றரை வயது கடைக்குட்டி மகன் காலுறைகளை நீட்டுகிறான்
எல்லோருமாகத் தயார்படுத்துகிறார்கள் அவனை
வேலை ஒன்றைப் பெறுவதற்கான நேர்முகத் தேர்வுக்காக…

3
நதியை எழுதுகிறேன் ஓடிக்கொண்டே இருக்கிறது
காற்று – தாள்கள் பறக்கின்றன
மழை – கைகளில் நீர்த்திவலைகள்
வானவில் – நிறங்கள் உதிர்கின்றன

வான்கதவுகள் திறந்திருக்கின்றன
சேதாரமின்றி செஞ்சூரியன் உள்நுழைகிறான்
இருள் கொட்டிக் கிடக்கிறது வீதிகளிலும் வீடுகளிலும்

ஃபஷ்றி-இலங்கை

ஃபஷ்றி

 

(Visited 103 times, 1 visits today)