அழகின் பயணம்-கவிதை-டீன் கபூர்

அழகின் பயணம்

டீன் கபூர்
ஓவியம்: சமித்திரா ஸ்ரீரங்கநாதன்

சுழற்சியாய் சுற்றி மடிகின்ற தெருவின்
இருமருங்கும் வேகமாய் ஓடி மறைகின்ற காட்சிக்குள்
என் பார்வையின் அடிவானம் வெளிக்கத் தொடங்கிற்று.

இடையில் துள்ளிக் குதிக்கின்ற குரங்குகளின் உல்லாசம்
எருமையின் ஏரியில் உட்காரும்
வெள்ளைக் கொக்கின் ஓய்வு
பச்சைக்குள் மெதுவாக நகர்கின்ற
ஏதோ உருவத்தின் அசைவு என
எனது பயணம்.

மகா நதிகளின் சலசலப்பின்றிய
வெறுந்தரை மணலை முதுகால் உயர்ந்து கண்டேன்.
மலைமுகடுகளில் உரசிப் பேசிய
பனியின் கம்பளம்
என்னை ஆற்றுப்படுத்தியதாக உணர்வேன்.

ஆக,
மனசை ஒருமைப்படுத்தும்
என் தேசத்தின் புட்களிலும்
புல் நுனிகளிலும் ஆயிரம் அர்த்தங்கள்
ஒதுங்கிக் கிடக்கின்றன.

0000000000000000000000000000000

மழைச் சித்திரம்

மழைச் சித்திரம் வரைய ஆசைவைத்து
முகிலிடம் மனுச்செய்கிறேன்.
மழையைக் காடுகளில் நீர் நிலைகளில்
அள்ளி எடுத்து வானத்தில் படம் காட்டி சுற்றித்திரிகின்றன.
இருண்டவானம் ஊரை முற்றுகைத்திருக்கிறது
என மகிழ்ந்திருக்கிறேன்,
பின்பு வெடித்துச் சிதறிய முகிலினுள் இருந்து
பாய்ந்த நீரில் ஆற்று வாழை மணக்கிறது.
கொஞ்சமான சிறு மீன்கள்
வாசல் முழுக்க துள்ளிக் குதிக்கின்றன.
எனது குழந்தைக்காக
கட்டிவைத்த கப்பல்களை ஓடவிட்டு மகிழ்கிறேன்.
எனது மழைச் சித்திரம்
மெல்ல நகர்ந்து நகர்ந்து
கடதாசியெங்கும் நதியாகப் பாய்கின்றது.

0000000000000000000000000000000

இனியது

என் தூக்கம் கலைக்கப்படுகிறது.
என் தூக்கத்தை சில ஏறும்புகளே தூக்கிச் சென்றன.

அவை பிடித்து இழுக்கும்போது இலேசாக வலித்தது.
ஒன்று காதினுள்ளும்
ஒன்று கழுத்தினுள்ளும்
ஒன்று மறைவான இடத்தினுள்ளும்
இன்னொன்று புருவத்தினுள்ளும் ஊர்ந்து சென்றன.

என் தூக்கம் கலைந்தபோது
சூரியனின் பாதங்கள் மூன்றாவது தடவையாகவும்
என் மேனியில் ஏறிச் சென்றன,
இன்று ஒரு விடுமுறை நாள்.

டீன் கபூர்-இலங்கை

டீன்கபூர்

(Visited 85 times, 1 visits today)