டீன்கபூர் கவிதைகள்

முட்டாள்கள்

டீன்கபூர்
நான் ஆவேசமாகக் கர்ஜிக்கின்றேன் மேடையில் முட்டாள்கள் கைகொட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் கொடுங்கோலர்களை வரைகிறேன் சுவரில் முட்டாள்கள் மெச்சிக் கொண்டிருக்கிறார்கள்.

நான் சோகமாகப் பாடுகிறேன்
அரங்கில் முட்டாள்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் முழுதுமாய் நனைகிறேன்
மழையில் முட்டாள்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக,
நானும் ஒரு முட்டாள்தான்.?
அல்லது ஒரு முட்டாள்தானா?
பாதங்களில் ஆரம்பித்து என்னோடு தொடரும் நிழலும் அறிவாய்.

0

கனவின் இரவு
#
இரவைப் புசித்துக்கொள்ளும் எனது நித்திரைக்குள் பிரபஞ்சம் முழுவதுமாய் அங்கலாய்க்கின்ற எனது கனவும் வெளியெங்கும் ஆயிரம் அர்த்தங்களைத் தேடியபடியாக விடிந்துவிடுகிறது.
பகல்களின் தீரா ஆசையின் பிரதி விம்பமாய் இரவைத் தேடும் கனவுகளுக்காகவே
எனது நித்திரை அர்ப்பணமாகிறது.
எனது இரவில் நட்சத்திரங்களோ
சந்திரனோ ஒளிர்வதில்லை.
வெறும் பூக்காடுகளால் நிறைந்து கிடக்கிறது எனது கனவின் இரவு.

000

உம்மா
#
எண்பது வயதையும் தாண்டிப் பயணிக்கும் உம்மாவின் விழிகள் தெளிவான நட்சத்திரமாய் என்னில் விழுந்துவிடும்.

தினமும் கறியை விசாரித்து ருசிபேசும் நாவில் படிந்துள்ள வெற்றிலைக் கசறையும் மீறி ஊருவது புரியும்.

கம்பீரமாய் உரைத்திடும் மொழிக்குள் கட்டுண்டுபோய்விடும் நான்
உம்மாவின் அன்புக் கரத்தின் வலிமையை என்னவென்று சொல்வேன்.
நிலவு
பிராணிகள்
இரவுப் பேய்கள்
தாலாட்டு
ஊஞ்சல்
தொட்டில் என
உம்மாவுக்கும்
எனக்கும் உரிமை கூட்டின.

உம்மா
எனது இன்னொரு இதயம்.

0

மணம் அது காற்று
#
காற்றின் வழிதவறிய மணம் ஜன்னலை மிக அவசரமாகத் திறந்து வெளியேறிச் சென்றது.

திறந்த கதவின் இடவலுக்குள் சிக்கிய பல்லியைத்தேடி
அணிவகுத்த எறும்பின் பின்னால்
அலைந்து
அலைந்து செல்கிறேன் தூப்பங்கட்டோடு.

மிச்சமுள்ள மணத்தைப் போக்க மற்றுமொரு ஜன்னலையும் திறக்கவேண்டியதாயிற்று எனக்கு.

டீன்கபூர்-இலங்கை

டீன்கபூர்

(Visited 97 times, 1 visits today)