சண்முகம் சிவகுமார் கவிதைகள்

சாம்பலாய் கவிதைக்குள்ளிருந்தவன்

சண்முகம் சிவகுமார்

வரலாறால் மறைக்கப்பட்டவன்
அரசியலால் வெள்ளையடிக்கப்பட்டவன்
தலையின்றி
ராசாக்களை காத்து கொண்டிருப்பவன்
சாட்சியங்களற்று
எரிக்கப்பட்டு
கவிதைக்குள் சாம்பலாய் குவிந்திருக்கிறான்

காலத்தின் சூடு
படிந்த வார்த்தைகளை
நன்கு தின்று
அவனது பசி வளர்ந்திருக்கிறது

இதுவரை கவிதை வாசித்த
ஒருவரையும்
மிச்சமில்லாமல்
கூவி அழைத்துவிட்டான்
ஒருவரும்
திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டனர்

நீங்களாவது
மலையின் கனத்தை சுமந்து
திரிபவனின்
சாம்பலை
கடலில் கரைத்துவிடுங்கள்.

0000000000000000000000

நீ விரித்து வைத்த குடை…

இன்றிலிருந்து
நேற்றைக்கு விரிந்திருக்கிறது

நடுங்கும்
விரல்களின்
தோற்பட்டைகளை பிடித்திருக்கிறது

மெல்லிய
வார்த்தைகளுக்குள்
மெல்ல முடியா
வாசனையை பரவவிட்டிருக்கிறது

ஆறுதலான
இதயத்தால் விரிந்திருந்தது

இன்னும்
காலத்தின்
அஞ்சும் மழைத்தாரைகளை
எப்படி எதிர்க்க வேண்டுமென
அக்குடைப் பிடித்திருந்த
கரங்களே
நமக்கு
சொல்லித் தந்தன

நீ
விரித்து வைத்த குடை
அவ்வளவு
கனமானது…
தூக்கியெறிய முடியாதது…

000000000000000000000000000

வேட்டை…

திரை விலகியது
சிங்கம்
மேடையின்
வலது மூலையில்
பதுங்கியிருந்தது

புலி
இடது மூலையில்
பதுங்கியிருந்தது

நரி
சிங்கத்திற்கும்
புலிக்கும்
நடுவே
பம்மியிருந்தது

நான்
மேடையின்
மையத்தில்
எல்லாம் இழந்து
கொல்லப்படுவதற்கு
நிற்கின்றேன்

படபடக்கும்
இதயத்தின்
துடிப்பொலிக்கு
அவை
கூரிய நகங்களை நீட்டி
அண்மிக்கின்றன

நரிகளுக்கு
கொண்டாட்டம்

திரைக்குள்
சலனம்.

நான்
நரியை
வேட்டையாடினேன்

சிங்கமும் புலியும்
திரைக்கு பின்னால்
ஓடிக்கொண்டிருக்கின்றன

நீங்கள்
உங்கள் மேடையிலிருக்கும்
எதை வேட்டையாடப்போகின்றீர்கள்…

0000000000000000000000000

நானறியாத வாசனை

இதுவரை
அறிந்திராத
எனது வாசனையை
நுகர்ந்தது
வண்டொன்று

வண்டின்
காலிடுக்கில்
சிக்குப்பட்ட என்னை
அயலெங்கும்
கொட்டிவிட்டது

நான்
பூக்கிறேன்
ஓர் பெயரறியா
இரவுப்பூவாக
அல்லது
பகலின் மிக
வெளிச்ச நிறமாக

இப்படி
மலைக்குள்
பரவுகிறேன்
யாருமறியா
தனித்த
வாசனையாக…

நீ
வண்டாகி வரும்
திசை
எட்டும்
திறந்திருக்கிறது

வா…
நாம்
உலகமறியாதொன்றாய்
பூத்து மணப்போம்…

0000000000000000000000000000000

கண்களுக்குள் ஆடும் கூடு…

எனக்கு பரீச்சயமான
பறவையொன்று
கூடு தேடி
பழமுதிரும் மரங்களில்…
பசுமையடர்ந்த மலைகளில்…
இதமான கூரைகளில்…
அடைக்கலம் கேட்டு
அலைகிறது

விரகதியின் உச்சத்தில்
இறகுகள்
உதிர தொடங்க
பறவை வாழ்வை
இழக்கிறது

உதிரும் இறகுகளின்
வலி
நீக்க
தெரிந்த பறவைக்கு
கண்களுக்கு கூடு கட்டினேன்

பறவை
ஆடும் கூடு
நானாக

பறக்கிறேன்…
மிக உயரத்தில்

சண்முகம் சிவகுமார்-இலங்கை

சண்முகம் சிவகுமார்

(Visited 88 times, 1 visits today)
 

2 thoughts on “சண்முகம் சிவகுமார் கவிதைகள்”

Comments are closed.