சண்முகம் சிவகுமார் கவிதைகள்

பறவை மற்றும் மரத்திற்கான காத்திருப்பு

சண்முகம் சிவகுமார்

நான்
பறவை என்ற
சொல்லாய் இருந்தேன்

அவர்கள்
மரம் என்ற சொல்லாயிருந்தனர்

பறவை
மரத்தில் வாழத் தொடங்கியது

மரத்தை
காடாய் பெருங்கியது

ஒவ்வொரு மரமும்
பறவைகளை
தாங்கி நிமிர்ந்தன

பின்
காலம் பருவங்களை
மாற்றிக்கொண்டிருந்தது

பருவத்துள்
மரமும் பறவையும்
கனிந்தன

பின்
யாரோ வந்தனர்

மரத்தை வெட்டினர்
பறவை வாழ்விழந்தது
சொற்கள் மரித்தன

பின்
யாரோ
யாருமில்லா பொழுதில்

பறவை
அமரும் மரத்திற்காக
அந்த
யாரோவோடு
அமர்ந்திருக்கிறார்

நாம்…

00000000000000000000000000000000

கதைகளுக்குள் காணாமல் போனவன்…

சண்முகம் சிவகுமார்

கதை
சொல்பவன்
நீண்ட
பெருமூச்சுடன்
கதையை நிறுத்திக்கொண்டான்

அவன் கூறிய கதைகளில்
நான்
எனது முகத்தை கண்டதில்லை

கதைக்குள்
வளர்ந்திருந்த பூஞ்செடிகளில்
எழும்பிய
வண்ணாத்துப்பூச்சிகளின்
கால்களில்
ஒட்டியிருக்கும் மகரந்தம்
எங்கு
செழிப்பை கொட்டியிருக்கிறது
எனக்கு தெரியாது

நான்
இல்லா கதைகளில்
தும்புதடியை வைத்துக்கொண்டு
காலத்தை
கூட்டி பெருக்குதலே
வாழ்வானது

கதை கூறுபவன்
பொழுதொரு நிறத்தோடு
வருகிறான்

பின்
என் பரம்பரையின்
கதைகளே
கருத்த வார்த்தைகளால் தீட்டி
மறைத்துவிடுகிறான்

இப்படி
கதைகளுக்குள்
காணாமல் போனவன்
புதிய
மொழியாலான கதைகளோடு
இன்னும் கொஞ்சம் நேரத்தில்
உங்கள்
கதவை தட்டுவான்

தயவுசெய்து
அவனுக்கு
கதவை திறவுங்கள்

0000000000000000000000000000000000

வேட்டைக்காக காத்திருக்கும் விலங்கு

சண்முகம் சிவகுமார்

வேட்டைக்காக காத்திருக்கும் விலங்கு
தனித்த
பசியோடிருக்கிறது

அது
நிகழ்வின்
வனத்தில் பதுங்கியிருக்கிறது
தன்
கூரிய நகங்களால்
காலத்தை பிராண்டியபடி
தனித்த பசிக்கான
மிகச் சரியான
வேட்டைக்காக காத்திருக்கிறது

நாங்கள்
விலங்கின்
சிவந்த பார்வை
எல்லைக்குள்
வசமாக வந்திருக்கிறோம்

இனி
தப்பித்தல்
இயலாது

நிகழ் கால வனத்தில்
எதிர்ப்பின்றி பணிந்தோம்

மிகப் பொறுமையாய்
கனத்த பசி தீர்க்க
எங்கள்
தலைகளை
உண்கிறது
வேட்டைக்காக காத்திருந்த விலங்கு

0000000000000000000000000000000000

ஒளிச்சிறகுகளுடன் சில சொற்கள்

சண்முகம் சிவகுமார்

ஆதியிலிருந்த வனைஞன்
எதிர் காலத்திற்கென
ஒளிச்சிறகுகளுடன் சில சொற்களையும்
படைத்து பறக்கவிட்டான்.

இருளின் அடர்ந்த கருமைக்குள்ளேயே
துளாவிக் கொண்டிருந்த
நான்
சிறகுகளுடன் ஒளிரும்
சொற்களை
கண்டு
அஞ்சினேன்

வனைஞன் கை நிறையநிறைய
அள்ளி தந்த
சொற்களில் படபடப்புடன்
ஒளிரும் சிறகை
பெரும்
அச்சத்தோடு தொடப்பயந்து
மீளா இருளுக்குள் ஓடிக் கொண்டிருந்தேன்

ஒளிச்சிறகுகளுடன் பறந்து கொண்டிருந்த சொற்கள்
முகமற்றவருக்கு அழகிய செழித்த முகத்தையும்
அற்புதங்களை நிகழ்த்தும் குரலையும்
விடுதலையின் பரந்த வானத்தையும்
உலகமெங்கும்
தர
நானும் சூடிக் கொண்டேன்
ஒளிச்சிறகுகளுடன்
சில சொற்களை…

சண்முகம் சிவகுமார்-இலங்கை

சண்முகம் சிவகுமார்

 

(Visited 55 times, 1 visits today)