மலைகள் பேசும் துயர்கதைகள்-கவிதை-சிவனு மனோஹரன்

மலைகள் பேசும் துயர்கதைகள்

சிவனு மனோஹரன்

தாய்தேசம் விட்டுத் எம்மவர் தொலைந்த
வலியில் பாதியை
கடல் விழுங்கிற்று

செக்கு மாடுகள் போலுழைத்தேங்கிய
மீதியை
காடுகளும் மலைகளும்
தின்றழித்தது விட்டன

மலைகள் மட்டுமே
உயர்;ந்து நிற்கும் தேயிலை காடுகளில்
இரு நூற்றாண்டின் துயர்கதைகள்
காற்று மட்டும் எழுதும்
காவியமாயிற்று

மிலாறு காடுகளிலும்
கவ்வாத்து மேடுகளிலும்
அட்டை பூச்சிகளுக்கு
அபயமளித்த நம் ரத்த வரலாறு
மலைகளை ஆளும்
வேலையில்லாதவனின்
பகலென வீணே கழிகிறது.

இரு நூறு வருடங்களாய்
காலத்தை சுமக்கும் கூடையின்
வரலாறு
ஓர் உன்னத தலைவனின் ஒற்றை வார்த்தைக்காய்
தவம் கிடக்கிறது.

முனியப்பா
இத்தனை காலம்
திருத்தப்படாத வரலாற்று பிழைகளில்
காலம்
தன் முதற்கல்லை எறியப் போகிறது.

முனியா!
மிகவும் உரமாய் விழும்
வார்த்தைகளை மட்டும் அருள்!
உன் கை தாங்கிப்பிடித்திருக்கும்
வீச்சரிவாளைக் காட்டிலும்
வார்த்தை வலிமையானது.
அதனாயே என் சமுகத்தை
வார்த்தெடுத்துக் கொள்கிறேன்.

00000000000000000000

பெரட்டுக்கு வராத பிராது

 

செடியாக்கப்பட்ட
மரங்களின் பிராதுகள்
இன்னுமே
பெரட்டுக்கு வரவில்லை
கால் அளவில் வளர்ந்து நிற்கும்
மரங்கள், தேசம் தாண்டி பயணித்த பிராதும்
இன்னும் பெரட்டுக்கு வரவில்லை.
நாசியை அறுக்கும்
நாற்ற குசுவும்
ஊதுவர்த்தியாய்
ஊமை புகை அடர்த்துவதால்
உடைபடும் லயன்களின் தீனக்குரல்
இன்னுமே பெரட்டுக்கு வரவில்லை.
உதிரும் சுண்ணாம்பு சுவர்களின்
செவிவழிச் செய்திகள்
நாளை ஆவணப்படமாய் கூட
அம்பலமாகலாம.; அது
நம் அரசியல் பயணத்தின்
அத்திவாரம் என்றால்
அதிர்வதற்கும் ஆளில்லை நம்மில்.
லயன்களின் துயர்புகை அடர்ந்திருக்கும் நொய்ந்த கூரைகள்
வேண்டுமானால்
வாய் மூடி மௌனித்தும், மரணித்தும்
போகலாம். ஆனால்
மறுக்கப்படும் பிராதுகள்
லைசன் கல்லூடே
நான்காம் உலக போரை அறிவிக்கும்
நாள்
தொலைவில் இல்லை
ஆதிக்கனே அதிர்வதற்கு தயாராகு!
லயம் புரட்சியை கருவுற்றிருக்கிறது.

சிவனு மனோஹரன்-இலங்கை 

 

 

(Visited 81 times, 1 visits today)
 
சிவனு மனோஹரன்

அவளுக்கு வயது பதினொன்று-சிறுகதை-சிவனு மனோஹரன்

  ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் உக்கிரமாய் தன் கதிர்களை பாய்ச்சிய சூரியனின் வெக்கை நேத்ராவின் உடலெங்கும் வியர்வை மணிகளை அரும்பியிருந்தது. மலைக்காடுகளில் கீரை ஆய்வதற்கு சுற்றித்திரிந்ததில் அவள் […]