அவளுக்கு வயது பதினொன்று-சிறுகதை-சிவனு மனோஹரன்

 

சிவனு மனோஹரன் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் உக்கிரமாய் தன் கதிர்களை பாய்ச்சிய சூரியனின் வெக்கை நேத்ராவின் உடலெங்கும் வியர்வை மணிகளை அரும்பியிருந்தது. மலைக்காடுகளில் கீரை ஆய்வதற்கு சுற்றித்திரிந்ததில் அவள் பாவாடையில் அப்பிக்கிடந்த ஒட்டுப்புல்லை பிடுங்கிக் கொண்டே கீரைகளுக்கிடையில் செருகிக்கிடந்த புல்லையும் இடைக்கிடை கலைந்தெறிந்தாள் அவள்.

பாதையை விட்டு சற்று விலகிநின்ற கருபந்தேயிலை மரநிழலில் அண்டிய வசந்தா கிழவி முந்தானை தலைப்பால் முகத்திலும் கழுத்திலும் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே அருகில் கிடந்த பாறையில் அமர்ந்து ஆசுவாசப்பட்டாள். மலைமேடுகளில் அலைந்து திரிந்த அவளின் கால்களுக்கு அது கொஞ்சம் ஆறுதலளிப்பதாய் இருந்தது.

தக்காளி, வல்லாரை கீரைகட்டுகளை முனியாண்டி பீலியில் முக்கி எடுத்து விரிக்கப்பட்டிருந்த யூரியா பேக்கில் அடுக்கிக் கொண்டே நின்றிருந்தாள் நேத்ரா. பளிங்குமலை ஸ்டோரில் இருந்து காற்றுடன் கலந்து வந்த தூளின் நெடி அவள் மூக்கை சீண்டிவிட்டுப்போக அப்போதுதான் காலையில் ஊற்றிக் கொண்டுவந்த சாயம் அவள் நினைவுக்கு வந்தது. பாதையில் வந்து நின்று ஒரு மணித்தியாலத்தை கடந்திருந்தப் போதும் இதுவரை ஒரு கட்டு கீரையும் விற்றப்பாடில்லை. சரி ஆறிக்கிடக்கும் சாயத்தையாவது ஊற்றி தொண்டையை நனைத்துக் கொள்ளலாம் என்று எழுந்த போதுதான் வளைவில் மின்னல் வெட்டும் வேகத்தில் பறந்து வந்த அந்தக் கார் அவள் காலடியை உரசும் நெருக்கத்தில் வந்து நின்றது.

நேத்ராவுக்கு உள்ளுக்குள் உற்சாகம் குதியாட்டம் போட்டது. பட்டென தன் வலகரத்தால் முகத்தின் வியர்வையை மளித்து தள்ளிவிட்டு பூரித்த முகத்துடன் “என்ன மாத்தியா என்ன மெத்தன கொட்டுகொல தக்காளி மெல்லும் தியனவா மே ஒக்கோம ஒன்தாய் மாத்தியா கன்ன” என்று கூறிக் கொண்டே கீரைக்கட்டுக்களை புரட்டிப் புரட்டி போட்டுக் கொண்டிருந்தாள். காரில் இருந்து இறங்கி வந்த அந்த நபர் அலட்சியத்துடன் கீரைகளை நோட்டமிட்டு அவளையே வைத்தகண்வாங்காமல் பார்த்துநின்றான்.

அந்த நபரின் பார்வை அவளை குத்தியது. அன்றைய நாளின் முதல் வியாபாரத்தை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதற்காய் பேச்சு கொடுத்துக் கொண்டேயிருந்த அவளின் ரோசாப்பூ உதடுகளில் அந்த நபரின் பார்வை நிலைகுத்தியிருந்தது. அது அவளை தொடர்ந்து பேசவிடாமல் தடுத்தது.

முன்பின் அறிந்திராத அந்த நபரிடம் இருந்து கிளம்பிய நெடி தவிர்க்க முடியாமல் பிரேமதாசையை  நினைவூட்டிப் போனது. அது இன்னும் அவளை ஏதோ செய்தது. உரசும் தூரத்தில் நின்றுக் கொண்டு கீரைக்கட்டுக்களை களைத்துப் போட்டது அவளுக்கு பெரும் அசௌகரியமாய் இருந்தது. ஆனாலும் அதற்குள் அன்றைய நாளின் சீவியம் எதிர்பார்ப்பாய் ஊறிக்கிடந்தது.

உலைந்துக் கிடந்த கால்களுக்குள் பரவிய புது உற்சாகத்துடன் எழுந்து வந்த வசந்தா கிழவி “மாத்தியாட மொக்கத ஓனே மே ஒக்கோம ஒன்தம மெல்லும் கன்ட” என்றதும் அம்மா நாங்க கொழும்பால் வந்தனாங்க இன்றைக்கு போற பயணம் இங்கால பட்டர் புருட் எடுக்கேலும் என்று சொன்னவங்க எடுக்கேலுமே? என்று அவர் உதிர்த்த தமிழைக் கேட்டதும்  “அட நீங்க தமிழா? என்ற வியப்பை வெற்றிலை கறை படிந்த பற்களை அகோரமாய் காட்டி,  ஐயோ இப்ப சீசன் இல்ல தம்பி ரெண்டு மாசத்துல வந்தா எடுக்கலாம்” என்று பட்டென பதிலிறுத்து அடுத்த வாகனத்திற்கு கீரைகளை காட்டத் தொடங்கினாள் கிழவி.

அப்போதும் ஓரக்கண்ணில் நேத்ராவை நோட்டமிட்டுக் கொண்டிருந்த அவர் “அம்மா கேக்குறேனு கோவிக்கப்படாது நாங்க இங்க வந்தது எங்க வீட்டு வேலைக்கு ஆள் புடிக்கத்தான். யாரும் தோதா கிடைக்கல்ல உங்கட பிள்ளைய பார்த்ததும் விருப்பமா கிடக்கு அனுப்புவியளே? என்று சில்லறை சிதறினாற் போல் சிந்திய வார்த்தை கிழவியின் உச்சி மண்டையில் சுள்ளென்று தைத்து விட்டது.  “என்னா ராசா ரோட்டுல நிக்குறனால நீங்க என்னா சொன்னாலும் கேப்பமுனு நெனச்சீங்களோ? நாங்களும் மானம் மரியாதையோடத்தாதான் வாழுறோம் கஞ்சிக்கு வழியில்லனு இப்பிடி காச காட்டி அசிங்கப்படுத்தாதீங்க போங்க நல்லபடியா ஊர்போய்  சேருங்க என்றதும் “அதுக்கில்லம்மா நான்…” என்று ஏதோ சொல்ல முயன்றவனுக்கு “தம்பி ஒங்களுக்கு மருவாத அவ்வளவுத்தான். இதுக்கு மேல இங்க நின்னா அப்புறம் மானங்கெட்டத்தனமா பேசிப்புடுவேன் போங்க” என்றதும் விருட்டென திரும்பி நடந்த அந்த அறிமுகமில்லா நபரின் முகம் அன்றைய நாள் முழுவதும் நேத்ராவுக்கு பிரேமதாசையை நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தது. அது இன்னும் அவளுக்குள் அதிகமான கோபத்தை கிளறிவிட்டுக் கொண்டேயிருந்தது.

மறுநாள் விடிந்ததில் இருந்து நய்நய்யென பெய்துக் கொண்டிருந்த மழை இப்போது விடாது கொட்டத்தொடங்கியிருந்தது.  கூரையின் வழி கீழிறங்கி கொட்டிக் கொண்டிருந்த மழை நீரை வெறித்து பார்த்தப்படி கதவோரத்தில் சாய்ந்திருந்த நேத்ரா அதிலேயே தன் நினைவுகளையும்  தொலைத்திருந்தாள்.

அன்றைய நாளின் விடுமுறைக்காய் ஒரு காரணத்தை தேடியலைந்த  அவளுக்கு விடாது கொட்டிய மழை நம்பிக்கை விதையை பதியமிட்டிருந்தது. வசந்தா கிழவியும் முடியுமானவரை கத்தி தீர்த்து விட்டு “நாசமா போன இந்த முண்டைக்கு எவ்வளோத்தான் சொல்லுறது? இதுக்கு மேல அது தலயெழுத்த அதுவே எழுதிக்க வேண்டியதுதான் நாழெழுத்து படிக்காம நாங்க சீபட்டு போனத சொன்னா புரிஞ்சிக்கணும் நேத்து சரி ரோட்டுக்கு வந்த ஒத்தாசையா நின்னு நாலு காசு பாத்தோம்  அதுக்காக காலத்துக்கும் ரோட்டுல போயி நிக்குற மாதிரியா இருக்கு? அப்பிடியே போயி நின்னாலும் போறவென் வாறவென் எல்லாம் வரிஞ்சி கட்டிக்கிட்டு எங்க ஊட்டு ஊத்தய கழுவ வாறியானு கேக்குறான் நல்ல பொம்பளனா ஒனக்கு நேத்தே புத்தியில ஒரச்சிருக்கணும் கூறு கெட்ட சிறுக்கிக்கு எவ்வளோத்தான் சொல்லுறது.” என்று கொட்டிய வார்த்தைகளை “நாசமா போன மழ இப்பிடி ஊத்துதே”? என்ற ஆதங்கத்துடன் நிறுத்திக் கொண்டாள்.

நேரம் லைசன் கல்லூடே சலசலத்து ஓடும் மழை நீர் போல கரைந்துக் கொண்டிருந்தது. கரையும் நேரம் கண்டு நேத்ரா ஆனந்தித்தாள். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. பாடசாலையை நிராகரிக்கும் நாட்களில் குறிப்பிட்ட நேரம் ஓடிவிட்டால் வசந்தா கிழவியின் வாய் ஓய்ந்துவிடும் அதன்பின் அன்றைய நாளை அவள் சுலபமாய் கடந்துவிடுவாள். ஏச்சும் பேச்சும் பத்து மணி வரைக்கும்தான் அதன் பிறகு மலை மலையாய் ஏறி வசந்தா கிழவி கீரை பிடுங்க கிளம்பி விட்டாள் நேத்ராவின் பாடு கொண்டாட்டம்தான். அன்றைய நாளை பீலிக்கரையிலும் மிளாறு காடுகளிலும் தனிமையில் கழிப்பதை பெரிதும் விரும்புவாள். யாருமில்லா தனிமையில் மட்டும்தான் அவள் மனம் ஆனந்த கூத்தாடுவதற்கு பழகியிருந்தது. எப்போதும் அவள் மூக்கை அப்பிக்கிடந்த அம்மாவின் சென்ட் வாசனை அவள் தனிமைக்கு மருந்திடுவதாக நினைத்துக் கொள்வாள்.

தாய் சொல்லொனாத் துன்பத்தோடு ஒருமுறை நிர்க்கதியாய் வந்து நின்றப்போது இரண்டு வருடங்களாய் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த தன் கனவு மூட்டைகளை அவள் அவிழ்ப்பதற்கு முன்னமே தூரதேசத்தில் தன் உள்ளத்தை அழுத்திய காயங்களை மகளை மடியில் இருத்தி துன்பக்கறை படியாமல் அதே புன்னகையுடன் சொல்லிமுடித்த தருணம் தன் மனத்திரையில் விழும் போதெல்லாம் அதனை ஆற்றிக் கொள்வதற்கு நேத்ரா தனிமையைத்தான் நாடுவாள். அத்தனிமை தரும் அமைதியை ஒருபோதும் பாடசாலை தராது என்பதை அவள் உறுதியாய் நம்பியிருந்தாள்.

பிரிவையும் தனிமையையும் தனக்கு உயிலெழுதி விட்டு தாய் மீண்டும் தூரதேசம் போனாள்.

அன்றும் கிழவியின் வார்த்தைகளை உதாசீனப்படுத்திவிட்டு கீரைக்கட்டுகளோடு மாரடித்தாள் நேத்ரா.

இடம் மாறி மாறி அமர்ந்து வித்தைக் காட்டிக்கொண்டிருந்த கருங்குருவியை கல்லை கொண்டு விரட்டிக்கொண்டே “இந்த சனியென் மூஞ்சில முழிச்சா நாள் நல்லா வெளங்கிறும்” என்று புறுபுறுத்துக்கிடந்தாள் கிழவி.

நேரம் தன் இயல்பில் ஓடி கரைந்துக் கொண்டிருந்தது. இன்றும் அதே கார் தன் அருகில் வந்து நின்றதும் நேத்ரா அதிர்ந்துப் போனாள். இனம்புரியாத ஒரு படபடப்பு அவளைத் தொற்றிக் கொண்டது. பாட்டியின் முந்தானையை பிடித்துக் கொண்டு அவளுக்கு பின்னே மறைந்துக் கொண்டாள் நேத்ரா. பாதையோரத்தில் சடைத்து நிற்கின்ற கருபந்தேயிலை மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளும் சத்தம் தெளிவாய் ஒலிக்க தன் கூந்தலை வாரிமுடிக்கும் வசந்தா கிழவியின் கண்களில் இருந்து பறந்த கோபக் காண்டீபம் காரில் இருந்து இறங்கிய பிரேமதாஸ்  மீது பாய்ந்தது.

அப்போது நேத்ரா இன்னும் இருக்கமாய் தன் பாட்டியின் இடுப்பை இறுகக் கட்டிக்கொண்டு பயந்தாள்.

பிரேமதாசைத் தொடர்ந்து வந்த நபர் “அம்மா நாங்க நேற்றும் வந்தனாங்க…” என்று தாழ்ந்த குரலில் பேச்சை எடுத்ததும் “அட நீங்க சோறுதான் திங்கிறீங்களா? இல்ல வேற ஏதும் திங்கிறீங்களா? ஒரு தடவ சொன்னா ஒங்க புத்தியில ஒரைக்காது? இவென் எல்லாம் ஒரு மனுசேனு இவென் பேச்ச கேட்டுகிட்டு வந்துடீங்க நல்லா இருந்த குடும்பத்த நாசமாக்குன பாவி இவென். ஒழுங்கு மருவாதையா போயிறிங்க இல்ல மானங்கெட்டுத்தான் போவீங்க என்று பற்களை நறுநறுவென கடித்துக் கொண்டே கோபத்தில் விழும் தூசண வார்த்தைகளால் பிரேமதாசையை அர்ச்சனை செய்தாள் கிழவி. உரமாய் விழுந்த கிழவியின் வார்த்தைகள் அவனின் கடந்த காலத்தின் மீது விழும் கற்களென அவனை அழுத்தின.

“அட ஒனக்கு இவ்வோ பேச முடியுதா? ஆயிரந்தான் இருந்தாலும் அவ மகே துவ அவள எங்க வைக்க வேணுமினு எனக்கும் தெரியும் ஒன்னோட விட்டா இப்பிடித்தான் ரோட்டளக்கணும் ஒன்னுமில்லா நாயி ஒனக்கு நான் ஏன் பயப்படனும் என்று அவனும் வார்த்தைகளை வீசத்தொடங்கியதும் “அடி செருப்பால பொம்பளைங்கள மோப்பம் புடிச்சிகிட்டு திரியிற நாயி ஒனக்கெல்லாம் இவ்ளோ சவடால் பேச முடியுமா? இனியொரு வார்த்த பேசுன வாயக் கிழிச்சிபுடுவேன் பொம்பள சுதியில பெத்த புள்ளய கூட நெனைக்காம ரோந்தடிச்சிகிட்டு திரிஞ்சவென்தானே நீ இப்ப மட்டும் புள்ள பாசம் எங்கயிருந்து பொத்துகிட்டு வந்திருச்சாம்” என்றதும் திடுமென பாய்ந்து நேத்ராவின் கையை பிடித்திழுக்கத் தொடங்கினான் பிரேமதாச.

தன் பாட்டியை இறுகக் கட்டிய நேத்ராவின் கைகளை அவனால் விலக்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆனாலும் அவன் விட்டபாடில்லை. முடியுமான பலம் கொண்டு தன் பாட்டியை இறுகக் கட்டிக்கொண்ட நேத்ரா கண்களைகளையும் இறுக மூடிக்கொண்டாள். அவள் மனசை பயமும் விரக்கியும் கௌவிப்பிடித்திருந்தன. இத்தனை நாள் உள்ளுக்குள் கிடந்த வைராக்கியம் வசந்தா கிழவியை உந்தித்தள்ளிவிட  தன் கால்களில் கிடந்த செருப்பு அவள் கைகளுக்கு இடம்மாறவே பிரேமதாசையை அது கொண்டு சரமாரியாகத் தாக்கினாள். சற்றும் அதை எதிர்பாராது நிலைகுலைந்த அவனோ புது அம்மோ….! என்ற குரலுடன் காண்வழி இறங்கி ஓடத்தொடங்கினான்.

அப்போது கார் வேகமாய் பளிங்குமலை வளைவை கடந்துக் கொண்டிருந்தது.

அப்போதும் ஆத்திரம் தீராத கிழவி நேத்ராவின் மயிரை கொத்தாக பிடித்திழுத்து செருப்பு பிய்ந்து போகும் வரை அவளை அடித்து விட்டு ஓய்ந்தாள். கிழவியின் உக்கிர கோலம்  கண்டு வெகுவாய் மிரண்டழுத நேத்ரா ரத்தம் கசியும் சிராய்ப்புகளோடும் அழுது விங்கிய முகத்துடனும் தேம்பிக்கொண்டே கிழவியை பின் தொடர்ந்தாள்.

முன்பெல்லாம் அம்மாவிடமிருந்து அழைப்பு வரும் என்பதற்காய் காத்திருந்த நிமிடங்களை இப்போது நினைத்தாலும் பூத்து போகும் உள்ளத்தில் அன்றைய நாள் சம்பவம் பாறையென அழுத்திக்கிடந்தது.

அம்மா தூரதேசம் போன நாளில் இருந்து அவளிடம் பேசிப் பேசி வளர்த்த கனவுகளை எல்லாம் தாய்நாடு திரும்பி மூன்று நாட்களே முடியும் தறுவாயில் தரைமட்டமாக்கி சாய்த்ததைத்தான் அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

பாட்டிக்கும் அம்மாவுக்கும் அர்த்தமில்லாத காரணங்களுக்காய் நாளும் மூளும் சண்டைகளின் போது பாட்டி அம்மாவை நெஞ்சழுத்தக்காரி என்று திட்டும் போதெல்லாம் அந்த சொல்லின் வீரியம் அவளுக்கு புரிபடவேயில்லை. ஆனால் வெகு சாமர்த்தியமாய் அம்மா அதை செய்து முடித்தப்போதுதான் அவள் நெஞ்சழுத்தக்காரி என்பதை நேத்ரா புரிந்துக் கொண்டாள்.

பிரேமதாசவுடன் காதலில் விழுந்து கரைந்த சந்தோசங்களோடு நேத்ராவைப் பெற்று தாயிடம் ஒப்படைத்து விட்டு தூரதேசம் போன நாளில் இருந்து பிரேமதாச புதுமாப்பிள்ளை ஆன கதைகள் கிழவியின் காதுக்கு எட்டாமல் இல்லை. சாடைமாடையாக ஆங்காங்கு பேசிக்கொண்ட  கதைகளில் ஒழிந்திருந்த உண்மை கையும் களவுமாய் பிடிபட்டவுடன் கிழவியை விலக்கிக் கொண்டு ஓடி ஒழிந்தவன்தான் அதன் பின் வீட்டுப் பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை.

ஆனால் கிழவி தொலைதூரத்தில் கிடக்கும் தன் மகளுக்கு இது பற்றி வாய்திறக்கவேயில்லை.

ஒன்பது வருடங்களுக்கு பின் தேவதையென தோட்டத்திற்கு வந்தவளை துரோகம் தன் கைகூப்பி அழைத்ததை தாங்கமுடியாமல் அழுதாள் புரண்டாள் பயனில்லை. மறுநாள் விடியலில் தன் இல்லத்தின் ஒளி தேடி தூரதேசம் பயணித்தவள் இல்லத்தையே ஒளிபிழம்பாக்கி விட்டு கருகிப்போன நாளைத்தான் நேத்ரா மறக்க நினைக்கிறாள் முடியவில்லை.

வீட்டுக்கு வந்த வேகத்தில் உள்ளறையையும் ஸ்தோப்பையும் சாணமிட்டு மெழுகி தீர்த்த கையோடு அழுக்காடைகளைக் காவிக் கொண்டு கிழவி டோவி காணுக்கு கிளம்பும் போது நேரம் நான்கு மணியை கடந்திருந்தது. “ஆயி வாடி காணுக்கு போயிட்டு வருவம் நாளைக்கு ஸ்கூல் போகணுமில்ல” என்றதும் பாட்டியின் பேச்சுக்கு மறுபேச்சியின்றி அவளைத் தொடர்ந்தாள் நேத்ரா.

ஆறு அவர்களின் அத்தனை அழுக்குகளையும் தன் தலையில் வாங்கிக் கொண்டது. ஆடைகளில் அப்பிக்கிடந்த அழுக்குகளைப் ஆறு கழுவி தீர்த்தது போல உள்ளத்தை அழுங்கிப்பிடித்திருக்கும் கறைகளையும் இந்த ஆறு கழுவிவிட்டால் என்ன? என்று நினைத்துக் கிடந்தாலோ தெரியாது. கிழவி தொண்டையை செருமி உச்சத்தாயில் அவளை அழைக்கும் வரை அவள் அங்கில்லை.

தன் மனத்திரையில் ஓடி மறையும் அந்தக் காட்சிகள் தன் வாழ்வின் சூன்யப் பக்கங்கள் என்றிருந்தப் போதும் அத்தனை சுலபமாய் அவளால் அதிலிருந்து வெளிவரமுடியவில்லை.

அழுக்காடைகளை அடித்து துவைத்துக் கொண்டே பாட்டி சொன்ன அம்மா புராணமும் அதன் வழி தொனிக்கும் அறத்தாறும் அன்றுதான் நேத்ராவுக்கு நன்றாய் உரைத்தது ஏனெனில் அவளுக்கு வயது பதினொன்று.

சிவனு மனோஹரன்-இலங்கை 

 

(Visited 92 times, 1 visits today)
 
சிவனு மனோஹரன்

மலைகள் பேசும் துயர்கதைகள்-கவிதை-சிவனு மனோஹரன்

மலைகள் பேசும் துயர்கதைகள் தாய்தேசம் விட்டுத் எம்மவர் தொலைந்த வலியில் பாதியை கடல் விழுங்கிற்று செக்கு மாடுகள் போலுழைத்தேங்கிய மீதியை காடுகளும் மலைகளும் தின்றழித்தது விட்டன மலைகள் மட்டுமே உயர்;ந்து […]