அவள் அப்படித்தான்-சிறுகதை-சிவலிங்கம் நேத்தாஜ்

 

சிவலிங்கம் நேத்தாஜ்ஏனோ ஓய்வெடுக்க மறுக்கிறாள். தினம் தினம் அட்டைப்பூச்சிகள் இரத்தம் குடிப்பதை வெறுக்கிறாளோ இல்லையோ, அவள் விலக்குவதில்லை. மலைகளைத் தாண்டிப்போய் கொழுந்து பறிக்கின்றாள். கேள்விக்குறி போலே கூடையை தூக்கித் தூக்கியே வளைந்துவிட்டாள். இப்போது அவள் கிட்டத்தட்ட 70-ஐத் தாண்டிவிட்டாள். ஆனால் இன்னும் ஓயவில்லை.

அவளின் சந்ததிகள் ஏராளம்.ஒன்று அவளுக்குப்பின் கூடையினைத் தாங்கிக் கொள்ளத்துடிக்கின்றது. மற்றொன்று கொழும்புக்காட்டில் குப்பைக்கொட்டுகிறது.இன்னொன்று உள்ளூர் சாராயக்கடை வருவாயை நிமிர்த்திப் பிடிக்கிறது.ஆனால் அவள் மட்டும் இன்னும் ஓயவில்லை.

திருமணத்திற்கு முன்னமே அவள் மலைக் காட்டை கைப்பிடித்துவிட்டாள். பின் அவனுக்கு அவள் வாக்கப்பட்டது இரண்டாந்தாரம்தான்.அந்த வியர்வைப் படிந்த உடலோடு அவனின் கரங்களுக்குள் சிக்கிக்கொண்டவளின் பிறப்புறுப்பிலே சிந்திவிட்ட விந்து காய்வதற்கு முன்னமே ஓடிவிட்டாள் மலைகாட்டிற்கு.அது வளர வளர அதைக் கிள்ளிக்கொண்டாள்.அதனால்தான் கண்ணீர்த்துளிகளாய் தேயிலையில் பனித்துளிகள்.அது சரி இவள் ஏன் அழுகிறாள்…?

000000000000000000000000000000

கங்காணி… அவனேதான்… வருகிறான். அவளின் மாராப்பு சரிந்ததில் இவனுக்குதான் ஈடுபாடு அதிகம். அந்த மாராப்புக்குள் தாண்டிப்போக கங்காணி கண்கானிக்கத்தொடங்கிவிட்டான். இன்று இவளுக்கு “பண்ணெண்டு” மணி நெருங்குகையில் ஏழு ராத்தல்கள் கழிக்கப்படப்போவதில்லை, சொல்லப்போனால் குறைக்கப்படப்போவதில்லை.வெற்றி.. வெற்றி… அதே மலையில் புல்லுப் புடுங்கும் இவள் கணவனுக்கொன்றும் இதில் வருத்தமில்லை.காரணம், லயத்துக் குடியிப்புகளுக்கிடையே வானளவு ஓங்கி வளர்ந்திருக்கும் தண்ணிவிட்டான் மரங்களின் உச்சியில் பறக்கும் பலதரப்பட்ட வர்ணக்கொடிகளில் ஒன்றில் யூனியன் தலைவர் இவன் என்பதால் அவனுக்கு விந்து விரையத்தில் மட்டுமே ஈடுபாடு.

“புடு புடு புடு புடு புடு புடு புடு புடு….” மோட்டார் சைக்கில் சத்தம்.“யே புள்ள… மாராப்ப சரி செஞ்சிக்கோ… தொரபய வாரா…..” அதே கங்காணிதான்.

“பண்ணெண்டு மணி நெறுவைக்கு வாங்க…. “ கலைந்த எறும்புக்கூட்டம் ஒன்றன்பின் ஒன்றாகிக்கொண்டது. பச்சைத் தங்கத்தோடு. “யே புள்ள… நெறுவத்தட்ட புடி….” அதே கங்காணிதான், இம்முறை இடுப்புப்பட்டியின் ஒரு துளையினை அதிகப் படித்தி போட்டிருந்தான். அடிக்கடி ஏதோ ஒரு கை அரைகாற்சட்டையின் முன் பைக்குள்ளேயே போய்வந்தது.இந்தமுறைத் தோல்விதான்.அவளுக்கு கண்ண்டிப்பாக எட்டு ராத்தல்கள் கழிக்கப்பட்டது.

இவளோடு சேர்த்து இவளது தந்தைக்கு நான்கு குழந்தைகள்.இவள்தான் மூத்தவள்.அதனால் இளையவர்களை வளர்க்கும் பொறுப்பை இவள் எடுத்துக்கொண்டாள்.மலைகளைக் குடைந்தாள்,காடுகளை பணம்விளையும் சோலைகளாக மாற்றினாள்,ரயில் தண்டவாளம் அமைத்தாள்,பாதை செப்பனிட்டாள்,எல்லா சகோதரர்களையும் வளர்த்தெடுத்தாள்.வளர்ச்சி…… அதன் பணியை அது செய்யத்தொடங்கியது. மூன்று சகோதரர்களில் மூத்தவன் குடும்பத்தலைமையை ஏற்றுக்கொள்கிறேன் என்றான். இரண்டாமவன் மூத்தவனுக்கு கீழே நிர்வாகம் செய்வதாகக்கூறினான். மூன்றாமவன் வருவாயினையீட்டும் அவளிடமிருந்து பணத்தை சமநிலைச் செய்வதாய்கூறி மூவருக்கும் சமமாக பங்கிட்டான்.ஆனால் அவள் மட்டும் ஓயவில்லை.

0000000000000000000000000

அந்தோ அவள் முதல்  சகோதரனுக்கொரு தனி வீடு. பாலை,பலா,கமுகு,தென்னை,வாழை,மஞ்சள்,பனை,மா,மிளகு ,திப்பிலி ,தேசிக்காய்,வெற்றிலை,பாக்கு….அப்பப்பா…. எத்தனை ரம்மியமான சோலை. நடுவிலே ஒரு அகண்ட மனிதன் படுத்திருப்பதுபோல ஒரு பெரிய வீடு.அவந்தான்….. அவளது சகோதரந்தான். உழைக்கவில்லை ஆனால் குடும்பத்தலைமையினை ஏற்றுக்கொண்டவன்.

அட…. இது அவளின் இரண்டாம் சகோதரன். எங்கிருந்து இவளை அழைக்கிறான். அடேயப்பா..இது என்ன வானத்துக்குப்போகும் படிக்கட்டுகளா…? நிச்சயம் இல்லை.. அடிக்கிவைத்த சீமெண்டு வீடுகள். இரவில் ஒளி உமிழும் நெட்டைச் சூரியன். இதில் ஒன்று இவனது வீடாம்.என்ன சுகந்தம்… மல்லிகை,ரோஜா, ஆருமணிக்கொழுந்து,இதில் ஏதோ ஒன்றுதான் அந்த மிதக்கும் அறையில் நுழைந்தவுடன் வீசுகிறது. எண்கள்கூட இங்கு இவளைப்பார்த்து கிலிங் என்ற சத்தத்துடன் கண்ணடிக்கிறது. துளிகூட வியர்க்கவில்லை, ஆனால் நூறு மாடிகளைக் கடந்துவிட்டாள்.இவளின் இரண்டாவது சகோதரனுக்கும் பிள்ளையாருக்கும் ஒரே வித்தியாசம்தான். தும்பிக்கை மட்டும் இன்னும் இவன் வளர்க்கவில்லை.இவனும் உழைக்கவில்லை.இவந்தான் மூத்தவனுக்குகீழே நிரவாகம் செய்கிறவன்.

இதுதான் “ எராப்பிளேன்”.ஆம். இதில் இவள் இன்றும் ஏறியதில்லை.அதோ உலகில் உள்ள எல்லா சந்தோஷங்களையும் முகத்தில் வருவித்துக்கொண்டு சிரித்தவாறே கையசைக்கிறதே அவளின் மூன்றாது சகோதரனின் குடும்பம்.இன்றுதான் அவர்கள் அவளுக்கொரு “முள்ளுபாட்டா” வாங்கிக்கொடுத்தார்கள். அதை.அணிந்துகொண்டு அவள் மலைகாட்டுக்கு கொழுந்து பறிக்கப் போகும் முன்னரே அவர்கள் பீஜித் தீவுகளில் உல்லாசக் குலியல் குளிக்கச்சென்றுவிடுவார்கள்.அவந்தான் மூன்றாவது சகோதரன்.இவளின் உழைப்பின் வருவாயை சமமாக மூவருக்குப் பங்கிடுபவன்.

அந்த கூரையில்லாக் கழிப்பறைக்குள் போகும்போதே குதம் மலத்தைத் துப்புவதில்லை. முக்கி முக்கி வெளியெற்றக் கழிப்பறை காற்றொன்றும் பரிமளமில்லை. அதனால் என்ன …? மலம் கழிக்க நேரம் இல்லாமல்போனால்கூட நேரம் பிந்தி மலைக்குச் செல்லக்கூடாது.

இன்னும் அவள் ஓயவில்லை….

லயத்து வீட்டுக்கு பூட்டெதற்கு ..? அவள் வீட்டில் கொள்ளையடிக்கப் பக்கத்து வீட்டு பூட்டை உடைத்தால் போதுமே.அது சரி அவள் வீட்டில் அப்படி என்னதான் கொள்ளையடிக்க இருக்கு …?இருக்கிறது. மூன்று முக்கிய பரிசுகள்.

ஒன்று, மூங்கிலில் வேய்ந்த கொழுந்துக்கூடை.அது அவள் மூத்த சகோதரன் கொடுத்தது,பறிக்கும் தேயிலைக் கொழுந்து சிந்தாமல் இருக்க.

இரண்டாவதாக நான்கு நைலோன் படங்குகள்.இது அவன் இரண்டாவது சகோதரன் வாங்கிக்கொடுத்தது. அதை அவள் இடையில் கட்டிக்கொண்டால் தேயிலைச் செடியில் உள்ள மழை நீர் அவள் உடலில் படாமல் தடுக்கும்.ஒரு வேளை அவள் நீர் கோர்த்து சீக்காளியாகிவிட்டால்…? அது நடக்கக்கூடாது.

மூன்றாவதாக, அவளின் மூன்றாவது சகோதரன் வாங்கிக் கொடுத்தது.முள்ளு பாட்டா.மலை முகடுகளில் அவள் மழை நேரத்தில் ஏறும்போது பாசிகளில் அவள் வழுக்கி விழாமல் இருக்க.

எப்போதுமே பரிசுகள் வீட்டில் வைக்கப்ப்டுவதில்லை என்பதால் அவள் எப்போதுமே வீட்டைப் பூட்டுவதில்லை.அவளின் வாழ்க்கை அப்படித்தான். அவள் ஒருநாளும் அவளை அவளின் சகோதரர்களோடு ஒப்பிடுவதில்லை. அதனால் அவள் வேலை செய்ய ஒரு நாளும் மறுத்ததில்லை.

அதோ எடுத்துக்கொண்டாள் கூடையை…. அதோ எடுத்துக்கொண்டாள் மட்டக்குச்சியை… படங்குகளைக் கட்டிக்கொண்டாள். ஒளி குறைந்த கண்களுக்கு வழிமட்டும் தெரிகிறது. அது அவளின் அனுபவஎச்சம். பனிகாயாத காலைத்தேயிலைச் செடிகளைப் பார்க்கிறாள். அள்ளி அணைக்கிறாள்… கிள்ளி முகர்கிறாள்…. தள்ளி ரசிக்கிறாள்…. மாரோடு கொழுந்தை குழந்தையை அணைப்பதுபோல அணைத்தாள்.

அதே மாமன்மார்கள்தான்.குழிவெட்ட காசில்லை.பிணம் புதைக்க காசில்லை.என்றவர்கள் இன்று பரிசுகளோடு வந்திருக்கார்கள். இம்முறை பிளாத்திக்கு கூடை.லீப் கட்டர்.வாட்டர் ரெசிஹ்டண்ட் கால்சட்டை. பாதங்களை மூடிய பாதணிகள். எல்லாமே மூன்றுபேருக்காக.. இரண்டு இரண்டு சோடிகள்…..

சிவலிங்கம் நேத்தாஜ்-இலங்கை

சிவலிங்கம் நேத்தாஜ்

(Visited 97 times, 1 visits today)