கஜல்-கவிதை மொழிபெயர்ப்பு-பண்ணாமத்துக் கவிராயர்

பண்ணாமத்துக் கவிராயர்

பாதையிலிருந்து
விலகிச்சென்றால்
வானம் எனதா? உனதா?
இவ்வுலகின்
போக்கு பற்றி
நான் கவலைப்பட
வேண்டுமெனில்
இவ்வுலகம்
எனதா? உனதா?
நித்தியத்துவம்
வேட்கைப் புயலற்ற
பாழ்வெளியானால்
தவறு எனதா? உனதா?
காலத்தின்
முதல் விடியலின்போது
தேவதூதனொருவன்
கலகஞ்செய்யத்
துணிவுபெற்றது எவ்வாறு
என நான்
தெரிந்துகொள்ளலாமா?
ஷைத்தான்
யாரின் விசுவாசி
எனதா? உனதா?
ஜிப்றீல் உன்னுடையவர்
முஹம்மத்
உன்னுடையவர்
குர்ஆன் உன்னுடையது
– ஆயினும்
அதன்
அருள்மொழிகளில்
எழுதப்பட்டுள்ள
ஆன்மா
எனதா? உனதா?
மனிதன்-
புழுதியால் ஆன
அப் பொருள்-
உன்னுலகில்
ஒளியேற்றும்
அந் நட்சத்திரம்
நோயுற்று நலிந்தால்
நட்டம் யாருடையது
உனதா? எனதா

(விக்டர் கியர்னனின் ஆங்கிலம் வழியாக)
தமிழாக்கம் : பண்ணாமத்துக் கவிராயர்

000000000000000000000000

கவிஞர்  பற்றிய குறிப்பு:

பண்ணாமத்துக் கவிராயர்பண்ணாமத்துக் கவிராயர் எனப்படும்  செய்யத் முகமத் ஃபாரூக்,  இலங்கையின் மலையக இலக்கியப்பரப்பில்  ஒரு முக்கிய கவிஞரும், சிறுகதையாளரும், மொழிபெயர்ப்பாளருமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார் .1940-ம் ஆண்டில் இலங்கையின் மலையகத்தில் மாத்தளையில் பிறந்த இவர் 1960 ஆம் ஆண்டு முதல் ஈழத்துக் கலை இலக்கியத் துறையில் தனது பங்களிப்புகளை வழங்கி வருகிறார். அத்துடன் ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக இலங்கையின் பல பாடாசாலையில் பணிபுரிந்தார்.

மறைந்த இலங்கையின் எழுத்தாளர் ஏ. ஏ. லத்தீப் நடாத்திய இன்ஸான் பத்திரிகையில் ஈராண்டு பணி புரிந்த இவரின் கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புக்கள் தாரகை, மலர், பாவை, அக்னி, அலை போன்ற சஞ்சிகைகளிலும், இன்ஸான், செய்தி, தினகரன், வீரகேசரி, திசை, அஷ்ஷூரா போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.

இவரது ஆங்கிலம் மீதான புலமை காரணமாக அல்லாமா இக்பால், நஸ்ரூல் இஸ்லாம், பைஸ் அகமத் பைஸ் போன்ற முக்கியமான கவிஞர்களினதும், பாலத்தீனக் கவிதைகள் எனப் பல முக்கிய கவிஞர்களினதும், இயக்கங்களினதும் கவிதைகளை தனது மொழிபெயர்ப்பு மூலம் தமிழுக்கு தந்தவர். அக்னி இதழில் வெளிவந்த தாஜ்மஹால் (நவம்பர் 5, 1975) எனும் கவிதையும், அலை சஞ்சிகையில் வெளிவந்த மெயில் பஸ் தம்பதி எனும் சிறுகதையும் இவரது படைப்பாற்றலுக்கான சான்றுகளாக எம்மிடையே உள்ளன. அத்துடன்  காற்றின் மௌனம் ( மொழியாக்கக் கவிதைகள், 1996, மலையக வெளியீட்டகம்),ஷரந்தீபிலிருந்து மஹ்மூத் ஸலி அல் பரூதி (2002),Genesis (மாத்தளை மலரன்பனின் 14 சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு  கொடகே நிறுவனம், 2014) ஆகிய நூல்கள் மலையக இலக்கியப்பரப்புக்கு இவரால் கிடைக்கப்பெற்றுள்ளது. பண்ணாமாத்துக்கவிராயரை கொடகே நிறுவனம் “கொடகே வாழ்நாள் விருது, 2016” கௌரவித்துள்ளமையும் இங்கு குறிப்)பிடத்தக்கது.

(Visited 182 times, 1 visits today)