தொழிலாளி வாழ்க்கையிலே-சிறப்புஎழுத்துகள்

தொழிலாளி வாழ்க்கையிலே …

குறிஞ்சி தென்னவன்

எழுவான் திசையில் எழும்பருதி தோன்றுமுன்னே
எழுவான் ,தனைச்சூழ்ந்த இடரை நினைத்திதையம்
அழுவான் ,அதுவன்றி ஆகும் வினைபுரிய
வழிதான் அறிய மாட்டான் தொழிலாளி !

உணவழித்து உடையளித்து உறைவிடங்கள் தானமைத்து
பணங்குவித்து வைக்கின்ற பாட்டாளித் தோழர்களின்
நிணம் பிடுங்கித் தின்பவர்கள் நிதமும் சுகித்திருக்க- நடைப்
பிணம் போல் திரிகின்றான் நம்மகத்துப் பாட்டாளி!

பேங்குக் கணக்கில்லை ,பெட்டிகளில் பணமில்லை ,
வாங்குகின்ற சம்பளமோ வயிற்றுக்கும் போதாது ;
தங்க முடியாத தரித்திரத்தின் சுமையழுத்தும்
ஏங்கியழுவதல்லால் என் செய்வான் தொழிலாளி ?

00000000000000000000000000

எப்படியோ ஐம்பது சதம் இருப்பாக்கி சுவீப்பு
டிக்கட்டு வாங்கி -தினந்தினமும் பூசைபண்ணி
தேங்காயுடைத்துத் தீப தூபம் காட்டி,
பாங்காயெனக்கு பரிசு மட்டும் விழுந்ததென்றால்
மாடா உனக்கு வைத்திடுவேன் பால் பொங்கல்
ஆடு கோழியறுத்து ஆக்கிப்படைத்துடுவேன்
என்றெல்லாம் எண்ணி இருப்பான், கனவுலகில்
சஞ்சரிப்பான் அதிஷ்ட்டம் தான் வரவே வராது

0000000000000000000000000

தன மகள் மணம்முடித்து தலைவனுடன் ஏகுகையிலே
என்ன கொடுப்பான் இவன்மகட்குச் சீர்வரிசை,
கம்பளியொன்றிடையில் கட்டும் படங்கிரண்டு
செம்பீயச்சாமான் சில கொடுப்பான் சீராக!
தங்க நகை நைலான் சாரி வெள்ளிப்பாத்திரங்கள்
எங்கே கொடுப்பான் இவன் வயிறு காய்கயிலே
தொங்கட்டான் மூக்குத்தி தோடிரண்டு போட்டு விட்டால்
எங்கள் இளங்கொடிக்கு என்ன குறை என்றிடுவான் !

000000000000000000000000

ஊர் பேர் தெரியாத உதாவாக்கரையெல்லாம்- தொழிலாளி
பேரைத் தினமுஞ் சொல்லி பெருந்தனவானாகிவிட்டார்
ஊர் வாழ மக்கள் உயிர் வாழ உழைத்தவர்கள்
சீர்கெட்டு இன்பம் சிறிதுமின்றி வாடுகிறார்!
மண்மீது கைபட்டால் மானந்தான் போகுதென்பார்
பொன்னும் பொருளும் புகழும் அடைந்திருக்க
மண்ணில் புழுவாய் வதையுறும் தொழிலாளி
எண்ணில் துயரம் இங்குறுவான் என்ன விந்தை !

0000000000000000000000000

வேறு போராட்டம் பல போடுவான், இருக்கும்
பொருள்தனைத் தின்று ஆடுவான்-ஆற்று
நீரோட்டம் பேசிடுந்தலைவர்
நெஞ்சம் சுமக்க மாலை போடுவான்
பின் மன்றாட்டமாய் முடியும் போராட்டம்
மனந்தானுடைந்து வாடுவான்- வாழ்க்கைத்
தேரோட்டிடவே பொருள் தான் இன்றி
தெருவில் பிச்சைக்கோடிடுவான்

ஈழமேயென் இன்னுயிர் நாடென
எண்ணியெண்ணி உழைத்தவன்- இன்று
வாழ்வோ அன்றி மாளவோ, என்று
வழியறியாமலே தவிக்கின்றான்- என்றும்
ஆளவே வரும் கூட்டமோ இவனைச்சூ
தாட்டக் காயென எண்ணியே-எந்த
நாளுமே விளையாடுவார் இவன்
நலமதை எவரும் எண்ணிடார் !

குறிஞ்சி தென்னவன்-இலங்கை 

 

 

(Visited 78 times, 1 visits today)