முக்கும் கடவுள்கள்-கவிதை-சுந்தர் நிதர்சன்

முக்கும் கடவுள்கள்

சுந்தர் நிதர்சன்

மறுபடியும் இன்னுமொரு கடவுள் பிறவியெடுத்தார்..
எங்கள் வீட்டுக்கு இரண்டு
வீதிகள் தள்ளி அவர் குடியிருந்தது
இத்தனை நாளாய் எனக்குத் தெரியாமல் இருந்தது.
என்னைப் போலவே அவர்
எல்லாமும் செய்தார்.
பசிப்பது…
புசிப்பது….
போவது…அச்சொட்டாக
அவர் எனது பிரதியைப் போல்தான்
எனக்கும் அவருக்கும்
வித்தியாசம் கண்டு பிடிக்க வந்த
போட்டியாளர்கள் கூட
தோற்றுப் போனார்கள்.

முதல் பிறவி எடுத்த கடவுளும்
முதலாமவரைப் பிரதி எடுத்த
அடுத்த கடவுளும்
நானும்
தெருக்கடையில் ஒருநாள் தேனீர் குடிக்கிறோம்
மூவரையும் சோதிக்க இன்னுமொரு கடவுள் ஈக்களை ஏவுகிறார்.
மூவரின் தேனீரிலும் ஆளுக்கொரு “ஈ”
குடித்து முடிக்கிறோம்

மூவருக்கும் ஒரே நேரத்தில்
வாந்தி வருகிறது
எனது வாயில் நுழைந்த “ஈ”யை காணவில்லை
அது இறந்திருக்கலாம்..
முதலாம் கடவுளின் “ஈ”
வாந்தியிலிருந்து எழும்பி நடந்து மறைகிறது.
இரண்டாம் கடவுளின்”ஈ”
வாந்தி எடுக்கும் போதே பறந்து மறைகிறது.

இப்போது அந்த இரண்டு கடவுள்களும்
ஒருவருக்கொருவர் மாறி மாறி
“ஈ”க்களை விழுங்குவது பற்றியும்
வாந்தி எடுப்பதனைப் பற்றியும்
வகுப்பெடுக்கிறார்கள்..

எனக்கு ஆச்சரியம்…
எப்படி அந்த “ஈ”க்கள் இறக்கவில்லை..?
இறுதியில்..!
“ஈ”க்களை அனுப்பிய கடவுள் வந்து
அந்த றப்பர் “ஈ”க்கள் இறப்பதில்லை
என்று விளக்கி மறைகிறார்.

பிறகு ஏன் இக் கடவுள்கள்
றப்பர் “ஈ”க்களுக்கும்
உயிரிருப்பதாய் காட்ட
முக்குகிறார்கள்…

000000000000000000000000000000000

நானும் குளவியே..

சுந்தர் நிதர்சன்

கம்பளிப்போர்வை தந்த
சுகம் விலக்க விருப்பமின்றியே
நீ தந்த தேனீரை போர்வைக்கு உள்ளேயே பருகி முடிக்கிறேன்.

குழாயடியில் கூச்சலிட்ட
பெண்களின் குரல்களில்
உன் குரலும் உரத்து ஒலிக்கிறது
நான் குளிக்கவும் கழுவவும்
குடிக்கவும் போராடி மீள்கிறாய்..

ஈர விறகுகளை
கண்ணில் நீர் சிதற ஊதி
ரொட்டிகளை வாட்டுகிறாய்
கருகிவிட்டால் கத்துவேன் என்ற பயத்தில்
அடிக்கடி பிரட்டுகிறாய்.

இரவு எஞ்சிய பருப்புக் கறியை
எனக்காய் சூடாக்குகிறாய்
நான் எழும்பவில்லை

அவசரம் உன்னை அப்பிக்கொள்ள
படங்கை இடுப்பில் சுற்றி
தலையில் கூடை சுமந்து
பாதி வயிற்றுடன் ஓடுகிறாய்.

பத்து மணிபோல் செய்தி வருகிறது
குழவிகளிடம் கொத்து பட்ட நீ
கொழுந்து லொறியிலேயே
கொண்டு செல்லப்படுவதாய்

நான் எழுந்திருக்கவில்லை.
ஏனெனில்…..
அப்போது கூட
இதே போலொரு
மழை தான் பெய்துக் கொண்டிருந்தது…

சுந்தர் நிதர்சன்- இலங்கை

சுந்தர் நிதர்சன்

 

(Visited 64 times, 1 visits today)
 

One thought on “முக்கும் கடவுள்கள்-கவிதை-சுந்தர் நிதர்சன்”

Comments are closed.