மன்மதனின் மரணம்-சிறுகதை-சுந்தர் நிதர்சன்

சுந்தர் நிதர்சன்
ஓவியம் : எஸ்.நளீம்

ம்மா இந்த ஆள பொத்திகிட்டு போகச் சொல்லு. எனக்கு இருக்கிற ஆத்திரத்தில மண்டய பொளந்திருவே…’ என்ற மகனின் அந்த வார்த்தைகளைத் தட்டிக் கேட்க அம்மாளுக்கு தைரியம் இல்லை. அண்ணாதுரைக்கு அவனை அடக்கத் தெம்புமில்லை. ஆடிப்போன அண்ணாதுரை மகனின் முகத்தைப்பார்த்து ‘அம்மாளு…நாப்போறே நாச்செத்து தொலைஞ்சாத்தான் இவிங்களுக்கு நிம்மதி. இப்ப ஏங்கிட்ட ஒன்னுமில்லதானே அதுநால என்னிய பாக்க ஒனக்கெல்லாம் கேவலமாதான் இருக்கும் ஒரேயடியா… போயிர்றே…’ என்றவாறு கையிலிருந்த தேநீரின் கடைசி சொட்டையும் தொண்டைக்குள் ஊற்றிவிட்டு வெளியேறி நடந்தார்.

‘போ…போ… திரும்ப வந்துராத…’ என்ற மகனை நின்று திரும்பிப் பார்த்த அண்ணாதுரை ஏதோ சொல்ல வாயெடுக்க, அவரை ஒரு முறைப்பு முறைத்த அம்மாளு ‘இஞ்சே… இங்ன நின்டுகிட்டு இருக்காத எங்கனாச்சும் போயிட்டுவா. இங்க லயத்து ஆளுங்களே புதுனம் பாக்குது. நிக்காத போ… போ…’  என விரட்டினாள்.

அண்ணாதுரை கலங்கிப் போனார். ஏதோ முடிவெடுத்தவராய் திரும்பி நடந்தார். எங்கே தன்னை தன் குடும்பத்தார் எவராவது தடுத்து நிறுத்தக் குரல் கொடுக்கமாட்டார்களா? எனக் காதுகளை வீட்டுப்பக்கம் கூர்மையாக்கிக் கொண்டவர். பின்னால் இருந்து எந்த அழைப்போசையும் கேட்காததால் மனமுடைந்து கண்களில் வெளிபட்ட கண்ணீர்த் துளிகளைத் துடைக்க மறந்து விரக்தியோடு தளர்ந்து நடந்து லயத்தைக் கடந்தார்.

அண்ணாதுரைக்கு இந்த வைகாசியோடு அறுபத்து இரண்டு வயது முடிகிறது. இந்தத் தோட்டத்துக்கு அவரைத் தேடிவரும் எவரும். ‘ அண்ணாத்துரை அண்ணன் வீடு எங்க இருக்கு…?’ என்றுகேட்டால் ‘ யாரு, பாட்டுக்கார அண்ணாத்துரையா?’ நாலாம் நம்பர் லயத்தில ஒரு பெரியகாண்டி கோயிலு இருக்கு அதுக்கு முன்னுக்கு உள்ள வீடுதாங்க…’ எனச் சிறுவர்களும் சொல்லும் அளவுக்கு அவர் பஜனைப் பாட்டு, காமன்கூத்து, அருச்சுனன் தபசு, பொன்னர் சங்கர் கூத்து, சாவுவீடு, சடங்கு வீடு, சினிமா பாட்டு என அண்ணாத்துரை பாட்டுக்கார அண்ணாத்துரையாகவே வாழ்ந்து வந்தார்.

அந்தக்காலத்திலேயே அம்மாளு அண்ணாத்துரையின் பாட்டு பிடித்துப்போய்தான் வீட்டை விட்டு ஓடிவந்து கல்யாணமும் முடித்தாள். அவர் பாடல்களைக் கேட்கவும் அவர் கட்டி நடிக்கும் வேசங்களைப் பார்க்கவும் ஒவ்வொரு வருடமும் காமன் பொட்டல், லயத்து ஆட்களால் நிரம்பி வழியும். அதிலும் குறிப்பாகக் காமன்கூத்தில் அவர் கட்டி ஆடிடும் மன்மதன் வேசம் இருக்கிறதே மெய்சிலிர்க்க வைக்கும் அவரது பாடலுடன் கூடிய ஆட்டமும், முகபாவங்களும்…

அதுமட்டுமல்ல சாவு வீடோ, சடங்கு வீடோ இரவில் ‘பய்லா’ போடும் இளைஞர்கள் முதலில் கூப்பிடுவது அண்ணத்துரையைதான். அவருக்கு ஒரு அரைபோத்தல் சாராயத்தை கொடுத்துவிட்டால் போதும் விடிய விடிய எம்ஜிஆரின் பாடல்களைப் பாடிக்கொண்டேயிருப்பார்.

தோட்டத்து வேலைபோக அவர் மாடு வளர்த்ததோடு கட்டாயம் வருடாவருடம் பருவங்களுக்கு ஏற்றக் கூத்துக்களை தன் சக கூத்தாடும் கலைஞர்களை ஊக்கப்படுத்தி அக்கூத்துக்கள் அழிந்துவிடாமல் மேடையேற்றிக் கொண்டே இருப்பார். அவர் எப்படி அந்தக் கூத்துக்களை தன் தந்தையிடமிருந்து கற்றாரோ அதே போலத் தன் மகனுக்கு அந்தக் கூத்துக்களை கற்று கொடுக்கப்போய் அவர் கண்டது ஏமாற்றம்தான். அது மட்டுமில்லாமல் தன் மகனைத் தோட்டத்து ஸ்கூலில் படிக்க அனுப்பியும் அவருக்கு, ஏமாற்றம்தான். இறுதியில் அவரின் மகன் தோட்டத்தில் பெயர் பதிந்து வேலை செய்வதோடு கல்யாணமும் முடிந்து இரண்டு பிள்ளைகளுக்கு அப்பாவாகவும் ஆகிவிட்டான்.

அண்ணாதுரை அவரது பதினைந்து வயதிலிருந்து தோட்டத்தில் நாற்பது வருடம் வேலை செய்துவிட்டு தன் மகனின் வேண்டுக்கோளினால் அம்மாளுடையுயதும் அவருடையதும் பென்சன் காசை எழுதி நிறைய இழுப்பறிக்குப் பின் எடுத்து ஸ்டாப்மாருக்கு, தலைவர்மாருக்கு பங்கு வைத்து எஞ்சியதில், லயத்து வீட்டுக்கூரையை உயர்த்தி அடித்து, சீலிங் அடித்து, மண்சுவர்களை சுரண்டி, சுண்ணாம்பு அடித்துச் சாணி மெழுகிய நிலத்திற்கு சீமெந்து போட்டு, ஒரு டீவி, ஒருடெக், ஒரு நாற்காலிசெட் வாங்கி போட்டு, வீட்டுக்குக் கரண்டும் எடுத்தவுடன் அவருக்கு வாழ்க்கையே வெளிச்சமாகத் தெரிந்தது. மீதியாய் இருந்த காசில் அரைவாசியை மகனுக்குப் பேங்கில் போட்டுவிட்டு மிச்சத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ரட்ணம் வீட்டில் சாராயம் வாங்கிக் குடித்ததிலும், கோழி, செமன், மாடு எனச் சொந்தகாரங்களுக்கு சமைத்துப் போட்டத்திலும் அவரதும் அம்மாளுவினதும் இத்தனை நாள் சேமிப்பும் முடிந்துவிட்டது.

பணம் வந்தபோது பாசம் காட்டிய மகன் பணம் முடிந்த பின் அவரைப் பார்க்கப் பார்க்கக் கோபப்பட்டான். அவருக்கு வீட்டில் மரியாதையே இல்லாமல் போனது ஆண்களுக்குத் தோட்டத்தில் கைக்காசு வேலை இல்லாததால் அவருக்கு அந்த வீட்டில் சாப்பிடுவது கூடப் பிரச்சினையாகிப் போனது. அம்மாளு கைக்காசு வேலைக்குப் போவதனால் அம்மாளுக்கு பெரிதாகத் தொந்தரவு இருக்கவில்லை. ஆனாலும் மகனுக்கும், மருமகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் அவள்தான் வேலைக்காரி, அவளே வேலைக்காரி என்றால் ஒன்றுமே வருமானம் இல்லாமல் வெட்டியாய் சாப்பிடும் அண்ணத்துரையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.

தோட்டத்தில் ஒரு தொழிற்சங்கத்தின் உபதலைவராக இருந்த அவரது மகன் காமன் கூத்து நடந்த அந்த இரவு தோட்டத் தலைவருடன் சேர்ந்து மேடையெல்லாம் அலங்கரித்து ஊர்முழுதும் ‘பெரிய தலைவர் வாராறு மீட்டிங்குக்கு வாங்க’ என வீடுவீடாகப் போய்ச் சொல்லிவிட்டு வந்ததும், மீடடிங்குக்கு ஒருவரும் வரவில்லை. வழமைப்போலவே தாமதமாக வந்தத் தலைவர் மேடையும் வெறும் மைதானத்தையும் பார்த்ததுவிட்டு சத்தம்போட்டு தோட்டத் தலைவரையும் அண்ணாததுரையின் மகனையும் ஏசிவிட்டுப் போய்விட்டார். இதற்கு அண்ணாத்துரைதான் காரணவாளியெனத் தோட்டதலைவர் அவனிடம் சொல்ல, கோபம் தலைக்கேறி வீடு வந்தவன் விடியவிடிய விழித்திருந்து அவர் வந்தவுடன் அடித்துச் சாய்த்துவிட்டான்.

சுந்தர் நிதர்சன்
ஓவியம் : எஸ்.நளீம்

இந்தத் தள்ளாடும் வயதிலும் மன்மதன் வேசம் கட்டிய அண்ணாத்துரை லயம் லயமாகச் சென்று பாடி ஆடிக் காணிக்கையும் சேர்த்து நாள் நட்சத்திரத்திற்கு ஏற்ப முப்பதாவது நாள் காமன் பொட்டல் நிரம்பி வழிய ரதியுடன் காதலில் கழித்து, சிவனின் தவத்தைக் கலைத்து சிவனின் கோபாக்கினியில் எரிக்கப்பட்டார். பின் தன் வேசம் கழிந்து அண்ணாத்துரை வீட்டுக்கு வந்தபோதுதான் வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்திருப்பது தெரிந்தது. ஊரே கூடி வந்து பார்த்து மெய்மறந்து சாமியாடிய தன் கூத்தினையும் பாட்டினையும் தன் வீட்டார் பார்க்காததைக்கூட அவர் சகித்துக் கொண்டார். ஆனால் அவரது மகன் தன் தந்தை என்று கூடப் பார்க்;காமல், ஒரு கிழவன் என்று கூட யோசிக்காமல் லயத்து கானுக்குள் தள்ளிவிட்டு ஒரு கட்டையால் அடித்த அடிகள் அவரைக் கண்ணீர் சிந்தி அழவைத்தது. சுரண்டு கிடந்தார்.

பசி அவரை வாட்டிக் கொண்டிருந்த இன்று மன்மதனை சிவன் எரித்த மூன்றாம் நாள் ரதியைக் கூட்டிக் கொண்டு பாட்டுபாடி மடிப்பிச்சைக் கேட்டு அவர் போயே ஆக வேண்டும். பாட்டுக்கார அண்ணாத்துரையாக உடல் வேதனைகளைத் தாங்கிக் கொண்டு எழுந்தவரை, ‘கெழட்டு பயலே … எங்க போற…’ என்று ஆரம்பித்தது தான் இன்றைய சண்டை அம்மாளும் மகனும் சேர்ந்து அவரை விரட்ட ஒரு முடிவோடு தள்ளாடி தள்ளாடி நடந்தவர் பத்தாம் நம்பர் மலையில் இருந்த வட்டக் கல்லுப் பாறையில் போய்ப் படுத்துக் கொண்டார்.

வானம் தொடர்ந்து பெரிய பெரிய மழைத்ததாரைகளை அழுது கொண்டிருந்தது. அந்த அறுபத்திரண்டு வயது மன்மதன் அந்தக் கல்லு பாறையின் மேல் அசையாது கிடந்தார். குளிர்ந்து கிடந்த அவரது கண்கள் மட்டும் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. கூட்டம் கூடியது.

‘இன்னைக்கு ரதி மடி பிச்சை கேக்க போவல தானே… அதுதான் மன்மதன ஈஸ்வரன் எடுத்துக்கிட்டான்’  கூடிய கூட்டம் கதைத்தது.

சுந்தர் நிதர்சன்-இலங்கை

 சுந்தர் நிதர்சன்

(Visited 173 times, 1 visits today)
 

3 thoughts on “மன்மதனின் மரணம்-சிறுகதை-சுந்தர் நிதர்சன்”

Comments are closed.