திரு திருமதி சின்னையா கருப்பாயி-கவிதை-லிங்க் சின்னா

திரு திருமதி சின்னையா கருப்பாயி

கருப்பாயி என்றொரு கிராமத்து கிளியை , அதே கிராமத்தை சேர்ந்த சின்னையா என்றொருவன் காதலிக்கிறான். காதலும் நெருப்பும் பொத்தி வச்சாலும் புகையும்.இவர்களின் காதலும் அப்படிதான் புதைந்த விதை முளை விடும் முன்பே வேரோடு பிடுங்கி எறிய வீட்டில் உள்ளவர்கள் நினைக்கின்றனர். ஒருவரை ஒருவர் பார்த்த்துகொள்ள துடிக்கும் இந்த காதலர்களுக்கு என் கவிதையால் சின்னையவாகிறேன்.மறுகணம் கருப்பாயி ஆகிறேன்.கடிதம் எழுதுகிறேன்.

லிங்க் சின்னா

ஒன்ன வெளில விடாட்டி என்னடி
என்னால உள்ள வர முடியாதா ?
ஒங்கூட பேச முடியாதா ?
இதோ வாரன்டி
ஓ வீட்டு பக்கம் வாரன்
ஓ வீட்டு கெழவிய
ஒடிக்கு அனுப்பிடு
ஒங்கப்பன் கோவால
வேலைக்கு தொரத்திரு..

வெள்ளையன் வீட்டுபக்கம்
கொட்டமுத்தான் கொலை இருக்கு
அதா அரச்சி,அவிச்சி தேச்சா ,
நாய் சுழுக்கு சொகமாகுமாம் ,
சொன்னது யாருன்னு கேட்டா
சொல்லாம அனுப்பி வைடி
ஒங்காத்தால

எம்மாமன் மகளே !
எங்கத்த பெத்த ரத்தினமே
மச்சான் வரேன்டி எம்மச்சினியே !

ஓ வீட்டு குசினிப்பக்கம்
இருக்க தராதி சன்னல்ல
தலகாட்டு என் தங்கமே !

ஒரு மாசமாச்சு
நீ என்ன பார்த்து
நான் ஒன்ன பார்த்து ..

ஒருநா ஓ வீட்டு பக்கம்
வந்தேன்டி ,வத்தாலி கெழங்கே !
மக்யா நாளும் வந்தேன்டி
எம்மரகதமே !
மொதநா ஒங்கப்பன்
வாய் ஒழம்புனான் .-ஒவ்வீட்டு
கதவுல காது
வெச்சப்ப….

மக்யா நா …
ஒங்காத்தா கால் சத்தம்
”படக்கு படக்கு”
பகல்ல மாதிரியே கேக்குது
ராத்திரிலயும்

தூக்கத்துல நடக்குற வியாதினு
ஏன்டி நீ சொல்லல ?

மூணாம் நாளும்
வந்தேன்டி ……
பேய் மாதிரி ஒரு உருவம்
பேஞ்சிகிட்டு இருந்துச்சி ..
கெழவிய கொஞ்சம்
அடக்கி வையிடி
ஆம்பள நடக்கும் போது
அப்படி செய்யகூடாதுனு

ஆனால் …,
ஒரு நாளும் பாக்கலயயேடி
ஓ மல்லிப்பூ மொகத்த
அது சரி பரவால்ல …
ஓங் கொறட்ட சத்தங்கூட
கேக்கலையே எங்குங்குமமே !.

ஒரு வேல என்னைப்போலவே
நீயும் தூங்கலையா ?-என்
தங்கச்சிலையே !

நாளைக்கு வரேன்டி
பகல்லயே வரேன்டி
நான் சொன்னத செஞ்சி வையி
ஒங்குடும்பத்த ஊரு கடத்து
முடிஞ்சா நாடு கடத்து ,..

ஒரு மாசம் என்னடி
ஒரு மாசம் ?

ஒரு வருஷம்
ரெண்டு வருஷம்

ஏழு செம்மம்
ஏழேழு செம்மம் -இதுல
எது முடிஞ்சாலும்
நான் ஒன்னதான்டி முடிப்பேன்

ஒங்கூட வாழ்வேன்
இல்லாட்டி சாவேன்

இப்போ இருக்க எள நரை
எந்தல முழுக்க வெள்ளையடிக்கும்
போதும்
நரைக்காம இருக்குமடி
எம்பொண்டாட்டியே ஒம்மேல
என்னாச

வாரன்டி வாரன்
தராதி சன்னல்ல
ஒந்தலகாட்டு

மறக்காம நான் சொன்னத
மட்டும் செஞ்சி வையி …

ஒங்குடும்பத்த ஊரு கடத்து
இல்லாட்டி நாடு கடத்து

இங்கு ராமனையும் சீதையையும் சேர்த்து வைக்கும் வேலை ஹனுமானோடு நின்றுவிடவில்லை.சின்னையா எழுதிய கடிதத்தை கண்ணம்மா கருப்பாயிடம் ஒப்படைக்க திகைக்கிறாள் கருப்பாயி.

எது ?
எவ்வீட்டு பக்கம் வந்திகளா ?
அப்பன் வயொலம்புன
சத்தங்கேட்டுச்சா ?
ஆத்தா நடந்தப்ப கலோச
கேட்டுச்சா ?
கெழவி பேஞ்சிட்டிருந்தப்ப
பின்னாடிதான் இருந்திகளா ?

ஏய்யா என்ன நீங்க கூப்பிடல ?

ஒலம்புன சத்தங்கேட்டப்ப
முன்வாச கதவுல நான் தலசாச்சி
பொலம்புன சத்தங் கேக்கலயோ?

நடந்த சத்தங் கேட்டிச்சே !
எங்காலடி கோசம் கேக்கலையோ ?
ஆத்தால இழுத்து வந்து
படுக்கையில தள்ளுனது நாந்தானையா
சுலுக்கு சத்தத்தில தொலைஞ்சி
போச்சே எங்கொலுசு சத்தம் ?

ஐயோ ஐயா
பேஞ்ச போது பின்னாடியா
இருந்திக
முன்னாடி பார்த்திருந்தா
ஒங்க பூமுகத்த சரி பார்த்திருப்பனே
யாருக்கும் தெரியாட்டியும்
இருட்லயும் நான் கண்டுக்குவேணு
தெரியாதா ஒங்களுக்கு ?

தினுசா கெழவி நிக்கிறானு
திரும்பிதான் நின்னிகளா ?

எது தலைமுடி நரச்சிருச்சா ?
எது எளநர எட்டிப்பார்குதா?

ஒரு கட்டு வல்லார
ஒரு கட்டு பொன்னாங்கனி வேரோட
ஒரு கட்டு கருவப்புள்ள
எடுத்து இடிச்சேன்
எங்கப்பன நெனசிகிட்டே !
அது சாறு வேறயா சக்க
வேறயா பிரிஞ்சிருச்சி பிரிஞ்சி …

ஒரு போத்த தேங்கன்ன
அப்படியே எவ்வீட்டுலருக்க
அடுத்தடுத்த வீட்ல
அப்புறம் தாரேன்னு
அரிக்கா அரிக்கா வாங்கியாந்தேன்
ஒரு போத்த தேங்கன்ன
ஓசியில சேந்துருச்சி

தாச்சி பழுக்க
தேங்கன்ன கொதிக்க
அடுப்புக்கு விறகு தேவல்ல
ஆத்தால நெனச்சிகிட்டேன்
அது அதுபாட்ல எரியுது

இடிச்சி வெச்ச
சாரையும் சக்கையையும்
தாச்சில கொட்டிபுட்டேன்
வரறுக்குறதுக்கு கெழவிய நெனச்சிகிட்டேன்
கொதிக்குதையா கொதிக்குது
எம்மனசுபோல கொதிக்குது

பதம் வருது
ஆஹா வந்துருச்சே
பதம் வந்துருச்சே

என்னை வேறயா
சக்க வேறயா எடுத்துபுட்டேன்
சக்கைய தலத்தேச்சி குளிக
குளிச்சாபுறம்
என்னைய தலைக்கு தேயுக
எளநர கொட்டிபோயிரறுமையா
ஏன்னா ?

எங்கப்பன
இடிச்சிருக்கேன்
ஆத்தால எரிச்சிருக்கேன்
கெழவிய வரறுத்துருக்கேன்

இது மூனுக்கும்
ஒங்க பழுத்துபோன மசுர சரி
புடுங்குற சக்தி இருக்குமையா

வாங்க
வந்து வாங்கிக்கங்க
வரும்போது
தங்கமே !
குங்குமமே !
முத்தமேனு கூப்டாம
ஒரு தடவ சரி கர்ப்பாயினு
எம்பேரு சொல்லுமையா …

லிங்க் சின்னா-இலங்கை

லிங்க் சின்னா

(Visited 115 times, 1 visits today)
 

One thought on “திரு திருமதி சின்னையா கருப்பாயி-கவிதை-லிங்க் சின்னா”

Comments are closed.