நுஸ்கி இக்பால் -கவிதைகள்

தொலைத்த இளைமை

நுஸ்கி இக்பால்

ஒற்றையடிப் பாதையில்
தனிமையில்
நெடுந்தூரப் பயணத்தை
ஆரம்பிக்க எத்தனிக்கிறேன் ….

பாதங்கள் மிதிக்கின்ற இடமெல்லாம்
முற்களால் நிறைந்த மலர்களை
யாரோ வீசிவிட்டு
மறைந்திருந்து பார்க்கின்ற்னர் ….

என் மீது எறியப்படும் கற்களையும்
பொறுக்கி எடுத்து சேமிக்கின்றேன்
பொறுமையாக …
பின்னாளில் பிரயோசனப்படலாம்

மூக்கைப் பொத்திய படியே
என் பாதங்களை கவனமாய் வைக்கின்றேன்
எதிரே பல சாக்கடைகள் இருப்பதாய்
அஞ்சுகிறேன் ….

என் முன் விழுகின்றன
காலச் சிதறல்களை அள்ளி எடுத்து
குவித்து வைக்கின்றேன்
என்றாவது மீட்டிப்பார்க்கத் தேவைப்படும் ….

இலையுதிர் காலம் போல்
என் தலையை விட்டுப் பாயும்
கேசத்தையும்
கோர்த்துக் கட்டிவைக்கின்றேன்
நாளை என் இளைமையை
ஞாபகப்படுத்த …..

இப்படியே பயணித்து
என் எல்லையைத் தொட்டுவிட்டேன்
தாடி முடியும் என்னைப் பார்த்து
வெள்ளிகளை அள்ளி தூவுகிறது ….

முழுமையாய் தொலைத்த
இளைமையை
எங்கே நானும் போய் தேடுவது
தாடிமுடியையும் தொட்டுப்பார்க்கின்றேன் ..

000000000000000000000000000000

கறுப்பாய் ஓர் உலகம்

கறுப்பாய் ஓர் உலகம்
அங்கிருந்துதான்
நானும் வந்தேன்
நீயும் வந்தாய் …

சுவாசிக்க காற்றும் அங்கில்லை
சல சலவன ஓடும்
நதிகளும் அங்கில்லை
புலரும் பொழுதுகளுமில்லை
எப்போதும் ஒரே நிறம்தான்
கருமைதான் ….

நீயிருக்கும் நேரம்
நான் இருப்பது சாத்தியமில்லை
நான் தூங்கும் போது
நீ சுவாசிப்பது நிச்சமில்லை…
அது ஒருவருக்கான உலகம் மட்டும்தான் …

தண்ணீருக்குள் மூச்சடைத்து வாழ
நானும் நீயும் அப்போதே பழகிவிட்டோம்
ஓரிரு நொடிகளல்ல
பத்து மாதங்களாய் …..

நாகரீக உலகில்
உறிஞ்சும் குழாயில் குடித்து
வாழ்ந்தவர்கள் நாமல்ல …
அங்கும் உறிஞ்சி குடித்துவிட்டோம்
தொப்பிளால் …..

கோடிகள் சேர்க்க துடிக்கும் நாம்
ஒரு கொடியில் தொங்கியவர்களென்று
மறந்துவிட்டோம் ….
மாடிகளை கட்டி கட்டி
தங்கிய முட்டியை கவிழ்த்துவிட்டோம் ….

குருடாகவும் செவிடாகவும்
முடமாகவும் மௌனமாகவும்
இருந்துவிட்டுத்தான் இங்கு வந்தோம்
பிறப்பிற்கு முன் இறப்பில்தான் இருந்தோம்
இறப்பிற்கும் பின்
அந்த கறுப்பு உலகுக்குள்தான் மீள்வோம் …!

நுஸ்கி இக்பால் -இலங்கை

நுஸ்கி இக்பால்

(Visited 46 times, 1 visits today)
 

One thought on “நுஸ்கி இக்பால் -கவிதைகள்”

Comments are closed.