கலண்டரில் உட்காரும் புலி-கவிதை-அகமது ஃபைசல்

 

அகமது ஃபைசல்

வீட்டில் வளர்ந்து வரும்
விஞ்ஞான மிருகம்.
தினம் அதைப் பார்த்து வீடும் வளர்கிறது.
படிக்கும் பிள்ளைகளின்
விஞ்ஞானப் புத்தகம்
மற்றும் அப்பியாசக் கொப்பிகளும் வளர்கின்றன.

எல்லோரும் அந்த விஞ்ஞான மிருகம் பற்றி கேட்கிறார்கள்.
அதை
ஒரே ஒரு முறை ஜெயகாந்தன் பார்த்திருக்கிறார்.

நான் தினமும் பார்க்கிறேன்.

பார்ததை பார்த்தபடி சொல்லிட முயலுகிறேன்.

அடை மழையிலும்
சற்றும் நனையாமல் மேயும்.

“இந்த விஞ்ஞான மிருகத்தை
ஒரு கண்ணீர்த் துளியால்
மூடி மறைத்துவிடலாமே”
என்று ஜெயகாந்தன் பார்த்த கணமே சொல்லிவிட்டார்.

ஏன் இதற்கு
இவ்வளவு பெரிய மேய்ச்சல் நிலம்.
கண்ணீருக்கு சிறிய குளம்.

யாரைப் பிடித்து
விட்டு விட்டு பெய்கிறது மழை.
இதற்கான விளக்கத்தை தெரிந்து வைத்திருப்பதும் அந்த மிருகம்தான்.

கம்பிகளை அருகருகே வைத்ததும் ஜன்னல்.
வீட்டுக் கூரையால் விடாது வடிந்துகொண்டிருக்கும் மழையின் நீரும் ஜன்னல்.
உள்ளே இருப்பவருக்கு வெளியிட முடியாத பல கதைகளும் தெரியும்.

கண்கள்
ஒரு இடத்திலிருக்கும் இரட்டைக் குளங்கள்.

இரண்டாக இருந்தாலும்
அந்தக் குளத்து நீர் ஒரே சுவைதான்.

வற்றிய குளம் அவள் முகத்தில்.
அழகை விதைத்தவனுக்கு லாபமா?
நஸ்ட்டமா?
அந்த விஞ்ஞான மிருகத்திற்குத்தான்
இந்தக் கணக்குத் தெரியும்.

எங்கும் தேட வேண்டாம், என்னிடமும் கேட்க வேண்டாம்.
உங்கள் வீடுகளிலே இருக்கின்றது.

ஒரு மிருகம்
எல்லா வீடுகளிலும், எல்லாக் கலண்டர்களிலும் உட்காரும்.
புலி.
நம்மோடு விளையாடும் நாட்களை வேட்டையாடும்.

தாள்களைக் கிழிக்காதீர்கள்.
அது
நாட்களின் தோல்.

அகமது ஃபைசல்- இலங்கை

அகமது ஃபைசல்

(Visited 87 times, 1 visits today)
 

One thought on “கலண்டரில் உட்காரும் புலி-கவிதை-அகமது ஃபைசல்”

Comments are closed.