ஒரு தேனீர் ஒரு குவளை-சிறுகதை- அகமது ஃபைசல்

“நாக்குத்தானே இதுக்கெல்லாம் காரணம். இந்தாடி கத்தி நாக்க வெட்டி எறி” என்று கத்தியைக் கொடுத்து நாக்கை வெட்டச் சொல்லும்போது பார்த்துக் கொண்டிருந்த சக்கியாவின் மகள் சட்டெனப் பாய்ந்து கத்தியைப் பறித்து, வெளியே தொங்கிக் கொண்டிருந்த நாக்கை ஒரே வெட்டில் துண்டாக்கியதும், அந்த நாய் அழ ஆரம்பித்தது போல் முகம் சுருங்கிற்று. நாயின் வாயிலிருந்த இறப்பர்த் துண்டு கிழே விழுந்தது. தன் மகள் கொடுக்கும் தேநீரை எப்போது பார்த்தாலும் நாயின் வாயுக்குள் ஊற்றி விளையாடுவதையே வேலையாக்கி வைத்திருந்தாள்.

அந்தக் குவளை பார்ப்பதற்கு அந்தக் காலத்து ராஜாக்கள் உபயோகித்த குவளை என்று அதைச் சொல்லாமலிருக்க யாராலும் முடியாது. அந்தக் குவளையுள் அவள் கொஞ்சம் தேநீரை ஊற்றி பருகும்போது நாய் அழுவதை நிறுத்தியதுபோல் முகம் மாறிற்று. நாக்கு இருந்திருந்தால் பேசியிருப்பேன் என்ற அந்த நாயின் கண்கள் அழகாகவும் இருந்தன.

“டிடிங்…..டிடிங்…” ஹாலிங் பெல் சத்தம். சக்கியாவும்,மகளும் போய்க் கதவைத் திறந்தார்கள். நாய் தன் துண்டான நாக்கை எடுத்து வாயுக்குள் வைத்துக் கொண்டதுபோல் பாவனை காட்டியது.
எதிர் பார்த்தபடி யாருமில்லை. மாறாக அவளுக்கு இன்னொரு அறை தென்பட்டதுபோல் இருந்தது. கதவைத் திறந்தாள். மற்றொரு அறை. இப்படி பதினேழு அறைகள் அவளுக்குத் தோன்றிற்று. கடைசி அறையின் கதவைத் திறப்பதாக நினைத்து திறந்தாள். அவள் அதிர்ச்சியடையவில்லை. அது அன்றைய முதல் காற்று. இருவர் உடலையும் தள்ளிவிட்டு எல்லா அறைகளையும் கடந்து சென்று குவளையுள் இருந்த மீதித் தேநீரைப் பருகத் தொடங்கியது.

“ஆ… காத்து நல்லாக் குளிருது எங்கேயோ நல்ல மழ பெய்யுது உம்மோ……..” என்றாள் மகள். யாருக்கோ மரியாதை செய்வதுபோல் சக்கியாவின் உடல் உரோமங்கள் எழுந்து நின்றன. பிறகு கொஞ்சம் பலத்தைப் பிரயோகித்த காற்று அவள் மார்பில் கிடந்த சேலையை நோகாமல் எடுத்து குளிரால் நடுங்கிய கதவின் சிறு பகுதியில் போட்டது. அந்த நிமிசம் காற்றை மட்டும் மார்பில் போட்டுக்கொண்டு அவள் குளிரோடு போராடினாள். சில பெருத்த மழைத்துளிகள் அவள் மார்பில் விழுந்து மாயமாகின.

அதே குவளையில் ஆவி பறக்கும் தேநீருடன் சக்கியாவின் முன்னால் வந்து நின்றான் அலான். எப்போதும் அவன் சோடா மூடியை பற்களால்தான் திறப்பான். அந்த நுரை ‘உஸ்……….’ என்ற சத்தத்தோடு சீறி வரும் பொழுது பார்ப்பதற்கு நல்ல அழகாய் இருக்கும் .

சக்கியாவின் முதல் சந்திப்பு ஒரு போத்தல் சோடா உடைத்தலில்தான் ஆரம்பித்தது. அந்த ஒரு நிமிட நுரை பொங்கியது போன்றுதான் அவர்களுக்கிடையில் காதலும் பொங்கியது. அன்றும் நல்ல மழை. மழை என்பதை விட தண்ணீரின் இசை அல்லது நடனம் எனலாம். தண்ணீர் என்றும் இளமையுடன் இருப்பதால்தான் இத்தனை பெரிய நடனத்தை அதனால் ஆட முடிகிறது.

குளிர்ந்தபடி இருந்த சோடாப் போத்தலைத் தொட்டதும் சுட்டுவிட்டதுபோல் சட்டென அவள் விரல்களை விடுவித்துக்கொண்டாள். அவன் விரல்களை அந்தப் போத்தலில் பதித்து இறுகப் பிடித்துத் தூக்கினான். கடையில் வேலை செய்யும் பையன் இதையெல்லாம் பார்த்தவாறு அர்த்தம் புரிந்ததுபோல் துளிர் மீசையை தடவி சற்று அருகில் வந்து,

“சாப்பிட ஏதாச்சும் வேணுமா………?” என்றான்.

‘உஸ்………’ என்றது சோடாப் போத்தல்.

வேறு எதுவும் கேட்காமல் திரும்பி நடந்திட்டான் பையன்.

“உம்மா…………ஹால் பெல் அடிச்சது யாரு?”
இங்க அப்படி யாருமில்லையே…….?” என்று நூறா சொன்னதும், பழைய காதல் நினைவின் கதவை மூடிய சக்கியா “ஹா..யாரையும் காணலியே” என்று மகளின் முகத்தைப் பார்த்து தலையசைத்துவிட்டு திரும்பினாள். முன்பு இருந்த பதினேழு அறைகளும் காணாமல் போயிருந்தன. பித்தம் தெளிந்தவள் மாதிரி,

“அலான் இந்தக் குவளை ஞாபகமிருக்கா…….?” என்றாள். தேநீரை வாங்கிப் பருகத் தொடங்கினாள்.
“ம்..ம்…ஆனா உன்ற அளவுக்கு இல்ல. உனது உதடுகளுக்குத்தான் அதிகம் பழக்கப்பட்டிருக்கு இந்தக் குவளை என்றான்.

“உம்மா….. மழக்காத்து ஒடம்புல ஊசி போடுது உள்ள வாம்மா போகலாம்..” என்று சொல்லி வாய் எடுக்கவில்லை மழையை யாரோ தூண்டிலிட்டு பிடிக்க முயற்சிப்பது போன்று மின்னல் தொடங்கியது.
அலான் மன்னனைப்போன்ற தோற்றமும் அழகழகான கறுமை நிற நீண்ட கேசமும் வாளின் கூர் முனை போன்ற மூக்கும் கம்பீரமான உயர்ந்த கட்டான உடலும் என்று அவனை வசதியான குடும்பத்து செல்ல வாரிசு என்று நினைக்கத் தூண்டும்.

அப்போது ஒரு இலை வீசிக் கொண்டிருந்த காற்றிடமிருந்து தப்பித்து வீட்டினுள் தஞ்சம் புகுந்தது . அது பாதி மஞ்சளும் பாதி பச்சை நிறமுமாய் இருந்தது. அலான் மெதுவாக கதவைத் தள்ளி அடைத்து விடுகிறான். அவள் வரும்போதிருந்த அறைகளைத் தேடுவது போன்ற தோறணையில் தேநீரை மிடறு மிடறாகப் பருகுகினாள். நூறா தன் நாயிடம் தாவிச் செல்கிறாள்.

பழங்கால கைவண்ணங்கள், அரிய பொருட்கள் போன்றவற்றை தேடிச் சேகரித்து ஆராய்ச்சி செய்யும் மாணவியாக இருந்த சக்கியா அலானின் வீட்டிலிருந்த அந்த தேநீர்க் குவளை மீதும் காதல் கொண்டிருந்தாள். அலானின் விருப்பப்படி அவனையே திருமணம் செய்து கொண்டாள். அன்று அவன் அந்தத் தேநீர்க் குவளையை மனைவியாக வந்த சக்கியாவுக்கு காதல் பரிசாக கொடுத்து அவளை மகிழ்வித்தான். சக்கியா தன் வீட்டின் எந்த அறைக்குள் சென்று பார்த்தாலும் அங்கு அந்தக் குவளை இருக்கும். யாரும் அறைக்கு அறை என்று அதனைக் கொண்டுபோய் வைப்பதில்லை. கழுவிச் சுத்தம் செய்வதுமில்லை. எப்போது பார்த்தாலும் அது சுத்தமாகவும் ஒரு வித சுவர்க்கத்து வாசனையைத் தந்துகொண்டிருக்கும். அதில் தேநீரை ஊற்றி அருந்தும் போதெல்லாம் வீடு வளர்வதுபோலவும் வீட்டினுள் இருக்கும் பிளாஸ்டிக் செடிகள் பூப்பது போலவும் உணர்வைத் தரும். சில சமயங்களில் அது மழை பெய்கிற உணர்வைத் தரும்போது அந்த ஜன்னல்களைத் திறந்துவிட்டு அருகில் முதுகுப் புறத்தை மெதுவாக சாய்த்தால் மெல்ல மெல்ல முன்னும் பின்னும் அசையும் நாற்காலியை எடுத்துப் போட்டு அமர்ந்து கொள்வாள்.தேநீரின் சுவையை நாக்குத்தான் வெளிப்படுத்துகிறது. குவளையும் அதன் அழகைக்கொண்டு சுவையை வெளிப்படுத்துகிறது. தேநீர் பலருக்கு அத்தியாவசியமாகிவிட்டது அல்லவா?

வீட்டினுள் தஞ்சம் புகுந்த காற்று இலையை மேலே உயர்த்தி விளையாடியது. கீழே வரும்வரை எதிர்பார்ப்புடன் நாய் பார்த்துக் கொண்டிருந்தது. மின் விசிறியும் சுழன்று கொண்டேயிருந்தது. தேநீரை அருந்தி முடித்த சக்கியா அலானின் மடியில் சற்று தலையைச் சாய்க்கிறாள். அது நீளமான மார்பிள் தரை. மகளும் அருகில் அமர்ந்து கொண்டாள்.

“டிடிங்…..டிடிங்…..”ஹால் பெல் அலறும் சத்தம்.

“மகள்…….. போய் யாருன்னு பாரு” தன் மகளின் தோளில் கையை வைத்து அழுத்திச் சொன்னான்.

“மழைதான் வேறு யாரு………..? அவன் மடியில் படுத்தவாறு, “வந்ததும் மழைதான். சொல்லிவிட்டுப் போவதும் மழைதான்” என்றாள் சக்கியா .

“யாருமில்ல வாப்பா” என்று சொன்ன வேகத்திலே திரும்பி ஓடி வந்தாள் நூறா.

சக்கியா திருமணத்திற்குப் பிறகும் தன் ஆராய்ச்சி வேலைகளில் அவ்வப்போது நண்பிகளுடன் ஈடுபடுவாள். அன்று அலானையும் அழைத்துக்கொண்டு ‘ஆதிக் குகை’ ஒன்றினுள் நண்பிகள் இருவருடனும் ஆராய்ச்சிக்காகச் சென்றிருந்தாள். அலான் இருக்கிறார் என்ற தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தொடர்ந்து அந்தக் குகையுள் அவள் மெல்ல மெல்ல முன்னேறிச் சென்றாள்.

அமைதியாக இருந்தது குகை. திடீரென புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும் சத்தம் மட்டும் வருகிறது. சற்று நேரத்தின் பின் அந்த சத்தம் நின்று விடுகிறது. மீண்டும் அமைதியைக் கடைப்பிடித்தது குகை.

“அலான் அந்தப் பேனாவ பாத்தியளா…….? என்ன அழகு இல்ல…..” சக்கியாவின் குரல் அமைதிக்குள் விழுந்து துடிக்கிறது. அந்த ஆதிப் பேனாவை நெருங்கி மெதுவாக தொட்டு கையிலெடுத்து ‘பூனை’என்று எழுதி முடித்தாள். அதே கையில் வெள்ளை வெளேரென்ற ஒரு பூனை தலையை நிமிர்த்தித் தன் மீசையை அசைத்து சக்கியாவைப் பார்த்து நின்றது.

உடனே தன் கையை உதறிக் கொண்டு சத்தமிட்டாள். உடைந்து விழும் நிலையில் இருந்த குகைச் சுவரின் வெடிப்பு நீளமான பாம்பைப்போலவே இருந்தது. வீட்டில் இருக்கும் குவளையை அவன் ஒரு கணம் நினைத்துக்கொண்டான். இந்தக் குகையுள் இருந்த குவளைதான் அது. அலானின் வாப்பா மௌத்தாகிப் போக முதல் அலானுக்கு கொடுத்தது.

“ஏய்…அலான் இஞ்சப் பாருங்க……. தேநீர்க் குவளைய கொஞ்சம் பாருங்க….. அதுக்குள்ள ஒரு பூனை உட்கார்ந்திருக்கு . அங்க பாருங்க…… அலான்..”

என்று சொல்லிக்கொண்டு ஒரு வருடத்துக்கு முதல் நடந்த அந்தக் குகைச் சம்பவங்களின் கதையை நிறுத்திவிட்டு அலானின் மடியை விட்டு எழுந்து அமர்ந்துகொண்டாள்.

பூனையை அடித்து விரட்டுவதற்கு ஒரு தடியைத் தேடி ஓடினாள். நீளமான அந்தத் தடியினால் குவளைக்குள் இருந்த பூனைக்கு ஓங்கி அடித்தாள். பூனை ஓடி மறைந்து விட்டது. குகையுள் கண்ட அதே வெள்ளை வெளேரென்ற பூனை. குவளை பல துண்டுகளாக உடைந்து கீழே சிதறியது. எங்கு தேடியும் பூனை கிடைக்கவில்லை. இவ்வளவெல்லாம் நடந்தும் நாயோ இலையைப் பறிக்கும் ஆவலுடன் மட்டும் இருக்கிறது.

துண்டுகளாகிக் கிடக்கும் குவளையை அழுதபடி அள்ளி அணைத்தவாறே சக்கியா அழுகிறாள். இருந்தாற்போல் உடைந்த குவளையை அவள் அணைக்கிறாள். பின்னொருமுறை அதனைப் பார்த்துப் பார்த்து அழுகிறாள். மழை பெய்வதற்கு முதலில் ஏற்படும் முழக்கச் சத்தம் வெளியே இருந்து வருகிறது. மீண்டும் மழை பெய்யத் தொடங்கிற்று. அலானும், மகள் நூறாவும் சமையலறைப் பக்கம் செல்வதைக் கண்ட நாய் பின்னால் ஓடுகிறது. சக்கியா அழுகையை நிறுத்துவதாக இல்லை.

மார்பிள் தரையில் உட்கார்ந்து உடைந்த குவளைத் துண்டுகளை தன் மடிக்குள் அள்ளிப் போட்டுக் கொண்டு மழை பெய்யும் ஓசைக்கு காது கொடுத்தவளாக மௌனமாகினாள். சுடச் சுட ஒரு கப் தேநீரைக் கையில் எடுத்துக் கொண்டு வந்த அலானும், நூறாவும் சக்கியாவின் முன்னால் வந்து அந்த மார்பிள்த் தரையில் அமரும்போது; “நம்ம வீடு பதினேழு அறையா?” அலான் என்றாள். அலானிடமிருந்து பதில் இல்லை.
அலானின் கையிலிருந்த தேநீர்க் கப்பை வாங்கி அவள் பருகினாள். “ஏய்..ஏய்…இது எனக்கு நல்ல ருசியா இருக்கே?”

“உன்ட குவளைதான் உடஞ்சிடிச்சு….இனி உனக்கு அப்படித்தான் எல்லாம்” என்றான். தன் மடியை குனிந்து பார்க்கிறாள் சக்கியா. அதே அழகிய குவளை சற்றும் மாறாமல் எந்த உடைவும் இல்லாமல் முழுமையாக மடியில் இருப்பதைக் கண்டாள். அலானுக்கும் நூறாவுக்கும் அது அதிசயமாக இருந்தது. நாய்க்கு இது அதிசயமாகத் தெரியவில்லை. நாக்கை வெளியே எடுக்கப் பயந்து நூறாவின் மடிக்குள் இருந்த அந்த நாயின் பெயர் பொம்மை.

அகமது ஃபைசல்-இலங்கை

(Visited 183 times, 1 visits today)