புன்னகை-சிறுகதை-லோகேஷ் ரகுராமன்

‘இவளைப் புணர்’ என்பதே எனக்கு வந்த தொடுப்புச் செய்தி.

ஒரு பெருநகரத்தின் ஏழு நட்சத்திர விடுதியில் அவள் தங்கவைக்கட்டிருந்தாள். அவளுக்கான அப்போதைய ஆண் துணை நான். ஆண் துணை என்றால் அவளது பிரதான காவலன். ஒரு நட்சத்திரக் கலை விழா. கோமான்களும் சீமான்களும் பேரழகிகளும் கூடுயிருந்த இரவொன்றாய் அது இருந்தது. அவள் அதில் பங்கேற்றாள். அவளுக்கான காவல் பணி எனக்கு. மிகக் குறைவான ஒளிகளைக் கொண்டு அந்த இடம் ஒளிரூட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் குறைந்த ஒளி சாத்தியமான அனைத்து வண்ணங்களையும் வாரி இறைத்து இருந்தது. இரவு வண்ணயமாக்கப்பட்டு அலை போல் என் கண் முன்னே கிடந்தது. நன்கு வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருக்கும் மக்கட்பெருந்திரள். ஆண்களின் புன்சிரிப்புப் பற்களும் அவர்கள் அணிந்திருந்த சூட்களின் மிளிர்வும் அழகிகளின் மார்பு பிளவுகளில் பிசுபிசுத்த அந்த சாயங்களும் வெவ்வேறு கைகளில் வெவ்வேறான தோற்றங்களில் இருக்கும் மதுகுவளையில் ஊற்றப்பட்டு மீதமிருந்த மதுவும் அந்த குறைந்த ஒளியைச் சிதறிக் கொண்டிருந்தன. இரவுக்கு இத்தனை பளபளப்பா? அப்படியான ஒரு இரவின் முன் நான் அந்த இரவோடு இரவாக நின்றுகொண்டிருந்தேன். கரிய நிற யூனிஃபார்ம். கரிய நிற பூட்ஸ். ஏன் என் கைத்துப்பாக்கியும் கருப்பு தான். என்மேல் ஒளிகளே இல்லை என்ற எண்ணம் எழுந்தது. அனைவரும் டாங்கோ இசையில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் கைமாற்றி விட்டு சுழன்று சுழன்று ஆடிக்கொண்டிருந்தார்கள். என் நோட்டம் எல்லாம் அவளின் மேல் தான். என் பார்வையெனும் மையத்திலிருந்து செல்லும் ஒற்றைச் சரடினால் கட்டப்பட்டவள் போல அவ்வப்போது அவளும் என்னை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அனைவரும் இரவுணவு அருந்திகொண்டிருக்கும் போது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘கோல்ட்பெர்க்கின் தானியங்கும் நாப்கின்’ என்று பதாகையில் எழுதப்பட்டு இருந்தது.

பேராசிரியர்போல் பிரதிஎடுக்க முயற்சிக்கும் மனிதர் ஒருவர் தன் சகல இயந்திரங்களோடு சபைக்கு நடுவில் வந்தார். பேந்த முழிக்கும் விழிகளையும் நட்டுக்கொண்டு நிற்கும் தலை மயிர்களும் கொண்டிருந்த அவர் கை இடுக்கில் அத்தனை புத்தகங்களுடன் இருந்தார். களைத்த அவருக்கு பசிக்கிறதாம், சாப்பிட வேண்டுமாம். அவருக்கு சூப் பரிமாறப்பட்டது. சூப்பை காலி செய்த களிப்பில் இருந்தவர் அதன் கடைசி சிப்பில் ஏற்பட்ட அவலம் தான் அரங்கை அப்படி அதிரச் செய்தது. அனைவரும் வாய்விட்டுச் சிரித்து அவர்கள் சாப்பிட்ட சாப்பாடு நெஞ்சடைத்துப் போனார்கள். அவளும் விழுந்து விழுந்து சிரித்தாள்.

அப்படி என்ன தான் நடந்தது? அவர் வைத்திருந்த ஸ்பூனில் ஒரு நாடா கட்டப்பட்டிருந்தது. நாடாவின் மறு நுனியில் ஒரு பொறை இருந்தது. இவர் சூப்பை அந்த ஸ்பூனால் அருந்த அருந்த அந்த நாடா இழுபட்டு அந்தப் பொறையை அந்தரத்தில் எரிந்தது. அந்தப் பொறையை பார்த்த கிளி வெடுக்கென்று எம்பி அந்தப் பொறையைக் கவ்வியது. கிளி இருந்த ஏற்ற இறக்கப்பலகை மறுபக்கம் தூக்கப்பட்டு அந்தக் குண்டைத் தட்டியது. அந்தக் குண்டு சென்று  ஒரு சுடர்ந்த மெழுகுவர்த்தியைத் தள்ள அந்த மெழுகுவர்த்தி ராக்கெட்டின் திரியில் பட்டு அந்த ராக்கெட் சீறி எழும்பி மேல சென்று எதிலோ பட்டு ‘ஹாப்பி டைனிங்’ என்று எழுதியது. ராக்கெட் சென்ற வேகத்தில் விடுபட்ட அந்த கடிகாரத்தின் பெண்டுலம் ஆட கடைசியாக அதில் கட்டி வைக்கப்பட்ட அந்த நாப்கின் அவர் வாய் வந்தடைந்து அடைந்து விலகியது. அவர் பேந்த விழிகள் மேலும் விரிந்தன. அனைவரும் சிரித்தடங்கிய பின்னர் அவரே சாப்பிட்டு முடித்த எல்லோர்க்கும் நாப்கின்களை விநியோகித்தார். தொடுக்கப்பட்ட இயந்திரத்தனமான அந்த வேடிக்கை எனக்கு அவ்வளவு சிரிப்பு வரவழைக்கவில்லை. அந்த இயந்திரத்தனத்தில் ஒளிந்திருக்கும் அப்பட்டத்தை நான் நன்கறிவேன். அது போன்ற ஒரு வாழ்க்கையில் தான் நானும் அகப்பட்டுக்கொண்டிருக்கிறேன். நான் சிரித்திராததை அவள் கவனித்திருக்கலாம்.

0000000000000000000000

ஆமாம் யார் நான்? நெட்டுக்குத்தாக நிறுத்தி வைக்கப்பட்ட டாமினோ கட்டைகளில் முதலாம் ஒன்றை தொட்டால் அது மற்றொன்றின் மேல்பட்டு வரிசையாகச் சரியுமே  நான் அதில் கடைசிக் கட்டை போன்றவன். ஆனால் நான் வேறொன்றின் மேல்பட வேண்டும். வெறுமனே சாய்வதில் பயன் இல்லை. நான் சாயப்போகும் அந்த வேறொன்று தான் இந்தப் பேரழகி. அவள் வேறேதோ ஒன்றிற்கான தொடர்ச்சியாக இருப்பாள். அந்த முதல் தொடுகை யாரால் நிகழ்வது என்று எவர்க்கும் தெரியாது. அந்த இயக்குவிசை எவரிடமிருந்து எது வழியாக வருகிறது என்றும் புரியாது. தெரிந்ததெல்லாம் நம் அடுத்தது மட்டும் தான். ‘பட்டர்ஃப்ளை எஃபெக்ட், கேயாஸ் தியரி’ என்றெல்லாம் அழைப்பார்களே! அதுபோல இதுஇல்லை. அவை எல்லாம் தன்னிச்சைகளின் தொகுப்பு. தொடுக்க முடியாத நிகழ்வுகளின் கூட்டு. ஒரு சீரற்ற ஒழுக்கை கொண்டிருக்கும். இவைகள் புரிபடாது, ஆனால் இது ஒருங்கிணைக்கப்பட்ட தன்னிச்சைகள். முன்பே முடிவெடுக்கப்பட்டு  தன்னிச்சைகளானவை. என்னது முடிவெடுக்கப்பட்ட தன்னிச்சையா? அந்த முரணில் தான் எங்கள் இயக்கமே. டாமினோ எஃபெக்ட். ஒரு மெல்லிய இழையால் நூற்கப்பட்டது போல. கொஞ்சம் துலக்கிப் பார்த்தால் இழை புரிபடும்.

எவரோ அவர்களின் எதோ ஒரு தேவைக்காகவோ பலனிற்காகவோ வலிந்து தன்னிச்சைகளை நெய்கிறார்கள். தன்னிச்சையாக ஆக்கி கொள்கிறார்கள். செயல் ரீதியாக மட்டும் இல்லாமல் உணர்வு ரீதியாகவும் என்னைப் போன்ற மக்களை பழக்குகிறார்கள். நாங்கள் யாவரும் சந்தைக்குள்ளானவர்கள். கைக்கடிகாரத்தின் நேரமுள் மணி ஒன்றைத் தொட்டால் பசி எடுக்குமே. தன் எஜமானனைக் கண்டால் நாய் தன்னால் வாலை ஆட்டுமே. இந்த பசியையும் விசுவாசத்தையும் அவர்கள் உபயோகித்துக்கொள்கிறார்கள். கடிகாரத்தை ஒருவனுக்கு அவன் மணிக்கட்டில் கட்டி விடுவதும், ஒரு நாயை ஒருஎஜமானனுடன்  நிறுத்துவதும் தான் அவர்களின் அதிகபட்ச வேலை. மிச்சபடி எல்லாம் தானாக நடக்கும். நான் துப்பாக்கியுடன் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை நான் யாரோ கண்காணித்தபடியே இருக்கிறேன். வானம் போல இமைக்காத விழிகள் கொண்டு அவர்கள் என்னைக் கூர்ந்துப் பார்த்தபடி இருக்கிறார்கள்.

நான் செய்யும் எந்த செயலும் அதன் எதிர் வினையும் அவர்கள் நிர்ணயித்த ஒன்றாய் இருக்கிறது. என் ஆழ்மன உணர்ச்சிகள், உள்ளுணர்வுகள் முதற்கொண்டு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கின்றன. என் காமத்தை, மோகத்தை, வன்மத்தையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். நான் படும் கோபம் கூட எனக்கானதாக இருக்காது. தும்மலைக் கூட எனக்கு உரித்தாக்கிக் கொள்ளமுடியாது. எந்த சங்கிலியின் எந்த தொடர்ச்சி? என்று எண்ணத்தோன்றும். யாருக்கான சமிக்ஞையோ? என்று தோன்றும். சுயமிழந்த மனித இயந்திரம். சுவாசிக்கும் உரிமை இருதயம் துடிக்கும் உரிமை வயிற்றிற்கு பசிக்கும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகள் மட்டும் அவர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள். ஆகவே நான் ஒரு போலியாகவே திரிகிறேன். என் உணர்ச்சிகள் போலியாக்கப்பட்டு இருக்கின்றன. ஒரு பெண்ணின் நிர்வாணத்தைப் பார்த்து என் குறி விறைத்தால் கூட அது ஆழ்அகத்தில் இருந்து எழுந்த உணர்ச்சியால் இருக்காது. பழக்கத்தின் மூலம்  பயிற்சியால் நான் அதை அடைந்திருப்பதாய் இருக்கும். மார்லன் பிராண்டோவின் நடிப்பைப் போல ஒரு மாதிரி  உச்சகட்ட பாவனையை என்னால் தரஇயலும். அல்லது ஒரு போர்னோஃகிராபி தளத்தில் அதி தீவிரமாய் செயல்படும் ஆடவனைப் போல. ஆனால், அதில் ஒருதுளி உண்மை இல்லை. பழக்கப்படுத்தப்பட்ட போலி உணர்ச்சி தான். என் அன்பு, காதல், புன்னகை எல்லாம் அவ்வாறு தான். பிறர்க்கு என் போலித்தனம் எளிதில் புலப்படாது.

000000000000000000000000

“உலகில் வார்க்கப்படும் தோட்டாக்கள் எவையும் நிரந்திரமாக உறங்குவதில்லை. அவை வார்க்கப்படும்போதே விதிக்கப்பட்டும் இருக்கின்றன. உடலைத் துளைக்கும் துடிப்புடன் உயிர்த்துக் காத்துக்கொண்டிருக்கும் உலோகங்கள் அவை. உன் எதிரியென்பவன் உனக்கில்லாத தோட்டக்களை வைத்திருப்பவனே. எனவே உனக்கு விதிக்கப்படாத தோட்டக்களை நீ உனதாக்கிக்கொள். அதற்காக எதற்கும் துணிந்திரு. இவ்வுலகத்தில் வார்க்கப்படும் அனைத்து தோட்டாக்களுக்கும் நீயே ஒற்றைத் தந்தை. நெஞ்சில் கொள்.”

என்று சொல்லப்பட்டு பழக்கப்பட்டவன் நான். எனக்காக விதிக்கப்பட்ட நான் உட்கொள்ளும் என் ஒவ்வொரு சோற்றுப் பருக்கைகளில்  என் பெயர் இருக்குமா தெரியாது. ஆனால் இவ்வுலகத்தில் உள்ள அத்தனை தோட்டாக்களிலும் என் பெயரே பொறிக்கப்பட்டு இருக்கும். தோட்டா  உயிர்க்கொல்லி. துப்பாக்கி அதை கக்கும் கருவி. நான் அக்கருவியை இயக்கும் ஒரு விசை. இப்படியே, நான் தேர்ந்த துப்பாக்கிக்காரன் ஆனேன். துப்பாக்கிகளோடு புழங்கிப் புழங்கி என் கைகளில் துப்பாக்கியின் நீட்சியை எனது ஆறாவது விரலாய் உணரத்தொடங்கினேன். எனது பார்வையின் துல்லியத்தை என் தோட்டாக்களுக்கு என்னால் இம்மி பிசகாமல் எளிதில் கடத்தமுடியும். சம்பந்தபட்டவர்கள் என் துப்பாக்கியின் ஒரு முனையில் நின்றால் நான் கொலைகாரன். மறுமுனையில் நின்றால் நான் காவல்காரன். இந்த இரண்டாம் தகுதியை வைத்தே அவளிடம் செக்யூரிட்டி ஆஃபிஸர் ஆக என்னைக் கொண்டு நிறுத்தினார்கள். நான் அவளிடம் சேர்ந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தன.

00000000000000000000000000

மது மயக்கத்தில் இருந்த அவள் அன்றைய இரவில் என்னையே வண்டியை எடுக்கச்சொன்னாள். எப்போதும் அவள் தான் ஓட்டுவாள். காரை அன்று நான்தான் ஓட்டினேன். அருகில் அமர்ந்த அவள் ஆடை சற்று தளர்ந்து இருந்தது. அந்தத் தளர்வை அவள் விரும்பினாள் என்றே தோன்றியது. என் பார்வையெல்லாம் அவள் பொருட்படுத்தமாட்டாள். அவளது நெஞ்சும் இடையும் தொடையும் வழக்கத்திற்கு மாறான ஒன்றாய் இருந்தன. அவள் தன் கைப்பையில் இருந்து எடுத்து அந்த சிவப்பு உதட்டுப் பூச்சை பூசிக்கொண்டாள். எனக்கு ‘இப்போ எதற்கு அது தேவை அவளுக்கு’ என்று தோன்றியது. அவள் பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தாள்:

“இட் வாஸ் அ ஃபன்னியஸ்ட் ஷோ. வோஸ் ண்ட் இட்?” என்றாள்.

“ஹ்ம்ம்……..”

“டோன்ட் யு லைக் இட்?” என்று கூறி “உஷ்ஷ்……” என்று பெருமூச்சு விட்டாள்.

சட்டென்று என் தொடையைத் தழுவி, என் காற்சட்டை உறையில் இருந்த என் துப்பாக்கியை எடுத்தாள்.

எடுத்து என்னிடம் நீட்டி “இப்போ சொல்லு” என்றாள். அவள் குறி கண்டிப்பாக தப்பும். அவள் கை நடுக்கமே அதைச் சொல்லியது. நான் பதில் சொல்லாது மெலிதாய் சிரித்துவைத்தேன். பின்பு அதை விலக்கி என் காதருகினில் வந்து, “யு லவ் கண்ஸ், டோண்ட் யூ …….?” என்றாள். அதற்கும் நான் பதில் சொல்லவில்லை.

‘கண்’ நோட ஒரு ‘எண்ட்’ லதான் பயம், அச்சம், டிஸாஸ்டர், டேஞ்சர் எல்லாமே. அதோட இன்னொரு ‘எண்ட்ல’ ஒரு ரொமான்ஸ் இருக்கணும், ஆர்கஸம் இருக்கணும். அந்த ‘கண்’-ஐத் தொடும்போது அதோட ஸ்பரிசம் ஒரு கிளர்ச்சிய தரணும். ‘யயா…. டெத் அஹெட் அவுட் ஒஃப் அஜென்டில் டச். இல்ல….” என்று தொடர்ந்தாள்.

என் துப்பாக்கியைத் தொட்டுப்பார்த்த அவள்,

“ஸோ ஐ ஹேட் ஹார்ஷ்லி பில்ட் கண்ஸ்”  என்று  வேண்டாவெறுப்போடு அதை  என்உறையில் வைக்க முயன்றாள். நான் “லீவ் இட்” என்றேன்.

“யூ ஆர் ஸச் எ ஹார்ட் நொட் ரு  க்ராக்” என்று கையைப் பின் கொண்டுப்போய் கட்டியிருந்த அவள் கேசத்தை அவிழ்த்தாள். அது அவளது வலது தோள்பட்டையில் லாவகமாக சரிந்தது. பின்பு, “கார் ஜன்னலை திறந்து விடுங்கள்.” என்று ஆணையிட்டாள். நானும் திறக்க, அப்பெருநகரத்தின் ஒட்டு மொத்தக் காற்றும் குளிரும் ஒன்று திரண்டு எங்கள் உடம்பில் பட்டது. ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. அப்படியே தலை சாய்த்துக் கண் அயர்ந்தாள். தோள்பட்டையில் சரிந்த அவள் கூந்தலின் மென்னிழைகள் சில காற்றில் பறந்துவந்து என் கண்களை அறைந்து சென்றன. என் பார்வை அதனால் தடைப்பட்டது.

000000000000000000000000

நாங்கள் இறங்கும் நட்சத்திர விடுதிக்கு வந்தாகிவிட்டது. அவளைக் கைத்தாங்கலாகத்  தான் அவள் அறைக்கு கொண்டு சேர்க்கமுடிந்தது. லிஃப்டில்  நான் விட்ட இடத்தில் தொடங்கினேன்.

“ஸோ யூ வோண்ட் யுவர் கண் அஸ் ஹாட் அஸ் யூ ….”

போதையில் இருந்த அவளது அந்த பதிலில் ஒரு தெளிவு இருந்தது.

“தேங்க்ஸ் ஃபோர் யுவர் கொம்ப்ளிமெண்ட். ஃபைனலி யு ஒப்பண்ட் ஒப் அண்ட் அக்ரீட் அம் ஹாட்” என்று புருவத்தை நெளித்துச் சிரித்துகொண்டாள். பின்னர் என் கேள்விக்கு பதில் அளித்தாள்:

“யெஸ். ஐ ஹாவ் ஸ்மித் அண்ட் வெஸ்ஸன் 66 காம்பாட். 900 டொலர்ஸ் குடுத்து ப்ளாக் மார்க்கெட்ல வாங்கினது. தி மோஸ்ட் செக்சியஸ்ட் கண், யூ…… நோ?” என்று முடிக்கையில், அவள் விரல்களை அந்த துப்பாக்கியைப் போல் எண்ணி அதற்கு முத்தமிடுவது போல ஒரு குழந்தைச்செயலைச் செய்தாள்.

“டோண்ட் கன்ஸிடர் தட் அஸ் யுவர் ரோய் மிஸ் …”, என்று ஏதோ ஒரு உரிமையில் அவ்வார்த்தைகள் வந்து விழுந்தன.

“ஹே……..  கம் ஓன். ஐ டோன்ட் கிவ் எ ஃபக் எபௌட் இட்” என்றாள் உதாசீனத் தொனியில். எனக்கு  ‘ஏன்டா சொன்னோம்.’ என்றிருந்தது. பின்னர் மெதுவாக அவள் அறைக்குள் நுழைந்த போது என் தோள்களை இறுகப்பற்றிக்கொண்டாள். என் திண்தோள்களின் மாட்சிமை அவளை எதோ செய்திருக்கவேண்டும். இதற்கு முன்னர் அந்த இறுக்கத்தை நான் உணர்ந்ததில்லை. அந்தச் செய்கை மூலம் ஏதோ தெரிவிக்க விரும்புகிறாள்.

நான் அந்த இறுக்கத்தை களைத்துக்கொண்டு,

“ஹௌ மெனி ஹாவ் யூ  ஷொட் டெட் வித் தற் கண்?” என்றேன். அந்தக் கேள்வியில் ஒரு துடுப்புத்தனம் வெளிப்பட்டதை  ரொம்ப நாட்களுக்கு பின் உணர்ந்தேன். இடறுகிறேன் என்றும் எண்ணிக்கொண்டேன்.

அவள் தன்னை சற்று நிலை நிறுத்திக்கொண்டு கொஞ்சம் அசடுவழிந்தது போலவும் பின்னர் அசாத்தியத்தைச் செய்ததுபோலவும்,

“ஐ நெவர் யூஸ்ட் ரு  பை புள்ளெட்ஸ் ஃபோர் மை கண். இட்ஸ் ஓல்வேஸ் அன்லோட்”  என்று சொல்லிவிட்டு அறியாத ஒரு பெருமிதத்தில் ஆழ்ந்தாள்.

‘இப்பலாம் சிலர் ஃபேன்சிக்காக  இப்படி வைத்திருப்பது உண்டு’ என்று நான் நினைக்கையில், என் ஐயத்தை கண்டறிந்து விட்டவள் போல,

“வுட் யூ மைண்ட் இஃப்  ஐ ஷேர் சம்திங் எபௌட் மை அந்தரங்கம்?” என்று சொல்லிவிட்டு அந்தக்கடைசி வார்த்தையை மட்டும் மெலிதாய் கிசுகிசுத்தாள்.

பட்டவர்த்தனமாக எதையோ போட்டு உடைக்கப் போகிறாள் என்று பட்டது. அழகிகளின் பட்டவர்த்தனமும் அழகு தான். ஒவ்வாமை என்றும் அருவருப்பென்றும் அவர்களிடம் எதுமே இருப்பதில்லை. தயக்கம் என்பது துளிகூட இல்லை. இப்படி துடைத்து வைத்த கண்ணாடி போல என்றும் வாழ்கிறார்கள். அதனால் தான் அந்தக்  கண்ணாடியைப் போல கூசுகிறார்கள், பளிச்சிடுகிறார்கள். அந்தப் பிரதிபலிப்பில் நம் உண்மை, அகம் புலப்பட்டு நாம் இடறிவிடவும் கூடும். இதில்த்தான் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியிருக்கிறது. அவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்திலும் அவர்கள் சொல்பவை, செய்பவை, அனுபவித்தவை, இப்படி அனைத்திலும் கலையேறிக்கொள்கிறதே, ரசனையேறிக்கொள்கிறதே, எப்படி……..? அவர்கள் வாழ்க்கை ஒரு சராசரி இந்திய ஆணின் பகற்கனவில் உள்ள களிப்பை போல இருக்கிறது. என்னைபோன்றவர் காணும் கனவே அவர்களின்  வாழ்க்கையாக்கப்பட்டது.

“மை கண் இஸ் மை ஃபேவரைட் செக்ஸ் ரோய் ஆஃப் மை மாஸ்டர்பேஷன், யூ…  நோ… ” என்று நான் சாய்ந்தமர்ந்த இருக்கையில்  தன் ஒற்றைக்காலைத்  தூக்கி வைத்து அவள் பளபளத்த அந்த தொடை தெரிய நின்றாள். அழகிகளுக்கு அவர்களது உடலை எதையெல்லாம் கொண்டோ கொண்டாடித் தீர்க்க வேண்டியிருக்கிறது.காமத்தால், போதையால் உடலையும் மனதையும் கொண்டாடுகிறார்கள்.

பின்னர் அவளது முதுகுப் பக்கம் கையைக் கொண்டு போய் நூலைப் போன்ற ஏதோ ஒன்றை இழுத்தாள். அந்த லேசான இழுவையில் அவளின் மொத்தமும் திறப்புக்கொண்டது. எந்தன் மடியமர்ந்து என் முடியைக் கோதிவிட்டாள். அவளே மெல்ல மெல்ல அவள் உள்ளாடையைக் களைந்தாள். அவள் இரு முலைகளை எங்கள் இருவருக்குமான இடைவெளியில் அழுத்திக்கொண்டாள். அன்று நான் தான் அவளுடைய கைப்பாவைப் போல ஒரு உயிரூட்டப்பட்ட கைப்பாவை.

“ஸோ………. யூ  ஹாவ் எ கண் வித் யூ..?” என்று என் கேள்வியை இழுத்தேன்.

அவள் “யா ……… யூ  வோண்ட் மீ ரு  ஷோ தற்?” என்று ஒற்றைக்  கண்ணை இமைத்து சொல்லிமுடிப்பதற்குள்,

“தென்….. வொய் மீ……. ?” என்று அவசரமாய் அந்த வார்த்தைகளைக் கொட்டினேன். ஏன் என்று தெரியவில்லை. அந்த நேரத்தில் அந்த கோலத்தில் அந்தக் கேள்வி அனர்த்தமாய்பட்டது.

“யூ றியலி மீன் இற்?” என்று எகத்தாளமாய் ஒரு ஓரப்புன்னகை அவள் உதட்டில் எழும்பியது. ‘தெரியாமத்தான் கேக்கறியா?’ என்பது போல ஒருபார்வை பார்த்தாள். அப்போது அவளைப் பார்த்துப்  புன்னகைத்தேன். அப்போது அவள் சீண்டப்பட்டாள்.

“நான்  ஒன்னு சொல்லட்டுமா? ஹோப் யூ வில் நொட் கெற்  எஃபெண்டட் பை திஸ். ஏன் இப்படி போலியா சிரிக்கிற? வந்ததுலேந்து கவனிச்சுட்டேன். யூ டோன்ட் சீம் ரு பி ட்று.” அதற்கும் நான் அப்படியே சிரித்தேன்.

“ஒஹ் மை கோட்” என்று அலுத்துக்கொண்டாள்.

“எந்த ஒரு ஆணும் கட்டில்ல பொய்யா இருக்கமாட்டான். நீயும் அப்படி தான்.  ஐ அசூர் இற் . லெட் மி ஸீ.” என்று முடிக்கையில் அவள் பேசிக்கொண்டிருந்த போதே அவளால் அவிழ்க்கப்பட்ட என் சட்டைப்  பொத்தான்கள் வழியாக அவள் விரல்கள் ஊடுருவி ஒரு பக்கமாய் தெரிந்த என் இடது மார்பைத் தொட்டு, சதைப்பந்தோடு திருகி இழுத்து, “ப்ரூவ் மீ தட் யூ ஆர் லோடெட்” என்று சொல்லி அவள் வலக்கை விரல்களை துப்பாக்கியைப் போல் என் நெஞ்சருகே வைத்து, மீண்டும் அந்தக் குழந்தைச் செயலைச் செய்துகாட்டி கட்டை விரலால்  காற்றை மீட்டினாள். அப்போது எனக்கு அது குழந்தைச் செயலாய் படவில்லை .

அவளது கூரிய பேர்ப்பிள் கலர் பூச்சைக் கொண்டிருந்த விரல் நகங்கள் என் வழவழப்பான மாரில் சிறு கீறலை ஏற்படுத்தியதால் ரத்தம் கசிந்தது. “ஓஹ்……. மை ஹோலினெஸ்.” என்று அவள் உடனேயே தன் நாவை வெளிநீட்டி அவளால் ஏற்பட்ட அந்த காயத்தில் பதித்தாள். ஒரு பாம்பைப் போல கொத்தினாள். நான் அதுவரை அப்படிப்பட்ட செம்மையான நாவைக் கண்டதில்லை. எனக்குள் இருக்கும்  கல்மிஷத்தை
உரித்து என் உண்மையை வெளியெடுக்கும் தீ எனப்பட்டது அவள் நாக்கு. தீயானது இறுகி திடமாகி செந்நாவென்றானது. அது அவளை அப்படியே விடவில்லை. அவள் கழுத்தைப் பிடித்து நெறித்து அவளை அந்த துருத்திய நாவுடனே என் முகத்திற்கு அருகில் கொண்டு வந்து அவள் நாவை என் நாவிலிட்டேன். இத்தகைய நேரங்களில் அவளது உமிழ்நீர் சுரப்பிகள் சுரந்தவை எல்லாம் எனக்காக பாதுகாத்து நன்கு பதப்படுத்தப்பட்ட கள்ளெனப்பட்டது. அவளது எச்சில்களை அவளையே முழுங்கவிடாமால் நான் உறிஞ்சிக்கொண்டிருந்தேன். அவளது சுரப்பிகள் அனைத்தும் போதைக் கலயங்களாய் ஆகிப்போயின.

உடலே சுரப்பியாய் ஆக்கிக் கொண்டவள் போல அவள் எனக்கு அள்ளி வழங்கிக்கொண்டிருந்தாள். எங்கள் நாவின் இடுக்குகளில் நாங்கள் ஒரு சமணத் தருணத்தை அடைந்திருந்தோம். அவள் மணிமேகலையின் அமுதசுரபி ஆனாள். நானோ காயசண்டிகையாகிப் போய் இருந்தேன்.

அவளைப் புணர்ந்து மீண்டும்  என் சுண்டுவிரலை அவள் யோனியில் இட்டு அவளை மீட்டும் போது துப்பாக்கியின் ட்ரிக்கரைத் தொட்டுத் தூண்டுவது போல இருந்தது. அந்தத் தூண்டலின் உச்சத்தில் மஞ்சமே அவளை தூக்கிப் போட்டது. குண்டைக் கக்கிய துப்பாக்கியின் பின்உதைப்பைப் போல் சீறி அடங்கினாள். துப்பாக்கியின் முனையில் கசியும் புகையைப் போல அவளை விட்டு ஆவிஎழுந்தது. அந்த ஆவியை என் உடல் பரவ வாங்கிக்கொண்டேன். பின் என் சுண்டுவிரலை அவளே நீக்கி அவள் உதட்டிற்கு கொண்டு சென்று அதனை முத்தமிட்டாள்.

ஒரு சுண்டு விரலின் சிறு தொடுகை, தீண்டல் அவளை எழச் செய்யுமா…..? என்னுடைய அந்த ஒற்றை விரலைக் கொண்டாடினாள். அவளது சிவந்த உதடுகளின் மென்மையை என் சுண்டு விரல் எனக்கு தெரிவித்தது. அவளே என்விரலை அவள் கீழுதட்டில் ஒருபக்கமாகப்  பதித்து அழுத்தி மறுபக்கமாக இழுத்தாள். துப்பாக்கியைத் தடவிப் பார்த்த இதம் எழுந்தது. அப்போது அவளது உதடு கொள்ளும் தோற்றமாற்றங்கள் என்னை ஏதோ செய்தது. விரலைச் சட்டென விலக்கி என் உதட்டைத் தந்து முத்தமிட்டேன். அது ஆவி எழுந்து அணைந்த துப்பாக்கியின் துளையில் முத்தமிட்டது போல இருந்தது.

அவளது இடையை பற்றி இருபக்கமும் அவள் இடுப்பெலும்பை அழுத்தியவாறு அவளைப் பருகிக் கொண்டிருந்தேன். அப்படிக்  கனகச்சிதமாய் எந்த கைகளும் அவள் வளைவுகளை இதற்குமுன் அடைந்திருக்கவில்லை. என் கைவிரல்கள் அந்த வளைவுக்குள் அப்படிப் பொருந்திப் போனதை உணர்ந்தேன். அது எப்படியென்றால், ஒரு நன்கு பழகிய துப்பாக்கியின் கைப்பிடியைப்பற்றி திறம்படக்  கையாள்வது போல இருந்தது. என் கையில் இருக்கும் துப்பாக்கியாகவே அந்தப் பெண்ணைக் கண்டேன். அவ்வப்போது அவள் திமிறி எழுந்ததை அவளது மார்புக்காம்புகள் என்னை உரசிச் சென்றபோது எண்ணிக்கொண்டேன்.

ஒரு பெண்ணையும் ஒரு துப்பாக்கியையும் கையாளத் தெரிந்த ஆண் சோடை போவதில்லை என்று நிரூபணம் ஆயிற்று. பெண்ணால் தன்உடலையும் துப்பாக்கியால் இந்த வெளிஉலகத்தையும்  உற்றுநோக்குகிறான்.  பெண்ணழகைக்கொண்டு தன் உடலையும் ஆபத்தைக்கொண்டு இந்த உலகையும் அளக்கிறான். எல்லாம் முடிந்து ஓய்ந்த பிறகு அவள் கலைந்த கேசத்தை சரி செய்து கொண்டாள். எழுந்து ஒரு டர்கி டவலை எடுத்து அவள் மார்பு  இறுகக் கட்டிக்கொண்டாள். மீண்டும் புணர வேண்டும் என்று எங்கள் இருவருக்குமே இருந்திருக்கலாம். அவளுக்கு அப்படி இருந்ததை அவள் என்னைப்பார்த்து சிரித்ததில் புரிந்துகொண்டேன்.

அவளை மீண்டும் இழுத்தேன். மெத்தென்று அவள் என் மேல் அந்த மேலாடை நழுவ விழுந்தாள். அவளது பழுத்த வலது மார்பை என் நாவால் ருசித்து அந்தக் காம்பை என் உதட்டால் ஈரம் செய்து கொண்டேன். பின்பு பல்லால் மேலே இழுத்தேன். என் பல்லின் இழுபடலில் கண்கள் சொருகிப்போய் இருந்திருந்தாள். இந்த மொத்த உலக உருண்டையை ஒரு சிலந்தி வலையின் ஒரு இழைக்கொண்டு இழுப்பது போல ஒரு சௌகரியமான மென்னிழுவையுடன் என் தோள்களை இறுகப்பற்றினாள்.

000000000000000000000000

அப்போதுதான் என் குரூரம் தலைதூக்கி எழுந்ததை உணர்ந்தேன். ஆழத்தில் ஒரு சுளீர் என்றதொரு எண்ணமின்னல். நான் பாய்ச்சிய விந்து அவள் முட்டையை துளைத்து கருவுறுதல் நடக்க இருக்கும் முப்பது நிமிடத்திற்குள் அவள் நெஞ்சத்தை நான் செலுத்தும் தோட்டா துளைத்திருக்க வேண்டும். இங்கே இப்பிரபஞ்சம் மனித பிறப்பு இறப்பை துளைப்பெனும் நாட்டியம் மூலம் நிகழ்த்தி வைக்கிறது. உயிர் கொடுத்தலும் உயிர் எடுத்தலும் துளைத்தலில் இருக்கின்றன.

என் விந்தானது அவள் யோனியின் அமில சுரப்பைக் கடந்து அவளது திரைகளைத் தாண்டி தன் நூறாயிரம் சகோதரர்களை மீறி அவள் முட்டையை அடைய வேண்டும். நான் இன்று அவளிடம் வந்தடைந்திருப்பது போல ஆயிரம் தடைகள், ஆயிரம் பொறிகள், ஆயிரம் கண்ணிகள் அதற்கும். இப்போது புறவயமாக அதற்கு நூறாயிரத்தி ஒன்றாம் போட்டியாக  நான் செலுத்தப்போகும் தோட்டா.

தோட்டாவிற்கு அதை வார்த்தெடுப்பவன் தாய். அதை செலுத்துபவன் தகப்பன். விந்து தோட்டாவின் ஆதிசகோதரன். விந்து வில்லில் அம்பாகியது. கையில் வேலாகியது. துப்பாக்கியில் இன்று தோட்டாவாகியிருப்பதும் அதுவே. இலக்கும் துளைப்புமே அதற்கு எழுதி வைக்கப்பட்ட நியதி. மனிதன் கைகளில் அது அழிவிற்கான ஆயுதம். ஆனால் இயற்கைக்கோ அது ஆக்கத்திற்கான கனிவு.

எது முந்தும் என் விந்தா? என் தோட்டாவா? பின்னர் பிறகெதையுமே யோசியாமல் என் கையால் தலையணைக்கடியில்த்  துழாவி அந்த துப்பாக்கியை எடுத்து அவளது  இடதுபக்க  முலைக் காம்பில் வைத்து சுட்டேன். ஒரு சில கணம் தான். தூக்கிவாரி உடம்பை உதிர்த்தாள். அவளது கடைசி திமிறல். கட்டிலில் வைத்து இழைத்த அந்த வன்முறையில் அவளது காமமும் உயிரும் சேர்ந்தே அடங்கியிருக்கும். என் உதட்டின் வன்முறையை, விரல்களின் வன்முறையை, என் குறியின் வன்முறையை சிலாகித்த அவள் என் துப்பாக்கியின் வன்முறையையும் ஏற்றுக்கொள்ளட்டும்.

அவளோடு அடைந்த உச்சநிலை இப்போது அவள் துப்பாக்கியோடும் அறுபடாமல் தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது. அவள் சொன்னது போல தான் அவளது துப்பாக்கியும் இருந்தது. அதன் வழவழப்பிலும் வளைவு நெளிவுகளிலும் நான் அவளைத்தான் தொட்டுக் கொண்டிருக்கிறேன். புகைந்து கொண்டிருக்கும் அந்த துப்பாக்கித் துளையில் அவள் யோனியின் வாசம் எழுந்தது போல இருந்தது. வெள்ளைப்படுக்கையில் ஒரு மாரில் ரத்தம் கசிய அவள் முன்னும் அவளுக்கு பக்கத்தில் படுத்து வைக்கப்பட்டிருந்த அந்த துப்பாக்கியின் முன்னும் கொஞ்ச நேரம் நிர்வாணமாய் நின்று கொண்டிருந்தேன்.

என் காமமும் வன்மமும் அடங்கியதா? அனைத்தும் சொற்ப கணங்களில் அரங்கேறிவிட்டதே? காமமும் வன்மமும் அரங்கேறும் இத்தகைய குறுகிய கணங்களின் மொத்த சாரத்தில் தான் மண்ணில் பிறப்பும் இறப்பும் நிகழ்வதாக எடுத்துக்கொள்ள வேண்டுமா? இப்பிரபஞ்ச இயக்கம் ஒட்டுமொத்தமும் ஒரு பொட்டில் ஒடுங்கிவிடுகிறதோ?

பின்னர் உடுப்புகளை உடுத்திக்கொண்டு புறப்படலாம் என்றுபட்டது. அனைத்தும் அணிந்து கொண்டு விட்டேன். அந்தப் படுக்கையில் அவள் அருகில் கிடந்த அந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டேன்.

அப்போது அவளைப் பார்த்த போது அவளது உதடுகள் இன்னும் கவர்ச்சி அடங்காமல் இருந்தது. துப்பாக்கியின் துளை முனையை என் சுட்டு விரலைப் போலவே அவள் உதடுகளின் மேல் படரச் செய்தேன். என்ன ஒரு பொருத்தமான உதடுகள்! முன்பிருந்த அந்தச் சிவப்பு அந்த உதடுகளில் இல்லை என்று உணர்ந்து அவள் முலைக் காம்பில் கசியும் குருதியின் ஒரு துளியை என் நுனிவிரலால் தொட்டு நனைத்து அவள் உதடுகளில் பூசினேன். அந்தக் குருதிச் சூட்டில் அவள் அதரங்கள் சற்று தளர்ந்தன. ஒரு உன்னத அழகைக் கொள்ளப்பெற்றாள். பெண் தளரும்போதே அழகுகொள்கிறாள் என்று நம்புபவன் நான். அதன் வழவழப்பு, சுருக்கங்கள், மேடு பள்ளங்கள் என்று  மொத்த பெண்ணாகவும் அவள் உதடுகள் மாறி இருந்தன. சிவப்பு நிற துணியால் லேசாக போர்த்தப்பட்ட பெண்ணுடல் போல இருந்தது. எனக்கு அதையும் நிர்வாணமாக்கி பார்த்துவிட வேண்டும் போல் என்றிருந்தது. என் காமத்தின் கடைசி உதிரி, கடைசிக்  கழிவு, கடைசி எச்சம் இன்னும் என்னில் இருந்ததோ என்னவோ? அவள் தலையை என் மடியில் வைத்து என் உதட்டைக் கொண்டு அந்த உதடுகளை உறிஞ்சினேன். அவள் உதட்டில்  நான் பூசிய அந்த குருதிச்சுவை முன்பு அவள் மார்க்காம்பில் நான் பருகிய வியர்வை ருசியை நினைவுபடுத்தியது. உள்ளே கொதித்து நொதிக்கும் குருதி வெளியே குளிர்ந்து ஈரமாய் அவள் மாரில் ஊறி மார்க்காம்பினால் எனக்கு ஊட்டப்பட்டது. எனக்கு அவள் முலையும் உதடும் ஒன்று தான். மூடியிருந்து அழைப்பது முலை என்றால் மூடப்படாமல் இருந்து அழைப்பது உதடு. உதட்டில் தொடங்கி அவள் கன்னங்கள், மூக்கு, கண்கள், அவள் புருவ இழைகள், அவள் நெற்றி என்று முத்த உறிஞ்சல்கள். முன்பு நடந்தது பரிமாற்றம். இப்போதோ ஒரு வழி நுகர்வு மட்டுமே. கடைசியாக அவள் நெற்றிப்பொட்டின் நடுவில் மீண்டேன். எனை மீட்டேன் என்று தான் சொல்ல வேண்டும்.

அப்போது நான் அழுதிருந்தேனா? தெரியவில்லை. காமத்தின் கடைநிலையில் எதற்கு இந்த அழுகை. என் உண்மை என்று அவள் வேண்டியது இதுதானா? பின்பு நான் மெல்ல அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். கதவோரத்தில் நின்று அவளைப் பார்த்த போது அவளிடம் அவள் உதடுகளில் மிச்சம் ஒரு குறுமுறுவல் பாக்கி இருந்தது. அதை என்னால் எடுத்துகொள்ளமுடியவில்லைப் போல. அவள் கண்கள் மூடியிருந்தாலும் அது ஒரு வசியமாய் இருந்தது.

அந்த முறுவலை அவளுக்கு வழங்கியது யார்? அந்த மந்தஹாசத்தை அவள் உதட்டுக்குள் செலுத்தியது யார்?

ஒரு வேளை நானா? என் உதடுகள் கடைசியாக அவள் மேல் எடுத்துக்கொண்ட நிகழ்த்துக்காமமா? ஒரு வேளை அது என்புன்னகை? ஆண்டாண்டு காலம் என்னுள் வெளிப்படாமல் மழுங்கடிக்கப்பட்ட  என் உண்மைப் புன்னகையை என் கடைசி முத்தத்தில் நான் அவளுக்கு கடத்தியிருக்கிறேனா?

இல்லவே இல்லை. இருக்காது. பார் போற்றும் பேரழகியை எனக்கு கடன்பட்டவளாய் ஆக்க எனக்கு மனமில்லை. அது அவளது புன்னகை தான். இத்தகைய நிலையிலும் அவள் ஒரு அழைப்பை விடுக்கிறாள்.  ஒரு அழகிக்கே அது சாத்தியம். அதுவே அவள் பேரழகியான அருகதை. இத்தகைய புன்னகையை தீராக் காமமோ வடியா வன்மமோ கடத்தல் அரிது. எல்லாவற்றையும் விஞ்சிய புன்னகை அது. ஒரு மானுட உயிர்ப்பு. இருத்தலின் ரகசிய மாண்பு. இயற்கையின்பால் உள்ளுறையும் அதிசய கனிவு.

000000000000000000000000

‘இவளைப் புணர்’ என்ற செய்தியை நான் எப்படி மீறினேன் என்று உங்களுக்கு புலப்பட்டுவிட்டதா ? என் மூளைக்கு மேலே ஒரு கண்ணுக்குப் படாத நரம்பு எழுந்து அதனின் நுனி அவர்கள் கையில் சிக்கி இருக்கிறது. அவர்கள் தான் சமயத்திற்கு ஏற்றார் போல அந்தச் சரட்டினை ஆட்டி என் காமத்தை வன்மமாய் மாற்றியிருக்கக்கூடும். என் நரம்பின் நுனியை பற்றியிருக்கும் கைகள் கூட மாறி இருக்கலாம். சொல்ல முடியாது. ஆனால் அந்த பிடி அகல சாத்தியமில்லை. அவர்கள் தான் பட்டத்து நூலை போல கைமாற்றி கைமாற்றி என்னை இயக்குகிறார்கள். ஒரு லிவரின் அசைப்பில் இரயில் தண்டவாளம் அகன்று தன் தடத்தை மாற்றி மற்றொரு தடத்தில் சேர்ந்து இரயிலை சீராய் செலுத்தும் அல்லவா? அது போன்று செயல்பட்டிருக்கிறார்கள். துப்பாக்கியின் முனை கணநேரத்தில் நூற்றெண்பது டிகிரி திருப்பப்பட்டிருக்கிறது. எப்படி என்று கேட்கிறீர்கள் தானே? சொல்கிறேன். இதற்காக அவர்கள் எந்த ஒரு செய்தியும் தனியாக எனக்கு விடுக்கவில்லை. எப்படி எளிதாய் கையாண்டு இருக்கிறார்கள் பாருங்கள். நான் அவள் மேல் செயலாற்றிக்கொண்டிருக்கையில் கையைத் துழாவிய போது எதேச்சையாகத்தான் அவளது துப்பாக்கி என் கையில் சிக்கியது. அவள் என்னிடம் என்ன சொல்லியிருந்தாள்? தோட்டா பூட்டப்படாத அன்லோடட் துப்பாக்கியென்று. ஆனால் அதை தொட்டெடுத்த போது தோட்டா பூட்டியிருந்ததை அதன் கனமே சொல்லியது. அவள் உதடுகள் பொய் உதிர்த்துவிட்டனவே? ஏன்? ஏன் ? என் வன்மம் துளிர்கொண்டது. இந்த உலத்தில் வார்க்கப்பட்ட அனைத்து தோட்டாக்களுக்கும் நானே ஒற்றைத் தந்தை. அவ்வளவு தான்.

00000000000000

“இவளைப் புணர்” என்றார்களே? ஏன்?  கருமுட்டைச் சந்தையில் இவளது முட்டைக்கு மவுசு ஜாஸ்தியாக இருக்கலாம். ஆனானப்பட்ட அழகி அல்லவா இவள். அந்த புணர்ந்த கருமுட்டையில் இருக்கும் உயிர்ச்சத்து பல பரிசோதனைக்குப் படி அளக்கும்.  ஒரு ஒற்றை உயிர் திசு இந்த உலகையே உருவாக்கும் சாத்தியத்தை தனக்குள் அடக்கியுள்ளது. அந்த சாத்தியத்தை சீண்டிப் பார்க்கவே நான் ஏவப்பட்டிருப்பேன். ஆணுறை அணியாதே என்று கூடுதல் எச்சரிக்கையோடு எனக்கு செய்தி வந்திருந்தது. அப்போது அது ஊர்ஜிதமாயிற்று. இப்போது அவர்களுக்கு வேறொரு மாற்று கிடைத்திருக்கலாம். இதெல்லாம் நான் மேம்போக்காகத்தான் சொல்கிறேன். அவளது அந்த உதடுகளும் புன்னகையும் உண்மையானதாகவே இன்னும் படுகிறது. அதைத்தான் அவள் இறந்த பின்னரும் என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள். நான் தான் தவறாக புரிந்துகொண்டு என் கயமைக்கு அவளை இரையாக்கிவிட்டேன் . இப்படி யோசித்துப்பார்க்கிறேன். அவளைக் கொல்வதாகவே அவர்கள் முடிவெடுத்திருந்திருப்பார்கள். அதற்காகவேகூட நான் நிறுத்திவைக்கப்பட்டிருக்கலாம். அவள் துப்பாக்கியில் பூட்டப்பட்ட தோட்டாக்களே அவர்கள் எனக்கு விடுத்த சமிக்ஞையாக இருக்கலாம். புரிகிறதா? இப்படித்தான் தன்னிச்சையை நிகழ்த்தி விளையாடுவார்கள். பழி பாவங்களை ஆண்டவனிடத்தில் விட்டுவிடுவதைப் போல என் எல்லாக் குற்றவுணர்ச்சிகளையும் அவர்களிடத்தே விடுகிறேன். எனக்கு எந்த ஊறும் அவர்கள் இன்று வரை விளைவித்ததில்லை. என்ன செய்வது? துப்பாக்கிகளுக்கும்  தோட்டாக்களுக்கும் ஏது குற்றவுணர்வு? நான் கருவியாக்கப்பட்டவன். கருவியாக்கப்படுதலின் சாரமே அதுதான்.

அவளைச் சுட்டபோது எழுந்த அந்தச் சத்தம் எவர் காதிலும் விழுந்திருக்கப்போவதில்லை. காற்றில் அடித்துக்கொள்ளும் ஒரு கதவு சத்தத்தைக் கடப்பதைப் போல கடந்துகொண்டிருப்பார்கள். அந்த சத்தம் அவளுக்கான உலகத்தை ஒவ்வொன்றாய் அவளிடமிருந்து விடுபட்டு அகலச்செய்திருக்கும். தனியளாக்கப்படுவாள். அனைத்தும் சரிக்கட்டப்பட்டு அவள் தவறாகிபோயிருப்பாள். நாளை விடிவில் எளிதாக அவள் தூக்கி எறியப்பட்டு இல்லாமலாகிவிடுவாள். ஆனாலும், அவளுடன் இருந்தபோது என் உண்மையின் ஒற்றைத் துளி வெளிப்பட்டதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

லோகேஷ் ரகுராமன்-இந்தியா 

(Visited 247 times, 1 visits today)