பொன்மார் – சிறுகதை-லோகேஷ் ரகுராமன்

இன்று டாக்ஸிகாரன் சரியான இடத்தில் தான் என்னை இறக்கி விட்டிருக்கிறான். அவன் “அதோ தெரியுது பாருங்க ரெண்டு சந்து அங்க தான் நீங்க கேட்ட இடம்” என்று ஹிந்தியில் அறைகூவி கிரிஷ் பார்க் ரோட்டிலேயே விட்டிருந்தான். சியால்தாவிலிருந்து முந்நூற்றைம்பது ரூபாய்க்கு என்று பேரம் பேசிய பிறகு தான் வண்டியில் ஏற்றி இருந்தான் என்னை. நேற்றும் இங்கு வர முயன்றேன். நடந்தே தான் வந்தேன். வழி மாறி போய் விட்டேனா தெரியவில்லை. இந்த இடத்திற்கான சுவடே தெரிய வில்லை. அங்கு ஏதோ ‘க்ளீன் சிட்டி’ என்று போர்டு மாட்டி இருந்ததை நேற்றும் பார்த்திருந்தேன். ஆனால் இன்று டாக்ஸிகாரன் சரியாக விட்டிருக்கிறான். அவன் உள்ளே வரமாட்டேனென்றான். “லோக்கல் டாக்ஸி வாலா அந்தர் நஹின் சல்சக்தேன்” என்று நழுவிக்கொண்டான். நானும் இறங்கிய பின் அந்த தெருவுக்குள் நுழைய முற்பட்டேன்.

இன்று மழை நாள். மழைப்பெய்து ஓய்ந்ததில் இருட்டு இன்னும் இருண்டு தெரிந்தது. தெருவோரமாகவே லாந்தர் விளக்கில் சீட்டாடிக்கொண்டிருந்த நாலைந்து ஆண்கள் என்னை மொய்க்க வந்துவிட்டார்கள். துர்காச்சரண் மித்ரா தெரு அது. நல்ல நீண்ட தெரு தான். ஆனால் நெருங்கி குறுகிய வீடுகள் – கடைகள் – அடுக்கு மாடிகள் – சந்துகள். அத்தகைய குறுக்கத்திலும் அதன் சக்திக்கு மீறிய வாழ்க்கைகளை தான் அங்கே நிகழ்த்திக்கொண்டிருந்தது அவ்விடம். நானும் எவரிடமும் பேச்சு கொடுக்காமலே முன் நகர்ந்தேன். இரண்டு ஓரங்களிலும் சாக்கடை. பையன்கள் கார்ப்பரேஷன் கட்டிக்கொடுத்த அழுக்கு வடிந்த ஓப்பன் டாய்லட்டில் ஒன்றுக்கு அடித்துக்கொண்டு அவர்கள் வாயில் குதப்பிய பீடாக்கறையை பீங்கானில் துப்பி ஒன்றுக்கோடு கரைத்து கொண்டிருந்தனர். ஓரமாக ‘எவர் மூடுவார்’ என்று அக்கறை இல்லாமல் பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தன தண்ணீர்க்குழாய்கள். அதில் சிலர் குளித்து கொண்டிருந்தனர். பாத்திரம் கழுவிக்கொண்டும் துணிதுவைத்துக்கொண்டும் இருந்தனர். குழந்தைகள் அம்மணமாய் நின்றுகொண்டிருந்தன. அனைத்து இந்தியத்தனமும் அமையப்பொருந்திய தெரு. தூரத்தில் “நமஷிவாய் ஓம் நமசிவாய் ஹர் ஹர் போலே நமஷிவாய்” என்று ஒரு பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.

என்னை சூழ்ந்திருந்தவர்கள் என்னை விடுவதாய் தெரியவில்லை. பின்னாடியே வந்து கொண்டிருந்தார்கள். அப்போது கவனிக்க ஆரம்பித்தேன் ஆங்காங்கே பெண்கள் தெருக்களின் இருப்பக்கமும் அணிவகுப்பென நின்றிந்தார்கள். என்னை தொடர்ந்த ஆண் மந்தைகள் நான் பேச்சுக்கொடுக்காததால் தானாகவே கலைந்ததையெல்லாம் நான் அறியவில்லை. நானும் பெண்கள் சாகரத்தில் நீந்த தொடங்கினேன். நான் வந்ததே இதற்காகத்தானே.

ஒவ்வொரு வீட்டின் வாசல்களில், சந்து திருப்பங்களில், வாசல் கதவின் சீலைக்கு பின்பக்கங்களில், திண்ணைகளின் தூண்களில் சாய்ந்து கொண்டு நெஞ்சை நிமிர்த்தி நின்றுக்கொண்டும், கை விசிறியுடன் அவர்களது தேக திறப்புக்களில் காற்றை வாங்கிக்கொண்டும் அவர்களது உதட்டு சாயங்களில் ஆடை இறுக்கங்களில் மார்புக் குழிகளில் என்னை போன்றவரை உள்ளிழுத்தார்கள். நம் எண்ணிப்பார்க்கும் அத்தனை முகங்களும் அங்கே உண்டு. அத்தனை மனத்தோன்றல்கள் உளப்போக்குகளும் அங்கே நிகழும். சிலர் இளம்பெண்கள், சிலர் முதிர் நங்கைகள். சிலரை பார்த்தாலே நம் மனது சபலம் கொள்ளும். ஆண்மை அரங்கேற முற்படுவோம். சிலரை பார்த்தால் அதே மனது பாவப்படும். சோக கிணற்றில் நம்மை நாமே தள்ளிக்கொள்ளப் பார்ப்போம். இந்த இரட்டை மனநிலையை கடந்து விட ஆகச்சிறந்த பிரயத்தனம் தேவைப்படும். நம்மை போன்றவர் வருவதோ முதலாம் மனநிலை தரும் கனவு பொருட்டு. அக்கனவில் கவலை, சஞ்சலம், அச்சம், சமூகம் என்று எதுவுமே இராது. அக்கனவை நாம் மீட்டெடுத்து நனவாக மாற்றமுடிந்தால் போதும். இதில் நாம் நாம் என்று சொல்கிறேனே அந்த நாமில் முழுதிலும் நிறைந்திருப்பவர்கள் என்னை போன்ற மானிட சராசரிகள் மட்டுமே, அயலவர்க்கு இடம் இல்லை. நான் என் சொந்த கதைகளையெல்லாம் சொல்ல போவதில்லை. என்னை போன்ற மனிதர்களை பொதுவாக சமூதாயக் கீழ்மையின் சுப்ரதீப வெளிப்பாடாக நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நான் யோக்கியவானெல்லாம் அல்ல. என்னால் ஒரு நந்தவனத்தில் அலைந்து திரியும் பட்டாம்பூச்சியாகவோ, நறுமலர்களில் நனைந்து எழுந்த நன்மணம் ஆகவோ உங்கள் கண்களுக்கும் நாசிக்கும் விருந்து படைத்து உங்கள் கவனத்தை பெற முடியாது. ஏதோ ஓரமாக திறந்து கிடக்கும் சாக்கடை சகதியில் நெளியும் புழுவாக உங்கள் கண்களில் போட்டுக்கொள்ளாமல் அதில் எழும் துர்கந்தமாக மூக்கைப் பொற்றிக்கொண்டு நீங்கள் என்னை எளிதில் கடந்து விடலாம் .

கொஞ்ச நாள் முன்பு தான் எனக்கு இந்த இடம் பற்றி நன்கு அறிமுகம். அதற்கு முன்பு வரை பள்ளி காலங்களில் கேள்விப்பட்டதோடு சரி. சரியாக சொல்ல போனால் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஹவுரா பிரிட்ஜில் போக்குவரத்து நெரிசலில் இடர்பட்டு நின்றிருந்த பேருந்திற்குள் உட்காந்திருந்த போது பெருந்திரளான பெண்கள் கூட்டம் ஒன்று குழுவாக பிரிந்து சென்று அனைத்து பேருந்துகளிலும் ஜன்னல் இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆண்களின் கைகளில் வம்படியாக ராக்கி கட்டிக்கொண்டிருந்தனர். ரக்ஷா பந்தன் நாளென்று நினைக்கிறேன்.

நான் அருகில் இருந்தவரிடம் இவர்கள் யாரென்று கேட்டேன்.அவர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு, ஒரு எள்ளல் சிரிப்புடன் “இவர்களை தெரியாதா” என்று பார்த்தார். பின்னர் புரிந்து கொண்டு “இவர்கள் எல்லாம் சோனாகாச்சியில் இருக்கும் வேசி தொழிலாளிகள். இவர்களோடு சுமார் பதினோராயிரம் தொழிலாளிகள் அங்கு அத்துணூண்டு நெரிசல் மிகுந்த இடத்தில் வசிக்கின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் இங்கிலாந்தில் தன் மனைவி மக்களைப் பிரிந்த ஆங்கிலேய கணவன்மார்கள் அவர்கள் களிப்பை பூர்த்தி செய்து கொள்வதற்காக இந்திய விதவைகளை இங்கே கொண்டு வந்து விட்டு இப்படி மாற்றிவிட்டனர் . பின்னர் காலப்போக்கில் அது ஒரு விபச்சார சந்தையாக மாறிவிட்டது” என்றார்.

நான் ஏன் இவர்கள் ராக்கி கட்டுகிறார்கள் என்று அவரிடமே கேட்க ஆரம்பிப்பதற்குள் அவரே “கேந்திரிய சர்க்கார் கொண்டு வந்த GST இவர்கள் வியாபாரத்தை வெகுவாக பாதித்து விட்டது. சானிட்டரி நாப்கின்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படவில்லை. பாவம் பதினொராயிரம் பேரின் அத்தியவாசியமும் அந்த நாப்கின்களில் அடங்கிவிடுகிறது. அதை நம்பித்தான் இருக்கிறார்கள். அந்த வரி ஏற்றத்தை கண்டித்தே இவர்கள் எல்லா ஆண்களுக்கும் ராக்கி கட்டுகிறார்கள். அனைத்து ஆணுக்கும் ராக்கி என்றால் ஒரு ஆணும் அவர்களை அணுக முடியாது. இது இவர்களுடைய அஹிம்சாவாதம்” என்று நீட்டி முழக்கி முடித்தார்.

அவர் பேச்செல்லாம் நான் சரியாக கேட்டிருப்பேனா தெரியவில்லை. திடீரென்று ஒரு அழகி என் கையை பற்றினார் நான் வெடுக்கென்று எடுத்துக்கொண்டேன். கையை மட்டும் தான் என்னால் அவளிடம் இருந்து விலக்கி கொள்ள முடிந்தது என் கண்களை அல்ல. கண்களில் அணுஅணுவாக அவள் நின்றாள்.
உடல் பொருள் ஆவி முழுவதுமாக அவள் விரிந்தாள். இத்தகையவளை என்னால் எளிதில் கடக்க இயலாது. காமத்தில் திளைப்பதே என் அன்றாடங்களின் பிடியிலிருந்து என்னை விடுவிக்கும் விமோச்சன கணங்கள். என் வெறுமைக்கும் இளமைக்கும் பெண்ணே பெருந்தீனி. காமமே என் தோல்விகளில் இருந்தும் என் சுய காழ்ப்புக்களில் இருந்தும் என்னை மீட்டெடுக்கும். படுக்கையில் ஒரு பெண்ணை ஜெயிப்பதே ஒரு ஆணின் அகங்காரத்தை மீண்டும் நிறுவும். ஆண் என்ற அருகதைக்கு அங்கே தான் ஒருவன் உகந்தவன் ஆகிறான். அனைத்திலும் தோல்வியை தழுவிய ஆண்மகன் பெண்ணை வெற்றிக்கொண்டு தன்னை ஆயத்த படுத்திக்கொள்ளுதல் எந்த வகையிலும் தவறென்று உணரும் நிலையில் நானில்லை.

“ஈடன் தோட்டத்தில் ஒவ்வொரு கனியும் ஆதாமின் ஆசைக்கடிக்காகவே ஏங்கிப் பழுக்கின்றன. ஏவாளும் அங்கே ஆதாமின் கடிக்கு ஏங்கும் கனியாகவே படைக்கபெற்றிருக்கிறாள். ஆதாமும் அவளை அவனிற்கான மற்றுமொரு கனியென்று உணர்ந்து அவளைத் தின்றுத் தீர்க்கையில் ஈடன் தோட்டத்து அத்தனை கனிகளும் அதைக்கண்டு ஈனி நாணும். அங்கே ஆதாம் அவளை வென்று உலகை வெல்கிறான்” என்ற ஒரு பெருங்கனவுடன் சுற்றித்திரிகிறேன்.

அந்த கனவு இப்போது என்னை இங்கு வரை கூட்டி வந்திருக்கிறது. அப்போது ஒரு முதிர் நங்கை என் கையை பிடித்து அழைத்தார் “பூரா சேப்டி தான். ஆயிரத்து ஐநூறு ரூபாய் கொடுத்தால் போதும் வாருங்கள்” என்றார். “அது வேண்டாம் என்றால் காப்ரே டான்ஸ் ஆவது பாருங்கள்” என்று கெஞ்சிக்கொண்டே வந்தார். இப்படி நின்று இரப்பவர்களை எளிதாக புறந்தள்ளி விட முடியாது. இரண்டாம் மனநிலை தொற்றிக்கொண்டது. ஒரு இரும்பு மனதுடனே மறுத்து விட்டேன். மறுத்தால் பணம் கேட்டு மிரட்டமாட்டார்கள். அடக்குமுறை எல்லாம் இல்லை. வேண்டாம் என்றால் பின் தொடர்ந்து கொஞ்சம் கெஞ்சிப்பார்ப்பார்கள் அவ்வளவுதான். அடிப்படை ஜனநாயகத்தை அறிந்திருந்த தெருவாகத்தான் அது இருந்தது. மோசம் என்றெல்லாம் ஒற்றை வார்த்தையில் ஒதுக்கி விட முடியாது.

அப்படியே அந்தத் தெரு முனையை அடைந்தேன். தெரு முனையில் மையத்தில் ஷிவ் மந்திர் இருந்தது. மங்கள ஆரத்திக்காக தயாராகி கொண்டிருந்தது. அங்கே அவள் அந்த பேரழகி நின்றிருந்தாள். என் பதினோராயிரத்தில் ஒருத்தியை கண்டு கொண்டேன். நல்ல கோதுமை நிறம். அவளுக்கு ரோஸ் பவுடர் எல்லாம் தேவைப்பட்டதாய் தெரியவில்லை. புருவ இழைகளாலும் கண்ணிமைகளாலும் புன்னகைக்க அவள் கண்களுக்கு கற்றுக்கொடுத்திருந்தாள். மார்கொஞ்சம் மிகுதியான திணிப்பாகத்தான் உள்ளிருந்து. சேலை அவளை ஒரு தாங்கலாகத்தான் தழுவி இருந்தது. சேலைக்குத்தான் அவள் வேண்டும் அவளுக்கு சேலை வேண்டாம் என்பது போல. அவள் வேண்டாம் என்றால் மலரது மடல்களைப்போல உதிர்ந்து விடும் அச்சேலை.

என் பார்வையை புரிந்துகொண்டே அருகில் வந்தாள். “எவ்வளவு?” என்றேன். “எவ்வளவு தருவீர்கள் நீங்கள்?” என்று சிரித்து பார்வையை விலக்கி நாணினாள். ஏதோ அவளுக்கும் இது புதிது போல. இத்தகைய நாணமே என் கனவுலகின் வாசல் என்னை கரைத்து அவ்வுலகிற்குள் என்னை இட்டுச் செல்லும் என்றெண்ணினேன். நானாகவே முந்திரிக்கொட்டைத்தனமாக பர்சில் இருந்து 2000 ரூபாயை நீட்டினேன். “முடிஞ்சு தான்” என்று அவள் அதை வாங்கிக்கொள்ளாமல் என்னை கை பிடித்து கூட்டிச் சென்றாள். மூன்றாவது அடுக்கில் தான் அவள் அறை இருந்தது. எல்லா அறையும் ஏழுக்கு நாலு அடியில் அமைந்த கூனிக்குறுகிய அறைகளாகவே தான் இருந்தன. அவளது அறையும் வந்தது. திறந்து உள்ளே உக்காருங்கள் நான் வருகிறேன் என்று விட்டு சென்றாள். உள்ளே ஒரு கட்டில் இருந்தது. கட்டில் முழுக்கவும் அவளது சிற்றாடை – உள்ளாடை – மேலாடைக்குவியல்கள். ஒரு பக்கமாய் நுனியில் என்னை குறுக்கிக்கொண்டு அவள் வரும் வழிப்பார்த்து அமர்ந்து கொண்டேன்.

அவளை மறைக்க மண்ணில் வேறு ஆடை இல்லை என்ற அளவில் அவளது ஆடைத் தோரணங்கள் அறை சூழ அளவளாவி அறையின் சுற்றளவை இன்னமும் குறைத்திருந்தது. பெயருக்கு மின் விசிறி ஒன்று தன் தகர உரசலை ஒப்பித்துக்கொண்டு இருந்தது. அவள் எங்கே போனாள் என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். அவளே வந்துவிட்டாள். ஒரு கைக்கு அடக்கமாய் உள்ள அட்டைப்பெட்டியில் இருந்து ஒன்றை உருவி வெளியில் இருந்த அறையொன்றில் அணிந்துகொள்ளச் சொன்னாள். அணிந்து வந்து அவள் முன் நின்றேன்.

வாசல் கதவை தாழிட்டு சாற்றினாள் “இது எனக்கான தாழ் இல்லை உனக்கான தாழ்” என்பது போல. ஈரத்தில் இறுகிய மரக்கதவு தாழ்ப்பாள், அவள் மென் விரல்களின் தீண்டலுக்காக துருப்பிடித்து காத்திருந்தது போல. சற்று போராடித்தான் போட்டாள். மாரின் முன் ஆடித்திரிந்த அவள் கூந்தல் பின்னலை அழகாய் எடுத்து பின்னால் விட்டாள். அது அவளது முதுகுப் பிளவின் பரந்த வெளியில் சீறி அடங்கியது. பின்னர் கட்டிலை தயார் செய்தாள். கட்டிலின் மறுமூலையில் இருந்த அவள் ஆடைக்குவியலை ஒதுக்குவதை பார்த்தேன். அப்போது தான் அவ்வாடை குவியலிற்கு அப்பால் ஒரு கைக்குழந்தை உறங்கிக்கொண்டிருந்ததைக் காண முடிந்தது . நான் அதை கவனித்திருக்கவே இல்லை. இந்த நிலையில் நான் அதை எதிர் பார்க்கவே இல்லை. யாருடைய குழந்தை அது? என்ற கேள்வித்தொற்றல். அவள் குழந்தையை எடுத்து தரையில் கிடத்தினாள். கட்டிலை சுத்தம் செய்து வைத்து விட்டாள். என் தோளைப் பற்றி தாராளமாய் அமரச் சொல்ல விழைந்தாள்.

நான் தரையில் கிடந்த அக்குழந்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவளும் அதை கண்டுக்கொண்டாள். குழந்தை சலனமில்லாமல் தூங்கிக்கொண்டிருந்தது. அவளுடைய குழந்தையா?. எனக்கு அழுகை மட்டும்தான் வரவில்லை. புரிந்துக்கொண்டாள். என் கவனத்தை திசை திருப்ப அவள் பெரிதான பிரயத்தனங்களையெல்லாம் மேற்கொள்ளவில்லை. என் எதிரில் வந்து நின்றாள். மார் திறந்தாள். அவள் விரித்திருந்த அச்சேலையின் முந்தானை குழந்தைக்கும் அவன் மேல் விழுந்திட்ட என் பார்வைக்கும் இடைப்பட்டு ஒரு மெல்லிய சுவரென அலைந்தெழுந்தது. நான் அவளைப் பார்த்தேன். அவ்வளவுதான் தன் மாரை என் முகத்தில் புதைத்து என்னை கட்டிலில் தள்ளி வீழ்த்திவிட்டாள். “கரக்,கரக்” மின் விசிறி அவளது உடம்பில் நழுவிய சேலையை நல்ல வேலை அவள் குழந்தைமேல் போர்த்திக் கிடத்தியது.

அப்புறம் என் பிடியில் தான் அவள். அவளை பதம் பார்த்தேன். அவளது மேடு பள்ளங்களை வளைவு நெளிவுகளை மீறாமல் மேய்ந்தேன். என் கனவுகளில் வந்த அத்தனை கடிகளையும் உறிஞ்சல்களையும் இன்று இதோ இவள் நனவாய் மாற்றிக்கொண்டிருக்கிறாள். அவள் மாரில் ஊறி பேரமுதம் பருகினேன். உதட்டில் உயிர் விரித்தேன். காலம் உறைந்த களிப்பை எனக்கு தந்துகொண்டிருந்தாள். அனைத்தையும் எனக்கு தந்தாளே தவிர அவளுக்கானது ஏதும் அவள் அடையவில்லை. தேகம் மரத்த சவமென என் அடியில் கிடந்தாள், கிழிந்தாள். நான் தந்த வலியேதும் அவளை ஒன்றும் செய்ய வில்லை. ஒரு துளி கண்ணீர் இல்லை. மூச்சைமுட்டும் முனகல்கள் இல்லை. அவ்வப்போது “இது யாருடைய குழந்தை ? ஏன் இங்கேயே அதனை போட்டுவிட்டாள்?” என்று கேள்விகள் கனலும். “தான் பெற்ற குழந்தையை தூரவா எறிய முடியும்” போன்ற விடைகள் அணைக்கும். “என்னை போன்ற வந்தவன் எவனோ விட்டுச்சென்ற பாக்கியா இக்குழந்தை” என்று மீண்டும் அக்கங்கு பற்றும்.

இது போன்ற எண்ணங்களும் என் ஆசைத்தீயும் தான் என்னை செலுத்திக்கொண்டிருந்தது அவள் மேல். அவ்வப்போதும் அவள் மேல் வன்மமும் எழுந்தது. அப்போது தான் அவளுக்கு அவ்வோசை கேட்டது. சேலையில் போர்த்திய குழந்தை பசியில் விம்மத்தொடங்கியது. விம்மல் அழுகையின் முதல் நிலை.”ஒரு தாய்க்கு எப்படியோ குழந்தையின் விம்மல் தெரிந்துவிடுகிறது. பிறப்பின் அழகே அது தானே. ஒரு குழந்தையின் துளி விம்மலுக்கே பால் சுரக்கும் தாயின் பொன்மார் என்பது இயற்கையின் நியதி” என்பதெல்லாம் என் போன்ற ஜடத்திற்கு புரியாது. என் பிடியில் இருந்து எப்படி அகலுவாள்? நேரம் போக போக குழந்தை பீறிட்டு அழத்தொடங்கியது. பசி பசி அத்தனையும் பசி. எனக்கும் தான். அவளை எப்படி விட முடியும். அவள் மேல் செயலாற்றிக்கொண்டிருந்த நான் முதல் முறையாக அவள் கண்கள் பார்த்தேன். இப்போது அவள் கண்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்தன. கண்ணீர் அவள் அறியாமல் வந்தது அவளுக்கு. “நான் தந்த வலியெல்லாம் அவளை அழச்செய்து விடுமா என்ன? இல்லவே இல்லை. நெஞ்சழுத்தக்காரி” என்று வசைப் பாடிக்கொண்டே அவள் மேல் சீறினேன். குழந்தையின் அழுகை மீறிக்கொண்டே இருந்தது. அதை தட்டி கொடுக்க என் கீழிருந்தவாறே தன் கையை நீட்டி அசைத்தாள். குழந்தை வசப்படவில்லை. அக்குறுகிய அறையின் கொடிய தூரத்தை அன்று அவள் உணர்ந்திருப்பாள். குழந்தையின் தோல்வியே தாயின் நிராகரிப்புத்தான். அதும் இது பசிக்கான நிராகரிப்பு. நாளை இவனது குரலை எவர் கேட்பார்? இவளது இன்றைய இன்றுகள் அவனது நாளைய நாளைகளுக்காகத்தான் என்று அவன் எப்படி நம்புவான்?”

குழந்தை அழுதழுது பசி மிஞ்சி ஓய்ந்தது. நானும் ஓய்ந்தேன் என் அகங்காரத்தை மீண்டும் நிறுவிய நிறைவோடு. நான் விட்ட வேகத்தில் அவள் குழந்தையை தன் பொன் மாரில் கட்டி அணைத்து தன் மார்புக்காம்பின் நுனியைப் பற்றி அவனது வாயில் மெலிதாய் சொருகிக்கொண்டாள். பாலிருக்குமா என்றெல்லாம் அவள் நினைக்க வில்லை. இத்தகைய தாயினது மாரின் கதகதப்பு போதும் இத்தகைய குழந்தையின் பசியை போக்குவிக்க.

நானோ எழுந்து ஆடைகளை சீர் செய்து இரண்டாயிரம் ருபாய் நோட்டை அக்கட்டிலில் வைத்து விட்டு அவளைப் பார்க்காமலேயே இறங்கி நடந்துவிட்டேன். “நான் விட்டு வைத்த எச்சில் தான் அவனுக்கு” என்று நினைக்கையில் ஒரு கணம் கூசத்தானே செய்யும் ஆனால் எனக்கு அப்படி இல்லை. நிசப்தத்திலேயே நடந்தேன். அவ்வப்போது ஓங்கி ஒளிர மின்னி மறைந்தது அக்குழந்தையின் அழுகைச் சத்தம். மங்கள ஆரத்தி முடிந்து கலைந்துச் சென்ற ஜனக்கூட்டத்தில் ஒரு பெரியவர் ஒரு தள்ளு வண்டியைத் தள்ளிக்கொண்டு போனார். அத்தள்ளுவண்டியில் படுத்திருந்ததோ கைகள் விளங்காமல் போய் கால்கள் முடமாகி கிடந்த இன்னொரு பெரியவர். அவரது விளங்காத கைகளுக்கிடையில் திணிக்கப்பட்டிருந்தது சில சில்லறைகள் சிதறிக்கிடந்த அப்பாத்திரம். “அடுத்த விழப்போகும் சில்லறைக்காக காத்திருக்கும் அப்பாத்திரம் போன்றவன் தானே நானும். அவள் மாரின் கதகதப்பை எனக்கும் தானே பங்கிட்டாள். இன்று அவளிட்டது பிச்சை தான். அவளது பொன்மாரிட்ட பிச்சை” என்றெல்லாம் உணர்வெழுச்சிகள் கொண்டு அவள் கண்ணியத்தை மெச்ச எனக்கு வாய் வராது. மிஞ்சிப் போனால் “ஏதோ ஒரு இந்திய இரவுகளில் என்னால் ஆக இருந்த ஒரு கற்பழிப்பை நான் தடுத்திருக்கிறேன்” என்று வேண்டுமென்றால் எண்ணுவேன். ஏனென்றால் நான் யோக்கியவானெல்லாம் அல்ல.

லோகேஷ் ரகுராமன் – இந்தியா

(Visited 187 times, 1 visits today)