கடவுள் திருடிய கதை-சிறுகதை-க.வசந்த் பிரபு

கடவுளின் மீதேறி கழுதை வீட்டிற்கு வந்திருந்தார். ஓ.. இன்னும் பதற்றமாகவே இருக்கிறது அந்த இரவுநொடிகள்..

கழுதையின் மீதேறி கடவுள் வீட்டிற்கு வந்திருந்தார். பின்னிரவுக்கு முன் நான் தூங்கும் நேரம் அது. விவஸ்தை கெட்ட கடவுள் தூங்கும் நேரத்தில்….. என நினைக்காதீர்கள். அவருக்கான கேள்வி அவருக்குள் தாமதமாய் வந்திருக்கிறது. அது என்னிடம் இன்னும் தாமதமாய் கழுதை மேலேறி வந்திருக்கிறது.

“சாதியை ஒழிக்க என்ன செய்ய..? என்றார். நான் கழுதையின் மீது கோபம் கொண்டு இன்னும் வேகமாய் கூட்டி வந்திருக்க கூடாதா.. என்ற நினைப்பினூடே, கடவுளுக்கு என்னிடம் மீதமிருந்த இசைக்கருவிக்காரன் அமிர்தத்தில் திருநெல்வேலி தாமிரபரணியின் சிலதுளிகளை கலந்து பருகத் தந்தேன். பருகிய கோப்பை கீழிறங்கும் முன்கேள்வி மீண்டுமொருமுறை வந்து விழுந்தது.

உள்ளே சென்றவன் இசைக்காமலா இருப்பான் என்ற நம்பிக்கையோடு உங்களுக்கேதும் எண்ணமிருந்தால் சொல்லுங்களேன் என்றேன்.

சாதி வெறி எண்ணம் கொண்டோரையெல்லாம் கொன்றுவிடவா என்ற கேள்வியோடு என்னை பார்த்தார். அவர்களின் மரணம் அவர்களின் சாதிக்கான வரலாறாய் மாற்றப்பட்டு விட்டால் ? என்ற என் கேள்வி அவரை ஊறுகாய்க்கும் அச்சுறுத்தவில்லை என்பது அவர் கோப்பையை என்முன் நீட்டிய வேகத்தில் தெரிந்தது. அவர் என்னைப் பற்றி அறிந்து தானே வந்திருப்பார். கணேசனும், முருகனும், இன்னும் சில ..ம்களும் பட்டபாட்டை போய் சொல்லாமலா மறைத்திருப்பார்கள்?

பூமியில் உள்ள எல்லோருக்கும் மறதியை ஏற்படுத்தி என துவங்கி.. ஹ÷ஹ÷ம் என அவரே நிராகரித்து கொண்ட  ஐடியாக்கள் இன்னும் மட்ட ரகங்கள். எனக்கு ஒன்று மட்டும் தேவலாம் போல இருந்தது, அது, பெரிய பெரிய டிரசீரா செடிகளை உண்டாக்கி மனிதர்களை விழுங்குகிற ஐடியா அது. கடவுள் இசைக்காரனின் உதவியோடு உறங்கியிருந்தார்.

நான் எப்படி தூங்குவது? வெளியே நின்ற, கடவுள் வந்த கழுதையை இழுத்து வந்து அதை பத்திரமாய் உள்ளே கட்டிவிட்டு நிமிர்கையில், நன்றி என்றது கழுதை. அட கடவுளின் கழுதை பேசுமோ என்றவாறே.. கழுதையிடம், கடவுள் ஏன் உன்மேலேறி வந்தார், மாட்டின் மீதோ, மயில் மீதோ, குதிரையின் மீதோ, தானே வருவார்கள், பின் ஏன்… என முடிப்பதற்குள் மாட்டுக்கறியும், குதிரைக் கறியும், மயில் கறியும் அவ்வளவு இஷ்டமாகிப்போச்சு, அதுவும் பீப் கபாப் னா குடும்பமா தின்றாங்க. என்னைக்கு எங்கப் பக்கம் வரப்போறாங்களோ தெரியல… ஆனா என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு எங்கள காப்பாத்திக்க.. ஆனா அத உங்கிட்ட சொல்ல முடியாது என படுத்துக் கொண்டது. அதற்கு என்னிடமிருந்த சுய தம்பட்ட, சுய முன்னேற்ற எழவு வகையிலான புத்தகங்களை உண்ண கொடுத்து விட்டு, மேலேறி வந்து கடவுளை பார்த்தேன். நல்ல கிறக்க உறக்கத்தில் இருந்தார். பாதி மட்டும் எழுதி முடித்து வைத்திருந்த கதையை முடித்து விட்டு, முக்கால் வாசி முடித்திருந்த இசைக்காரனையும் முடித்துவிட உறங்கிப் போனேன்.

உறக்கம் கலைந்த என் கண்களில் புத்தக அலமாரியும், என் டேபிளும் கலைந்திருந்தது பட, கடவுளை கழுதை என்ற அதே பதற்றத்தில் இருக்கிறேன். கடவுளை காணாது அல்ல… கழுதையை காணாதும் அல்ல.. இரவு எழுதிய கதையை காணாது. கழுதைக்கு தின்னக் கொடுத்திருப்பாரோ.. அது பிரச்சனையில்லை, மீண்டுமொருமுறை நான் எழுதவேண்டும் தலைப்பிடாத அந்த கதையை……

( தற்போதைக்கு, கடவுள் திருடிய கதை என வைத்துக் கொள்ளவா..?)

ஸ்ருதியிறங்காத ஒரு நெய்சோறு திண்ணியின் குறட்டைச் சத்தத்தை போல இருந்த அந்த சத்தம் எட்டொன்பது நாட்களாகத் தான் இந்த உயர்ந்த மலை தேச மக்களின் காதுகளில் விழுகிறது. இப்போதும் அந்த சத்தத்துடன் பறந்த விமானத்தைப் பார்த்து ஏழெட்டு சிறுவர்களில் இருவர் மேல, மேல எனவும், இன்னும் சிலர் கீழ, கீழ எனவும் கத்திக்கொண்டு இருந்தார்கள். ஆனால் முன்தினங்களைப் போலவே அதனோசை அடங்கி விழுந்து வெடித்தது. ஊ…வென வெற்றிபெற்ற சிறுவர்கள் செய்தியை ஒரு கல்யாண வீட்டில் பரப்ப, வயதான சிலர் முறைத்தே அடக்கினர்.

குறையஏற 416 நாட்கள் குரங்குகள் தின்று போட்ட மிச்ச பழங்களை தின்று, பறவைகள் கொறித்தது போக மீத பழங்களை தின்று, மீனை பாறை சூட்டில் அரையாய் குறையாய் சுட்டு தின்று, நீரை பருகி, மனிதர்களை பார்க்க கிடைக்காமல் தொடர்ந்து மேலேறி 52 நாட்களுக்கு முன் இங்கு வந்த ஆதிடன் இவர்களோடே தங்கிவிட்டான். மலைப்பரப்பின் ஆட்களிடம், பூமியின் நிலை, பூமி தொடர்ந்து அழிவது, அழிக்கப்படுவது, அரசே மக்களை அழித்தது, அழிப்பது, பலருக்கான இடத்தை ஓரிருவருக்கு அளிப்பது, பூமியையும் துளைத்து, பிளந்து ஆராய முனைந்தது என பலவற்றையும் பூமியின் உறுதியிழப்பு குறித்த தன் ஆய்வுகளின் உதவியால் விவரித்திருந்தான். (நூற்று நாப்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் ஸ்க்ர்மா எழுதிய எஞ்சிய மூதாதையர் என்ற கையெழுத்து ஆய்வறிக்கையில் ஸ்க்ர்மாவும், அவரது நண்பர்களிருவரும் இவ்விடத்தை அடைய 640 நாட்களுக்கும் மேலாக எடுத்துக்கொண்டதாக எழுதியிருந்தார்.)

மனமற்ற பணவான்கள், பறந்தாவது இங்கோ, அல்லது எங்கோ சென்று வாழ நினைப்பார்கள், ஆனால் கீழிருந்து இவ்வுயரம் வரை வருமளவுக்கு விமானத்தின் திறனையோ, அதிகப்படியான எரிகட்டியை நிரப்புகிறபடியானதொரு அளவிற்கோ நாங்கள் உருவாக்கவே இல்லை. எங்களுக்கு அந்த தேவையும் இருந்ததில்லை என நீட்டி முழங்கி அவர்களை ஆச்சர்யப்படுத்தி வைத்திருந்தான். அதனால் இந்த விமானம் விழுந்து நொறுங்குவதெல்லாம் துளியும் கலவரமாக படவில்லை, விழும் இடமும் யாரும் செல்ல முயன்றிறாத பெரும் பள்ளமான பகுதியென்பதால் அதுகுறித்த கவலையும் இல்லாமலிருந்தனர். முதல் முறை விமானம் வந்து விழுந்ததை ஓரிருவரே பார்த்திருந்தனர், அடுத்தமுறை சத்தம் கேட்டு அனைவருமே கூடிநின்று பார்த்துவிட்டு திரும்பினர். சிறுவர்கள் மட்டும் சத்தம் கேட்டால் மேலே வந்து மேல கீழ விளையாடி அடியோ, முறைப்போ வாங்கிக்கொள்கின்றனர்.

பெரியவர் ஒருவர் மட்டும் எரிக்கட்டி, விமானம் பற்றி ஆதிரனிடம் கேட்க.. பெட்ரோலில் இயங்கிய விமானங்கள் குறித்து ஆரம்பிக்க.. அவர் பெட்ரோல் குறித்து கேட்க.. பெட்ரோல் எடுத்த முறை, கிடைத்த இடங்கள், அதனால் திணிக்கப்பட்ட போர் முறைகள் (நல்ல வேலை போர் குறித்து அவர் கேட்கவில்லை). உலகமெங்கும் பெட்ரோல் தீருகிற நேரத்தில் பெட்ரோலுக்கு மாற்றாய் கண்டுபிடிக்கப்பட்ட யுரேனிய கட்டிகளும், தோரிய கட்டிகளும், யுரேனிய தோரிய உரிமைக்கான ஒப்பந்தங்களும், ஒப்பந்தங்களுக்கான நிர்பந்தங்களும், பெட்ரோலுக்காக நடத்தப்பட்ட சண்டைகளை மிஞ்சி நின்றன. அதனால் ஏற்படக்கூடிய விபரீதங்களை அறிந்தும் கூட இவை இரண்டும் தேவைப்பட்டன. திரவ எரிபொருளில் இருந்து, திட எரிபொருளுக்கு மாறுவதில் பல சிரமங்களை ஏற்றுக்கொண்டனர். மரணம் உட்பட. விபத்துகளின் போது யுரேனிய, தோரிய எரிகட்டிகள் அதிகளவில் வெளிப்படுத்துகிற கதிர்வீச்சுகள், மனிதர்களையும் பூமியையும் வலுவிலக்கச் செய்தது. என அவருக்கு விளக்கிகொண்டிருந்தான். அந்த விமானங்கள் இப்போது அந்த எரிகட்டியோடு தான் வந்து விழுகிறதா? என்ற  அவரின் கேள்விக்கு ஆதிடன் பதில்களற்று இருந்தான். அவரே, இப்படி தொடர்ந்து விழுவது நிச்சயம் நமக்கும் ஆபத்து தான், என்று முடித்த போது, ஆதிடன் அவரை நிமிர்ந்து பார்ப்பதற்குள் அவர் அங்கிருந்து பிள்ளைகள் மேல, கீழ விளையாடும் இடத்தை நோக்கி நடந்தார்.

ஆதிடன் இங்கு வந்த எட்டாவது நாளில் மதிய உணவோடு அறிமுகமானவள் மணா, அவள் இவனிடம் பேசியதில் பாதிக்கும் மேல் கேள்விகளால் தான்..

 நீ ஏன் இங்க வந்த?

 நீ மட்டும் ஏன் வந்த ?

 எப்படி இங்க வந்த?

 400 நாளுக்கும் மேல நடந்தே வந்தியா?

 சாப்பாட்டுக்கு என்ன பண்ண?

 நீ பொய் சொல்லலயே ?

 விமானம்றது எதுக்கு ?

 உலகம்ணா என்ன?

 உனக்கெப்படி தெரியும்?

என ஏகக்கேள்விகள், மணா-வுக்கு புரிகிறபடி விளக்கி சொல்ல திறமையற்று இருந்தான் ஆதிடன். அதனால் சத்தங்களற்ற சிரிப்பை மட்டும் தந்திருந்தான். உணவோடு கேள்விகளால் தொடர்ந்து துளைக்கிறாள். ஒருநாள் இவன் முந்திக்கொண்டு அவளிடம், இங்க என்ன என்ன விலங்கெல்லாம் இருக்கு என, மணா பலவற்றை கூறி, சிலவற்றை நினைவூட்டி கூறி கேள்விகள் ஏதும் இல்லாமல் கிளம்பிவிட்டாள்.

ஏழாம் விமானம் விழுந்த அன்று காலையில் மணா, தந்தையோடும், இன்னும் சிலரோடும் வந்து, ஆதிடனிடம் கேட்ட கேள்வி முற்றிலும் அவன் எதிர்பாராதது.

நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?

ஆதிடன் பலதரப்பட்ட தயக்கங்களோடிருந்த போது, மணா சிறு சப்தங்களால் (சத்தங்கள் அல்ல) ஆன சிரிப்பில் ஆதிடனின் தயக்கங்களை உடைக்கிறாள். ஆறெழு நாட்களுக்குப்பின் ஓர் மதிய உணவை விருந்தென மாற்றிட அனைவருக்கும் செய்தி பகிர்ந்திருந்தனர்.

மேல கீழ விளையாடி சத்தமிட்டபடி வந்ததால், முறைத்து அனுப்பட்ட சிறுவர்கள் இலையை எடுத்துக் கொண்டுபோய் உணவுக்காக அமர்ந்தனர். அம்மக்களின் வழக்கப்படி ஆதிடனும் மணாவும் மட்டும், அனைவருக்கும் உணவை பறிமாறிக் கொண்டு இருந்தனர்.

ஆறு நாட்களுக்கும் மேலாக விமானம் ஏதும் விழவில்லை என்பது பிள்ளைகளுக்கு வருத்தமாயும், பெரியவருக்கு சற்று நிம்மதியாயும் இருந்தது. ஆதிடனும் மணாவும் மற்றவர்களை போலவே வேலையை துவங்கினர். அவர்களின் வேலைமுறை ஆதிடனுக்கு முன்பே வியப்பிலாழ்த்தி இருந்தது. முதல்நாள் வயலில் வேலை எனில், அடுத்தநாள் சமைக்க வேண்டும், அடுத்தநாள் உணவை சுமந்து வயலில் சேர்க்கவேண்டும், அடுத்தநாள் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும், அடுத்தநாள் நீர் நிரப்பி வைக்க வேண்டும், அடுத்தநாள் சிறுகுழந்தைகளோடு இருக்க வேண்டும், அடுத்தநாள் விறகுக்கு… என அனைத்து வேலைகளும் அனைவருக்கும் வரும்படியான ஒரு சுழல்முறை.

பின்னொருமுறை பழம் பறித்து வருகிற வேலைக்காக வந்திருந்தபோது, விலங்குகள் உணவை தேர்ந்தெடுக்கும் முறை, அதற்கான காரணங்கள், அடையாளங்கள், அவைகளிடும் திட்டங்கள் பல உரையாடல்கள் அவனுக்கு வியப்பாகவே இருந்தது. முன்னமே எரிக்கட்டி, விமானம் குறித்து ஆதிடனுடன் பேசிய பெரியவர், வ்ராம்பீ ர்யாரிபெ மரக்காட்டு பகுதி குரங்குகளின் அறிவு குறித்தும், அவைகளின் செயல்பாடுகளின் தன்மை குறித்தும் மற்ற விலங்குகளோடோ இல்லை மனிதர்களோடோ பழகுகிற விதமென அவர் ஆதிடனுக்கு அக்குரங்குகளை பார்க்கும் ஆர்வத்தை தூண்டினார். நிலா பாதியாய் குறைய ஆரம்பிக்கும் போதெல்லாம், முதியவர் அந்த காட்டில் அதிகமாய் வளர்கிற, இரவில் ஒளியை உமிழும் பயோலுபாக்டீ மரத்தின் கிளைகளை ஒடித்துக் கொண்டு வந்து உயரமான இடங்களில் சொருகி வைப்பார். அவைதான் நிலா மீண்டும் பாதியாய் வளரும் வரை அப்பகுதிக்கு ஒளிதரும், ஈரம் வற்ற வற்ற அதன் ஒளியும் குறையும். எவ்வளவு முயன்றும் இங்கு அதுவளரவே இல்லை என்பதில் அவருக்கு இருந்த வருத்தத்தை ஆதிடனிடம் பலமுறை பகிர்ந்திருக்கிறார்.

ஒருமுறை மீன் பிடிக்கும் போது, அவனோடிருந்த ஒருவர், தண்ணீர் வற்றிய பின்னும் ஐந்தாறு வருடங்கள் மண்ணிலேயே உயிரோடிருக்கும் மீன் வகையை பற்றி விவரிக்கிறார். ஆதிடன் அதை ஏற்க மறுத்து சிரிக்கிறான். அவர்கள் அங்கிருந்து திரும்பும்போது சேறு இறுகி காய்ந்து போயிருந்த பகுதியை கடக்கையில், பெரியவர் ஒரு இடத்தை அடையாளமிட்டு ஆதிடனையும் இன்னுமிருவரையும் நோண்ட சொல்கிறார், அவரும் சேர்கிறார். இருவரில் ஒருவனின் கை துள்ளவோ, நீந்தவோ துடிக்கும் மீனோடு வெளியே வருகிறது. ஆதிடன் பரவசங்களடைகிறான்.

அந்த மண்மீனை மட்டும் தனியாக சமைக்க முடிவெடுத்து அதை ஓரிரு கசப்பு கொட்டைகளிட்ட தண்ணீரில் விட்டு நீரை சூடேற்றி, மீனை மட்டும் எடுத்து உருளும் பாறை ஒன்றின் அடியில் வைத்து பாறையை முன்பாக ஒருவரும், பின்பாக ஒருவரும் மாற்றி மாற்றி உருட்ட, அதன் முள்ளெல்லாம் தூளாகி உதிரியானது. அதில், கருத்த கார இலைகளை சேர்த்து அரைத்து, பின் சில மரப்பட்டைகள் சேர்த்து அரைத்து முடிக்கும் வரை பெரிதாய் ஒன்றும் தெரியவில்லை. இவைகளை செய்யத் துவங்கும் முன்னமே சுத்தப்படுத்தி வெயில்படுகிறபடி வைத்திருந்த வெள்ளையும் பழுப்பும் கலந்த கல் ஒன்றில் அதைப் பரப்பிய போது அது சூடேறி… அட.. அட.. பசியை கூட்டியது அதன் மனம். இன்னும் கொஞ்சம் சூடேறும்வரை பொறுத்திருக்க வேண்டிய போது, ஆதிடன் 416 நாட்களில் உணவிற்கான தவித்தலையும், அடைதலையும், அவர்களோடு பகிர்ந்தான்.

ஆதிடன் மணாவிடம், நிலவின் ஒளியில் இந்த இடத்தை மேலே வ்ராம்பீ ர்யாரிபெ மரக்காட்டு போற வழியில இருக்குற அந்த கூர்பாறைகிட்ட இருந்து பாக்கலாமானு கேட்க, அவளும் ஆர்வமாகிறாள். முன்பொருமுறை அப்படி பார்த்த அனுபவங்களை சொல்லி ஆதிடனின் ஆர்வங்களுக்கு சிறகிணைக்கிறாள்.

நிலா குறைய ஆரம்பிக்கும் முதல்நாளுக்கு முன்நாள் செல்லலாம் என்ற மணா-வின் முடிவின்படியே இருவரும் அரைத்த கிழங்கு கூழையும், கருத்த கார இலைகளையும் எடுத்துக்கொண்டு பாறையையும் இரவையும் நோக்கி நடந்தனர். பாறையை நெருங்கியிருந்த போது மணா, ஆதிடனிடம் வ்ராம்பீ ர்யாரிபெ காடுகளில் வாழும் குரங்கு வகையை காட்ட. தங்களின் உயரத்திற்கு நிகராய் இருந்த அதை பார்த்து, அது நிச்சயம் மனித குரங்குகள் போலல்ல, இவை முற்றிலும் அவனறியாத ஒன்றாய் இருந்தது. அது இவர்களை பார்க்கவில்லை. இவர்கள் அதை கடந்து மேலேறிக்கொண்டிருந்தார்கள். கூர்பாறைக்கருகில் ஒரு பெண்குரங்கு குட்டிஒன்றுக்கு பாலூட்டிக்கொண்டிருந்தது, இவர்களை கண்ட அது சட்டென திரும்பிக்கொண்டது. இவர்கள் அதற்குமேல் நகராமல் அங்கேயே நின்றனர். பாலூட்டி முடித்த அது அவர்களை பார்த்தபடியே குட்டியை தூக்கிக்கொண்டு இவர்களை கடந்தது. இவர்கள் பாறையில் அமர்ந்து கிழங்குக் கூழையும் கார இலைகளையும் உண்டபடியே மேலிருந்த நிலவையும் கீழிருந்து ஊரையும் ரசித்து கொண்டிருந்தனர்.

ஊரைப் பார்த்துக் கொண்டிருந்த மணா, நீரில் விழுந்த நிலவின் அசைவைப் போல ஊர் அசைவதைக் கண்டு குரங்குகளை பார்த்துக்கொண்டிருந்த ஆதிடனை அழைத்து விட்டு திரும்பிய போது, அங்கு ஒன்றுமே இல்லாமல் போனது. மணா கதறியபடி ஆதிடனை கட்டிக்கொண்டு அடிக்கிறாள். ஆதிடன் அமைதியாய் அவளை கட்டிக்கொண்டு நிற்க.. மணாவோ இன்னும் சத்தமாய் அழ.. இருவரையும் சுற்றி பதிமூன்றுக்கும் அதிகமாய் குரங்குகள் சற்றுமுன் சென்ற குரங்கு உட்பட. சில குரங்குகள் அருகில் வந்து அழுகிற மணாவின் தலையில் கைவைத்து தேற்றின. பயங்களை மீறி அந்த ஆறுதல் அவர்களுக்கு தேவைப்பட்டது. சற்றுமுன் பால்குடித்த அந்த குட்டி அவளருகிலேயே அமர்ந்து கொண்டது. மேலிருந்த நிலவும் மறைந்தது. ஊரற்ற முதல் காலை அவளை என்னமோ செய்தது. ஊரிருந்த இடத்திலுள்ள பள்ளத்தை பார்த்துக் கொண்டிருந்த ஆதிடனிடம் மணா, உனக்கு முன்னமே தெரியாதா ? நீ தான் எல்லோரையும் தள்ளிட்ட.. என சண்டையிட்டு அழ ஆரம்பிக்க, குட்டி அவளின் கண்களை துடைத்துவிட்டு அவள் முகத்தையும் அவன் முகத்தையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தது.

ஓரிரு நாட்களிலேயே குரங்குகள் இவர்களோடு உணவை பகிர்ந்துண்ணும் படி நெருங்கியிருந்தன. மணாவும் ஆதிடனின் மீதான கோபத்தை தொலைத்திருந்தாள். குரங்குகளின் அன்பாலும், இருவருக்குள்ளிருந்த காதலாலும் இவர்கள் சீராய் மீண்டனர். நாட்கள் பல ஆனாலும் கூட மணா எப்போதாவது ஊரிருந்த இடத்தை பார்த்து அழவோ, நிற்கவோ செய்தாள். அப்படியான ஒரு நாளில் அவளுக்கருகிலிருந்த மரத்தை பற்றியபடி அவளை சுற்றித்தாண்டியது அந்தக்குட்டி குரங்கு. அதில் அதிர்ந்த அவள் முன்நகர்ந்து கீழுள்ள பாறையில் விழுகிறாள். குட்டி சத்தமிட ஆதிடன் வந்து கீழ்பாறைக்கு இறங்குகிறான். ஆனால் மணாவின் ஒரு கை மட்டுமே பாறையை பற்றியிருந்தது. ஆதிடனின் கை அப்பாறையை அடைவதற்குள் அதுவும் தவறி, ஆதிடனைப் பார்த்தபடியே மணா பெரும்பள்ளத்தில் விழ, நான் பிறப்பேன்-னு சொல்லியபடி ஆதிடனின் கண்களில் இருந்து மறைகிறாள். ஆதிடன் அழுகிறான். குரங்குகள் வந்து கீழ்பாறையில் இருந்து அவனை மீட்கின்றன.

ஆதிடன் மணாவின் கடைசிப் பார்வைகளையும், நான் பிறப்பேன்-னு சொன்னதையும், நினைத்தபடியே வ்ராம்பீ ர்யாரிபெ காடுகளில் குரங்குகளோடு இருந்தான்.

க.வசந்த் பிரபு-இந்தியா

(Visited 829 times, 1 visits today)
 

One thought on “கடவுள் திருடிய கதை-சிறுகதை-க.வசந்த் பிரபு”

Comments are closed.