‘புருஷனை ஈமான் கொள்ளுதல் ’-Prose poem-லறீனா அப்துல் ஹக்

அறிமுகம்

அறிமுகம்

அவளுக்கு ஒரு முகம் இருந்தது
அது ஓர் இறந்தகாலக் கூற்றுவாக்கிய வகையறா

அவளின் முகப் பெறுமானம் – (Face value என்க)

*உடல் கட்டமைப்பு – அங்குலங்களில்

*அங்கங்களின் திரட்சி – பால்மா, வாகன டயர்,
ஆண்களின் பர்ஃபியூம் இன்னபிற விளம்பரங்களுக்காக

*தோல் நிறம் – ஸோப்கள், பவுடர்கள், கிரீம்களின் விற்பனை நிமித்தம்

*வயதும் வடிவும் – டிவி சீரியல் சான்ஸ் அல்லது திருமணச் சந்தைக்காக
பகுதியாகவும் மொத்தமாகவும் குத்தகைக்கு

உள்ளடக்கம்

அவளின் உருவம் அல்லது உணர்வுகளுக்கு
பண்டமாக, இன்பசாதனமாக, பிள்ளைபெறும் இயந்திரமாக என்றெல்லாம்
பிரயோகிக்கப்படுதலின் #அவமானம், #ரோஷம், #வலி, #ஏமாற்றம், #விரக்தி
முதலான Tags இணைப்பதற்கு
காலவரையறையற்ற தடை

மாறாப் புன்னகை, இடையறாத உழைப்பு
முறைப்பாடற்ற/ நிபந்தனையற்ற ஒத்துழைப்பு etc.,
உயிர்வாழ்வு ஒப்பந்தத்தின் அடிப்படை ஷரத்து

இலக்கிய முன்னாய்வு

எட்டாம் வகுப்பில் முட்டைகள் எடுத்தவன்

SEX என்பதற்கு மட்டும் எழுத்துக் கூட்டுபவன்

Campus போயும் மூளை வளராதவன்

ஊர் பேர் அடையாளங்களற்ற லும்பன்

Tie கட்டிய பெருமிதத்திலூறிய கொம்பன்

அன்விகுதி ஆண்பால் உயர்திணை ஒருமைகளின்
‘இன்ஸ்ட்டன்ட் பேரன்ட்டிங்’
-மொழிபெயர்ப்புக் கலைச்சொல்: உடனடிப் பெற்றோரிய(ம்)

அடாவடித்தனங்களைக் கமுக்கமாய், பக்திசிரத்தையோடு
பொறுத்தலும் பெண்ணாயிருத்தலும்

அப்புண்ணியவதிக் கதாபாத்திரத்துக்குள்
ஃபிக்ஸ் ஆகிப் பரிணமிக்கும்
அட்ஜஸ்ட்மன்ட் சூத்திர மனப்பாடங்கள், ஒப்புவித்தல்கள்

இப்படி விரியுமந்த திறந்தவெளிப் பெண்கள் சிறை

ஆய்வு அணுகுமுறை

நுண்ணாய்வு நோக்கிற்காய் ஒரேயொரு ‘செல்’ எடு

கெமராவை ஃபோகஸ் பண்ணு

ஆய்வுப் பரப்பு

Category அல்லது வகைமை: இலங்கைச் சோனகப் பெண்கள்

வயதெல்லை: 12 முதல் 60 வரை

பிரத்தியேகக் கலிமா: புருஷனை ஈமான் கொள்ளுதல்

முக்கியத்துவம்: கர்ப்பப்பையும் மார்புகளும் கொண்டிருத்தல்

தகைமை: வெண்மை அல்லது சிகப்புத்தோல்,
ஆங்கிலம் பேசத் தெரிந்திருத்தல்,

மெரிட் பாஸ்: குஞ்சிப் பெண் (18 வயதுக்கு உட்படல்)
ஏ எல் (+2) படிச்சிட்டு ஊட்டோடு இருத்தல்

நோர்மல் பாஸ்: வேலைக்குப் போகாத பட்டதாரிப்பெண் விரும்பத்தக்கது

முழுநேரப்பணி: *புருஷன்மாருக்கு 24 X 7 ‘சப்பாயம் செய்தல்’
– சவுகரியம் என்ற சொல்லைப் பிரதியீடு செய்யலாம்.

*புருஷன்மார் இஷ்டத்துக்கெல்லாம்
பிள்ளைகளாகப் பெற்று வளர்த்தல்

பகுதிநேரப் பணி: Bபயான் கேட்டு ‘மாஷா அல்லாஹ்!’ சொல்லுதல்

இஸ்லாமிய இயக்கத்துக்கு ஆள்/காசு சேர்த்தல்

Bபயான் நிகழ்ச்சிகளில் கோப்பி, தேநீர் ஊற்றுதல் -நார்ஸா பங்கிடுதல்
ஸஹன், கோப்பை கழுவுதல்

நிபந்தனை:

முஸ்லிம்தனத்தை முழுநேரமும் நிரூபித்தல்

– குறைந்த பட்சம் முக்காடு போடுதல்

– உச்சபட்சம் முகத்தை மூடுதல்

ஃபர்ழ் ஐன்:

இஸ்லாத்தின் பெயரால்
எதைச் சொன்னாலும் நம்புதல்

உதாரணம்: ‘மனைவியை அடிக்கலாமென குர்ஆன் சொல்கிறது.’

தடைசெய்யப்பட்ட அபாயகர அம்சங்கள்:

*பெண் பள்ளிக்குப் போதல் – பிச்சையெடுத்தல் தவிர்த்து…

*ஃபேஸ்புக் பாவனை

வித் லிமிட்டேஷன்: ஃபேக் ஐடி மட்டும் பாவிக்கலாம்,

கட்டாயம் பாஸ்வேர்ட் கணவனுக்குத் தெரியவேண்டும்

*வாசிப்பு, தேடல், ஆய்வு – சாகும் வரை தடை

*கேள்வி கேட்டல், தர்க்கபூர்வ பதில்கள், பிரக்ஞை – அவ்வப்போது தடை

*பெண்ணியம், சுயம், சுயசிந்தனை – எப்போதும் ஹறாம்

அனுமதிக்கப்பட்ட விஷயங்கள் – ஹலால்:

Calling to Allah in FB

கேள்வியேபடக்கூடாத விஷயங்கள்: காதல், முத்தம், உடலுறவில் உச்ச இன்பம்

உயிர் வாழ்வதன் ஒரே நோக்கம்:

திருப்திப்படுத்துதல்
– புருஷனை
– புகுந்த வீட்டை
– சமூகத்தை

திக்ருன் வாஜிபாத்: ‘அவரு பொழ ஷெய்யவே மாட்டார்’

ஆய்வு முடிவு

இவை அனைத்தையும் ஒப்புக்கொண்டால்
‘ஸாலிஹான மனைவி’ என்றொரு அதியுயர் பட்டம்

எல்லாம் செய்தும் சோற்றில் கொஞ்சம் உப்புக் குறைந்தால்

குறைந்தபட்சம் ஏச்சும் திட்டும்

இடைத்தரம் அடியும் உதையும்

நிரந்தரம் தலாக் சொல்லி விரட்டுதல்

– இவற்றை மனமார்ந்து ஒப்புக்கொள்வது அமலுன் ஸாலிஹாத்

“இந்தக் கேட்டகரிக்குள் அடங்கும்
முஸ்லிம் பெண்ணாக நான் இருக்கவே மாட்டேன்”

********
அரபுக் கலைச்சொற்கள்:
ஈமான் கொள்ளுதல் – நம்பிக்கை கொள்ளுதல்
கலிமா -இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைப் பிரகடனம்
சோனகப் பெண் – முஸ்லிம் பெண்
Bபயான் – மார்க்கப் பிரசங்கம்
மாஷா அல்லாஹ் – அழகான, சிறந்த ஒன்றைக் கண்டதும் செய்யும் இறைதுதி
நார்ஸா – இனிப்பு
ஸஹன் – பலர் சேர்ந்துண்ணும் உணவுத்தட்டு
ஃபர்ழ் ஐன் – கட்டாய மார்க்கக் கடமை
ஹறாம் – முற்றிலும் தடைசெய்யப்பட்டவை
திக்ருன் வாஜிபாத் – கட்டாயமாக நினைவுகூர வேண்டியது
ஸாலிஹான – நல்ல/ சிறந்த/ ஒழுக்கமான
அமலுன் ஸாலிஹாத் – நற்செயல்கள்/ சிறந்த செயல்கள்

லறீனா ஏ. ஹக்-இலங்கை

(Visited 397 times, 1 visits today)