நேர்காணல்-நயீமா சித்தீக்-லறீனா அப்துல் ஹக்

‘போட்டி மிகுந்த இன்றைய கோபரேட் உலகில் வெறும் நுகர்வுவாதத்திற்கே முன்னுரிமை அளிப்பவர்களாக மக்கள் படிப்படியாக மாறி விட்டார்கள்’- நயீமா சித்தீக்

உங்கள் எழுத்துலகப்  பின்னணி குறித்துக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

 நான் பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தலை எனும் ஊரில் பிறந்து வளர்ந்தேன். அதனை சீதள நகரம் என்றே நான் அழைப்பது வழக்கம். எனக்கு ஓர் அழகான குடும்பப் பின்னணி வாய்த்திருந்தது. நான் பிறந்த ஆண்டு 1949. ஒரு மூத்த சகோதரர், நான்கு தம்பிமார், ஒரு தங்கை என்று ஒரு பெரிய குடும்பம் எங்களது. என்னுடைய தாய்வழிப் பாட்டியிடம் இருந்து பரம்பரையாக வந்த ஒருகொடையாகவே இந்த எழுத்தார்வத்தை நான் கருதுகிறேன். என் பாட்டியின் பெயர் ஆஷா மூஸா கான். அவரது மூதாதையர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டிஷ்காரர்களால் அழைத்து வரப்பட்டவர்கள். கண்ணைக் கவரும் அற்புதமான அழகியாய் இருந்த அவர் நிறைய வாசிப்பவராக இருந்தார். ஆனாலும் அவருக்கு எழுதத் தெரியாது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு எழுதப் பழக்க மாட்டார்களாம். அப்படிப் பழக்கினால் யாருக்கேனும் கடிதம் எழுதி விடுவார்கள் என்ற பயமாம். அந்தக் காலத்திலே குர்ஆன் கிதாபுகள் (நூல்கள்), இஸ்லாமிய இலக்கிய நூல்கள் என்பவற்றை ஆட்கள் வீடுவீடாகக் கொண்டு வந்து விற்பார்கள்.யாவற்றை என் பாட்டி வாங்கி வைத்து மிகுந்த பயபக்தியோடு கவனமாகப் பாதுகாத்தார்கள். ரஸூல் மாலை, முஹிதின் மாலை, சீறாப்புராணம், கன்சுல் அன்பியா என்று ஏராளமான புத்தகங்கள் அவரிடம் இருந்தன. அவர் அவற்றை மிகுந்த பயபக்தியோடு வாசிப்பவராக இருந்தார்.  நாங்கள் பள்ளிக்குப் போய் படிக்கத் தொடங்கியபின் எங்களிடமும் தந்து வாசிக்கச் சொல்லிக் கேட்பார். இப்படியாக எங்களிடமும் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது.

எங்கள் தாயாரின் பெயர் தாஜ் பீபி. மிகுந்த திறமைசாலி. பல கலைகளையும் கற்றிருந்தார். வீட்டுக்குள் இருந்துகொண்டே எப்படி அவ்வளவு திறமைகளை அவர் பெற்றார் என்பது எப்போதும் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும்.   தந்தை பஷீர் மரிக்கார். இருவரும்  பிரிட்டிஷ் காலத்தில் படித்தவர்கள். என் தாயார் ஆங்கிலமும் தமிழும் கற்றிருந்தார்கள். சிங்களம் தெரியாது. அவரும் ஒரு சிறந்த வாசிப்பாளர். வாரத்தில் வியாழக்கிழமை நாளானால் எங்கள் வீட்டில் ஏக களேபரமாய் இருகும். காரணம், அன்றுதான் குமுதம், கல்கி, ஆனந்தவிகடன் என்று எல்லா இதழ்களும் வீட்டுக்கு வரும் நாள். அவற்றை வாசிக்க நான் முந்தி நீ முந்தி என்று கடும் போட்டி இருக்கும். கல்கி, அகிலன் போன்றவர்களின் தொடர் கதைகள் அவற்றில் வெளிவந்திருக்கும். ஆக, வியாழக்கிழமை ஆனால், உம்மும்மா தன் வேலைகளை எல்லாம் நேரகாலத்தோடு முடித்துவிட்டு, அவற்றை வாசிக்கச் சொல்லிக் கேட்கவென்று வீட்டுக்கு வந்துவிடுவார்கள். அப்படியான ஒரு வாசிப்புச் சூழலில் வளரும் பாக்கியத்தை அல்லாஹ் எனக்களித்திருந்தான்.

உங்கள் பள்ளிக் கல்வி குறித்து

 நான் ஹப்புத்தலைத் தமிழ் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி கற்றேன். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்தியதால் காத்தான்குடி மத்திய கல்லூரியில் சேர்க்கப்பட்டு அங்கு கொஞ்ச காலம் கல்வி கற்றேன். அங்கு விடுதி வசதிகள் இல்லாத காரணத்தால், பஸரை மத்திய மகா வித்தியாலயத்துக்கு மாறினேன்.  தாரமும் குருவும் தலைவிதிப்பயன் என்று சொல்வார்கள் அல்லவா? ஆரம்பம் முதலே எனக்கு சிறந்த ஆசிரியர்கள் வாய்த்திருந்தார்கள். அவர்களில் அனேகர் யாழ்ப்பாணத்து ஆசிரியர்கள். அவர்களே எனக்கு புலமைப்பரிசில் பரீட்சை செய்ய வழிகாட்டி உதவினார்கள். அப்படியான ஆசிரியர்கள் வாய்ப்பதே ஒரு பெரிய பாக்கியம். குறிப்பாக, பஸரையில் கல்வி கற்றபோது எனக்கு ஓர் அற்புதமான குரு வாய்த்தார். அவர் பெயர் ஐ. சாராங்கபாணி. அவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். அவரைத் தமிழ்க் கடல் என்றுதான் சொல்ல வேண்டும். நான் பாடசாலை விடுதியில் இருந்த காலத்தில் நிறையப் புத்தகங்கள் கொண்டுவந்து தருவார். நிறைய ஊக்குவிப்பார். போட்டிகள் வைப்பார். தன் சொந்தக் காசில் புத்தகங்கள் வாங்கி எமக்குப் பரிசாகத் தருவார். போட்டிகள் நடக்கும் போது அவரே எங்களை அழைத்துச் செல்வார். இப்படி தன்னலங்கருதாத நல்லாசிரியர்கள் எமக்கு வாய்த்தார்கள்.

பஸரையில் நான் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்தில் தான் தினகரன் பாலர் மலருக்கு ‘கல்வி’ எனும் தலைப்பில் நான் முதன் முதலாக ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அப்போது எனக்கு 11 வயதிருக்கும். அதன் பின் பாலர் மலரில் என்னையும் ஓர் அங்கத்தவராகச் சேர்த்தார்கள்.

அக்காலத்தில் இரட்டைத் தரமேற்றல் முறைமை (டபுள் ப்ரமோஷன்) என்று ஒரு முறை இருந்தது. அப்படி சித்தி அடைந்ததில் பத்தாம் வகுப்புப் பரீட்சை எழுதும் போது எனக்குப் 13 வயதுதான். அக்காலத்தில் பஸரை மத்திய மகா வித்தியாலயத்தில் நானும் இன்னொரு கிறிஸ்தவ சகோதரியும்தான் தமிழ்  மொழிமூலம் கற்றோம். ஏனையவர்கள்  சிங்கள மாணவியர்கள். அப்போது ஊவா மாகாணத்தின் கல்வி நிலை அப்படி சிரமசாத்தியமானதாகத்தான் இருந்தது. எனவே, எமது பாடசாலையில் காலை வேளையில் சிங்கள மொழி மூலமும் 12 மணிக்குப் பிறகு தமிழ் மொழி மூலமும் பாடங்கள் நடக்கும். நான் அங்கு 10 ஆம் வகுப்பு வரை கல்வி கற்றேன். அங்கு தமிழ் மொழிமூல உயர் வகுப்புகள் இருக்கவில்லை. இப்போது இருப்பது போல் பிரத்தியேக வகுப்புகள் இருக்கவுமில்லை. எனவே, சுய கற்றல் மூலமே உயர் கல்வியைத் தொடர்ந்து பரீட்சை எழுதினேன். சாராங்கபாணி ஆசிரியர் மிக ஆரம்பத்திலேயே யாப்பு முறைப்படி வெண்பா, விருத்தம் என்பவற்றை எழுதப் பழக்கி இருந்தார் என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். அந்த உறுதியான அடித்தளம் என் மொழி விருத்தியில் பெரும் பங்காற்றியது என்பேன்.

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கத்தில் பணியாற்றிய முன்னோடி முஸ்லிம் பெண்மணியாக நீங்கள் இருந்துள்ளீர்கள். அந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வீர்களா?

 பஸரையில் கல்வி கற்ற போது காலையில் எமக்கு வகுப்புகள் இல்லையாதலால், விடுதியைச் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டத்தில் உலாவப் போவேன்.  அந்தத் தொழிலாளர்களின் நிலை, அவர்கள் படும் கஷ்டங்கள் இவையெல்லாம் என் மனதை மிகவும் பாதித்தன. அதனால்தான் நான் பாடசாலைக் கல்வியை முடித்த பின் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினேன். அப்போது எனக்குப் பதினாறு வயது. அகில இலங்கை மாதர் பிரிவுத் தலைவியாய்ப் பணிபுரிந்தேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே.

ஒரு 16 வயது இளம் முஸ்லிம் பெண்ணாய் 1960களின் பிற்கூற்றில் ஒரு தொழிற்சங்கவாதியாய், மாதர் அணித் தலைவியாய் உங்கள் அரசியல் பிரவேசம் தொடங்குகிறது. அப்போது வேறு பெண்களும் உங்களோடு இணைந்திருந்தார்களா? இது தொடர்பில் வீட்டிலும் சமூகத்திலும் அக்காலத்தே நீங்கள் எத்தகைய எதிர்வினையைப் பெற்றீர்கள் என்பதைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

 அப்போது தொழிற்சங்கத்தில் வேறு பெண்கள் உடன் பணிபுரிந்தார்கள். அவர்களுள் சிவபாக்கியம் குமாரவேல் அவர்கள் முக்கியமானவர். அவர் ‘மங்கை’ என்றொரு சஞ்சிகை நடாத்தினார். நானும் அதில் அவரோடு இணைந்திருந்தேன். என்றாலும், முஸ்லிம் பெண்கள் வேறு யாரும் இருக்கவில்லை. எங்கள் வீட்டில் அதற்கு எந்தவித எதிர்ப்பும் எழவேயில்லை. நான் எந்த ஒரு மீட்டிங்கில் கலந்து கொள்வதாக இருந்தாலும் எங்கள் உம்மும்மா என்னோடு எப்போதும் உடன்வருவார். அல்லது யாரேனும் ஒரு சகோதரர் வருவார். அவ்வாறாக, இலங்கை முழுவதிலும் உள்ள அனேகமான தேயிலைத் தோட்டங்களுக்கு நான் போயிருக்கின்றேன். அக்காலத்தே தோட்டத் தொழிலாளர்களுக்கான சங்கத்தின் பெருந்தலைவராக ஏ. எம்.ஏ. அஸீஸ் அவர்களே இருந்தார்கள். எனவே, என்னுடைய இந்தத் தொழிற்சங்கப் பிரவேசம் குறித்து முஸ்லிம் சமூகத்தில் எந்தவித எதிர்ப்போ விமர்சனமோ எழவில்லை. இன்னும் சொல்லப் போனால் மிகவும் வரவேற்றார்கள். இக்கால கட்டத்துக்குள் கொழும்பு மாநகர சபையின் உப மேயராகப் பணியாற்றிய திருமதி ஆயிஷா றவூஃப் அவர்களின் அரசியல் பிரவேசமும் நிகழ்ந்துதான் இருந்தது என்பதையும் நாம் கவனம் கொள்ள வேண்டும். ஒருவகையில், அவரை என் மனம் ஒரு முன்மாதிரியாக வரித்துக் கொண்டிருக்கலாம் என்றும் நினைக்கிறேன். தவிர அவர் எம் தந்தை வழியில் எங்கள் நெருங்கிய சொந்தக்காரரும்கூட.  எனவே, எங்கள் குடும்பத்திலும் என் அரசியல் பிரவேசம் சாதகமான மனநிலையிலேயே நோக்கப்பட்டது. 

அக்காலத்தே தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பெண்கள் மிகுந்த கஷ்டங்களை எதிர்கொண்டார்கள். குறிப்பாக, போதிய சுகாதார மற்றும் வைத்திய சேவைகளைப் பெறக்கூடிய நிலை இருக்கவில்லை. மாதவிடாய் முதலான காலங்களில் அவர்கள் அனுபவித்த துயரங்கள் சொல்லி மாளாது. அவர்களுக்கு விடுமுறை பெறுவதில் சிக்கல்கள் இருந்தன. வீட்டில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், குடித்துவிட்டு வரும் கணவர்மாரால் எதிர்கொண்ட வன்முறைகள், பொருளாதாரப் பிரச்சினைகள், சமமற்ற சம்பளம், அந்தச் சம்பளப் பணம்கூட பெண்களின் கையில் போய்ச் சேராத அவலநிலை என்று அப்பெண்கள் அனுபவித்த இன்னல்கள் பலதரப்பட்டவை. பிரசவ காலத்தில் கொடுக்கப்படும் சிறுதொகைக் கொடுப்பனவைக்கூட குடிகாரக் கணவர்கள் அபகரித்துக் கொள்ளும் துயர நிகழ்வுகள் பலவற்றைக் காண நேர்ந்துள்ளது. அப்பெண்கள் மிகவும் கடுமையாகப் பாடுபட்டு உழைத்தும் அந்த உழைப்பின் பயனை அனுபவிக்கக்கூட வாய்க்காதவர்களாகவே வாழ்ந்தனர்.  அப்பெண்களின் பிரச்சினைகளைச் செவிமடுத்து, அவற்றைத் தலைவர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்து, தொழிலாளர் கோர்ட்டுக்குச் செல்ல வேண்டி ஏற்படுகையில் உடன் அழைத்துச் சென்று உதவுதல், அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கி வழிநடத்துதல் முதலான பணிகளை நான் செய்துவந்தேன்.  சுமார் 4-5 வருட காலம் அப்படிப் பணி புரிந்த பின்னர் அதில் இருந்து விலக நேர்ந்தது. அப்படி விலகியதில் அரசியல் காரணமும் இல்லாமல் இல்லை. அப்போது வந்த தேர்தலில் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் அப்போதைய சுதந்திரக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்று எடுத்த தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சியின் தீவிர ஆதரவாளரான என் தந்தைக்குப் பிடிக்கவில்லை. எனவே, என்னை விலகுமாறு கூறினார். இதற்கிடையில் எனக்கு ஆசிரிய நியமனம் கிடைத்ததால் நான் கட்டாயம் விலக வேண்டி ஏற்பட்டது.

எழுத்துலக அனுபவங்கள் எத்தகையவை?

என்னுடைய முதலாவது சிறுகதையைப் பத்திரிகைக்காக அனுப்பியவர்  மாத்தளை ஏ. பி. வி. கோமஸ் அவர்கள். அவரது அறிமுகம்  ஏற்பட்டதே ஒரு சுவாரஷ்யமான கதை. வீரகேசரியில் அவர் ஒருமுறை மலைநாட்டுக்கு எழுத்தும் பேச்சும் தேவையில்லை; செயல்தான் வேண்டும் என்று எழுதி இருந்தார். அப்போது என் வயது வெறுமனே 17 தான். எனக்கு அவர் யார் எவர் , எத்தகைய தகைமையாளர் என்பதெல்லாம் ஒன்றும் தெரியாது. அவரது கருத்தினை மறுத்து, ‘‘ மலைநாட்டுக்கு எழுத்தும் பேச்சும் கட்டாயம் தேவை; அதன் மூலம் தான்  சீர்திருத்தம் கொண்டுவர முடியும்’’ என்று நான் பதிலுக்கு எழுதினேன்,  அதற்கு பிறகு அவரும் பதில் எழுதினார். இப்படியாக எங்கள் விவாதம் வீரகேசரி ஊடாகக் கொஞ்ச காலம் தொடர்ந்தது. பின்னர் தான் அவர் எப்பேர்ப்பட்ட ஆளுமை என்பதை நான் புரிந்து கொண்டேன். அப்படித்தான் எனக்கு அவரது அறிமுகம் வாய்த்தது. பிற்காலத்தில் என் சிறுகதைத் தொகுப்புக்குத் தன் மரணத் தறுவாயில் ஒரு சிறந்த முன்னுரைகூட எழுதித் தந்த பெருந்தன்மையாளர் அவர்.

எனது முதலாவது சிறுகதையின் பெயர் எனக்கு ஞாபகம் இல்லை. நான் 1974 ஆம் ஆண்டு திருமணம் முடித்து கெலிஒயாவுக்கு வந்துவிட்டேன். அதன் பின் துரதிருஷ்டவசமாக எங்கள் தாய்வீட்டில் நான் பாதுகாத்து வைத்திருந்த, நான் எழுதிய அனேகப் படைப்புகள் தொலைந்துபோய் விட்டன. சிங்கள மீடியம் படித்த என் தம்பிமாருக்கோ தமிழ் தெரியாது. அவர்கள் வீட்டில் இருந்த புத்தகங்கள், பத்திரிகைக் கட்டுகள் அனைத்தையும் பேப்பர் வியாபாரிக்கு விற்று விட்டார்கள். அதில் என் எழுத்தாக்க ஆவணங்கள்  மட்டுமல்ல நானும் எங்கள் தாயாரும் அவரின் தாயாரும் சேர்த்து வைத்திருந்த ஏராளமான புத்தகங்களும் தொலைந்து விட்டன. என் தாயார் கல்கி, ஆனந்த விகடன் போன்ற இதழ்களில் வரும் தொடர்களையெல்லாம் படங்களுடன் தனித் தனித் தொகுப்பாகக் கட்டி வைத்திருந்தார்கள்.  அது ஒரு மிகப்பெரும் இழப்புத்தான் என்பதில் எனக்கு ஆழ்ந்த மனவருத்தம் இப்போதும் உண்டு.

பிரபல வைத்தியர் ரயீஸ் முஸ்தஃபா அவர்களின் தந்தை அக்காலத்தில் எங்களூரான பசறைக்கு அருகில் உள்ள ஊர்ப் பாடசாலையில் அதிபராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் வானொலியில் பாடக்கூடியவரும்கூட. எங்கள் தாயும் தந்தையும் விருந்தினரை, அவர்கள் முன்பின் அறிமுகம் அற்றவர்களாக இருந்த போதிலும் உபசரித்து விருந்தோம்பல் செய்வதில் மிகுந்த கரிசனை உள்ளவர்கள். எங்கள் வீட்டருகில் புகையிரத நிலையம் இருந்தது. அங்கு ரயிலுக்காக நீண்ட நேரம் எவரேனும் காத்திருந்தால்கூட வீட்டுக்கு அழைத்து வந்து உணவளித்து உபசரிக்கும் வழக்கம் அவர்களுக்கு இருந்தது. முஸ்தஃபா மாஸ்டரோடு எங்கள் பெற்றோருக்கு மிக நல்லதொரு நட்புறவு இருந்தது. இன்றுவரை எங்கள் உம்மா பின்னிக் கொடுத்த ஜேர்ஸியை அவர் பத்திரமாக ஒரு நினைவுச் சின்னம் போல் பாதுகாத்து வைத்திருக்கிறார். இப்போது அவர் எங்கள் உறவினர் ஆகிவிட்டாரும்கூட.

அப்போது எனக்கு 8 அல்லது 9 வயதிருக்கும். ஒருநாள் அவர் என்னிடம், ‘‘நீங்கள் இலங்கை வானொலிக்கு ஒரு பேச்சு எழுதி அனுப்புங்களேன்’’ என்றார். அவர் அவ்விதம் அன்போடு சொன்னதால், நானும் ‘’ஃபாத்திமா நாயகியின் அடிச்சுவட்டில்’’ எனும் தலைப்பில் சுயமாக ஓர் உரைப் பிரதியை எழுதி அனுப்பினேன். அதற்கு யாருடைய சிபாரிசையும் கோரவும் இல்லை.  அனுப்பி ஒரு வாரத்தில் இலங்கை வானொலி நிலையத்தில் இருந்து ஒலிப்பதிவுக்கு வருமாறு எனக்கொரு கடிதம் வந்தது. அதற்கு முன் வானொலி நிலையத்தைக் கண்டே இராத என்னை அங்கு அழைத்துச் சென்றவர் என் உம்மும்மா தான். அது முதல் என் வானொலியூடான இலக்கியப் பணி தொடர்ந்தது.

அதன் பிறகு வீரகேசரிக்கு ‘’வாழ்க்கைப் பயணம்’’ எனும் என் முதலாவது நாவலை எழுதி அனுப்பினேன். அவர்களும் அதனை மனமுவந்து பிரசுரித்தார்கள். என் பிள்ளைகளுக்குக் காட்டி மகிழ்வதற்காவது அதன் ஒரு பிரதிகூட என் கைவசம் தற்போது இல்லை என்பதில் எனக்குச் சற்று மனவருத்தம் தான். திரு. கோமஸ் ஐயா அவர்களின் சிபாரிசுடன் என் முதல் சிறுகதை பிரசுரமானதை அடுத்து, சிந்தாமணி, தினபதி, தினகரன் போன்ற பத்திரிகைகளிலும், ஏனைய சில இதழ்களிலும் என் சிறுகதைகள் பல பிரசுரமாயின. எங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரத்தை எவ்வித பாரபட்சங்களுக்கும் அப்பால் அன்று பெறக்கூடியதாய் இருந்தது என்பது மிக முக்கியமான ஒரு விடயம்.

என்னுடைய ஒரு நாவல் தான் நூலாக வெளிவந்தது. அதன் பெயர் ‘வாழ்க்கைப் பயணம்’. 1970களில் நான் எழுதிய இன்னொரு நாவல், ‘காலவெள்ளம்’. சிவபாக்கியம் குமாரவேல் அவர்களைப் பிரதான ஆசிரியராகக் கொண்டு கண்டியில் இருந்து வெளிவந்த ‘மங்கை’ இதழில் அது தொடராகப் பிரசுரமானாலும் நூலுருப் பெறவில்லை. பின்னர் ஹட்டனில் இருந்து ‘தீப்பொறி’ எனும் இதழ் வெளிவந்தது. அதில் பெண்கள் பகுதிக்கு நான் பொறுப்பாக இருந்தேன்.

மேலும், நான் நிறையக் கவியரங்குகளில் பங்கு பற்றி இருக்கிறேன். குறிப்பாக, வானொலிக் கவியரங்குகள்.  என் கவிதைகள் தனித் தொகுதியாக வெளிவரவில்லை.

என்னுடைய முதலாவது சிறுகதைத் தொகுதியான ‘’வாழ்க்கைச் சுவடுகள்’’ கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தினால் வெளியிடப்பட்டது. அதன் பின் ‘வாழ்க்கை வண்ணங்கள்’ தொகுதியை மர்ஹூம் புன்யாமீனமவர்களின் உடதலவின்னை சிந்தனை வட்டத்தின் மூலம் வெளியிட்டேன். பின்னர் தமிழகத்தின் மணிமேகலைப் பிரசுரத்தில் என்னுடைய மற்றொரு சிறுகதைத் தொகுதி வெளிவந்தது. அதன் பெயர், ‘வாழ்க்கை வளைவுகள்’’. என்னுடைய ‘’வாழ்க்கைச் சுவடுகள்’’ சிறுகதைத் தொகுதி சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டு ‘கொடகே’ நிறுவனத்தினால் பிரசுரிக்கப்பட்டது.

நான் என்னுடைய கதைகளில் மக்களின் அன்றாட வாழ்க்கையையே கருப்பொருளாகக் கொண்டு எழுதுகின்றேன். கற்பனை கலந்து எழுதினாலும், மக்களின் அன்றாட இயல்பு வாழ்வின் அம்சங்கள், பிரச்சினைகள், சவால்கள், போராட்டங்கள் என்பனவே அவற்றின் அடிநாதமாகக் காணப்படுகின்றன. அதனால்தான் என் நாவலிலும் சிறுகதைத் தொகுதிகளிலும் ‘வாழ்க்கை’ என்ற சொல்லை இணைத்துத் தலைப்பு இட்டு வந்துள்ளேன்.

பின்னர் நான் ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில், ‘இஸ்லாமிய வரலாறு: 1000 வினாக்களும் விடைகளும்’ என்ற சிறு நூலை, உயர்தரத்தில் இஸ்லாமிய நாகரிகத்தைப் பாடமாகப் பயிலும் மாணாக்கர் நலன் கருதி வெளியிட்டேன். அவ்வாறே, பத்தாம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் இருந்த சீறாப்புராணம், நபியவதாரப் படலத்துக்கான ஒரு தெளிவுரையை எழுதி, ‘’மாநிலம் தனக்கோர் மணிவிளக்கு’ எனும் தலைப்பில் சிறு நூலாக வெளியிட்டேன்.

ஓர் ஆசிரியையாக உங்கள் பயணம் எப்போது ஆரம்பித்து எப்படித் தொடர்ந்தது?

 1968 ஆம் நவம்பர் முதலாம் திகதி ஆண்டு தியத்தலாவ கஹகொல்ல முஸ்லிம் வித்தியாலயத்தில் எனக்கு ஆசிரிய நியமனம் கிடைக்கப்பெற்றது. அதுவும் ஒரு பின்னேரப் பாடசாலைதான். காலையில் சிங்களப் பாடசாலையாகவும் மதியம் தமிழ்ப் பாடசாலையாகவும் அது இயங்கியது. அதே ஆண்டு டிசம்பர் மாதம் ஆசிரிய கலாசாலை நுழைவுப் பரீட்சை  எழுதினேன். 1969 பெப்ரவரியில் அலுத்கம ஆசிரிய கலாசாலைக்குச் சென்றேன். அதே காலகட்டத்தில் என் உயர்தரப் பரீட்சை முடிவுகளும் வெளியாகி இருந்தன. எனக்கு ஒரு தொழில் செய்ய வேண்டும் எனும் ஆர்வம் அதிகமாக இருந்தது. மூத்த சகோதரருக்கு முன்பு நான் தொழில் செய்வதை மிகவும் பெருமிதத்துக்கு உரியதாய்க் கருதினேன்.

இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். நாங்கள் படிக்கும் காலத்தில் முஸ்லிம்கள் சிங்கள மொழிமூலம் கல்வியைத் தொடர்வது நல்லது என்ற எண்ணம் பரவலடைந்திருந்தது. அப்போது எங்கள் தந்தை தமிழ் மொழிமூலம் படித்துக் கொண்டிருந்த என் சகோதரர்களைச் சிங்கள மொழிமூலப் பாடசாலையில் சேர்த்துவிட்டார். ஐந்தாம் அல்லது ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த அவர்கள் மறுபடியும் முதலில் இருந்து சிங்கள மீடியத்தில் படிக்க நேர்ந்தது. என்னையும் அவ்விதம் சேர்க்க முனைந்த போது, திரு. பொன்னுத்துரை, திரு. இளவேந்திரன் போன்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் எங்கள் தந்தையிடம் வாதாடிப் போராடி என்னைத் தமிழ் மொழி மூலமாகவே படிக்க வைப்பதில் ஒரேபிடியாக நின்று வெற்றி பெற்றனர். தன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்த பொன்னுத்துரை ஆசிரியர் என் வாப்பாவுடன் எப்படி எனக்காகச் சண்டை போட்டார் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது, அவர்களின் தூரநோக்கான அச்செயற்பாடே இன்று என் இந்த உயர்நிலைக்குக் காரணம் என்று நன்றியோடு நினைவுகூர்கின்றேன். இன, மத பேதங்களுக்கு அப்பால் அவர்கள் அனைவருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்.

நான் ஓர் ஆசிரியராக 19 வருடங்கள் பணியாற்றி இருக்கின்றேன். பிறகு என் சுயவிருப்பத்தின் பேரில் விருப்ப ஓய்வு பெற்றேன். என்றாலும், வீட்டில் இருந்தவாறு இன்றுவரை மாணவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுத்தபடிதான் இருக்கின்றேன். சுமார் 3 தலைமுறை மாணவர்களைக் கண்டுள்ளேன். மாணவர்களிடையே கால மாற்றத்துக்கு ஏற்ப நான் நிறைய மாற்றங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது. நிறைய வித்தியாசமான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. பழைய மாணவர்களிடம் நிறைந்த பண்புகள் இருந்தன. மிகச் சிறந்த கெட்டிக்காரர்கள் என்று இல்லாவிட்டாலும்கூட அவர்களிடம் மனிதத்தன்மையும் சமூக நோக்கும் ஒப்பீட்டளவில் அதிகம் இருந்தன என்று சொல்லலாம். இன்றைய காலத்துப் பிள்ளைகள் ஏராளமான திறன்களோடு மிகுந்த திறமைசாலிகளாக இருந்த போதிலும் பெரும்பாலான மாணவர்களிடம் அத்தகைய மனிதநேயத்தையோ சமூக நோக்கையோ காணமுடியாதிருப்பது என் அவதானமாகும். இது மிகவும் கவலைக்குரியது. போட்டி, பொறாமை, சுயநலம், நேர்மையீனம் போன்ற குணங்கள் மிகுதியாகப் பரவி உள்ளதையே இன்று அதிகமும் காண நேர்கிறது. தான் முன்னேற எந்தக் குறுக்கு வழியையும் கையாளலாம், அதில் சரிபிழை பார்க்க அவசியமில்லை என்ற மனோநிலை வளர்ச்சி அடைந்துள்ளதாகவே காண்கிறேன். சில மாணவர்கள் என்னிடமே கேட்கவும் செய்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஓர் எழுத்தாளராக, சமூக ஆர்வலராக இந்தப் பண்பு வீழ்ச்சிக்கான காரணங்கள் என நீங்கள் அடையாளம் காண்பவற்றைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

குடும்பப் பின்னணியே இதன் முதலாவது காரணம் என்று கருதுகின்றேன். மேற்சொன்ன இழிபண்புகள் கெட்டித்தனங்களாகச் சிறுவயது முதலே குடும்பத்தினரால் ஊட்டி வளர்க்கப் படுகின்றது. ‘நீ மட்டும் நன்றாக வரவேண்டும்; நீ போகும் பிரத்தியேக வகுப்புப் பற்றி அடுத்தவர்களுக்குச் சொல்லாதே; உனக்கு வாங்கித்தரும் மேலதிகப் பயிற்சி நூல்களை யார் கண்ணிலும் காட்டாமல் நீ மட்டும் படி’ என்ற ரீதியில் மிகவும் சுயநலம் உடையவர்களாய், குறுகிய நோக்குடையவர்களாகச் சிறுவயது முதலே பயிற்றுவிக்கப்பட்டால் அவர்களிடம் நற்பண்பை எவ்விதம் எதிர்பார்ப்பது? இத்தகைய ஓர் இழிவான பண்புசார் நடத்தையை வளர்ப்பதில் 5 ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சை ஒரு முக்கிய தூண்டியாக அமைந்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.

இன்னொரு வகையில் சொல்வதானால், போட்டி மிகுந்த இன்றைய கோபரேட் உலகில் வெறும் நுகர்வுவாதத்திற்கே முன்னுரிமை அளிப்பவர்களாக மக்கள் படிப்படியாக மாறி அதில் மூழ்கிப் போய்விட்ட நிலைமையே இதன் அடிப்படைக் காரணம்.

இவ்விதம் பிள்ளைகளைப் பிழையாக வழிநடத்துவதில் தந்தையரை விட தாய்மார்கள் முன்னணியில் இருப்பது மிகவும் வருந்தத் தக்கது.

உங்கள் கூற்றுப்படி இன்றைய தாய்மார்கள் தம் பிள்ளைகளை அத்தகைய பிழையான வழிநடத்தலுக்கு என்னென்ன காரணங்கள் எனக் கருதுகின்றீர்கள்?

அன்றைய காலப் பெண்களை விட இன்றைய காலப் பெண்கள் மத்தியில், குறிப்பாகத் தாய்மாரிடையே ஆழ்ந்த வாசிப்புப் பழக்கம் அறவே அருகிப் போய்விட்டது. அன்றைய பெண்கள் வீட்டில் அடைபட்டுக் கிடந்தாலும், அக்கம் பக்கம் நாலுசனத்தோடு நன்கு புழங்கி, நாட்டு நடப்புகளைக் கலந்துரையாடி, உணவுப் பதார்த்தங்களைப் பகிர்ந்து பரிமாறி, ஒரு நோய்நொடி வந்தால் ஓடிப்போய் ஒத்தாசை செய்து, பிறருக்குத் தம்மாலான உதவிகளைச் செய்து ஒரு சுமுகமான வாழ்வு வாழ்ந்தார்கள். இன்று அப்படியல்ல. ஒரு பொது இடத்துக்குப் போய் பிறருடன் பொதுவான சமூக விடயங்கள் பற்றிப் பேசும் அக்கறை அனேகமான பெண்களிடம் அற்றுப் போய் இருக்கிறது. ஒழுங்கான காத்திரமான பொழுதுபோக்குகள் அவர்களுக்கு இல்லை. மனங்கள் குறுகிச் சிறுத்துப் போய்விட்டன. இனி எப்படி அவர்களிடம் பண்பட்ட மனதை, சிறந்த பண்புகளை எதிர்பார்க்க முடியும்?

ஆனால், இதற்கான பொறுப்பை முற்றுமுழுதாக நாம் பெண்களிடம் மட்டுமே சுமத்திவிடவும் முடியாது. குடும்பத்தில் உள்ள ஆண்கள் தம் மனைவியரை நடத்தும் விதமும் இதில் செல்வாக்குச் செலுத்துகிறது. எப்படி என்றால், அன்றைய காலத்துப் பெண்கள், என் உம்மாவையோ உம்மும்மாவையோ எடுத்துக்கொண்டாலும்கூட, அவர்களுக்கு எல்லாச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களுடனும் புழங்கிப் பழகும் இயல்பான சுதந்திரம் வாய்த்திருந்தது. அவர்களின் வாசிப்பை ஊக்குவிப்பதில் கணவர்மாருக்கும் பங்கிருந்தது. அவர்கள் தம் மனைவியருக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொண்டுவந்து கொடுப்பவர்களாக இருந்தார்கள்.  இன்று நினைத்தாலும் நான் ஆச்சரியம் அடையும் ஒரு விடயம் என்னவென்றால், அந்தக் காலத்திலேயே ஹப்புத்தலை ஊரில் இருந்த ‘ஜானகி தியேட்டர்’ எனும் திரையரங்கின் உரிமையாளராக என் உம்மும்மா இருந்தார். அதனை நிர்வகித்தார். அதுமட்டுமல்ல, கொழும்பில் இருந்து மொத்தமாக உடுப்புகள் கொண்டுவந்து ஊரில் விற்கும் வியாபாரியாகவும் இருந்தார். குடும்பத்திலோ அன்றைய சமூகத்திலோ அதற்கெல்லாம் எந்த இடையூறும் தடையும் இருக்கவும் இல்லை. யாரும் அவற்றை விமர்சிக்கவும் இல்லை. இன்று போல் அன்று அபாயா அணியும் முறையெல்லாம் நம் நாட்டில் இருக்கவில்லை. மிக நேர்த்தியாக முன் ஸாரி உடுத்து, தலைக்குப் போட்ட முக்காடு பிசகாமல் மிகப் பேணுதலாகவே அவர் இருந்தார்.  நானறிந்த வரையில் அவரது காலத்துப் பெண்கள் மிகவும் சுயாதீனமாகத் தம் அன்றாடக் கடமைகளைச் செய்தார்கள், பிறரோடு புழங்கினார்கள், தாமே வியாபாரம் செய்தார்கள், விரும்பிய ஆடையை, விரும்பிய நிறத்தில் அணிந்தார்கள். தமது சுதந்திரத்தை அவர்கள் நன்றாக அனுபவித்தார்கள்; மிகவும் சுறுசுறுப்பாகவும் காத்திரமாகவும் இயங்கினார்கள். தமக்கான சுதந்திரத்தை அவர்கள் துஷ்பிரயோகம் செய்யவுமில்லை.

அன்றைய ஆண்களும் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்காதவர்களாக இல்லாத போதிலும், தமது மனைவிமாரின் சுதந்திரத்துக்குக் குறுகீடு செய்யாத பண்பாளர்களாகத்தான் இருந்தார்கள். தேவையற்ற, அளவு மீறிய பிரசாரகர்களாய் அவர்கள் இருக்கவுமில்லை. சுருக்கமாகச் சொல்வதானால், அவர்கள் பேச்சில் இல்லாமல் தமக்குத் தெரிந்த இஸ்லாத்தை நல்ல முறையில் கடைபிடித்து வாழ்பவர்களாக, நல்ல மனிதர்களாக இருந்தார்கள் என்பேன். அந்தக் காலத்தில் என் வாப்பா கூட என் அறைக்கு வரும் போது தட்டி என் அனுமதி கேட்காமல் வந்ததே இல்லை.

என் கணவர் என் பெற்றோரை விட அதிகமாக என் எழுத்துப் பணிகளுக்கும் சமூகச் செயற்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து வருபவர். சமீப காலமாக, ‘நீங்கள் இன்னொரு நூல் வெளியிட்டால் என்ன?’ என்று கேட்டுகொண்டுதான் இருக்கிறார். இலக்கியக் கூட்டங்களுக்கு நான் போகச் சற்றுப் பின்வாங்கினாலும்கூட என்னை உற்சாகப்படுத்தி, ‘வாங்க போகலாம்’ என அழைத்துச் செல்பவராக அவர் இருக்கின்றார். அந்த வகையில், அவரை நான் கணவராக அடையப் பெற்றது என் பாக்கியம் என்றுதான் சொல்லவேண்டும். இன்றைய பெண்களில் எத்தனை பேருக்கு அப்படி வாய்த்திருக்கிறது என்ற கேள்வி மிக முக்கியமானது.

அன்றைய மக்கள் பொருளாதாரக் கஷ்டங்கள் உடையவர்களாக இருந்தாலும் நேர்மையும் உண்மையும் கடின உழைப்பும் உடையவர்களாக வாழ்ந்தார்கள். இன்று அல்லாஹ்வின் மீதான அச்சம் மழுங்கிப் போய் இருக்கிறது. மாறாகப் பொய்யும் போலிப் பகட்டும்  பித்தலாட்டமும் மிகைத்துப்போய் இருக்கிறது. திருமண வாழ்வில்கூட எத்தனை ஏமாற்று வேலைகள்! ஒருத்தி மனைவியாக இருக்கும் போதே முதல் மனைவிக்கும் தெரியாமல் தாம் ஏற்கெனவே திருமணம் முடித்ததை மறைத்து ஏமாற்றி, இன்னொரு திருமணம் முடிக்கிறார்கள்; இடைநடுவில் அனாதரவாகக் கைவிட்டு விடுகிறார்கள். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இலங்கை இஸ்லாமிய இயக்கங்களின் வருகையானது முஸ்லிம் சமூகத்தில், குறிப்பாகப் பெண்கள் விஷயத்தில் எத்தகைய பண்பியல் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது எனக் கருதுகின்றீர்கள்?

நான் அதிகமும் சொல்லாமல் இரண்டே இரண்டு  சம்பவங்களை மட்டும் சொல்கிறேன், கேளுங்கள். எனக்கு அறிமுகமான பெண் ஒருத்தி. பத்திரிகை, வானொலி என்பவற்றுக்குக் கட்டுரை, கவிதைகள், துணுக்குகள் எனத் தன் ஆக்கங்களை அனுப்பி வந்தார். ஓர் இஸ்லாமிய இயக்கத்தினர் அவரிடம், ‘’இப்படிக் கற்பனையான விடயங்களை எழுதுவது ஹறாம். நீ அல்லாஹ்வின் கோபத்துக்கு ஆளாகி நரகத்துக்குப் போவாய்’’ என ஃபத்வா வழங்கி அச்சுறுத்திப் போதனை செய்துள்ளார்கள். இதனால் அவர் கடும் மன அழுத்தம் உடையவராக மாறி உளவியல் ரீதியாக மோசமாகப் பாதிக்கப்பட்டார். பிறகு அவர் தொடர்ந்து ஒரு வைத்தியரிடம் கவுன்ஸலிங் பெற நேர்ந்தது. உங்களுக்கே தெரிந்திருக்கும், சில துறைசார்ந்த கற்கைகளைப் பெண்கள் படிப்பதற்குத் தடை விதிக்கும் ஒரு போக்கை நம் சமூகத்தில் காணலாம். ‘பொம்புளப் புள்ள அதைப் படிக்கத் தேவையில்ல, இதைப் படிக்கிறது பொருத்தமில்ல’ என்ற கதைகளை முன்னரை விட இக்காலத்தில் தான் அழுத்தி அழுத்தி வலியுறுத்தப் படுவதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. என்றாலும், விதிவிலக்குகளும் இருக்கலாம் என்பதை மறுக்கவில்லை.

இப்போது பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் பெண்கள் படிப்பது எல்லாம் கூடித்தான் இருக்கிறது. அதை மறுக்கவில்லை. ஆனால், அதற்குப் பின்னர் அவர்கள் சமூகமயப்படாமல், முகவரி இல்லாதவர்களாய்க் காணாமல் போய் விடுவது கவலை அளிக்கிறது. பல முஸ்லிம் பாடசாலைகள், மத்ரஸாக்களில்கூட முஸ்லிம் பெண் ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. திருமணம் முடிக்குமுன்பே பலர், அதன் பின் மனைவி வேலைக்குப் போகக் கூடாது என்று நிபந்தனை விதிப்பதைக் காண்கிறோம். இன்னும் பலர் திருமணமாகிக் குழந்தை பிறந்தபின் மனைவி வேலைக்குச் செல்வதை விரும்புவதில்லை. என் மாணவி ஒருத்தி தகவல் தொழினுட்பத் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர். மிகத் திறமைசாலி. ‘ஆசிரிய நியமனத்துக்காக விண்ணப்பிக்கவில்லையா?’ என்று கேட்டேன். ‘வீட்டில் திருமணம் பேசி இருக்கிறார்கள். நான் தொழில் செய்வதை என் வருங்காலக் கணவர் விரும்பவில்லை’ என்று கவலையோடு தெரிவித்தார். இத்தனைக்கும் அந்தப் பையன் கடை ஒன்றில் மாதச் சம்பளம் பெறும் ஒரு சாதாரணத் தொழிலாளி. ஒரு நிரந்தர அரசாங்கத் தொழில் செய்தால் தம் குடும்ப வளத்துக்கு அது உதவும், அவள் பெற்ற பெறுமதியான கல்வி நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயன்படும் என்ற எதையும் சிந்திக்க முடியாதளவு அவருக்கு ஈகோ. இன்னும் கொஞ்ச காலத்தில் அவளுக்கு ‘ஐடி’ என்றால் என்ன என்றே மறந்து போய்விடும். இப்படிப் பலவற்றைக் கூறலாம்.

இவையெல்லாம் எதனைக் காட்டுகின்றன என்றால், இஸ்லாம், இஸ்லாம் என்று நீட்டி முழங்கி அதிகமாகப் பேசப்பட்டு வரும் அளவுக்கு, இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி உள்ள உரிமைகள் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை. மறைமுகமாக அவை மறுதலிக்கப்படும் போக்குதான் சமூகத்தில் காணப்படுகிறது என்பதைத்தான். உண்மையைச் சொல்வதானால், ஒரு பெண் எந்தத் துறையிலும் சாதிப்பதற்கு அவளின் குடும்பச் சூழலில் ஓரளவேனும் ஆதரவும் ஒத்துழைப்பும் இருந்தால்தான் சாத்தியமாகும். இல்லாத பட்சத்தில் அவள் அந்தக் குடும்பத்தை உடைத்துக் கொண்டு வெளியில் வரவேண்டி இருக்கும். ஆனால், அப்படி வருவது மிகவும் கஷ்டமான ஒன்றாகும். அதனால், அப்படி வரமாட்டார்கள். எனவே, ஓர் ஆணின் வெற்றிக்குப் பின் ஒரு பெண் இருக்கிறாள்  என்பதற்கு மறுதலையாக, ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின் ஒரு குடும்பம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி அமைந்து விடுமானால் அந்தக் குடும்பமும் மேம்படும்; சமூகமும் மேம்படும்.

இன்று சமூகத்தில், அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தில் ஒப்பீட்டளவில் ஆண்கள் கல்வி கற்பது குறைவு. அனேகமான இளைஞர்கள் கல்வியை இடைநடுவில் கைவிட்டு விடுகிறார்கள். தமக்கு ஓர் ஆட்டோ இருந்தால் போதும், அல்லது வெளிநாட்டுக்கு வேலைக்குப் போனால் போதும், கைநிறையக் காசுழைத்து நன்கு வாழலாம் என்று நினைக்கிறார்கள். மறுபுறம் பெண்பிள்ளைகள்  நன்றாகப் படிக்கிறார்கள். இதனால்  வரன் தேடுவதில் பல சிக்கல்களை பெண்ணின் பெற்றோர் எதிர்நோக்குகின்றனர். அதிகமும் படித்த பெண்ணுக்கு வரன் தேடுவது கஷ்டம் அல்லது பொருத்தமான துணை அமையாமல் போய்விடும் என்ற பயத்தில் பல்கலைக்கழக அனுமதி கிடைத்தும் மாணவிகளை அங்கு அனுப்பாத பெற்றோர்கள் பலரை நான் கண்டுள்ளேன். இதெல்லாம் எவ்வளவு பெரிய சமூக இழப்பு?

உங்கள் சமகால இலக்கியத் துறைசார்ந்த தோழிகள் பற்றிச் சொல்லுங்கள்

இலக்கியத் துறை சார்ந்த நிறையத் தோழிகள் எனக்கு இருந்தார்கள். அவர்களுள் ஃபுர்கான் பீ இஃப்திகார் முதன்மையானவர். அவர் என் குடும்ப நண்பராகிவிட்டவரும்கூட. ஸகிய்யா சித்தீக் ஃபரீட் என்றொரு தோழி. அவர் புத்தகங்களும் வெளியிட்டுள்ளார். நவமணி பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்து வருகிறார். பேகம் சுபைதா நிஃமத்துல் காதர் மற்றொருவர். என்னிலும் வயதில் மூத்தவர். அவர்  அக்காலத்தில் ‘கலைமலர்’ என்றொரு இதழை நடத்தினார். அப்போது எங்களுக்கு இடையில் கடிதத் தொடர்புகள் தாம் இருந்து வந்தன. அவர் தற்போது உயிருடன் இல்லை. அச்சு வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்த அந்தக் காலத்திலேயே தனித்து ஒரு முஸ்லிம் பெண் ஒரு சஞ்சிகையைத் தொடராக நடத்தி வந்தது ஒரு பெரும் சாதனைதான், இல்லையா?

ஞெய் றஹீம் ஷஹீட், நூர்ஜஹான் மர்ஸூக் என்போரும் என்னுடைய தோழிகள்தாம். என் தோழிகளில் பலருடனான நட்பு பேனா நண்பர்களாகத்தான் ஆரம்பிந்தது. பின்னர் நேரடி நட்பாகப் பரிணமித்து, பெட்ஜ்மேட்களாக மாறிய கதையும் உண்டு. ஸாரா, ஜரீனா முஸ்தஃபா போன்றோரின் எழுத்தும் எனக்குப் பிடிக்கும். என் மாணவிகளான கெகிராவ ஸஹானா, கம்பளை அஸ்மா டீன் ஆகியோரும் நன்றாக எழுதி வருகிறார்கள்.

இலங்கையில் தேசிய ரீதியில் இலக்கிய ரீதியாகவும் சரி, அரசியல் ரீதியாகவும் சரி பெண்களுக்கான, குறிப்பாகத் தமிழ் மொழிபேசும் பெண்களுக்கான ஒரு வலுவான அமைப்பு தோற்றம் பெறாமைக்கு என்ன காரணம்?

பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள்தாம். அப்படியான ஓர் அமைப்பு இருக்கும் பட்சத்தில் அனேகமாக அதன் தலைமையகம் கொழும்பில் தான் இருக்கும். கூட்டங்களும் அங்குதான் நடைபெறும். ஆகவே, ஏனைய பிரதேசப் பெண்களுக்குப் பயணம் செய்வதில், குடும்ப விவகாரங்களில் மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிட்டுச் செல்வதில், கொழும்பில் போய் தங்கிக் கூட்டங்களில் கலந்துகொள்வதில் எல்லாம் பல்வேறு அசாத்தியப்பாடுகள், சிரமங்கள் இருக்கின்றன. இதுவே யதார்த்த நிலை. பிரதேச ரீதியாக சுழற்சி முறையில் நடத்த முனைந்தாலும், அவ்வந்த பிரதேச இயக்கங்கள், அமைப்புகளின் செல்வாக்குக்குக் கட்டுப்பட நிர்ப்பந்திக்கப்படுதல். தத்தமது இயக்கக் கொள்கைகளை, செயற்பாடுகளை அதற்குள் உள்நுழைப்பதற்கான முனைப்புகளைச் சந்திக்க நேர்தல் இப்படி எத்தனையோ காரணங்களைச் சொல்லலாம். இன்று இஸ்லாமிய இயக்கங்கள் கூடிப் போனதாலும் சங்கடங்கள் கூடிப்போச்சி எனலாம். ஆனால், ஒன்று. முன்னைய காலங்களில், சரி, தவறுகளுக்கு அப்பால் அக்கால ஊர்ப் பெண்களின் ஒன்றுகூடுதல் இயல்பான ஒரு விடயமாக இருந்தது. குறிப்பிட்ட காலங்களில் ஊர் நிய்யத்து என்ற பெயரில் ஒன்றுகூடி ஊர்ப் பெண்களில் ஒருசாரார் தலைஃபாத்திஹா போன்றவற்றை  ஓத, மற்ற பெண்கள் செவிமடுத்தனர். சரளமாகச் சொல்வதானால், அது அன்றைய பெண்களுக்கான கெட் டு கெதர் ஆக இருந்தது. மார்க்க ரீதியான விமர்சனங்கள், கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், அப்படி ஏதேனும் ஒரு காரணம் பற்றி, பெண்கள் தமக்கிடையில் ஒன்றுகூடி ஒரு செயற்பாட்டில் வேலைகளைப் பகிர்ந்து கொண்டு, பகிர்ந்து உண்டு, அருந்தி மகிழ்வோடு கூடிப் பேசிக் கலைவதற்கான ஒரு ‘வெளி’ சாத்தியப்பட்டு இருந்தது. 1996 களின் பின்பிருந்து அதெல்லாம் படிப்படியாகக் குறைந்து, இன்று அப்படியான ஒன்றுகூடல்களைக் காண்பதுகூட மிகவும் அபூர்வமாகி விட்டது. சபைகள் பலவும் ஆண்களுக்கான சபைகளாகவே ஆகிப்போய் விட்டன.

நம் நாட்டில் நிலவிவரும் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் சீர்திருத்தம் அவசியம் என்ற கோஷம் பரவலாக மேலெழுந்து வருகிறது. ஒரு சமூகச் செயற்பாட்டாளர் என்ற வகையில் அது குறித்து உங்கள் பார்வை என்ன?

காதி கோர்ட் என்பது ஒரு நீதிமன்றம். இஸ்லாமியச் சட்டம் என்பது ஒரு பரந்த கடல் போன்றது. எனவே, அந்தச் சட்டங்கள் பற்றிய ஆழ்ந்த நிபுணத்துவமும் தீர்க்கமான அறிவும் தேர்ச்சியும் உடையவர்களே காதி நீதிபதிகளாக நியமிக்கப்படல் வேண்டும். அவர்களைத் தெரிவு செய்யும் போது, பாரபட்சம் அற்ற முறையில் நேர்மையான முறையில் அமைந்த ஒரு பரீட்சை வைக்கப்பட வேண்டும். அப்படி இல்லாத காரணத்தால்தான் காதி நீதவான்கள் குறித்தும் காதி நீதிமன்றங்கள் குறித்துமான நல்லபிப்ராயம் மக்கள் மத்தியில் மிகவும் குறைந்துபோய்க் காணப்படுகின்றது. இன்றைய அனேகமான காதி நீதிமன்றங்களில் பதவி வகிக்கும் காதி நீதவான்களின் பலர் எத்தகைய துறைசார் தகைமையும் அற்றவர்களாக இருப்பதால் நீதி கோரி வரும் பலரும் பாதிக்கப்படுவது கண்கூடு, அதிலும் குறிப்பாகப் பெண்கள் படும் துயரங்களோ சொல்லி மாளாது. அவர்கள் பல்வேறு அநீதிகளுக்கு முகம் கொடுத்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இன்றைய இளம் பெண் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவதென்ன?

நான் அவர்களுக்குச் சொல்ல விரும்புவது, நீங்கள் வெறுமனே பெயர், புகழுக்காக எழுதாதீர்கள். உங்கள் மனதைக் கவர்ந்த, அதனைப் பாதித்த ஏதேனுமொரு விடயத்துக்கு நேர்த்தியான ஒரு கலைவடிவத்தை வழங்குங்கள். உங்கள் படைப்புக்கள் வழியே சமூகம் ஒரு துளியளவேனும் பிரயோசனம் அடைந்து கொள்ளட்டும். எழுத்தை நான் ஒரு பொழுதுபோக்காக ஒருபோதும் நினைத்ததில்லை. அது ஒரு யாகம். நான் என்னளவில் பெரிதாக எதனையும் சாதித்ததாகச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால், ராமர் அணைக்கு மண் சுமந்த அணில்போல இயலுமான அளவில் இந்த சமூகத்தில் உள்ள விடயங்கள், பிரச்சினைகள் தொடர்பில் உங்களால் தீர்வுகளை முன்வைக்க முடியாவிட்டாலும் அவற்றைச் சுட்டிக் காட்ட, தொட்டுக்காட்ட நீங்கள் முன்வர வேண்டும்.

0000000000000000000000000000000000000000000

நயீமா சித்தீக் பற்றிய சிறுகுறிப்பு :

நயீமா சித்தீக்இலங்கையின் மலையகத்தில் பதுளை – ஹப்புத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட நயீமா சித்தீக்,  பண்டாரவளை சாஹிராக்கல்லூரி, ஹப்புத்தளைத் தேசிய பாடசாலை, காத்தான்குடி மத்தியகல்லூரி, பசறை மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவியாகவும்,பின்னர்  பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொதுக்கலைமாணிப் பட்டத்தையும், கல்வித் துறை டிப்ளோமா பட்டத்தையும் பெற்று மலையக இலக்கிய வெளியில் விசேட கவனிப்பைப் பெறுகின்றார்.

மேலும் ,1960களில் தான் 7ம் வகுப்பிற் கற்கும்போது ‘கல்வி’எனும் தலைப்பில் எழுதிய முதல் ஆக்கத்தை தினகரன் பிரசுரித்தது. தொடர்ந்து கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், உருவகக்கதைகள், குட்டிக்கதைகள் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் இவர் முனைப்புடன் ஈடுபட்டார். இதுவரை இவர் நான்கு நாவல்களையும், 750 க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளையும் எழுதி இலங்கையிலேயே முன்னணி முஸ்லிம் பெண் எழுத்தாளராக திகழ்கின்றார். இல்லற வாழ்க்கையில் இணைய முன்பு ‘நயீமா – ஏ – பஷீர்’ என எழுதிவந்த இவர் பின்பு ‘நயீமா சித்தீக்’ என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். இவரது  ஆரம்பகால படைப்பிலக்கியங்கள் பெருமளவு தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. பலத்த வேலைப்பளுவின்  மத்தியில் எனக்கு நேரத்தை ஒதுக்கித்தந்து, பிரான்ஸில் இருந்து வெளியாகும் நடு கலை இலக்கிய இணைய சிற்றிதழுக்காக நயீமா சித்தீக் அவர்கள் எனக்களித்த நேர்காணல் இது.

லறீனா 

லறீனா 

 

 

 

(Visited 159 times, 1 visits today)