மோகன்-மொழிபெயர்ப்புக் கவிதை-மாலதி கல்பனா அம்ப்றோஸ்-

மோகன்

லறீனா

சில கதைகளில் சந்திக்க நேரும்
மலர் மணம்
ஆனால்
சூரியனில் ஒளி இல்லை…

சில கதைகளில் சந்திக்க நேரும்
குண்டூசி முனைகள்
நகக் கீறல்கள்
கழற்றப் படாத அம்புகள்
கழற்றினால் குருதி பெருகி
இறக்கவும் நேரலாம்

மோகன், எப்படிப்பட்ட வீரன் நீ!
வானம் இருமுறை
உச்சிமீது வீழினும்
கால்வாசி மண்ணெண்ணெயளவே
பெறுமானமுள்ள வாழ்வைச் சுமந்து
டோஸரொன்றின் அடியில் வைத்து
நிம்மதியாய் உறங்க நினைத்தாயா, மோகன்?

நிரந்தர வன்மத்தால் எரியுண்ட தேசத்தில்
கரிபடிந்த வாழ்வின்
மௌனச் சிதிலங்களிடையே
நெஞ்சுவெடித்துப் போய்
சொந்தபந்தங்கள் மெல்ல மெல்லச் சாகையில்
குறை சீனியில், நிறை சீனியில்
தேநீரும் கோப்பியும் ஊற்றியூற்றி
சில்லிட்ட இதயங்களுக்கு வெதுவெதுப்பூட்டுவது
அடி மனசில் செத்தும் உயிர்த்துமாய்த் துடிதுடிக்கும்
ஒரு கனவு நட்சத்திரத்தின் ஒளியினாலா?

கடந்த காலம் என்பதெல்லாம்
இருளடைந்ததோர் நீளிரவு மட்டுந்தானா?
அவ்விரவு விடிவதற்கோர் சாத்தியமுண்டா?

நினைவு என்பது
கனவாக மட்டுமேயே இருந்திடாத ஓரிடம்
கனவிருந்து விழித்தெழுதல் சாத்தியமா?

பூங்கொத்தைக் கைநழுவ விடாமல்
அந்தகாரப் பெருந்தெருவில் உலவுதற்கும்
ஒருகணத்துச் சுகந்தம் வேண்டி
பூவிதழை ஒவ்வொன்றாய் உதிர்ப்பதற்கும்

அதன் பின்
முழந்தாள் ஊன்றி எழமுனைகையில்
தலையைப் பற்றி நிலத்திலடிக்கும் வாழ்க்கையை
வாடகைக் கனவொன்றில் பொத்திவைத்து
பூக்கள் மலரும் வரை
காத்திருக்க இயல்கிறது எம்மால்…

000000000000000000000000000000000000

ஆக்கம் பற்றிய சிறுகுறிப்பு :

83 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது மோகன் என்ற தமிழரின் கடை எரியூட்டப்பட்டது. அதன்பின் அங்கும் இங்குமாக அலைந்து கஷ்டப்பட்டு திருத்தி எடுத்த வீடும் நகர அபிவிருத்தித் திட்டத்தினால் கபளீகரம் செய்யப்பட்டு, புல்டோஸரினால் இடித்து நொறுக்கப்பட்டது. அவருக்கான உணர்வுத் தோழமையை வெளிப்படுத்தும் கவிதை.

சிங்கள மூலம்: மாலதி கல்பனா அம்ப்றோஸ்

000000000000000000000000000000000000

ஆக்கம் பற்றிய சிறுகுறிப்பு :

குழந்தைப் போராளி என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு செல்லப்பிள்ளை மகேந்திரன் 18 வருட காலம் விசாரணையின்றி விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்ததாக செய்தி.

மகேந்திரன்

தோழமைக்கென்றோர் காற்றின்
சிற்றசைவும் அற்ற ஓரிடத்தினில்
பரவும் நிலவொளியும்
வெறுமையில் வியாபிக்கும்
ஆறும் மீனும் கடலை அடைந்தபின்
வறண்ட கண்ணீரின் தனிமையை அறிவேன் தோழா

கைவிட்டுப் போன உந்தன் சொந்த ஊரில்
முடிவுறாத ஷெல்லடிக் குறிகளின் கீழ்
குழந்தைப் போராளியானாயோ
கல்வியிழந்ததால் பின்தங்கினாயோ

வண்ணங்கள் ஒளிரும் உல்லாசக் கொழும்பு
இரவிலும் ஒளிர்ந்திடும் கிரணத்துள் மூழ்கிடும்
குளிர்ந்த கல்லடி ஆற்றங் கரையினில்
யார்க்குமிலா கண்ணீர் அருவிகொட்டும்.

மீன்கள் பாடும் கானம் கேளாது
பதினெட்டாண்டுகள் எவ்விதம் கழித்தாய்?
நீதியும் மரணமும் செத்த ஓரிரவினில்
கனவிலேனும் வீடு தோன்றிற்றோ?

காலிமுகத்திடல் அலைகள் மீதினில்
தழுவும் காற்றின் மோகனம் மேவும்
உன் ஊமைச் சிறைக்கூட முகட்டின் மேலே
சிங்கமும் நரிகளும் ஒரேகொடியிலே…

000000000000000000000000000000000000

“செத்துப்போன நவம்பர் மாதம்”
அது
செத்துப்போனவர்களின் மாதம்
சாகடித்தவர்களின் மாதம்!

வடக்கு தெற்கு, கிழக்கு மேற்கெனும்
வேறுபாடுகளுக்கு அப்பால்
சாகடித்தவர்களின் மாதமும்கூட!

ஆணியறையப்பட்டுச் செத்தவர்களாயினும்
ஷெல்லடிபட்டுச் செத்தவர்களாயினும்
குண்டடிபட்டுச் செத்தவர்களாயினும்
கழுத்தறுபட்டுச் செத்தவர்களாயினும்
தாயொருத்தியின் வேதனையில்
வித்தியாசம் இருக்கக்கூடுமோ?
செத்துப் போனது – அவள்
கருவிற் சுமந்த ஜீவனேயல்லவா?
சிந்தியதெல்லாம் அமுதாய் அவளூட்டிய
உதிரமே அல்லவா?

நவம்பரில் ஒப்பாரி வைக்கும்
பெருமழை என்பது
நெஞ்சுவெடிக்குமாப் போலும்
அன்னையரின் சோகம் தான்.

நினைவுச் சின்னம், மெய்க்கீர்த்தி, கிரியைகள்
ஏதுமற்றுப்போன மகன்…
துயில்வதற்கோர் சவப்பெட்டியோ இடுகாடோ
அற்றுப்போன மகன்…
அங்கு
பெருக்கெடுத்தோடிய குருதியில்
வேறுபாடுகள் இருக்கக்கூடுமோ?

சூரியனும் சந்திரனும்
ஒளிர்வது சமமாகத்தான்
உயிர்காக்கும் மூச்சுலாவுவது
ஒரே வானத்தில் தான்
நவம்பரில் அணையுடைத்து
ஹோவென்று ஆர்ப்பரிக்கும்
பெரும் வாவிகள் சொல்கின்றன
அவர்தம் அப்பெருமூச்சின் வலிமையினை!

சிங்கள மூலம்: குமாரி குமாரகமகே
தமிழில்: லறீனா 

நன்றி: http://boondi.lk

லறீனா

(Visited 124 times, 1 visits today)