‘பத்மா அம்மாவும் நானும்…’- பத்மா சோமகாந்தன் நினைவுக்குறிப்புகள்-லறீனா அப்துல் ஹக்

லறீனா 2002 ஆம் ஆண்டு. அப்போது நான் பல்கலைக்கழக இறுதி ஆண்டில் கற்றுக் கொண்டிருந்தேன். எனது இளங்கலைமாணிப் பட்டத்துக்கான ஆய்வேட்டைச் சமர்ப்பிக்கும் காலக்கெடு நெருங்கிக் கொண்டிருந்தது. சிறுவயதில் சந்தித்த ஒரு விபத்து, பிறகு பல்கலைக்கழக முதலாம் ஆண்டில் இடம்பெற்ற -First trip bucketing- இற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஓடுகையில் கால் வழுக்கி ஏடாகூடமாக விழுந்தமை என்பவற்றின் விளைவால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அப்போது நான் மிகவும் கஷ்டப்பட்டேன். நரம்பியல் நிபுணரிடம் எடுத்த மருந்துகளின் விளைவால் கட்டுப்படுத்த முடியாத அளவு ஆழ்ந்த தூக்கம் போனதே தவிர வலது கையில் வலி தீரவில்லை. அப்போதுதான் ‘அக்குபன்ச்சர்’ மருத்துவ நிபுணரான பேராசிரியர் அன்டன் ஜயசூரியவிடம் சிகிச்சைக்குப் போவதென முடிவாயிற்று. அவர் கொழும்பு ஆசிரி தனியார் மருத்துவமனையில் ‘ஸ்கேனிங்’ முதலான பரிசோதனைகளை முடித்துக்கொண்டுவரப் பணித்திருந்தார். நானும் பெரிய தம்பியும் அங்கு போனோம். பரிசோதனை அறிக்கைகளுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் தலைக்கு மேல் வந்துவிட்டது. கொண்டுபோயிருந்த காசு போதவில்லை. மாலையில் ‘ரிப்போர்ட்ஸ்’ எடுக்கையில் மீதிக் காசினைச் செலுத்தியாக வேண்டும். விடுமுறை நாள் என்பதால் யாரிடமேனும் கோல் பண்ணி வங்கிக்குக் காசு போடுமாறு சொல்லவும் வழியில்லை. இப்போது இருப்பது போல வங்கிக்கு வெளியே காசு டிபொஸிட் மெஷின்கள்  புழக்கத்துக்கு வந்திருக்காத காலம் அது. என்ன செய்வது என்று பெரும் கவலையும் குழப்பமும்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் சட்டென பத்மா சோமகாந்தன் அம்மாவின் நினைவு எனக்கு வந்தது. இத்தனைக்கும் நான் அவரை அதற்கு முன் ஒருதரமேனும் சந்தித்ததில்லை. பேசியதும் இல்லை. என்றாலும், அவர் ஒரு பெரிய எழுத்தாளர் என்ற வகையில் அவரது எழுத்துக்களை நான் வாசித்து இருந்தேன். என்னிடம் அவரது தொலைபேசி எண் இருந்தது. நான் உடனே அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டேன்.

பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை இறுதி வருட மாணவி என என்னை அறிமுகம் செய்து கொண்டேன். நான் அவரிடம் எனக்கு  ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையை எடுத்துக் கூறி, 3500 ரூபாய் காசு கடனாகத் தந்துதவ முடியுமா எனக்கேட்டேன். அவரது வங்கிக் கணக்கு விபரங்களைத் தந்தால் ஊருக்குப் போனதும் கடனைத் திருப்பியளித்து விடுவதாய் வாக்களித்தேன். அவர், ‘‘அம்மா, கடனைத் திருப்பித் தருவதைப் பற்றியெல்லாம் பிறகு யோசிக்கலாம்; முதலில் மருத்துவமனைப் பிரச்சினையைப் பார்ப்போம்” என்று சொன்னார். அருகில்தான் தமது வீடு இருப்பதால் உடனே வருமாறு கூறி முகவரியைச் சொன்னார். நான் அதனைக் குறித்துக் கொண்டேன். என் தம்பியின் விபரங்களை அவரிடம் கூறி, தம்பியை அவரில்லத்துக்கு அனுப்பிவிட்டு ஆசிரி மருத்துவமனையில் காத்திருந்தேன்.

18 வருடங்களுக்கு முன் 3500/= ரூபாய் என்பது ஒரு பெருந்தொகைதான்.  முன்பின் தெரியாத ஒரு முஸ்லிம் பெண் நான். வெறுமனே ஒரு தொலைபேசி அழைப்பை நம்பி அதனைத் தயங்காமல் தந்துதவும் அளவுக்கு அவரது உள்ளம் கருணையால் நிரம்பி இருந்தது. மனிதம் அவருள் விசாலித்திருந்தது. அன்று ஓர் இக்கட்டான நிலையில் அவர் செய்த உதவிக்குப் பின் நாம் அவ்வப்போது கொழும்புக்குச் செல்லும் போதெல்லாம் அவரது இல்லம் சென்று சந்தித்து அவரோடும் அவரின் துணைவர் சோமகாந்தன் ஐயாவோடும் பல மணிநேரம் உரையாடிவிட்டு வருவதுண்டு.

எனக்குத் திருமணமாகிக் குழந்தை பிறந்த ஒன்பதாவது மாதத்தில் நான் மகனோடு என் கணவரின் அழைப்பிற்கிணங்க கட்டார் சென்று வசிக்க நேர்ந்தது. அதன் பின் இலக்கிய உலகுடனான என் தொடர்புகள் யாவும் கிட்டத்தட்ட முற்றாக அறுந்துதான் போய் இருந்தன. ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் இருந்து, ‘லறீனா அப்துல் ஹக்’ என்ற பெயர் சுமார் ஐந்து வருடகாலம் மங்கி மறைந்தே போய் விட்டிருந்தது. அதேநேரம், Tamil Muslim Brothers ஜீமெயில் குழுமத்தின் ஊடாக (நம்மை அந்தக் குழுமத்தில் யார், எப்படிச் சேர்த்தாங்க என்றே  தெரியலை) அறிமுகமான சகோதரர் முஹம்மத் ஃபைஸல் ஊடாக அனுப்பித் தந்து, தமிழகத்தின் விடியல் வெள்ளி சஞ்சிகையில் நான் எழுதிவந்த ”வார்த்தைகளின் வலி தெரியாமல்…” தொடர் மூலம் தமிழகச் சூழலில் என் பெயர் ஓரளவுக்குப் பரிச்சயமாகி இருந்தது. அப்படியான ஒரு தருணத்தில்தான் நான் எனது முதுதத்துவமாணி ஆய்வேட்டை எழுதிச் சமர்ப்பிக்கும் நோக்கில் நாடு திரும்பி இருந்தேன். வந்து இரண்டு மூன்று தினங்களில் எனக்கொரு தொலைபேசி அழைப்பு. பத்மா அம்மா அழைத்திருந்தார்.

”எங்கேடியம்மா போயிருந்தாய்? ஒரு மாத காலமாய் உன்னைத் தொடர்புகொள்ள முடியாமல் அல்லாடிப் போய்ட்டன். இன்னும் ரெண்டே வாரத்தில் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு வருகிறது. உனக்கே தரணும் என்ற பிடிவாதத்தில் ஒரு தலைப்பை வேறு யாருக்கும் கொடுக்காமல் வைத்திருக்கேன். ‘ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு’ எனும் பெண்ணிய நோக்கிலான தலைப்பில் நீ ஓர் ஆய்வுக் கட்டுரை வாசிக்கணும். மறுக்காமல் கட்டாயம் செய்வாய் என்று நம்புகிறேன்” என்று அன்புக் கட்டளை இடவே நான் கொஞ்சம் திணறித்தான் போய் விட்டேன். தமிழ் இலக்கிய வாசிப்புப் பழக்கம் அறுந்துபோய் சில வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இலக்கிய உலகைக் கிட்டத்தட்ட மறந்து போயிருந்த ஒரு தருணத்தில், வெறும் இரண்டே வாரங்களுக்குள் அவ்வளவு ஆழமானதும் பரந்துபட்டதுமான ஒரு விஷயத்தில் ஆய்வுக் கட்டுரை எழுதத் தயாராவது எப்படி என்ற என் தயக்கத்தை வெளியிட்டேன்.

”அதெல்லாம் உனக்கு ஒரு பெரிய காரியமில்லையம்மா. நீ மனம் வைத்தால் மிகச் சிறப்பாய்ச் செய்து முடிப்பாய் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கிருக்கு. மறுத்தாய் என்றால் எனக்குக் கெட்ட கோபம் வரும். அதெல்லாம் நீ செய்து முடிப்பாய், எதுக்கும் யோசிக்காதேயம்மா” என்றார். என் மீதான அவரது ஆழ்ந்த நம்பிக்கை என்னை நெகிழச் செய்துவிட்டது. அதைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. அன்றே தேடலைத் தொடங்கி விட்டேன். அதுவரை ஈழத்தில் வெளிவந்த கவிதாயினிகளின் கவிதைத் தொகுதிகளைச் சேகரிக்கத் தொடங்கினேன். பேரன்புக்குரிய எங்கள் பேராசான் எம். ஏ. நுஃமான்  அவர்கள் தன்னிடமுள்ள தொகுதிகளை வாசிக்கத் தந்துதவினார். நண்பர்களும் உதவினார்கள். ஆயிற்று. எப்படியோ, ஆய்வுக் கட்டுரை தயாராயிற்று. பத்மா அம்மா, பேராசிரியை சித்ரலேகா மௌனகுரு ஆகியோரின் இணைத் தலைமையில் இடம்பெற்ற ”பெண்ணெழுத்து” அரங்கில் என்னுடைய கட்டுரையை வாசித்தேன். அங்கு எழுந்த சர்ச்சைகள் குறித்துப் பேசுவதை இங்கே தவிர்த்துக் கொள்கின்றேன்.

ஈழத்து இலக்கிய உலகில் இருந்தே காணாமல் போயிருந்த என்னுடைய இரண்டாவது இலக்கியப் பிரவேசம் நிகழக் காரணமாய் இருந்தவர் என்ற வகையில் நான் அதன் பிறகு வெளியிட்ட ”பொருள்வெளி” ஆய்வுக் கட்டுரைத் தொகுதியை அவருக்கும் சேர்த்தே சமர்ப்பித்து இருந்தேன். இடையில் விடுமுறைக் காலத்தில் மறுபடியும் கட்டார் சென்றிருந்த வேளையில் சோமகாந்தன் ஐயாவின் மறைவு என் செவியை எட்டியிருக்கவில்லை. பின்னாளில் தெரிய வந்தபோது பெருந்துயரில் ஆழ்ந்தேன். அதன் பின் அன்னாரின் ஒரு வருட நினைவேந்தல் நிகழ்வில் தமிழகக் கவிதாயினி, அருமைத் தோழி திலகபாமா மகேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் அவ்வை விக்னேஷ்வரன் போன்ற தலைசிறந்த கவிஞர்களோடு சேர்ந்து கவிதை வாசிக்கும் வாய்ப்பை பத்மா சோமகாந்தன் அம்மா எனக்கும் வழங்கி இருந்தார். அன்றைய நிகழ்வில் நான் மிக மதிக்கும் ஈழத்து எழுத்தாளர் செ. கணேசலிங்கம் அவர்களும் தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பத்மா சோமகாந்தன் அவர்கள் தாம் ஆசிரியராகப் பணியாற்றிய, ‘பெண்ணின் குரல்’ சஞ்சிகையில் என் ஆக்கங்களுக்குத் தொடர்ச்சியாகக் களம் தந்தார். அதுமட்டுமன்றி என் ஆக்கங்கள் குறித்த தனது கருத்துக்களையும் விமர்சனங்களையும் தொலைபேசி ஊடே என்னுடன் அவ்வப்போது பகிர்ந்துகொண்டு பெண்ணியச் சிந்தனை சார்ந்து என் எழுத்தும் சிந்தனையும் கூர்மை பெறுவதற்குப் பெரிதும் உதவினார். இப்படியாக, பத்மா சோமகாந்தன் அம்மா என் வாழ்வில், என் இலக்கியப் பயணத்தில் முக்கிய மைல் கல்லாகத் திகழ்ந்து வந்திருக்கிறார்.

பண்டைய கவிஞர்களில் பத்மா அம்மாவுக்குப் பாரதியைப் போலவே ஔவையாரையும் மிகப் பிடிக்கும். அதன் விளைவாகவே அவர் ஔவை இலக்கிய வட்டத்தினை நிறுவி, அதன் தலைவியாய் இருந்து மிகுந்த அர்ப்பணிப்போடு இலக்கியப் பணியாற்றினார். அவ்வப்போது தொலைபேசியில் மணிக்கணக்கில் நீளும் எங்கள் உரையாடல்களில் இலக்கியம், பெண்ணியம், சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் என்பவற்றோடு ஔவை இலக்கிய வட்டத்தின் செயற்பாடுகள், அதன் வளர்ச்சிக்கான எதிர்காலத் திட்டங்கள் குறித்து பத்து பதினைந்து நிமிடங்களுக்காவது பேசாமல் விட்டதில்லை, அவர். ஔவையில் அவ்வளவு பற்றும் காதலும் அவருக்கு. 11/05/2014 வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் பேராசிரியர் சபா ஜெயராஜாவின் தலைமையிலான ஆய்வரங்கு ஒன்றினை அவர் ஒழுங்கு செய்திருந்தார்.  அதிலே ஔவையின் படைப்புக்களை மையப்படுத்திப் பின்வரும் ஆய்வுக் கட்டுரைகள்  வாசிக்கப்பட்டன:

* “ஔவை என்ற பெண்ணின் பின்னால் உள்ள பெண் படிமம்” – திருமதி தேவகௌரி மகாலிங்கசிவம் (சிரேஷ்ட விரிவுரையாளர், இதழியல் கல்லூரி, கொழும்பு)

* “சங்க கால ஔவைப் பாடல்களின் வரலாற்று முக்கியத்துவமும் கவித்துவ வளமும்” – கலாநிதி க. ரகுபரன் (சிரேஷ்ட விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)

* “சங்க கால ஔவையார் பாடல்கள்: ஒரு பன்முக நோக்கு” -கலாநிதி நதிரா மரியசந்தனம் (கிழக்குப் பல்கலைக்கழகம்)

* “தமிழ்ச் சூழலில் ஔவையார்” – பேராசிரியர் வ. மகேஷ்வரன் (முன்னாள் தலைவர்- தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்)

அரங்கம் நிறைந்த அவையிலே மிகச் சிறப்பாக இடம்பெற்ற அந்த விழாவினை மிகப் பாடுபட்டு ஒழுங்கு செய்திருந்த போதிலும் எந்தவித அலட்டலும் இல்லாமல் மேடையின் ஒரு பக்கம் நின்றிருந்தார் பத்மா அம்மா. வந்திருந்தவர்களை வரவேற்று உபசரிப்பதில் ஒரு குறையும் வைத்துவிடக் கூடாது என்ற கரிசனையோடு பம்பரமாகச் சுழன்றார். அவரது அந்த எளிமையும் சுறுசுறுப்பும் உழைப்பும் எங்களைப் போன்றோருக்கும் பெரும் ஆதர்சம்தான் என்றே கொள்கின்றேன்.

அதே தினத்தில் “பெண்ணொரு பாதி – ஆணொரு பாதி – பேணுவோம் இந்நீதி” எனும் கருப்பொருளில் இடம்பெற்ற கவியரங்குக்குத் தலைமை தாங்கும் நல்வாய்ப்பினை அவர் எனக்களித்திருந்தார்.

பிரதி வருடம் தோறும் மார்ச்  8 ஆம் திகதி இடம்பெறும் மகளிர் தின விழாவுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே மகளிர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஒழுங்குசெய்யும் முனைப்பில் பத்மா அம்மா வழமைக்கு அதிகமான உத்வேகத்துடன் இயங்கத் தொடங்கி விடுவார். ஒரு மூத்த எழுத்தாளராக, பெண்ணிய நோக்கு குறித்த ஆழமான வாசிப்பு உடையவராக அவர் இருந்த போதிலும்கூட நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு குறித்து இளையவர்களான எங்களிடமும் கலந்தாலோசனை செய்யத் தயங்க மாட்டார். எல்லோர் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஆழ்ந்த மனப்பக்குவமும் மன விசாலமும் வாய்க்கப் பெற்றிருந்தமையே அதற்கான காரணம் எனலாம்.

அது மட்டுமல்ல. தகைமை உடையோரை மதித்து அழைத்து கௌரவிக்கும் அவரது பண்பையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். அதற்கான ஒரு சோற்றுப் பதமாக 12-03-2016 சனிக்கிழமை பத்மா சோமகாந்தன் அம்மாவின் தலைமையில் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்ற சர்வதேச மகளிர் தினவிழாவைக் குறிப்பிடலாம். இந்நிகழ்ச்சியில் கலாநிதி செல்வி திருச்சந்திரன், சமூகசேவகி செல்வி கௌரி பழனியப்பன், பிரபல எழுத்தாளர் திருமதி கோகிலா மகேந்திரன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். போட்டியும் பொறாமையும் மலிந்துள்ள இலக்கியச் சூழலில் தன் சக பெண் படைப்பாளிகள், ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்களுக்கு உரிய மரியாதை அளிக்கும் அவரது இந்த இயல்பு அவரின் பண்பட்ட சிந்தனையின் வெளிப்பாடு எனலாம்.

வெறுமனே மகளிர் தின விழா ஒன்றினை நடத்தி முடிப்பது என்பதோடு நின்று விடாமல் தொடர்ந்து சமூகத்தில் பெண்ணியம் குறித்த சிந்தனையை, விழிப்புணர்வை சமூக மயப்படுத்தும் ஆவல் அவரிடம் எப்போதும் கனன்று கொண்டே இருந்தது. அதனாலேயே தாம் ஒழுங்கு செய்யும் விழாக்களில் தகைமைசார் உரையாளர்களை வரவழைத்து கனதியான தலைப்புகளில் உரைகளை நிகழ்த்துவதற்கு அவர் இடமளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற மகளிர் தின விழாவிலே திறந்த பல்கலைக்கழக சட்டபீடத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான செல்வி யசோதரா கதிர்காமத்தம்பி ‘பெண்கள் முகங்கொடுக்கும் பாரபட்சங்களும் அவற்றுக்கான சர்வதேசத் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய சிறப்புரையை  இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

அன்றைய நிகழ்வில், ‘பெண்ணெனும் பெருஞ்சக்தி’ எனும் கருப்பொருளில் இடம்பெற்ற கவியரங்கத்துக்கு  நான் தலைமை தாங்கினேன். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ‘அலை’ குழுவினர் வழங்கிய ‘அழுகை விற்கப்படும்’ என்ற நாடகமும் அரங்கேறியது. இவ்வாறு அவர் ஒழுங்குபடுத்தும் விழாக்களில் ஆய்வுரைகளுக்கு மட்டுமின்றி கலை இலக்கியத்துக்கும் களமமைத்துக் கொடுத்து, முத்தமிழும் சங்கமிக்கும் வகையில் மிகச் சிறப்பாக ஒருங்கிணைப்பது அவரது பாணியாக இருந்தது.

லறீனா 29/11/2015 அன்று என்னுடைய அன்பான வேண்டுகோளை மதித்து கொழும்பு தபால் தலைமையகக் காரியாலயத்தில் பேராசிரியர் எம்.எஸ். எம். அனஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற என்னுடைய, ‘சுயமி’ மெல்லிசைப் பாடல் இறுவட்டு/ ‘நீட்சி பெறும் சொற்கள்’ நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு அவர் வாழ்த்துரை வழங்கியமையை எனக்குக் கிடைத்த கௌரவமாகவே கருதுகின்றேன்.

பின்னாளில் பத்மா அம்மா சுகவீனம் உற்றிருந்ததை அறிந்து என் மனம் நிலைகொள்ளவே இல்லை. பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கொழும்பில் இடம்பெற்ற புத்தகத் திருவிழாவுக்குப் போன சந்தர்ப்பத்தில் பத்மா அம்மாவையும் சென்று சந்தித்து நலம் விசாரித்து வந்தமை மனதுக்குப் பெரும் நிறைவளித்தது. என் மகளோடும் மகனோடும் உரையாடி மகிழ்கையில் அவர் தானும் ஒரு குழந்தையாய் மாறிவிட்ட கணங்களின் அற்புதக் காட்சி என் உள்ளத்தில் ஒரு கலைப் பெறுமானமிக்க ஓவியம் போல் பதிந்துபோயிருக்கிறது. அவரிடமிருந்து நாம் விடைபெற்று வர முனைந்தபோது, அன்று கட்டாயம் தன்னோடு சேர்ந்து ஒரு வாய் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்ற அவரது அன்புக் கட்டளையை எங்களால் மீறி வர முடியவில்லை.

ஈழத்து மாண்புறு மகளிர், ஈழத்துத் தமிழ்ப் பெண் ஆளுமைகள், நெஞ்சுக்கு நிம்மதி, பக்த அனுமன் கதை, புதிய வார்ப்புகள், கடவுளின் பூக்கள், வேள்வி மலர்கள், இற்றைத் திங்கள், பாரா முகங்கள் சில பார்வைகள், Stories from Hindu Mythology முதலான நூல்களை இலக்கிய உலகுக்குத் தந்துள்ள கலாபூஷணம் பத்மா சோமகாந்தன் அம்மாவைப் பற்றிய என்னுடைய மனப்பதிவுகளைப் பொருத்தவரையில் இரண்டு விடயங்களை மிக முக்கியமானவையாகக் கருதுகின்றேன். ஒன்று, இலக்கியம், இலக்கியச் செயற்பாடு என்பதெல்லாம் நம்முடைய எல்லாவிதமான பிரத்தியேகமான அடையாளங்களையும் தாண்டி அன்பினாலும் அரும் பண்பினாலும் மனித மனங்களை இணைக்கும் பணியைச் செய்யும் மகத்தான வாழ்வுக்கான பேறுகள் என்பதை நன்குணர்ந்தவர் அவர். அதனால் தான் அவர் ஏராளமான தமிழ், சிங்கள, முஸ்லிம் நண்பர்களைச் சம்பாதித்து வைத்திருந்தார். பிரபல சிங்கள எழுத்தாளர்களான சீதா ரஞ்சனி, உபாலி லீலாரத்ன, பிரபல முஸ்லிம் எழுத்தாளர்களான திக்வல்லைக் கமால், மேமன் கவி போன்றோருடனான அவரது நட்பு இதற்கான சிறு உதாரணம் மட்டுமே. என்னைத் தனது மற்றொரு மகளாகவும் என் குழந்தைகளைத் தனது பேரப்பிள்ளைகளாகவும் கருதி அன்பு பாராட்டிய அவரது அளப்பரும் கனிவு என்றுமே மறக்கத்தக்கதல்ல.

மற்றது, எந்தவிதக் காழ்ப்புணர்வுகளுக்கும் அப்பால் தன் சக படைப்பாளிகளை வயது, இனம், பிரதேசம் என்ற பேதங்களுக்கு அப்பால், உரிய முறையில் மதித்து அன்பு பாராட்டும் உயர்ந்த பண்பினை அவர் தன்னளவில் கொண்டிருந்தார் என்பது. இவை அடுத்தடுத்த தலைமுறைப் படைப்பாளிகளுக்கு அவர் விட்டுச் சென்றுள்ள ஆதர்சப் பண்புகள் என்றால் அது மிகையல்ல.

என்னுடைய துயரமெல்லாம் அவ்வளவு ஆழ்ந்த அன்பு காட்டிய பத்மா அம்மா 2020 ஜூலை 15 ஆம் திகதி தனது 86 ஆவது அகவையிலே இறையடி எய்திய தருணத்தில் (கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக) நேரில் சமூகமளித்து அவருக்கான இறுதி மரியாதையைச் செலுத்த முடியாமல் போய்விட்டதே என்பது தான். என்றாலும், என்னுயிர் உள்ளவரை பத்மா அம்மாவின் அந்த ஆழிய அன்பும் அழகுப் புன்னகை பூத்த முகமும் என்னுள்ளத்தில் ஆழப் பதிந்தே இருக்கும், இன்ஷா அல்லாஹ்.

லறீனா-இலங்கை

லறீனா

(Visited 130 times, 1 visits today)