யாரேனும் அமெரிக்காவுக்கு எரியூட்டுங்கள் -அமீரி பரக்கா- மொழிபெயர்ப்புக்கவிதை-தமிழில் லறீனா அப்துல் ஹக்

யாரேனும் அமெரிக்காவை எரியூட்டுங்கள்

லறீனா

அவர்கள் சொல்கிறார்கள்
யாரோ சில பயங்கரவாதிகள்
சில காட்டுமிராண்டிகள்
ஓர் ஆப்கானிய மதகுரு செய்ததுதான்,
நமது அமெரிக்கப் பயங்கரவாதிகள் செய்ததல்ல
‘கு க்ளக்ஸ் க்ளான் கிளர்ச்சியாளர் செய்ததல்ல
நிறவெறியர் செய்ததல்ல என்கிறார்கள்.
நீக்ரோக்களின் தேவாலயங்களை எரியூட்டியவர்கள்
அல்லது நம்மைக் கடைந்தேற்றுவதற்கு
மரண வரிசையில் நிறுத்தியவர்கள் அல்லவாம்
அதனைச் செய்தது
ட்ரென்ட் லொட் அல்லது டேவிட் ட்யூக்
அல்லது குயிலியானி அன்றேல் ஸ்கன்ட்லர்கூட
அல்லவாம், ஹெல்ம்ஸ் ஓய்வுபெறுகிறார்.
அதைச் செய்தது
அவர்கள் அல்லதானாம்,
ஆடை போர்த்திய மேகநோயாளர்
கறுப்பரைக் காவுகொள்ளும்
தொற்றுநோய் பரப்பியோர்
நியாயத்தை, பிரக்ஞையுணர்வை
மானிடத்துவத்தின் முழுமையை
தம் மகிழ்வின் பொருட்டாய்
பீதியினுள் ஆழ்த்தியவர்கள் அல்லவாம்
அதனைச் செய்தவர்கள்,
அவர்கள் சொல்கிறார்கள் (யார் சொல்கிறார்கள்?)
யார் அதைச் சொல்கிறார்கள்?
அவர்களுக்குச் செலவளிப்பவர்கள்
பொய் சொல்கிறவர்கள்
முகமூடியணிந்துள்ளவர்கள்
அடிமைகளை வைத்திருப்போர்
பணம்வாரிக் குவிப்பவர்கள்
பெருந்தோட்டங்களால் கொழுத்தவர்கள்
செவ்விந்தியரைப் படுகொலை செய்தோர்

கறுப்பின நிலத்தை நிர்மூலமாக்கியோர்
வோல் ஸ்ட்ரீட்டில் வசிப்போர் சொல்கிறார்கள்.
உன் தலையை மழுங்கடிப்பவர்கள்
உன் தாயை வன்புணர்பவர்கள்
உன் தந்தையை அநீதியாய்க் கொன்றவர்கள்
தார் எடுத்தவர்கள், இறகெடுத்தவர்கள்
தீப்பெட்டி வைத்திருப்போர்,
தீயைக் கொளுத்தியவர்கள்
கூலிக்கமர்த்திக் கொன்றவர்கள்
தம்மைக் கடவுளெனக் கூறிக்கொண்டு
சாத்தான்களாகவே இன்னும் இருப்பவர்கள்
சொல்கிறார்கள்.

தாமே பெரியவர்கள் என்போர்
தாமே மிகச் சிறந்தவர்கள் என்போர்
தாமே இயேசுவின் மறுவுரு என்போர்
தாமே அனைத்தையும் உருவாக்கினோம் என்போர்
மனிதருள் மிக நேர்த்தியானவர்கள்,
மகத்தானவர்கள், மிகுந்த செல்வந்தர்கள்
உன்னை அவலட்சணமானவன் என்றும்
தம்மை லட்சணமானவர்களென்றும்
சொல்லிக் கொள்பவர்கள்
கலையை வரையறுத்தவர்கள்
அறிவியலை வரையறுத்தவர்கள்
வெடிகுண்டை உருவாக்கியவர்கள்
துப்பாக்கிகளை உற்பத்திசெய்தோர்
அடிமைகளை வாங்கி விற்றவர்கள்
உனக்குப் பட்டப்பெயர்கள் சூட்டியவர்கள்
தொடர்கொலையாளி டாஹ்மெர்
பித்துப்பிடித்தவனல்ல என்பவர்கள்
சொல்கின்றார்கள்
யார்? யார்? யார்?
பீட்ரோ ரிக்கோவைக் கொள்ளையடித்தவர்கள்
இந்தியாவை, பிலிப்பீனை, மன்ஹட்டனை
அவுஸ்திரேலியாவை, ஹைப்ரைட் தீவுகளைக்
கொள்ளையிட்டவர்கள்,
சீனர்களிடம் ஓப்பியத்தைத் திணித்தவர்கள்
அவர்களின் கட்டிடங்களை அபகரித்தவர்கள்
அவர்தம் பணத்தினைப் பறித்தவர்கள்
சொல்கின்றார்கள்.
உன்னை முட்டாளென நினைப்பவர்கள்
உன்னைச் சிறையிலடைத்தவர்கள்
பத்திரிகைகளின் சொந்தக்காரர்கள்
அடிமைச் சாசனத்தைக் கையில் வைத்திருப்பவர்கள்
இராணுவத்தை இயக்குபவர்கள்
அந்தப் போலி ஜனாதிபதி, ஆட்சியாளர்
வங்கியாளர் சொல்கின்றார்
யார்? யார்? யார்?
என்னுடையதை அபகரித்தவர்கள்
உன் மூளையைக் குழப்புபவர்கள்
உன் ரொட்டியைப் பறித்தவர்கள்
சொல்கிறார்கள், சமாதானம் தேவையென்று
உனக்குத் தேவை போர்தான் என நினைப்பவர்கள்
எண்ணெய் வளத்தின் சொந்தக்காரர்
உழைக்காமல் கொழுத்தவர்கள்
நிலத்தைப் பிடித்துவைத்திருப்போர்
நீக்ரோவல்லாத ஒருவர்
மிகப் பிரமாண்டமானவர்,
எவரை விடவும் மகத்தானவர்
இந்த நகரின் சொந்தக்காரர்
காற்றையும் நீரையும்
சொந்தமாக்கி வைத்திருப்பவர்
உனது படுக்கையைக் கையகப்படுத்தியவர்
களவும் கொள்ளையும்
மோசடியும் கொலையுமாய் அலைபவர்
பொய்களை உண்மையாக்குபவர்
உன்னை அருவருப்பானவன் என்றழைப்பவர்
மிகப்பெரும் வீட்டில் வசிப்பவர்
மிகப்பெரும் குற்றச்செயல்களைச் செய்பவர்
எப்போது வேண்டுமாயினும்
விடுமுறையில் செல்பவர்
நீக்ரோக்கள் அனேகரைக் கொன்றவர்
அனேக யூதர்களைக் கொன்றுகுவித்தவர்
அனேக இத்தாலியரை, ஐரிஷ் மக்களை
ஆபிரிக்கர்களை, ஜப்பானியர்களை
லத்தீனியர்களை அதிகமாய்க் கொன்றவர்
யார்? யார்? யார்?

கடல்களைச் சொந்தமாக்கி வைத்திருப்பவர்
ஆகாயவிமானங்கள், அங்காடிகள்,
தொலைக்காட்சிகள், வானொலிகள்
அனைத்தையும் கைக்குள் அடக்கியிருப்பவர்
எதையெல்லாம் சொந்தமாக்க முடியும் என
அறியாதவற்றையும்கூட கையகப்படுத்துபவர்கள்
உடைமைக்காரர்களினதும் உரிமையாளராயுள்ள
போலி உடைமையாளர்கள்
புறநகரின் சொந்தக்காரர்கள்
நகர்களை சுரண்டித் தின்போர்
சட்டங்களை ஆக்குபவர்கள்
புஷ்ஷை ஜனாதிபதியாக்கியவர்கள்
கூட்டாட்சிக் கொடி பறக்கவேண்டுமென
நினைப்பவர்கள், ஜனநாயகம் குறித்து
அதிகமும் பேசி மோசடி செய்வோர்
வேதவெளிப்பாடுகளில் சாத்தானாய் இருப்பவர்
666 – பைபிளில் வரும் கொடூரப் பிராணி
யேசுவைச் சிலுவையிலறையத் தீர்மானித்தவர்
யாரென்று அறிந்தவர்
உண்மையிலே சாத்தானின் பக்கமிருப்பவர்
ஆர்மேனியப் படுகொலைகளால்
செல்வம் கொழித்தவர்
மிகப்பெரிய பயங்கரவாதிகளாயிருப்பவர்
பைபிளையே மாற்றியமைத்தவர்
எண்ணற்ற மனிதர்களைப் படுகொலை செய்தவர்
மிகப்பெரும் அட்டூழியங்கள் இழைத்தவர்
உயிர்வாழ்தலில் எவ்வித அக்கறையுமற்றவர்
குடியேற்றங்களை வைத்திருந்தவர்
அதிகளவில் நிலங்களை அபகரித்துக் கொண்டவர்
உலகையே ஆண்டுகொண்டிருப்பவர்
தம்மை நல்லவர் என்றபடி
அநியாயங்கள் அனைத்தையும் அரங்கேற்றுபவர்
உலகின் மிகப்பெரும் படுகொலையாளி
யார்? யார்? யார்?
எண்ணெய் வளத்தைக் கையகப்படுத்தி
இன்னுமின்னும் வேண்டுமென்போர்
பித்தலாட்டமென பிறகு நீ உணர்வதை
நீ நினைப்பதாகத் தீர்மானித்துக் கூறுபவர்
யார்? யார்? யார்?
பின் லாடனைக் கண்டுபிடித்தவர் யார்?
அவர்களே சாத்தான்களாய் இருத்தல் வேண்டும்
சி ஐ ஏ இற்குச் செலவளிப்பவர்கள்
குண்டு வெடிக்கப் போவதை அறிந்தேயிருந்தவர்
பயங்கரவாதிகள்
ஃப்ளோரிடாவுக்கும் ஸான் தியாகோவுக்கும்
விமானமோட்டப் பயில்வது ஏனென்பதைத்
தெரிந்து வைத்திருந்தவர்கள்
இஸ்ரேலியர் ஐவர் ஒரு குண்டுவெடிப்பினைத்
திரையிட்ட நோக்கம் என்னவென
அறிந்தே இருந்தவர்கள்
சூரியனும் திணறும் வண்ணம்
கொழுந்து விட்டெரியும் தீயைக்
கொளுத்த விரும்பியவர்கள்
கடனட்டைகளை உருவாக்கி
மாபெரும் வரிகளை இறுத்தவர்கள்
இனவெறிக்கெதிரான மாநாட்டை
பகிஷ்கரித்து வெளியேறியவர்கள்
மெல்கம் எக்ஸை, கென்னடியை, அவர் சகோதரரை,
மார்ட்டின் லூதர் கிங்கை கொன்றொழித்தவர் யாவர்?
யாருக்கு அதுமிகத் தேவையாயிருந்தது?
லின்கனின் கொலையோடு தொடர்புடையவர்களா?
கிரனடாவை ஆக்கிரமித்தவர்கள்
நிறவெறியால் பணம் சம்பாதித்தவர்கள்
ஐரிஷை ஒரு காலனியாக வைத்திருப்பவர்கள்
சிலியையும் நிககுவாராவையும் வீசியெறிந்தவர்கள்
டேவிட் ஸிபெக்கோ, ச்சிரிஸ் ஹனியை
பிக்கோவை கெப்ரியலை, நெரூடாவை, ஆலன்டேயை
சேகுவேராவை, ஸான்டினோவை கபிலாவைக் கொன்றவர்கள்
லுமும்பாவை, மொன்ட்லனேயை,
பெடி ஷபாஸை. டை, பிரின்ஸஸ் டி,
ரால்ஃப் ஃபெதர்ஸ்டோனை, லிட்டில் பொபியை எல்லாம்
குட்டிச் சுவராக்கியவர்கள்
மண்டேலாவை, தோருபாவை, ஜெரனிமோவை
அஸ்ஸாட்டா, முமியா, கார்வே, டேஷேல் ஹம்மெட்
அல்ஃபியூஸ் ஹட்டொனை எல்லாம்
சிறையிலடைத்து அழகுபார்த்தவர்கள்
ஹுயே நியூட்டனை, ஃப்ரெட் ஹெம்ப்ட்டனை.
மெட்கார் எவர்ஸை, மிக்கி ஸ்மித்தை, வோல்ட்டர் ரொட்னியை
கொன்றொழித்துக் கொண்டாடியவர்கள்
ஃபிடலுக்கு நஞ்சூட்ட முனைந்தவர்கள்
வியட்நாமியர்களை அடக்கிவைத்திடத் துடித்தவர்கள்
லெனினின் தலைக்கொரு விலைவிதித்தவர்கள்
யூதர்களை எரிமுகாமுக்குள் பூட்டிவதைத்தவர்கள்
திரும்ப அதையே செய்ய அவர்களுக்கு உதவியவர்கள்
‘அமெரிக்காவே முதன்மையானது’’
என்று உரத்து முழங்கியவர்கள்
சரி, மஞ்சள் நட்சத்திரம் தரித்தவர்கள்
ரோஸா லக்ஸம்பர்க்கை, லீப்நெக்டைக் கொலைசெய்தோர்
ரோஸன்பேர்க் இரட்டையரின் படுகொலையாளர்
எண்ணிலா நல்லோரை உறையவைத்தும் வதைத்துமாய்
படுகொலை செய்தோர், அழித்தொழித்தோர்
அல்ஜீரியா, லிபியா, ஹெய்ட்டி,
ஈரான், ஈராக், சவூதி, குவைட், லெபனான்,
சிரியா, எகிப்து, ஜோர்தான், பலஸ்தீன்
எல்லா நாடுகளின் செல்வங்களாலும் கொழுத்திருப்பவர்கள்
கொங்கோ மக்களின் கரங்களைத் துண்டித்தோர்
எயிட்ஸைக் கண்டுபிடித்தவர்கள்
இந்தியர்களின் போர்வைகளினூடே
கிருமிகளைப் பரப்பியவர்கள்
கெரோகிப் பழங்குடியினரைக் கொடூரமாய்
இனவழிப்புச் செய்த முனைந்தவர்
மெய்ன் பிரதேசத்தைக் கொளுத்தியவர்கள்
ஸ்பானிய அமெரிக்கப் போரை
ஆரம்பித்து வைத்தவர்கள்
ஷெரோனை அதிகாரத்தில் அமர்த்தியவர்கள்
பெடிஸ்ட்டாவை, ஹிட்லரை, பிப்லோவை
ச்செய்ங்கெய்செக்கை பின்னிருந்து இயக்கியவர்கள்
ஒடுக்குமுறைக்குட்பட்டோருக்கான பாரபட்சம்
தொடர்ந்துமிருக்க வேண்டுமென்றவர்கள்
மறுசீரமைப்பு, புதிய ஒப்பந்த ஒழுங்கு,
புதிய முன்னணி, மகத்தான சமூகம்
இவற்றையெல்லாம் தீர்மானித்தவர்கள்
டொம் ஆஸ் யாருக்கு வேலை செய்வார் என்பதை
கொன்டலீஸா எப்பேர்ப்பட்ட சீஸா என்பதை
தீர்மானித்து வைத்திருந்தவர்கள்
கொன்னலியை ஒரு நீக்ரோ மரப்பாச்சி பொம்மையாக்க
விலைக்கு வாங்கியவர்கள்
ஹோமோ லூகஸுக்கு அறிஞர் விருதினை
அளித்து மகிழ்ந்தவர்கள்
நிக்ருமாவை, பிஷப்பைத் தூக்கியெறிந்தவர்கள்
ரொபெஸனுக்கு நஞ்சூட்டியவர்கள்
டுபொய்ஸை சிறையிலிடத் திட்டமிட்டவர்கள்
ஜமீல் அல் அமீனை, ரோஸன்பேர்க் இரட்டையரை
கார்வேயை, ஸ்கொட்பொரோ போய்ஸை
சட்டகமிடத் துடிப்பவர்கள்
ஹொலிவுட் 10 இனை வரையறுப்பவர்கள்
ரீச்ஸ்டேகைத் தீயிட்டவர்கள்
உலக வர்த்தக மையம்
குண்டுவைத்துத் தகர்க்கப்படப்போவதை
நன்கறிந்திருந்தவர்கள்
இரட்டைக் கோபுரங்களில் பணிபுரியும்
4000 இஸ்ரேலியப் பணியாளரை
அன்று வீடுகளில் தங்கியிருக்கச் சொல்லியிருந்தவர்கள்
ஏன் அன்று ஷெரோன் அப்பாலேயே இருந்துவிட்டார்?
யார்? யார்? யார்?
குண்டுவெடிப்புகளிலேயே மிகக் கோரமானதென
பத்திரிகைகள் கூறியிருந்தன
கொடிய சாத்தானின் முகம் அதில் தெரிந்தது
போரினால் பணம் பண்ணுபவர்கள்
பயத்தையும் பொய்களையும் விற்று
வயிறு வளர்ப்பவர்கள்
ஏகாதிபத்தியத்தாலும் தேசிய அடக்குமுறையாலும்
பயங்கரவாத வன்முறைகளாலும்
பசியாலும் வறுமையாலும்
இப்படித்தான் உலகம் இருத்தல் வேண்டுமென
எப்போதும் நினைப்பவர்கள்
நரகின் ஆட்சியாளன் யார்?
அதிகாரம் மிகைத்தவன்
நீ ஒருபோதும் பார்த்திராத கடவுளா?
ஆனால், எல்லோரும் பார்த்திருக்கிறார்கள்
உன் வாழ்வில், உன் மூளையில், உனக்குள்
ஒரு கோரமான குண்டுவெடிப்பைப் போன்ற
கொடிய சாத்தான்
ஓர் ஆந்தையைப் போல
எல்லா இரவுகளிலும் எல்லாப் பகல்களிலும்
நீ கூர்ந்து கவனித்தால்
நரக நெருப்பினில் கிளைக்கும் அமில வாந்தியைப்போல
வெறிமிகைத்த பைத்திய நாய் போல்
வெடித்துக் கிளம்பும் பெருநெருப்பில்
மேலெழும் அந்தக் கேள்வியைச் செவிகூரலாம்
யார்? யார்? யார்?
யா……ர்? யா…………………..ர்?

ஆங்கிலத்தில் : அமீரி பரக்கா
தமிழில் : லறீனா

000000000000000000000000000000

கவிஞர் பற்றிய சிறு குறிப்பு :

லறீனா 2002 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிவ் ஜேர்ஸி கவிஞர்கள் குழுமத்தின் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர் பரக்கா. கவிதையானது அதன் வாசகர்களுக்கு அழகியல் அனுபவத்தைக் கொடுப்பதை விட அவர்களைப் பிடித்து உலுக்க வேண்டும் என்பதே பரக்காவின் கவிதையியல் கோட்பாடாகும். விருது வழங்கும் விழாவுக்குச் சில வாரங்களின் பின்னர் 9/11 பற்றிய தனது கவிதையில் குறித்த பயங்கரவாதத் தாக்குதல் பற்றி அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷும் இஸ்ரேலியர்களும் முன்கூட்டியே அறிந்தே இருந்தனர் என்ற கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இவரது இக்கூற்றானது முன்னாள் நிவ் ஜேர்ஸியின் ஆளுநர் ஈ. மெக்ரீவி, அமெரிக்க சட்டசபை உறுப்பினர்கள், அவதூறுகளுக்கு எதிரான அமையம் உள்ளிட்ட ஒரு குறிப்பிட்ட வாசகர் பரப்பினரிடையே பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. செமிட்டிய எதிர்மனோபாவம் குறித்த குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன. கவிஞர்கள் குழுமத்தில் இருந்து பரக்கா ராஜினாமா செய்யவேண்டும் என ஆளுநரால் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தபோது, அவருக்கு எதிராகக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பரக்காவுடன் நேரடியாக மோத முடியாத ஆளுநரும் சட்டசபை உறுப்பினர்களுமாய்ச் சேர்ந்து, நிவ் ஜேர்ஸி கவிஞர்கள் குழுமத்தில் அவரது உறுப்புரிமையை ரத்துச் செய்தனர். இது உண்மையில் பேச்சுரிமைக்கு எதிரான செயல்பாடாகும்.

அமீரி பரக்கா சர்ச்சைகளுக்குப் புதியவரல்ல. உண்மையில், அவரது இலக்கிய வாழ்வு முழுவதிலும் அனேகமாக எல்லா மேடைகளிலுமே அப்படியான சர்ச்சைகள் மேற்கிளம்பக் காரணமாகவே இருந்துள்ளார். அவரது “Somebody Blew Up America” எனும் கவிதை ஏற்படுத்திய பெரும் சர்ச்சையானது அதன் மிகக் கனதியான உட்கருத்தைக் குவிமையப் படுத்துவதை விட்டும் மக்களைத் திசைதிருப்பக் கூடியதாகவும் இருந்தது என்பதையும் மறுப்பதற்கில்லை. அது பற்றிக் குறிப்பிடும் ஊடகவியலாளர் ஹெரமி பியர்ஸ்,
இக்கவிதையானது, வரலாறு முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களைப் பிரகடனப்படுத்துவதாக அமைந்துள்ளதோடு, உலகமெங்கிலும் இடம்பெற்று வரும் அரசியல் அடக்குமுறைகளுக்கு எல்லாம் யார் பொறுப்பு என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்பிக் கொண்டிருக்கிறது’என்கின்றார்.

லறீனா

லறீனா

(Visited 126 times, 1 visits today)