புதிய லெட்சுமி-சிறுகதை மொழிபெயர்ப்பு-லறீனா அப்துல்ஹக்

லறீனா அப்துல்ஹக்
ஓவியம்: டிஷாந்தினி நடராசா

வீட்டில் எப்போதும் இருக்கத்தக்கதாக ஒரு பெண்ணைத் தேடித் தருமாறு அக்காவுக்கு ஒரு தகவல் அனுப்பினேன். அதற்கு முக்கிய காரணம் லெட்சுமி மூணு – நாலு மணிநேரத்தில் போய்விடுவதுதான். லெட்சுமியின் மகளுக்குப் பிள்ளை பிறந்ததில் இருந்துதான் வீட்டுக்குப் போவதில் அவளுக்கு இவ்வளவு அவசரம். அந்தப் பிள்ளை பிறந்ததிலிருந்து லெட்சுமி தேங்காயைத் துருவுவதற்குப் பதில் தோண்டத் தொடங்கியிருக்கிறாள். ‘இந்தத் தேங்காய்ச் சம்பலைச் சாப்பிட முள்ளுக்கரண்டியும் கத்தியும் தேவைப்படும்’ என்று ஜயதேவ சொன்னதும்கூட அந்தப் பிள்ளைப் பிறப்புக்குப் பிறகு நடந்த சம்பவம் தான். தேங்காய் துண்டு துண்டாக இருந்தது. அவள் வேலைக்கு வந்த புதிதில் தேங்காயுடன் நேசம் கொண்டவள் போல மெதுவாகத்தான் அதைத் துருவுவாள். வெங்காயத் துண்டு இலகுவாக அகப்படாத அளவுக்கு மெல்லிசாகத்தான் அதனை அரிந்தாள். ஒரு வகையில் பார்த்தால், அப்படி எல்லாம் இருந்த லெட்சுமிக்கு இப்போது வந்துள்ள அவசரம் தான் இதெல்லாவற்றுக்கும் காரணம்.

லெட்சுமியின் மருமகன் வெளிநாட்டில் இருக்கிறான். அந்த மனிசன் பிள்ளையைத் திரித்துவக் கல்லூரிக்கோ சர்வதேசப் பாடசாலைக்கோ அனுப்பிப் படிப்பிக்கச் சொல்லி இருக்கிறான் போல. லெட்சுமி அவசர அவசரமாய்த் தேங்காய் துருவுவதும், அரிசியை அரித்துக் கழுவுவதும், குடத்தைக் கவிழ்ப்பது போலக் கறிகளுக்கு உப்புப் போடுவதும் பொடியனை இன்டர்நேஷனல் ஸ்கூலுக்கு அழைத்துக்கொண்டு போக அவசரப்படுவதைப் போல இருக்கும். அந்தப் பிள்ளைக்கு இப்போதுதான் இரண்டு மாசமாகிறது. மருமகன் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் அழைப்பெடுத்துப் பேசுவான். அதுமட்டுமில்லாமல் ஒரு மாசத்துக்கு முந்தி லெட்சுமிக்கு ஒரு செல்ஃபோனும் எடுத்துக் கொடுத்திருக்கான். சரியாக லெட்சுமி எங்கள் பிள்ளையைக் குளிப்பாட்டும் நேரத்தில் தான் அவனும் சவூதியிலிருந்து அவளுடைய தொலைப்பேசிக்கு அழைப்பெடுத்துக் கதைப்பான். அதென்றால் புதினமான விஷயம் தான். அந்த நேரத்தில் தானாம் அந்தாளுக்கு தேநீர் இடைவேளையோ என்னவோ. அப்படி ஏதோ ஒன்று. அந்த மனுஷன் சிலவேளைகளில் எனக்கும் அழைப்பெடுத்து, “மெடம், லெட்சுமியைக் கொஞ்சம் வீட்டுக்கு அனுப்பி பிள்ளைக்குக் காய்ச்சல் எப்படி இருக்கு எண்டு பார்க்கச் சொல்லுங்களன். தர்ஷனீட ஃபோன் என்கேஜாகவே இருக்கு” என்று சொல்லுவான். இனி என்னதான் செய்ய? நானும் இனி அவளை அனுப்பி வைப்பேன். இப்படியான நிலைமையில் தான் நாங்கள் லெட்சுமி விஷயத்தில் கடைசியாக ஒரு தீர்மானத்துக்கு வர நினைத்தோம்.

அடுத்தது ஜயதேவ. லெட்சுமியை வேலைக்கு எடுக்கும் விஷயத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஜயதேவவுக்கு இரண்டக மனநிலைதான். ‘நாங்களாவது தமிழாக்களை வேலைக்காரராக எடுக்காமல் இருக்க முயற்சிக்கக்கூடாதா?’ அவர் அப்படித்தான் கேட்டார். தேடத் தேட வருவதெல்லாமே தமிழ்ப் பெயர்கள். நாங்கள் இந்த நகரத்துக்குப் புதிது. அதனால், அடுத்த வீட்டு அக்காதான் யார் யாரிடமோ தகவல் அனுப்பினார். அவங்களுக்குக் கண்டி நகரத்தில் ஒரு சில்லறைக்கடை இருக்கிறது. அதனால், தகவல் சட்டென்று போனது. ஆனாலும், வந்ததெல்லாம் தமிழ்ப் பெயர்கள்.

“அதிலிருந்து என்ன தெரியுது? கண்டியில் இருக்கிற ஏழை மக்களில்  தமிழாக்கள் தான் அதிகம்” ஒருமுறை ஜயதேவ சொன்னார்.

“அதெப்படிச் சொல்லுவீங்க? அந்த முன்வீட்டில் இருப்பது லலிதா ஜுவலர்ஸ் சொந்தக்காரர். அந்த வீடே ஒரு மாளிகை போலிருக்கே! அதில் உள்ள ரூஃப்டொப் கார்டனிலிருந்து பார்த்தால் உன்னஸ்கிரியவும் நக்கிள்ஸும் தெரியுமாம்… ஆக்கள் சொல்லிக்கிறாங்க”.

“அது சரி! அப்படியான தமிழ் வீடுகள் எத்தனை இருக்கு? தவிர, அந்த மாளிகையில் வேலை செய்றவங்க எல்லாம் யார்? அவங்களும் தமிழாக்கள் தானே?”

“எது எப்படியோ, எனக்கெண்டால் ரெண்டு பிள்ளைகள்ட வேலைகளோடு வீட்டு வேலைகளையும் செய்யேலாது. நீங்க வீட்டுல இருக்கிற நேரத்துல ஒரு புத்தகத்தை விரிச்சிவைச்சுக்கொண்டு இருக்கிறீங்களே தவிர, ஏதாச்சும் உதவி ஒத்தாசையாச்சும் செய்யிறீங்களா?”

“அதுக்குப் பேரு புத்தகத்தை விரிச்சி வைச்சுக்கிறதில்ல, வாசிக்கிறது. வாசிக்கிறதும் ஒரு வேலைதான். அதுவும் என் வேலையில் ஒரு பகுதிதான். கெம்பஸில் அதை ரிஸர்ச் செய்யிறது என்று சொல்லுவாங்க.” ஜயதேவ வெற்றிவீரராய் ஒரு கேலிச் சிரிப்பை உதிர்த்தார். நான் வாயை மூடிக்கொண்டேன்.

“மற்றது… நானும் யாரையாச்சும் தேடிக்கொண்டுதான் இருக்கிறன்.” ஜயதேவ சொன்னார். அந்தச் சொற்களின் தொனியில் ஒருவிதக் கோபம் இருந்தது. ‘புத்தகமொன்றை விரிச்சு வைச்சுக் கொண்டிருக்கிறது’ என்ற சொல்லைச் சொல்லாமல் இருந்திருக்கலாம் என்றுதான் எனக்கும் தோன்றியது. என்றாலும், இப்போது அதை மாற்ற முடியாது. புத்தகம் வாசிக்காட்டாலும் அவருக்கு வீட்டு வேலைகள் பற்றி எந்த அக்கறையும் இல்லை. வேளாவேளைக்குச் சாப்பாடு எப்படி மேசைக்கு வருகிறது,  அயர்ன் பண்ணிய உடுப்பு எப்படி கைக்கு வருகிறது என்றெல்லாம் அவர் யோசித்துப் பார்ப்பதில்லை. ஆனால்,

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடக்கும் அநியாயங்களைப் பற்றியெல்லாம் மணித்தியாலக் கணக்கில் கதைப்பார். தமிழ் மக்களைப் பற்றி மனிதாபிமான நோக்கில் கதைப்பதால் அவருக்குக் கிடைக்கும் மனநிறைவைப் போல, வீட்டில் எனக்கிருக்கும் வேலைப்பளுவைப் பற்றி அக்கறை கொள்வதால் அவருக்கு எந்த நிறைவும் ஏற்பட்டு விடுவதில்லை.

நான் சுமங்கலிகா அக்காவிடம், ‘ஐயோ அக்கா, எப்படியாச்சும் யாரையாச்சும் தேடித்தாங்களேன்’ என்று கேட்டேன்.

சுமங்கலிகா அக்கா அனுப்பிய தகவலால் தான் லெட்சுமி வந்து சேர்ந்தாள். அப்போது ஜயதேவ வீட்டில் இருக்கவில்லை. லெட்சுமி வரும் தினத்தையும் நேரத்தையும் என்னிடம்கூடக் கேட்காமல் சுமங்கலிகா அக்காவே ஒழுங்கு செய்திருந்தார். அவர் லெட்சுமியை இன்டர்வியூ செய்வதற்கு அந்த நேரத்தில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். விசாரித்துப் பார்த்ததில், லெட்சுமி சுமங்கலிகா அக்காவின் வீட்டுக்கு வேலைக்கு வரும் மாலினியின் பெரியம்மாவின் மகள் என்று தெரிய வந்தது. மாலினிதான் லெட்சுமியை அனுப்பி வைத்திருக்கிறாள். ஆனால், அதைப் பற்றி மாலினி  சுமங்கலிகா அக்காவிடம் எதுவுமே சொல்லி இருக்கவில்லை.

“பாரேன் இனி! உங்கட ஆக்கள் செய்யிறதெல்லாம் ஏமாற்று வேலை தானே? இப்படி ஏமாற்று வேலை செய்தா, நான் உன்னை வேலைக்கு எடுக்க வேணாம் என்று நோனாகிட்ட சொல்லிடுவேன்.”

“பொய் சொன்னது மாலினி தானே, நானில்லையே! நான் இப்போ உண்மையைச் சொன்னதால் தானே நோனாவுக்கும் தெரிஞ்சது?” லெட்சுமி சிரித்துக் கொண்டே சொன்னாள். வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தை நான் அவளின் கண்களில் பார்த்தேன். அவளின் பேச்சுச் சிங்களத்தில் ஒருவிதத் தமிழ்த் தொனி லேசாகத்தான் ஒட்டியிருந்தது. Boru (பொய்) என்ற சிங்களச் சொல்லை Poru என்றோ, Aeththa (உண்மை) என்ற சிங்களச் சொல்லை ‘எத்த’ என்றோ, Waessa என்ற சிங்களச் சொல்லை வெஸ்ஸ என்றோ உச்சரிக்கும் சிங்களமல்ல அது. உடனே ‘லெட்சுமி எங்களுக்குச் சரிப்பட்டு வருவாள்’ என்று எனக்குத் தோன்றியது. காரணம், அப்படி இருந்தால்தான் ஜயதேவ அவள் தமிழ்ப் பெண் என்பதை உணர்ந்துகொள்ள மாட்டார். சுமங்கலிகா அக்கா தன்னுடைய வீட்டில் உடுப்புக் கழுவிக் கொண்டு இருந்த மாலினியை அழைத்துக்கொண்டு வந்திருந்தாள்.

“நீ எனக்குப் பொய் தானே சொல்லி இருக்கிறாய்?”

“ஏன் நோனா?” மாலினியின் அழகிய பெரிய தமிழ் விழிகள் திடுக்கிட்டு மேலும் விரிந்தன. மாலினி லெட்சுமியை விட அழகானவள்.

“இவள் உன் பெரியம்மாவின் மகள் என்ற விஷயத்தை நீ எனக்குச் சொல்லவில்லை தானே?”

மாலினி எதுவும் பேசவில்லை.

”கொஞ்சம் பயங்காட்டினால் மாலினி நல்ல அழகு. கண்ணு ரெண்டும் கழுத்தும் ஐஸ்வர்யா ராய்ட மாதிரித் தான், இல்லையா? சிங்களப் பிள்ளையாக இருந்திருந்தால், சிரச டிவியில் ஏதாச்சும் ஒரு நிகழ்ச்சிக்கு அனுப்ப இருந்தது. சிரச டிவி செய்ய வேண்டியதெல்லாம், இவங்களும் ஆடத் தக்கதாக ஏதாச்சும் ஒரு நிகழ்ச்சியைத் தயாரிக்கிறது மட்டும்தான். ‘அழகான வேலைக்காரி’ போல ஏதாச்சும் ஒண்டு…” சுமங்கலிகா அக்கா எங்கள் எல்லோருக்குமே கேட்கும் விதமாகக் கூறினார். தன்னுடைய அழகைப் பற்றி மாலினி வெட்கப்படுவதைப் பார்க்க இன்னும் அழகாக இருந்தது. லெட்சுமியின் பயமெல்லாம் மாலினியின் பொய்யினால் தன் கைக்கெட்டிய வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்பதாக இருந்தது. நானோ, சுமங்கலிகா அக்கா ‘வேலைக்காரி’ என்ற சொல்லைப் பயமே இல்லாமல் உச்சரித்ததை நினைத்துத்தான் பயப்பட்டேன்.

சுமங்கலிகா அக்காவும் ஓர் அழகான பெண் தான். அவரை அந்த வீட்டுக்கு மருமகளாகக் கொண்டு வந்திருந்ததே அவருடைய அழகுக்காகத்தான். அவர் வீட்டில் இருக்கும்போதுகூட ‘ஃபெஷன் பக்’, ‘நோ லிமிட்’ போன்ற கடைகளில் வாங்கிய புத்தம் புதிய மோஸ்தர் உடுப்புகளைத்தான் உடுத்துக் கொண்டிருப்பார். நான் அழகு என்பதால் அல்லது நான் அழகாக இருப்பதாக அவர் நினைப்பதால்தான் என்னோடுகூட அவர் பழகுகின்றார். ஆனாலும், மாலினியையும் லெட்சுமியையும் ‘நீ. நீ. ‘ என்று அதட்டி அதட்டிப் பயமுறுத்திய விதத்தில் அவர் ‘நோ லிமிட்’டில் வாங்கிய ஆடையின் அழகு அடிபட்டுப்போய், அவருடைய அழுக்கான உடம்பில் ஓடும் மலமும் மூத்திரமும் வெளித்தெரிவது போலிருந்தது. மாலினியின் பயந்த அழகு, சுமங்கலிகா அக்காவின் பயமுறுத்தும் அழகைவிட எழில் மிக்கது என்று எனக்குத் தோன்றிற்று.

000000000000000

நாம் இருவரும் முற்போக்காளர்கள் என்று உலகோர் நினைக்க வேண்டும் என்பதுதான் எனக்கும் ஜயேக்கும் விருப்பம். அதனால், எங்கள் மகன் பிறந்தது முதலே ‘கையுதவிக்கு’த் தமிழர் அல்லாத ஒருவரையே தேடினோம். இதுவரை கண்ணில் காணாத அப்படியான ஒருவரை விளிக்கக்கூட ‘வேலைக்காரி’ என்ற சொல்லை நாம் பாவித்ததில்லை. எங்களோடு கெம்பஸில் இருந்த அனேகமானவர்களுக்கு இப்போது முப்பது, நாற்பது வயதாகிறது. அவர்கள் ஓரளவு பெரிய உத்தியோகங்களில் உள்ளனர். விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், வக்கீல்கள், பணிப்பாளர்கள், என்.ஜீ.ஓ. நிர்வாகிகள், பிரதேசசபை மந்திரிகள், அமைச்சகச் செயலாளர்கள், விளம்பரதாரர்கள், தொலைக்காட்சி நாடக இயக்குநர்கள் என்று பலர். இவர்களிடையே வீட்டு வேலைக்காக இருப்போரை அடையாளப்படுத்தப் பயன்படும் ஒரு புதுப் பிரயோகம் உள்ளது, ‘அம்மே ஒருத்தர்’. ‘அம்மா ஒருவர்’  அல்ல, ‘அம்மே ஒருத்தர்’ தூர விலத்தாத, அருகிலும் கொள்ளாத, உயர்த்துவதாகவோ தாழ்த்துவதாகவோ அமையாத ஒரு சொல். ஆனால், அப்படி ‘அம்மே ஒருத்தர்’ என்று சிங்கள வேலைக்காரியைத்தான் அழைப்பார்கள். நாங்களும் மகன் பிறந்ததிலிருந்து ‘அம்மே ஒருத்த’ரைத் தேடிக்கொள்ள முயன்றோம். சரிவரவில்லை. எங்கள் இருவரின் அம்மாமாரும் மாறி மாறி வந்துபோனார்கள், அவ்வளவுதான். அனேகமான நேரங்களில் நான் தனியே தான்.

எங்களுக்குக் கிடைத்ததுகூட எங்களோடேயே தங்கி இருக்கக்கூடிய ‘அம்மே’ ஒருவரல்ல. மாறாக, மூன்று நாலு மணிநேரம் மட்டும் வந்துவிட்டுப் போகும் லெட்சுமி ஒருத்திதான். நாங்கள் எங்களை  முற்போக்காளர்களாகக் காட்டிக் கொண்டதற்கென்ன, நாங்கள்கூட லெட்சுமியை ‘அம்மே’ என்று அழைக்கவில்லை. உண்மையில் ‘அம்மே’ ஒருத்தரைத் தேடி எடுத்துக்கொண்ட யாருமே அவர்களை ‘அம்மே’ என்று அழைப்பதில்லை என்று எங்களுக்குப் பிறகுதான் தெரியவந்தது. அதனால், லெட்சுமியை ‘லெட்சுமி’ என்றே அழைப்பதைப் பற்றி எனக்கு எவ்விதக் குற்றவுணர்வும் தோன்றவில்லை. அடுத்தது, நானும் ஜயேயும் லெட்சுமி வேலைக்குச் சேர்ந்து சில நாட்களில் இருந்தே ‘நாம் கொடுக்கும் சம்பளத்துக்கு வேலை சரியாக நடக்கிறதா?’ என்று அளந்தும் நிறுத்தும் பார்க்கத் தொடங்கிவிட்டோம். வேலைக்கு வந்த புதிதில் லெட்சுமியின் சாப்பாடுதான் மிகவும் சுவையான சாப்பாடு. இட்லியும் தோசையும் சாம்பாரும்தான் இலங்கையிலேயே சிறந்தவை. நாங்கள் எங்கள் நண்பர்களைக்கூட இரவுணவுக்கு அழைத்து லெட்சுமியின் திறமையை, என்னமோ எங்கள் திறமை போலவே காட்டினோம்.

0000000000000000

இதெல்லாம் சில மாதங்களே இருந்தன. லெட்சுமியின் மகளுக்குப் பிள்ளை பிறந்தது. அரசாங்க ராணுவம் கிளிநொச்சியையும் சுற்றி வளைக்கத் தொடங்கியிருந்தது.

சுமங்கலிகா அக்கா வீட்டுக் காரிலும் சின்னதாக ஒரு தேசியக் கொடி வந்தமர்ந்தது. ராணுவ வீரர்கள் கிரிக்கெட் வீரர்களைவிடப் பெரிய தேசிய வீரர்களாக மாறிப் போனார்கள். அப்பாவித் தமிழ் மக்களை மனிதக் கவசங்களாகப் பயன்படுத்தும் புலிகளுக்கும், அந்தக் கவசங்களைத் துளைக்கும் வகையில் சுட்டுத்தள்ளும் ராணுவத்தினருக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் அறிவுஜீவிகளின் கூட்டு மனுவொன்றில் ஜயதேவவும் கையொப்பம் இட்டிருந்தார்.

ஆனாலும், லெட்சுமியின் தோசைகளில் இருந்த மிருதுத் தன்மை காணாமல் போயிருந்தது. எவ்வளவு உழுந்து மாப்போட்டாலும் கோதுமை மாவின் ருசிதான் வந்தது. லெட்சுமி செய்த தேங்காய்ச் சம்பலைச் சாப்பிட முள்ளுக் கரண்டியும் கத்தியும் தேவைப்பட்டதுகூட இக்கால கட்டத்தில்தான்.

ஜயதேவவும் யுத்தத்துக்கு எதிராகக் கதைப்பதை விட்டுவிட்டார். நாங்களும் ஒரு சின்ன சிங்கக்கொடியை எங்கள் காரில் பொருத்திக் கொண்டோம். ஆனால், என்னுடைய வாய் சாதுரியத்தினால்தான் அது நடந்தேறியது. அப்படி இல்லாவிட்டால் தலதா மாளிகை அருகிலும் மல்வத்தே விகாரை அருகிலும் உள்ள செக் பொய்ன்ட்களில் உள்ள பொலிஸ்காரர்கள் ஏதோ தேசத்துரோகியைப் பார்ப்பதைப் போலத்தான் எங்களைப் பார்ப்பார்கள். மகனை ட்ரினிட்டி கொலேஜில் கொண்டுபோய் விடவும் எடுத்துக்கொண்டு வரவும் நான் தானே போகணும்! மற்றது, ஸ்கூலுக்கு நேரகாலத்துடனே வந்துவிடும் அம்மாமார் ‘ஃபெஷன்பக்’, ‘நோலிமிட்’ பற்றிப் பேசிய அளவுக்கே இப்போதெல்லாம்  சிங்கக்கொடியைப் பற்றிப் பேசுகிறார்கள். தங்கள் தந்தையைப் பற்றிப் பெருமிதத்தோடு கதைக்கும் சிங்கசீவலிகளைப் போல… சரத்சந்திரவின் நாடக வசனங்கள் மட்டும்தான் குறைச்சல்.

கூந்தலை ‘ஸ்ட்ரெய்ட்’ பண்ணி ‘டெனிம் ஜீன்ஸ்’ உடுத்த இருபதுகளைக் கடந்துகொண்டிருக்கும் இளம் ‘மொடர்ன்’ அம்மாமார் மத்தியில்தான் சிங்கக் கொடியைப் பற்றிய பேச்சும் அதிகமாக இருந்தது.

இங்கிலாந்தில் நாலு வருஷம் இருந்த என்னிடம்கூட இல்லாத ‘மொட்’ தான் அந்த அம்மாமார் ‘செட்’டிடம் இருந்தது.

அந்தக் கூட்டத்தைக் கண்டுதான், “பிள்ளை ட்ரினிட்டியில் – டெனிமோ பிருஷ்டத்தில்… சிங்கக்கொடி கையில் – இனவாதம் மனசில்… இவர்கள் தான் இலங்கையின் இனவாதப் புதுபௌத்தர்கள்” என்ற கூற்றை ஜயதேவ உருவாக்கினார். இதை ‘ஸ்டாஃப் மீட்டிங்’ ஒன்றில் சொல்லப்போய் யாரோ அவரை ‘தேசத்துரோகி’ என்று மொட்டைப் போஸ்டரும் ஒட்டி இருந்தார்களாம். இந்தக் கதை வாய்க்கு வாய் போனதால், வீட்டுக்கு வந்த அனாமதேயத் தொலைபேசி அழைப்புகளுக்கு அளவே இல்லை. ‘வெளிநாட்டான்’ அது இது என்றெல்லாம் எத்தனையோ அடைமொழிகள். நளிந்த டி சில்வா ‘திவயின’ பத்திரிகையில் ஏசக்கூடிய எல்லாச் சொற்களையும் சொல்லி இவரை ஏசி இருந்தார். அதற்குப் பிறகு ஜயதேவ கொஞ்சம் அடங்கித்தான் போனார்.

இதற்கெல்லாம் இடையில் லெட்சுமிக்கு சாப்பாட்டை ருசியாகச் சமைக்கக்கூட பொறுமை இல்லை. அகத்திக் கீரையை வெறுமனே இரண்டாக வெட்டித்தான் சுண்டினாள். அதை மெல்லிசாக அரியுமளவுக்கு அவளுக்குப் பொறுமையில்லை. ஒன்றில் மருமகன் கோல் எடுப்பான். இல்லாவிட்டாள் மகள் கோல் பண்ணுவாள். எந்த வேலையைச் செய்தாலும் அவளுடைய ஒரு கண்ணும் ஒரு காதும் செல்ஃபோன் மீதே இருந்தது. அந்தக் கதையை என்றால் நான் சுமங்கலிகா அக்காவிடமும் சொன்னேன். அவர் மாலினியிடம் சொல்லி, மாலினி லெட்சுமியிடமும் சொல்லி இருந்தாள். அதன் பின் இரண்டு நாட்களுக்கு அவள் ஃபோனை எடுத்துக்கொண்டு வந்திருக்கவில்லை. ஆனாலும், அந்த இரண்டு நாளுமே பேரனைப் பார்த்துவிட்டு உடனே வந்து விடுகிறேன் என்று, எனக்குக் குழம்பைப் பார்த்து அடுப்பிலிருந்து இறக்கும் வேலையையும் பொறுப்புத் தந்துவிட்டுப் போய்விட்டாள். அன்றைக்கெல்லாம் எனக்குச் சிங்கக் கொடியொன்றை வாங்கியே தீர வேண்டும் என்கிற அளவுக்குக் கோபம் கோபமாக வந்தது.

ஜயதேவ எவ்வளவுதான் வேண்டாம் என்றாலும் நான் எந்த நேரமும் டிவியைப் போட்டுக்கொண்டேதான் இருந்தேன். ஒரு மணிநேரத்துக்கு ஒருதரம் யுத்தத்தை நேரலையாகக் காட்டினார்கள் அல்லவா? லெட்சுமியோடு கோபம் வரும்போதெல்லாம் நான் சத்தத்தைக் கொஞ்சம் கூட்டியும் வைப்பேன். சும்மா ஏன் பொய் சொல்லுவான்? எனக்கு இப்போது இதையெல்லாம் நினைவுபடுத்தி மீண்டும் சொல்லும்போது வெட்கமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது, நாங்களும் மனிசர்கள் தானே? மற்றது,

புலிகள் செய்த அநியாயத்துக்கெல்லாம் அவன்களுக்கு இப்படி நடப்பது நல்லது என்று நானும் ஜயேயும் பேசிக்கொண்டோம். என்றாலும், லெட்சுமிக்குக் குத்திக்காட்டும் விதத்தில் மாட்டுத்தனமாக டிவி போட்டதெல்லாம் குரூரமானது தான் இல்லையா?

சிலவேளைகளில் லெட்சுமி யுத்தத்தை நேரலையாகப் பார்த்துவிட்டுத் திரும்பவும் குசினிப் பக்கம் போகும்போது, அவளுடைய முகத்தில் எத்தகைய உணர்வு பிரதிபலிக்கிறது என்பதை நோட்டமிட நான் பாடுபட்டதெல்லாம் அதை விடவும் குரூரமானது. நான் எந்த வேலையைச் செய்துகொண்டு இருந்தாலும், அந்த நேரத்தில் லெட்சுமியின் முகம் தெரியக்கூடிய ஓர் இடத்துக்குப் போய் எறிகணை போட்ட ராணுவ வீரனைப் போல் இருந்திருக்கிறேன். அப்படிக் குரூரமாக நடந்து கொண்டதும், ஏதோவொரு மர்மமான இனவாத மிருகமொன்று கண்ணுக்குத் தெரியாத ஓர் உலகத்திலிருந்து கையை நீட்டி என்னுடைய நெற்றியிலும் சிங்க உருவத்தைப் பச்சை குத்தியதைப் போல எனது முகமும் விகாரமடைந்து கோரமாக மாறியதைப் போன்றதோர் உணர்வேற்படும். இப்போது நினைவுபடுத்திச் சொல்லும்போது மட்டுமல்ல அன்றைக்கும் எனக்குள் அவ்வுணர்வு இருந்தது.

எங்கள் இராணுவம் கிளிநொச்சியையும் கைப்பற்றியபடி முன்னகரும்போது சுமங்கலிகா அக்காவின் புருஷன் எங்களுக்கும் ஒரு சிங்ககொடியைக் கொண்டு வந்து தந்தார். அதுவரையும் சிங்கக் கொடியொன்றை எங்கள் வீட்டுக் ‘கேட்’டில் வைக்காமல் இருந்ததை ஒரு பெரிய குறையாக அவர்களின் வீட்டில் கருதியதும், அது மிகப்பெரும் கதையாடலுக்கு உட்பட்டு இருந்துள்ளதையும் அவர் அதைத் தந்த விதத்திலேயே தெரிந்து போயிற்று.

‘‘நாங்களெண்டால் எங்கள் பொடியன்கள் மன்னாரிலிருந்து முன்னேறிச் செல்லத் தொடங்கும்போதே போட்டுட்டோம். உங்களுக்குச் சோம்பலெண்டால் நானே போட்டு விடுறேன்.’’ ஜயசிங்ஹ முதலாளி சொன்னார். ‘விருப்பமில்லாட்டில்’ என்று சொல்லுவதற்குப் பதிலாகத்தான் மனுஷன், ‘சோம்பலெண்டால்’ என்கிறார் என்பது அவரது பேச்சுத் தொனியிலேயே புரிந்தது.

‘’இல்லை, நாங்கள் யாரிட்டயாச்சும் சொல்லிப் போட்டுக் கொள்ளுறம்’’

இவ்வளவு நாளும் நாங்கள் அதற்கென்று ஒரு தடியைத் தேட, வெட்டியெடுக்க யாருமில்லாத காரணத்தால் தான் கொடியொன்றைப் போடவில்லை என்று உணர்த்துமாப் போல் ஜயே சொன்னார். ‘யுத்தத்தால் மட்டும் சமாதானத்தை ஏற்படுத்திவிட முடியாது’ என்று ‘ராவய’ பத்திரிகையாளரிடம் ஜயதேவ சொன்னதை ஜயசிங்ஹ முதலாளி படித்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் வீட்டில் ‘திவயின’ பத்திரிகை மட்டும் தான் எடுப்பார்கள்.

”இந்தக் காலத்தில் ஒரு வீட்டில் தேசியக் கொடி இல்லை என்பது வீட்டுக்குக் கூரையொன்று இல்லாததைப் போலப் பெரியதொரு குறை’’ ஜயதேவ சொன்னார். அதைக்கேட்டு எனக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

ஆனாலும், எங்களுக்கு அந்தக் கொடியைப் போட்டுக்கொள்ள முடியாமல் போய்விட்டது. சிங்கத்தை மடித்து மடித்து புத்தக ராக்கை ஒன்றின் மேல் வைத்தது வைத்ததுதான். அதை மறந்தே போய்விட்டோம். எங்கள் கவனமெல்லாம் லெட்சுமிக்குக் கொடுக்கும் சம்பளத்துக்கு ஏற்ப அவளிடமிருந்து எப்படி வேலை வாங்குவது, எங்களுக்குப் பிடித்த மாதிரி சாப்பாடுகளை எப்படி ஒழுங்காகச் செய்ய வைப்பது என்ற விஷயங்களிலேயே குவிந்திருந்தது. சிங்கக் கொடியைப் போட்டால்,  அதற்குப் பயந்தாவது வேலைகளை ஒழுங்காகச் செய்வாள் என்றிருந்தாலாவது சிங்கத்தை விரித்து உயிர்ப்பித்து எடுத்திருப்போம்.

வரவர சவூதியிலிருந்து மருமகனின் கோல் அதிகரிக்க அதிகரிக்க, லெட்சுமி வேலையை இடைநிறுத்திவிட்டுக் குழந்தையைப் பார்க்கப் போவதும் அதிகரிக்கலாயிற்று.

என்ன செய்வது, சுமங்கலிகா அக்கா எங்கள் அடுத்த வீட்டுக்காரராகி விட்டார். இல்லாவிட்டால், அவர் நம்மைப் போன்றவர்கள் அதிகமாகப் பழகத் தக்க தரத்தைச் சேர்ந்தவரல்ல என்பது உங்களுக்கு இப்போதே விளங்கியிருக்கும் தானே? ஆனாலும் நான் அவரிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டேன். அதாவது, லெட்சுமியின் விஷயமாக. ‘லெட்சுமி’ எனும் பிரச்சினையைப் பற்றி. நாம் இருவரும் அதைப் பற்றி எந்தளவுக்குப் பேசினோம் என்றால், ”உங்கட ‘லெட்சுமிப் பிரபந்தம்’ எப்படிப் போகிறது?” என்று ஜயே என்னைக் கேலி செய்யும் அளவுக்குப் பேசி இருக்கிறோம்.

நானும் சுமங்கலிகா அக்காவும் லெட்சுமிக்குத் தெரியாமல் இன்னோர் ‘அம்மே’யைத் தேடத் தொடங்கினோம். மீண்டும் ஜயசிங்ஹ முதலாளி தகவல் அனுப்பத் தொடங்கிவிட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜயசிங்ஹ முதலாளி கடையில் வேலை செய்யும் பொடியன் ஒருத்தனையும் கூட்டிக்கொண்டு வந்து அந்தச் ‘சிங்க’த்தைக் கேட்டார். நான் ஜயேக்கு கோல் செய்து அதை வைத்த இடம் நினைவிருக்கிறதா என்று கேட்டேன். அதை வைத்த புத்தக ராக்கையின் பின்னால் சிலந்திக் கூட்டில் சிக்கிக் கிடந்த சிங்கத்தை ஒருவாறு தேடியெடுத்துத் துடைத்துத் துடைத்து முதலாளியிடம் கொடுத்தேன்.

”கூரையில் போட வேண்டாம், கேட்டடியில் போடுங்க” என்று மட்டுமே என்னால் கூற முடிந்தது. என்னதான் செய்ய, நாங்கள் கூலிக்கு இருந்தாலும் வீடு அவர்களுக்குச் சொந்தமானது அல்லவா!

கிளிநொச்சியில் எங்கள் பொடியன்மார் கொடியை ஏற்றுவது போன்ற ஒரு தோரணையில் ஜயசிங்ஹ முதலாளி சிங்கக் கொடியை ஏற்றி, உரத்த குரலில் சிங்க வாசகங்களைக் கூறி, சிங்க நடை நடந்து செல்வதை நான் ஒரு பெண்மானைப் போலப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

0000000000000

அந்தச் சம்பவத்தின் பின்னர் கண்டி மாநகரெங்கும் அதிருமாப்போல் பட்டாசு கொளுத்தப்பட்டது.

நந்திக்கடல் எனும் களப்பு, கண்டி வாவியை விடவும் அனைவரும் அறிந்த ஓரிடமாக மாறியது. புத்தர் பெருமான் மூன்றாம் முறையாக எழுந்தருளியபோது நந்திக்கடல் களப்பினருகே சற்றுநேரம் உறங்கிக் களைப்பைப் போக்கிக் கொண்டதாகப் புராதனக் கதைகளில் இடம்பெற்றுள்ள விதம்குறித்து கொழும்பில் ஃப்ளட் ஒன்றைப் பரிசாக வென்ற கலைஞர் ஒருவர் ரூபவாஹினியில் தோன்றி உரையாற்றியதாகக் கட்டுக்கதையொன்று பரவியது.

அந்தக் களப்பில்தான் பிரபாகரன் செத்திருந்தான். ஜயசிங்ஹ முதலாளி எங்களிரு வீடுகளுக்கு முன்னாலும் இட்டுக் கொளுத்துமாறு கூறி ஒரு பொடியனின் கையில் பட்டாசுக் கட்டொன்றைக் கொடுத்தனுப்பி இருந்தார்.

எங்கள் வீடுகளுக்கு முன்னால் பட்டாசு கொளுத்தும்போது கடைத் தம்பியோடு சுமங்கலிகா அக்காவும் சேர்ந்து கொண்டார்.

”அமைச்சரின் ஆக்கள் வாகனங்களில் ஊர்வலம் போறாங்களாம். பட்டாசு வெடிக்காட்டில் என்ன எண்டு பார்ப்பாங்களாம்” என்று சொல்லி அவர் வாயை மூடவில்லை. அவர் சொன்ன அந்த ஆக்கள் லொறியொன்றில் ஏறிக்கொண்டு, ‘சிங்கக்குட்டிகள் இதோ வருகிறோம்’ என்று முழங்கியபடி வழியெங்கும் பட்டாசு கொளுத்திப் போட்டபடி வந்துகொண்டிருந்தார்கள். கடைத் தம்பியும் எங்கள் வீட்டு முற்றத்திலேயே ஒரு முழுநீளச் சரப்பட்டாசையும் கொளுத்தி விட்டான். நான் குழந்தையை எடுத்துக்கொண்டு குசினிப் பக்கம் ஓடிவிட்டேன். நான் குழந்தையின் காதுகளைப் பொத்தினேன். லெட்சுமி தன் காதுகளைப் பொத்திக் கொண்டாள்.

”அது ஒரு பொய்யான ஃபோட்டோவாம் நோனா” லெட்சுமி சொன்னாள்.

”யாரு சொன்னது?”

”எங்கட மருமகன் சொன்னாரு. செட்டலைட் டிவியில சொன்னாங்களாம் எண்டு…”

”ஆனாலும், அந்த மூஞ்சி அப்பிடியே அவனைப் போலத்தானே இருக்குது?”

நான் ‘அவன்’ என்பதைச் சற்றுச் சீற்றத்துடனேயே உச்சரித்தேன். ‘கேட்’டில் இருந்த சிங்கக் கொடியின் சிங்கச் சீற்றம் எனக்குள்ளும் வந்துவிட்டது போலும்!

”ஒருத்தரைப் போல ஏழு பேர் இருப்பாங்களாம். விஷ்ணு தெய்வத்தின் அவதாரம் போலத்தானே அவரிருக்கிறார்…”

அமைச்சரின் ஆக்கள் மீண்டும் கீழே திரும்பிச் செல்லும் சத்தம் கேட்டது. வானவெடிகள் மலை முகட்டில் இருந்த அவரின் வீட்டுக்கும் மேலால் வான் நோக்கிப் பறந்தன.

லெட்சுமியின் ‘செல் ஃபோ’னுக்குப் பலமுறை கோல்கள் வந்தன. தமிழில் ஏதேதோ பேசிக்கொண்டார்கள். இருபுறமும் ஒருவிதப் பதற்றமான தமிழிலேயே பேசப்படுவதை நான் உணர்ந்து கொண்டேன். மரண பயம் என்பது எல்லா மொழிகளிலும் ஒரேவிதமாகத்தான் வெளிப்படும் என்பது, கிட்டதட்ட எல்லா மொழிகளும் புழங்கும் லண்டனில் சிலகாலம் வாழ்ந்த எனக்கு நன்கு புரிந்தது.

”இண்டைக்கு இரவு வீட்டில் தூங்க வேணாமாம்”.

”அது ஏன்?”

”என்ன நடக்குமெண்டு சொல்லேலாது தானே நோனா”.

”சிங்கக்குட்டிகள்  இதோ வருகிறோம்” – தூரத்தில் அந்தக் கூட்டம் கத்தும் ஒலி கேட்டது.

கடைத் தம்பி இன்னுமொரு சரப்பாட்டாசைக் கொளுத்தினான். சுமங்கலிகா அக்கா எங்களைத் தேடிக்கொண்டு குசினிக்கே வந்து விட்டார்.

நாங்களிருவரும் பயந்துபோனது போல இருந்ததை அவர் அப்பட்டமாகக் கண்டு கொண்டதைப் போலாகிவிட்டது.

”அந்தா, உங்கட தலைவனுக்கு நாங்க ‘கேமை’க் கொடுத்துட்டோம்” என்று சுமங்கலிகா அக்கா கேலிக்கும் உண்மைக்கும் இடைப்பட்ட ஒருவித நாடகப் பாவனையோடு சொன்னார்.

”ஐயோ நோனா, எங்களுக்கு அப்படி எந்தத் தலைவருமாரும் இல்லை. நாங்க இங்கே தானே இருக்கிறம்? மந்திரி ஐயாவுக்குத்தானே நாங்க ஓட்டுப் போட்டோம்!”

சுமங்கலிகா அக்காவின் அமங்கலமான வார்த்தைகள் எவ்வளவு குரூரமானவை என்று எனக்கு இப்போதுதான் நினைக்கத் தோன்றுகிறது. அப்போதே அப்படித் தோன்றியிருந்தால், நான் இவ்விதமாகச் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம்:

”யாருக்குத் தெரியும், இல்லையாக்கா?”

சுமங்கலிகா அக்காவினுடையதும் என்னுடையதும் அந்நேரத்து அவலட்சணத்தை நோலிமிட், ஃபெஷன்பக், ஒடேல் முதலானவை நிறைந்த சுவர்க்கலோக ஆடைகளால்கூட மூடிவிட முடியாது. அந்தச் சம்பவத்தை இப்போது நினைத்துப் பார்க்கும் போதுதான் அது எனக்குத் தோன்றுகிறது.

நான் சொன்னதென்னவோ மூன்று சொற்கள் தாம் என்பது உண்மை. ஆனாலும், அந்த மூன்று வார்த்தைகளும் தமிழ்க் கிராமம் ஒன்றின்மீது ‘கிபிர்’ விமானம் ஒன்றிலிருந்து போட்ட வெடிகுண்டுகள் மூன்றைப் போல என்னுள்ளத்தைக் கனக்கச் செய்தது. நான் அன்றிரவு கதிரையொன்றை எடுத்துக்கொண்டு ‘கேட்’டருகில் போட்டு ஏறி, அதிலிருந்த சிங்கக் கொடியைக் கழற்றினேன். எங்கள் வீட்டுக்கு முன்னால் அக்கொடி பலவந்தமாகப் போடப்பட்டது குறித்து ஜயே மிகுந்த மன உளைச்சலில்தான் இருந்தார். எனினும், யுத்தம் அத்தோடு முடிவடைந்தது என்பதில் அவரும் சற்று ஆசுவாசமுற்றிருந்தார்.

நான் ஓரிரு நாட்கள் லெட்சுமியை நேருக்கு நேர் எதிர்கொள்வதைத் தவிர்த்தே வந்தேன். இந்த அறிவிப்பாளக் கழுதைகள் யுத்தவெற்றி குறித்துத் தொலைக்காட்சியில் பீற்றிக்கொள்ளும் கதையளப்புகளைக் கேட்டுக் கொண்டிருக்க முடியாத காரணத்தினாலும், அவற்றினால் லெட்சுமியின் மனம் நோகலாம் என்ற பயத்தினாலும் நான் டிவியைக்கூட போடவில்லை.

00000000000

பிரபாகரனின் சடலம் திரும்பத்  திரும்ப விற்பனையாகிக் கொண்டிருக்கும் போதுதான் அப்புதிய தகவல் வந்து சேர்ந்தது. எங்கள் அக்கா சொன்ன  தகவலின்படி அவரின் பெயர் ரூங்மெனிக்கா. வயது அறுபது இருக்கும். நல்ல மரியாதையான குடும்பத்தைச் சேர்ந்தவர். இப்போது பிள்ளைகள் அவரைக் கவனிப்பதில்லையாம். கடுமையான வேலைகளைக்கூட செய்வாராம். இப்போது அப்படியான வேலைகளைச் செய்வது சிரமமாக இருப்பதால் இங்கே வர விருப்பமாம். நாங்கள் தலதா மாளிகைக்கு அருகில்தான் இருக்கிறோம் என்று சொன்னதும் வருவதற்கு அதிகமும் விரும்பினாராம். கண்டிக்கு அவர் வருவதைத் தூண்டுமுகமாக அக்கா அவரிடம் பெரகரா, புத்தரின் புனிதப் பல் (தாது), கண்டி வாவி, பேராதனைப் பூந்தோட்டம், அம்பக்கே தேவாலயம் என்பவை பற்றியெல்லாம் சொல்லி இருக்கிறார். ஒருவகையில் எங்களுக்குத் தூரத்துச் சொந்தமும் தானாம். வீட்டில் வந்து தங்கியிருந்து வேலை செய்வதற்கு ஐந்தாயிரம் ரூபாய் போதுமென்று விட்டாராம். நான் சட்டென்று ‘சரி’ என்று விட்டேன்.

எனக்குள் சிங்கக் கொடியைக் கீழிறக்கிய நாளைவிட அதிகமான ஆசுவாசமொன்று தோன்றியது.

அன்றிரவு ஜயதேவ அத்துலவுடன் சேர்ந்து பியர் குடித்தபடி இருந்த போதுதான் நான் அவரிடம் விஷயத்தைச் சொன்னேன்.

எங்கள் குடும்பமும் அத்துலவின் குடும்பமும் மாதத்துக்கு ஒருதரமேனும் இரவுணவுக்காக ஒன்றுகூடுவது வழக்கம்.  தமிழ்ப் பெண் ஒருத்தியை வேலைக்காரியாக வைத்திருக்கும் மனசாட்சியின் உறுத்தலிலிருந்து விடுதலை கிடைப்பது குறித்து ஜயேவும் மகிழ்ச்சி அடைந்தார்.

”ஒன்றில் யாரும் வேலைக்காரர்கள் வைத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும். எங்களுக்கு இருக்கும் வேலைப் பளுவுக்கு அதைச் செய்யேலாது. இல்லாவிட்டால், வேலைக்காரர்களுக்கு நன்றாகச் சம்பளம் கொடுக்க வேண்டும். எங்கள் சம்பளத்தில் அதைச் செய்யவும் ஏலாது. அரசாங்கத் தொழில் என்பதும்கூட அரசாங்கத்தினால் கட்டிக் காக்கப்படும் சமூக முறையைப் பாதுகாக்கும் ஒரு பொறிமுறைதான்” அவர் சொன்னார்.

எங்கள் அக்கா ரூங்மெனிக்கா மாமியை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். நான் சின்ன வயதில் இந்த மாமியைக் கண்டிருக்கிறேன். ஆனாலும், அதிகப் பழக்கம் இருக்கவில்லை.

மாமி என்னை ‘மகள்’ என்றே அழைத்தார். அந்தக் கணத்தில் நான் இவரை இங்கு அழைத்து வந்ததன் மூலம் ஒரு தவறிழைத்து விட்டேனோ என்ற எண்ணமே எனக்குத் தோன்றியது. ‘நோனா’ என்று அழைக்கும் ஒருவரிடமிருந்து வேலை வாங்குவது அவ்வளவு கஷ்டமில்லை. காரணம், ‘நோனாமார் இருப்பதே வேலை வாங்கத்தான்’ என்று அவ்விதம் அழைப்போருக்கு நன்கு தெரிந்திருக்கும்.

மாமி வேலையில் சரியான நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்தார். அவர் சமையல் முதலான வேலைகளுக்கு முன் கைகளைக் கழுவுகிறாரா என்று பார்த்தேன். அவர் அதைச் செய்தார். ‘டொய்லட்’ போனால் கைகளைக் கழுவுகிறாரா என்று காதுகொடுத்து அவதானித்தேன். அதையும் செய்தார். தேங்காயைச் சின்னதாகத் துருவுகிறாரா, உப்பை அளவாகச் சேர்க்கிறாரா… அவையும் சரி. நான் குளிக்கப் போகும்போது குழந்தையைப் பார்த்துக் கொள்கிறாரா… அதையும் செய்கிறார். அதுமட்டுமல்ல, மகனோடும் நன்கு ஒட்டிக்கொண்டு விட்டார். மாலையில் மகனுக்குக் கதைகளும் சொல்லுவார். மகன் ஸ்கூலுக்குப் போகும்போது நான் மாமிக்கு முன்னாலும் விழுந்து கும்பிடுமாறு செய்தேன். ருசியான கிராமத்து உணவின் சுவையை ஜயேயும் உணர்ந்திருந்தார். வாழைப்பூ, கொஹில, பாகற்காய், கெக்கிரிக்காய், பால் பிலாக்காய் என்று ஜயேக்கு மிகவும் விருப்பமான உணவுப் பதார்த்தங்களை மாமி மிகச் சுவையாகவே சமைத்தார்.

நாங்கள் மகிழ்ச்சியான ஓர் எதிர்காலத்திற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். மாலை வேளைகளில் மாமியை எங்கெல்லாம் அழைத்துச் செல்லலாம் என்பது, எனதும் ஜயேயுடையதும் உரையாடலின் ஓர் அம்சமாக இணைந்திருந்தது.

சுமங்கலிகா அக்காவுக்கும் மாமியைப் பிடித்துப் போய்விட்டது. சிலவகை உணவுப் பதார்த்தங்களைச் சமைக்கும் முறைபற்றிக் கேட்டுக்கொள்ள வீட்டுக்கு வருவார். நாங்கள் அவரிடம், எங்கள் சொந்தக்காரர் ஒருவர் கொஞ்ச காலத்துக்கு எங்களுக்கு உதவியாக இருக்க வந்துள்ளார் என்றுதான் சொல்லி இருந்தோம். அப்படியே கொஞ்ச நாட்கள் கடந்துவிட்டன. இப்போது அனேகமாக எல்லா இடங்களில் இருந்தும் சிங்கக் கொடிகளைக் கீழே இறக்கி இருந்தார்கள். அரசியல் சிங்கக்குட்டிகளின் வெறி அடங்கிப் போயிருந்தது.

ஒருநாள் மாலனியையும் கூட்டிக்கொண்டு சுமங்கலிகா அக்கா எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். மாலனி எங்கள் வீட்டுக்கு அதுவரை வந்ததே இல்லை.

”நான் எங்கள் மாலனிக்கு புதிய லெட்சுமியைக் காட்டுறதுக்குக் கூட்டிக்கிட்டு வந்தேன்” சுமங்கலிகா அக்கா சொன்னார். மாமி குசினியில் இருப்பார் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், மாமி விறாந்தையில் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்தார். மாமிக்கு இந்தக் கதை விளங்கி இருக்குமோ என்று நான் சற்று திக்குமுக்காடிப் போனேன். அன்றைக்கு என்றால் நான் சுமங்கலிகா அக்காவைப் பார்த்துக் கொஞ்சம் முறைத்ததாகவும் நினைவு…

”ஐயோ மாமி, இந்த மாலினிக்கு ‘ஹெலப்ப’  செய்யும்  முறையைக் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன். அது ஒரு தமிழ்ச் சாப்பாட்டுப் பதார்த்தம் இல்லை என்கிறாங்களே…”

மாமி சொல்லிக் கொடுத்தார். சில விஷயங்கள் மாலனிக்குப் புரியாமல் போகும்போது மாமி தமிழிலும் கொஞ்சம் கதைத்தார். அவருடைய தமிழைக் கேட்டு மாலினிக்குச் சிரிப்பு வந்தாலும், அவர் தமிழ் பேசியதால் ஏற்பட்ட மகிழ்வின் காரணமாக அவள் அவரது தலையை வாஞ்சையோடு தடவிக்கொடுத்தாள்.

”லெட்சுமி ஒருத்தியே தான்” சுமங்கலிகா அக்கா மீண்டும் சொன்னார்.

000000000000

அதன் பின்னர் மாமியும் லெட்சுமியும் கூட்டாளிகளாகி விட்டார்கள். இருவரும் அவ்வப்போது மதிலருகே நின்று கதைத்துக் கொள்வார்கள். அதன் மூலம்தான் பழைய லெட்சுமி யாரென்பதை அவர் தெரிந்து கொண்டிருந்தார்.

கொஞ்சம் குத்துக்கதை போன்ற ஒரு தொனியில் ஒருநாள் மாமி என்னிடம் இப்படிக் கேட்டார்,

”லெட்சுமிங்கிறது முந்தி இங்கே வேலைக்கு இருந்த மனுஷியாமே!”

நாங்கள் மாமியிடம் இதற்கு முன்பு எங்கள் வீட்டில் ஒரு வேலைக்காரி இருந்ததைப் பற்றியோ, மாமியை அவளுக்குப் பதிலாகத்தான் கொண்டு வந்திருக்கிறோம் என்றோ எதுவும் சொல்லி இருக்கவில்லை. காரணம், மாமி இதற்கு முன்பு எங்குமே வீட்டு வேலைக்குப் போனதில்லை என்று எங்கள் அக்கா சொல்லி இருந்தார்.

”கன காலத்துக்கு முந்தி அவ அப்பப்ப உதவிக்கு வந்துட்டுப் போவா” நான் தணிந்த குரலில் சொன்னேன்.

எப்படியோ மாமியினதும் மாலினியுடையதும் நட்பு ஒரேயடியாக நின்று போனது.

ஆனால், மாமிக்கு ஒருவிதக் காய்ச்சல் கண்டது. பிரஷர் அதிகரித்தது.  சீனி கூடியது. ஒருநாள் நள்ளிரவில் நாங்கள் மாமியை டொக்டரிடம் அழைத்துப் போனோம். மூன்று நாட்கள் மாமி கட்டிலோடு கிடந்தார்.

”என்ன செய்யிறது மகள். என்னுடைய கருமம்! எனக்கு இந்தக் காலநிலை ஒத்துவருதில்லை. என்னைக் கொண்டுபோய் ஊருல விடுங்க. தோட்டக்கூலி வேலைகள் தான் எனக்கு ஒத்துவரும்!”

நாங்கள் மாமியை அழைத்துப் போனோம்.

”காரில் ஊருக்கே போகேலாது. வழியில் என்னை ஒரு ‘த்ரீவீல்’ல ஏத்தி விடுங்க. மகள் நீங்க இன்னொரு நேரம் எங்கட வீட்டுக்கு வாங்க” குருநாகலை டவுனில் வைத்து மாமி சொன்னார். நான் முடியாதென்றே சொன்னேன்.

”நான் இப்படியொரு இடத்துக்குப் போயிருக்கிறன் எண்டு ஊரில் யாருக்கும் தெரியாது மகள். சொந்தக்காரர் வீட்டுக்குப் போயிருக்கிறன் எண்டுதான் தெரியும்.’’

மாமி விளங்கப்படுத்தினார்.

”அப்படி எண்டால், அப்படியே செய்வோம்” என்று ஜயே ஒத்துக்கொண்டார்.

”வேறொண்டுமில்லை ஐயா, ஊராக்கள்ட வாய்களைத் தெரியும் தானே?”

நாங்கள் மாமியின் ஊருக்குப் போகும் சந்தியில் காரை நிறுத்தி, அவரை ஒரு த்ரீவீலில் ஏற்றி அனுப்பி விட்டு, நாம் எங்கள் ‘மஹகெதரை’ க்குப் போனோம்.

இரண்டு நாட்கள் ஊரில் இருந்துவிட்டு வரும் வழியில், உறவினர்கள் செல்வதைப் போல நாம் மாமியைப் பார்த்துவர அவர் வீட்டுக்குச் சென்றோம்.

நான் சின்ன வயதில் அங்குமிங்கும் மாமியைக் கண்டிருந்தாலும் அவரின் வீட்டுக்கெல்லாம் போனதில்லை. அம்மா எல்லாம் போயிருக்கிறார்கள். எங்கள் ஊரிலிருந்து சுமார் ஏழெட்டு மைல் தூரத்தில் அவர்களின் வீடு இருந்தது. அந்த ஊரில்தான் எங்கள் அக்கா கலியாணம் கட்டி இருக்கிறார்.

மாமியின் வீட்டுக் கூரையில் வேயப்பட்டிருந்த பழைய சிங்களப் பாணி ஓடுகள் அவரது வளமான இறந்த காலத்தையும் அதற்கு முற்றிலும் வித்தியாசமான நிகழ்காலத்தையும் பிரதிபலித்தன. கூரையின் அந்தங்களில் ஓடுகள் விழுந்து பறாளைகள் தெரிந்தன. சுவர்களில் காரைப் பெயர்ந்து செங்கல் அடுக்கு வெளித்தெரிந்தது. விறாந்தையில் மான்கொம்பு மாட்டப்பட்டிருந்தாலும் மானின் தலையில் ஒரு துளை. கொம்புகளுக்கு இடையில் சிலந்தி வலை.

காரை முற்றத்தில் நிறுத்தும்போதே மாமி முற்றத்துக்கு வந்துவிட்டார். இப்போது அவரின் உடல்நலம் தேறி இருப்பது பார்த்த மாத்திரத்தில் நன்றாகவே தெரிந்தது.

மாமி எங்களை அமரச் சொன்னார். விறாந்தையில் கதிரைகளுக்குப் பதிலாக ஒரு கட்டிலே இருந்தது. அதில் தும்பெல்லாம் கல்லாகிப் போன அழுக்கேறிய ஒரு மெத்தைக்கு மேலால் மாமி புத்தம் புதிய பாயொன்றைக் கொண்டுவந்து விரித்தவுடனே அது மனதை ஈர்க்கும் புத்தம் புதிய தோற்றமொன்றைத் தந்தது. மகள்களும் மகன்களும் கலியாணம் கட்டிப் போகும்போது வீட்டில் இருந்த மரத்தளபாடங்களைத் தமக்கிடையில் பிரித்தெடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள் என்பதை யாராலும் இலகுவில் ஊகிக்கக்கூடிய வகையில் அப்பொருட்களின் தடங்கள் அங்கிருந்தன. சுவர்களில் முன்னர் மாட்டியிருந்த படங்கள் கழற்றப்பட்ட தடங்கள் சட்டெனத் தெரிவது போலத்தான் இதுவும். சுவரிலே கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் இரண்டு இருந்தன. ஒன்று, மாமியின் கலியாண ஃபோட்டோ. இரண்டாவது, மாமி கலியாணம் கட்டிப் பரிவாரம் சூழ இவ்வீட்டுக்கு வருகைதரும் ஃபோட்டோ. ஒருபுறம் இப்பக்கத்து உறவினர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் அப்பக்கத்து உறவினர்கள் பின்னணியில் இருக்கிறார்கள். மணமகன் (அக்கால முறைப்படி) தலையில் சீப்பு அணிந்து, கோட்டுப் போட்டு ஒருவித நாடக பாங்குடன் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் ஒரு நடிகரைப் போலத் தோற்றமளித்தார். இந்த மான்கொம்புடன்கூடிய தலையும் சிங்களப்பாணி ஓட்டுக் கூரையின் ஒரு பகுதியும் ஃபோட்டோவில் தெரிந்தது. கறுப்பு வெள்ளைக் கறைகளைப் போலப் பழசாகிப் போயிருந்த எல்லா முகங்களையும் நான் ஒவ்வொன்றாகக் கூர்ந்து பார்க்கக் காரணம் அதில் எங்கள் அப்பாவும் இருக்கிறாரா என்று பார்த்துத் தெரிந்து கொள்ளத்தான். எங்கள் அப்பாவும் தனது கலியாணத்துக்கு வந்திருந்ததாக ஒருமுறை மாமி சொல்லி இருந்தார். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தியாறில்.

”தேத்தண்ணி கொஞ்சம் குடிப்போம் ஐயா” என்று சொன்னவாறு தேநீர் கொண்டு வந்திருந்தார். விளிம்போரமாக நீலப்பூங்கொடி வேலைப்பாடுடைய சுத்தமான பீரிஸ் – கோப்பைகள்… மாமியின் கலியாணம் நடந்த காலத்துக்கே உரிய பழைய பாணியில் அவை அமைந்திருந்தன.

மணமகள் அழகாகவும் கம்பீரமாகவும் இருந்தார். லேசான ஒரு வெட்கச் சிரிப்புடன்கூடிய தோற்றம்.

”மணமகள் நல்ல அழகாக இருக்கிறாவே!” என்று சட்டெனச் சொன்னேன். எனினும்,  எந்த ஒரு மணமகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு பொதுவான கூற்றுதான் அது என்பதை உணர்ந்ததும், அப்படிச் சொல்லியிருக்கத் தேவையில்லை என்று நினைத்தேன். ”இருக்காதா பின்ன?” என்று தனது கடந்த கால அழகைப் பற்றிப் பெருமிதமடைந்ததைப் போன்ற ஒரு புதுவகை நளினத்துடன் அவர் சொன்னார்.

”மகள், அந்த ஃபோட்டோவைக் கொஞ்சம் கழற்றி எடுங்களேன்” மாமி சொன்னார். ஃபோட்டோவில் படிந்த தூசு உடலில் பட்டுவிடாதபடி மிகக் கவனமாக அந்த ஃபோட்டோவைக் கழற்றினேன். அதேவேளை, நான் அப்படிச் செய்வது மாமிக்குத் தெரிந்துவிடக் கூடாது என்ற நாசூக்கு உணர்வுடனேயே அதனைச் செய்தேன். ஆனாலும், இந்த ஃபோட்டோவில் நேற்று முந்தாநாள் தூசு துடைக்கப்பட்டிருக்க வேண்டும். நான் மாமியின் கையில் ஃபோட்டோவைக் கொடுத்தேன்.

”இங்கே வாங்களேன் மகள்” மாமி அதன் மேல் நன்கு வெளிச்சம்படுமாறு அதனைப் படிக்கட்டருகில் கொண்டு சென்றார்.

”இது யாரெண்டு தெரியுதா?”

கையில் சூட்கேஸ் ஒன்றைத் தூக்கிப் பிடித்தபடி மணமகளுக்குக் கொஞ்சம் பின்னால் இரண்டாவது வரிசையில் அந்த இளம்பெண் இருந்தாள். அவளுக்கும் மணமகளின் வயதுதான் இருக்கும்.

”லெட்சுமி”

நெற்றியில் பொட்டு எதுவும் இல்லாத போதிலும், ‘அவள் ஒரு தமிழ்ப்பெண்’ என்று நினைத்துக்கொண்டு பார்க்கையில் அவளொரு தமிழ்ப் பெண்ணைப் போலத் தெரிந்தாள்.

”கலியாணத்துக்கு அப்புறம் எங்கட அப்பா என்னை இங்கே வாழ அனுப்பும்போது வேலைக்காரர்களையும் கூடத்தான் அனுப்பிவைத்தார். முதல் தடவை எங்கட ‘மஹகெதரை’க்கு வரும்போது லெட்சுமி இந்தளவுதான் இருப்பாவாம்” என்றவாறு மாமி எங்கள் மகனைக் காட்டினார்.

00000000000

அதைத் தொடர்ந்து ஓரிரண்டு வாரங்கள் நான் பெரும் போராட்டமொன்றை நடத்த வேண்டியிருந்தது. எங்கள் இரண்டு பேருடைய அம்மாமாரும் மாறி மாறி வந்து போனார்கள். மகனை ஸ்கூலிலிருந்து எடுத்துவர சுமங்கலிகா அக்காவும் உதவினார். லெட்சுமிக்கு வரச்சொல்லித் தகவல் அனுப்ப ஜயேக்கு விருப்பமே இல்லை. மீண்டும் தமிழ்ப்பெண் ஒருவரை வேலைக்கு எடுப்பதை அவர் விரும்பவில்லை. ஆனாலும், நான் விரைவிலேயே சோர்ந்து போனேன். கொஞ்சநஞ்சப் போராட்டமா என்ன? நான் அப்படிப் போராடிக்கொண்டு இருக்கையில் நாள் முழுதும் லைப்ரரி அறையில் இருக்கும் ஜயே எந்தப் பயனுமற்ற மனுஷனைப் போல எனக்குத் தெரியத் தொடங்கி விட்டார். வேறெந்த வழியுமே அற்றுப்போன நிலையில் தான் மாலினியிடம் சொல்லித் தகவல் அனுப்பினோம்.

அவள் வருவதற்கிடையில் நான் இப்போதே கழுவ வேண்டிய பத்துப்பாத்திரங்களை எல்லாம் குவித்து வைத்துவிட்டேன்.

”அவள் வருவாள் தானே?”

லியனகே அமரகீர்த்தி, ‘அர மிஹிரி சீனு நாதய – அந்த இனிய மணியொலி’ தொகுப்பிலிருந்து…

மூலம்: லியனகே அமரகீர்த்தி-இலங்கை

லறீனா

தமிழில் : லறீனா அப்துல்ஹக் -இலங்கை

லறீனா

0000000000000000

பேராசிரியர் லியனகே அமரகீர்த்தி பற்றிய சிறுகுறிப்பு :

லறீனாபேராதனைப் பல்கலைக்கழகச் சிங்களத் துறைப் பேராசிரியரான இவரது படைப்புகள் 1990 முதல் வெளிவர ஆரம்பித்தன. மாற்று அரசியல், சமூக நல்லிணக்கம் தொடர்பில் சமூகச் செயற்பாட்டளராக இயங்கிவரும் இவர் சிங்களச் சிறுகதை, நாவல், கவிதை, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு முதலான பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்பினை நல்கி வருகிறார். 2013 ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான புங்கா (ஜப்பானிய) கலாசார விருதைப் பெற்றுள்ளார் அவரது படைப்புக்கள் குறித்த விபரங்கள் வருமாறு:

1990 – மனாவ பக்திய ஹா சிதாரா – சிறுகதைத் தொகுதி

1992 – ரல – சிறுகதைத் தொகுதி

1994 – நந்தன உயன – சிறுகதைத் தொகுதி – சுயாதீன இலக்கிய விருது

1995 – வீரியவந்த்தயோ – இளையோர் நாவல்

1996 – மகாபுருஷயக்குகே பிரின்தக்வ – சிந்தியா அஸ்கியுத்தின் மெரீட் டு டோல்ஸ்டோய் நூலின் மொழிபெயர்ப்பு – அரச சாகித்திய விருது

1998 – மல்பர சமய – கிழக்கைரோப்பிய சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல்

1999 – மம தென் நிந்தியமி – சிறுகதைத் தொகுதி – அரச சாகித்திய விருது

ஹெட்ட அன் ரட்டக் – அலிஸ்’ட்டர் ஸ்பார்க்ஸின் ‘ஐமோரோ இன் அனதர் கன்ட்ரி’ நூலின் மொழிபெயர்ப்பு

2003 – வில சஹ மல – சிறுகதைத் தொகுதி

2005 – அமுத்து கதாவ: பஷ்சாத் யதார்த்தவாதி கதா கலாவமக வெதா – (புனைகதைக் கோட்பாடுபற்றிய ஆய்வு நூல்)

2006 –  மாலக்க தேவப்ரியகே உகே ஹிஸல்வரே – (வானொலி நாடகத் தொகுப்பு)

2007 – அட்டவக்க புத்து – நாவல் – அரச சாகித்திய விருது

2008 சஹிர்த சாக்ஷிய: ஆக்யான கலாவ ஹா மினிஸ் சமாஜய – இலக்கியக் கேர்பாட்டு நூல்

2009 – எக்கமத் எக பிட்டரட்டக – கவிதைத் தொகுதி

2010 – பஹன சஹ கெடபத – இலக்கியக் கோட்பாட்டு விமர்சன ஆய்வு நூல்

2011 – சமாஜ விச்சாரய ஹா புத்த தர்மய – சுலாக் சிவரக்ஷாவின் ‘கல்ச்சர் கன்ஃப்லிக்ட் சேன்ச்’ நூலின் மொழிபெயர்ப்பு

ஜாதிக்க வாதயட்ட எரெஹிவ சர்வபகுமிக்கவாதய – குருதேவ் தாகூரின் சங்ஸ்குரிதிக விச்சாரய (கட்டுரை)

2012 – நெருடாகே லியும்காரயா – (அன்டோனியோ ஸ்மார்மெடாவின் தப்போஸ்ட் மேன் நாவலின் மொழிபெயர்ப்பு)

அர மிஹிரி சீனு நாதய – சிறுகதைத் தொகுதி – வித்யோதய விருது

2013 – கலாவ குமகட்டத (மார்த்தா நுஸ்பேமின் நொட் ஃபோர் ப்ரஃபிட்: வை டெமோக்ரஸி த ஹியுமனிட்டீஸ்’ நூலின் மொழிபெயர்ப்பு)

தஜித திசாநாயக்க சஹ நூதன சிங்ஹல நாட்யய (ஆய்வு நூல்)

2013 – குருலு ஹதவத்த (நாவல்) – சுவர்ண புஸ்தக விருது,

2015 – அஹம்பகாரக்க (நாவல்) – சுவர்ண புஸ்தக விருது

2016 – நவ கவி சலகுண (கவிதைக் கோட்பாடுகுறித்த ஆய்வு நூல்)

2017 – அலு பெஹெதி ஆரஞ்ச்சி (சிறுகதைத் தொகுதி) – கொடகே விருது,

ரஜத்த புஸ்த்தக விருது.

ஹமுவேத அப்பி வெனதாட (கவிதைத் தொகுதி),

2018 – கெட்டிகதா கலாவ (சிறுகதை இலக்கியம்குறித்த ஆய்வுநூல்)

கலாவ சஹ மினிஸ்ஸு (இர்வின் எட்மன்டின் ஆர்ட்ஸ் அன்ட் த மேன் நூலின் மொழிபெயர்ப்பு

2019 – சிதுவிலி சிதிஜய

ரல நகன மினிஸ்ஸு  – இன்ஹெரிட் த வின்ட் எனும் அமெரிக்க நாடக நூலின் மொழிபெயர்ப்பு

2019 – ரத்து இரி அந்தின அத்த – நாவல்

2020 – கெதர வட்ட சித்தியம (சிறுகதைத் தொகுப்பு)

2021 – துவன வட்டியா சஹ ஹினாவென டிக்கிரா (சிறுகதைத் தொகுப்பு)

லறீனா அப்துல்ஹக்

(Visited 263 times, 1 visits today)
 

2 thoughts on “புதிய லெட்சுமி-சிறுகதை மொழிபெயர்ப்பு-லறீனா அப்துல்ஹக்”

Comments are closed.