புனிதம் இருப்பது பெண்ணின்….- கவிதை-லறீனா அப்துல் ஹக்

புனிதம் இருப்பது பெண்ணின்…

லறீனா அப்துல் ஹக்
ஓவியம் : தங்கேஸ் விக்கி

எப்போதும் எதைச் சொன்னாலும்
கேட்டுக் கொள்வதற்கென்றே
பிசைந்து வனையப்படும்
களிமண் மண்டைகள்
இறுக்கமாய்…
மிகக் கட்டிறுக்கமாய்
வார்த்தெடுக்கப்படுகின்றன
வருடந்தோறும்…

புனிதங்களின் பெயரால் வாரிக் கொட்டினாலும்
தீ எரித்துக் கருக்கும் என்பதோர்
எளிய உண்மையை மறைப்பதற்கும்
எத்தனை எத்தனை வியாக்கியானங்கள்!
மார்க்கப் பிரசங்க போலிப் பிதற்றல்கள்!

எல்லா இடங்களிலும் எல்லா ரூபங்களிலும்
கண்ணுக்குத் தெரியாத பிரம்புகள்
அருவங்களாய் நெளிகின்றன
ஆண்பாலாய்… ஆண்பாலை ஒத்தனவாய்…

எல்லாச் சபைகளிலும் அகலக் கால்விரித்தபடி
ஒளிவட்டங்கள் சுழலும் பிரமையில்
வகுப்பெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்
சிம்மாசனங்களில் இருந்தவர் இறங்குவதே இல்லை

அவள்களின் வகிபாகம்
‘உள்ளேன் ஐயா, உத்தரவு எசமானே,
நீங்கள் சொல்வதுமட்டுமே சரி’
‘சொர்க்கம் செல்வதெனில் நீங்களே கதி’
என்பதான ஒத்திசைப்புடன்
கீறிவைக்கப்பட்டுள்ளன நிரந்தரக் கல்வெட்டாய்

அறிவு, ஆற்றல், ஆளுமை இன்னபிற
அடையாளங்களின் பொற்கிரீடம்
அதிகார மையங்களின் குறியாய் அமைந்திருக்க
பெண் என்பவள்
வெறுமனே ஓர் உடல்
துய்ப்பிற்கும் மறு உற்பத்திக்குமான
வெற்று உடல் மட்டுமேதான்
அதுகூட பாவத்தின் பிறப்பிடமாம்
நரகுக்கு எரிவிறகாம்…

இதைச் செய், இதைச் செய்யாதே…
அவர்கள் போதித்துக் கொண்டே இருப்பார்கள்
இனியும்…
நேற்று தாத்தனும் அப்பனும்
இன்று புருஷனும் பொதுவெளி ‘வாப்பாமா’ரும்
நாளை மகனும் பேரனும் கொள்ளுப்பேரனுமாய்…

ஆக,
இருப்பின் இடத்தில் பிரதியீடாகும்
அராபிய நாட்டுக் கக்கூஸ் முன்னுள்ளபடி
கண்ணோ, புருவமோ நாசியோ இல்லாமல்
முகமற்றுப் போன ஒரு பெண்ணின் குறியீடு…

நக்கிக் கொண்டே இருப்பதால் மட்டும்
சப்பாத்தின் உருவம்
தேன்வதையாய் மாறுவதே இல்லை
உணர்திறன் வளர்!

லறீனா அப்துல் ஹக்-இலங்கை

லறீனா

(Visited 179 times, 1 visits today)