சிங்களக் கவிதாயினிகள்: ஒரு சுருக்க அறிமுகம்-லறீனா அப்துல் ஹக்

லறீனா இலங்கையில் காலனிய ஆட்சிக்கு முற்பட்ட காலக் கல்வியைப் பொறுத்தவரையில், அது பௌத்த பிக்குகளுக்கானதாகவும், விகாரைகளிலும், பிரிவெனாக்களிலும் போதிக்கப்படக் கூடியதாகவுமே இருந்து வந்தது. இந்நிலையில், அது பெரும்பாலும் ஆண்களுக்கானதாகவே இருந்தது. விதிவிலக்காக சில பெண்கள் சமஸ்கிருதத்திலும் சிங்கள இலக்கியத்திலும் புலமையுடையோராக இருந்துள்ளமைக்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. என்றாலும், மிகுந்த கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் கொண்டமைந்த அக்காலக் கல்வி முறைமையின்கீழ், மிக அரிதாக உயர்வர்க்கப் பெண்கள் சிலர் அவ்வாறு கற்றுத் தேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், பொதுவாக அக்காலப் பெண்கள் எழுத்தறிவு அற்றவர்களாகவும் கல்வி கற்காதவர்களாகவுமே இருந்துள்ளனர்.

இலங்கைக் கரையோரப் பிரதேசங்கள் ஒல்லாந்தரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலகட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்ட ‘பெரிஷ்’ எனப்படும் கல்விக்கூடங்கள் உண்மையில், அவர்களின் சமயப் பிரசாரப் பணிகளின் ஒரு பகுதியாகவே தொழிற்பட்டன. கல்வியானது, ‘பலவந்த மதமாற்றத்துக்குப் பதிலாக, அதனை ஊக்குவிக்கும் பயன்வாய்ந்ததும் மிக நுட்பமானதுமான ஒரு கருவியாக’க் (டி சில்வா 1952:241) கருதப்பட்டிருக்கவும்கூடும். மேலும், ஒல்லாந்தரின் ஆட்சியிலே நிர்வாகப் பணிகளில் கடைநிலை ஊழியர்களாக அமர்த்தப்பட்டிருந்த சுதேசிகளுக்குக் கல்வி புகட்டவும் இக்கல்விக்கூடங்கள் பயன்பட்டன. ஆச்சரியத்துக்கு உரியவகையில் அவற்றில் அனேகமானவை கலவன் பள்ளிக்கூடங்களாகவே இருந்தன என்பதோடு, குறித்த வர்க்கத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அடிப்படைக் கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்பையும் அவை வழங்கின. இவ்வாய்ப்பினைப் பெற்ற பெரும்பாலான பெண்கள், ஒல்லாந்தர் ஆட்சியில் கடைநிலை அலுவலர்களாய்ப் பணியாற்றிய சுதேசிகளினதும், அப்பள்ளிக்கூடங்களில் கற்பித்த ஆசிரியர்களினதும் பிள்ளைகளாகவே இருந்தனர். 18 ஆம் நூற்றாண்டின் பிற்கூற்றிலே இலக்கியப் பணிகளில் ஆசியப் பெண்கள் மத்தியில் இலங்கைப் பெண்கள் விதந்துரைக்கத்தக்க ஒரு நிலையினை எய்துவதற்கு இப்பின்புலமே காரணமாய் அமைந்தது என்பதை நாம் நினைவுகூறக் கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கையில் நீண்டகாலமாக நிலவிவந்த அந்நிய ஆதிக்கத்தின் விளைவால், அனைத்து வகையான கலாசார அம்சங்களைப் போலவே, சிங்கள இலக்கியமும் பெரிதும் நசிவுற்றிருந்தது. எனினும், 18 ஆம் நூற்றாண்டின் அரையிறுதியில் தென்னிலங்கையிலே சிங்கள இலக்கிய மறுமலர்ச்சியொன்று ஏற்பட்டது. ஒப்பீட்டளவில், செவ்விலக்கிய மரபில் சிறிதளவிலும் நாட்டாரியல் மரபில் பெரிதளவிலுமாக அதன் தாக்கம் நிலவியது. ஏராளமான புத்த பிக்குகளும் கடைநிலை அரச அலுவலர்களான சுதேசிகளும் இம்மறுமலர்ச்சியின் முன்னோடிகளாகத் திகழ்ந்த போதிலும், அவர்களுள் பெண் கவிஞர்களும் முன்னணியில் நின்று பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மாத்தறை யுக’த்தைச் சேர்ந்த கஜமன் நோனா அக்காலத்தில் பிரசித்திபெற்ற பெண் கவிஞராகத் திகழ்ந்தார். 1758 ஆம் ஆண்டு பிறந்த இவர், கடைநிலை அரச அலுவலராகப் பணியாற்றிய சிங்களவர் ஒருவரின் மகளும், கொழும்பில் இருந்த பெரிஷ் சமயப் பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவரின் பேத்தியுமாவார். அப்பள்ளிக்கூடத்திலேயே அவர் ஆரம்பக் கல்விகற்றார் எனக்கூறப்படுகிறது. பின்னர், தென்னிலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் பணியாற்றிய அரச அலுவலர் ஒருவரை மணந்தார். அக்காலத்தே இலங்கைச் சமூகத்தில் நிலவிய மேலைத்தேயச் செல்வாக்கினை உணர்த்தும் வகையில் அமைந்த ‘டொனா கரோலினா பெருமாள்’ என்பதே கஜமன் நோனாவின் இயற்பெயராகும். சிங்களப் பிக்குமாரிடம் சிங்கள மொழிக் கல்வியைப் பெற்ற அவர், ஒரு கவிஞராகப் புகழ் பெற்றார். அவரது கவிதைகள் மாத்தறை யுகத்துக்கே உரிய நாட்டாரியல் மரபோடு இயைந்து, சிங்கள மரபுக் கவிதை வடிவக்கூறுகளையும் உள்ளடக்கியதாய், யுகமாற்றத்தை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையிலே அமைந்திருந்தன.

கஜமன் நோனாவின் கவிதைகள் அக்காலத்தே நிலவிய கசப்பான சமூக யதார்த்தத்தை எதிர்கொள்ளும் வகையிலும், சுதேசக் கலாசாரம் மற்றும் அக்காலத்தே படிப்படியாக விருத்தியடைந்து வந்த மேலைத்தேய முற்போக்கு மனோபாவத்தின் செல்வாக்கு என்பவற்றுக்கு இடையிலான நிலையினை, மானிடக் காதல் உணர்வினை உள்ளவாறு எடுத்துரைக்கும் வகையிலும் அமைந்திருந்தன. உண்மையில், தம் காதலை உள்ளவாறு வெளிப்படுத்தும் இம்முறைமை பழந்தமிழ் மரபிலும் பழைய சிங்கள இலக்கிய மரபிலும் தொன்றுதொட்டு இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவருடைய படைப்புகளில், மாவட்டப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய ‘எலபட்ட திசாவை’யுடன் பரிமாறிக்கொண்ட சிருங்கார ரசம் பொருந்திய காதல் கவிதைகள் மிகப் பிரசித்தி பெற்றவையாகத் திகழ்கின்றன. அவர் ஒல்லாந்துப் பெண்மணிகளைப் போல் ஆடையலங்காரம் செய்வதில் பெருவிருப்புக் கொண்டிருந்தார்.

அக்காலத்தே வாழ்ந்த ஏனைய பெண் கவிகள் என்றவகையில், கஜமன் நோனாவின் இளைய சகோதரி டொனா அர்னோலியா பெருமாள், அவரின் மகள் டொனா கதரினா, திசாவை ஒருவரின் மகளான தராகம குமாரி ஹாமி, திஸ்ஸாநாயக்க லமாதெனி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் யாவரும் ஒல்லாந்து அரசின்கீழ் பணியாற்றிய சுதேசிகளின் குடும்பத்துப் பிள்ளைகள் என்பது மிக முக்கியமானதாகும்.

ரூனா ஹாமினேயும் ரஞ்சகொட லமயா ஆகிய இரு பெண் கவிஞர்களும் இதே காலப் பிரிவைச் சேர்ந்தவர்களே! அவர்களின் சில படைப்புகள் பிற்காலத்தே கிடைக்கப்பெற்றன. அவர்களின் கடந்த கால வரலாறு பற்றிச் சிறிதளவே தெரியவந்துள்ள போதிலும், அவர்கள் சமூகத்தின் அடிநிலை வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனை அவர்களுடைய படைப்புக்களின் வழியே மிகத் தெளிவாக உணரக்கூடியதாக உள்ளது. பிற்காலத்தே வெஸ்லியன் மிஷனரி ஒன்றினால் பைபிளைச் சிங்களக் கவிதைகளாக வடித்தெடுக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். அவர் அப்பணியிலே பெரும்பகுதியை நிறைவுசெய்த போதிலும், அவருக்கு தரத்தில் குறைவான விருதொன்றும், சொற்ப அளவு அங்கீகாரமுமே கிடைத்தன என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். பெண் குறித்த சமூக யதார்த்த நிலையை உள்ளவாறு புரிந்துகொள்ளக்கூடிய புத்திக்கூர்மை உடையவராக அவர் திகழ்ந்தார். அக்குற்றச்சாட்டை அவர் இவ்வாறு முன்வைத்துள்ளார்: “இந்தப் பணியை ஓர் ஆண் மேற்கொண்டிருந்தால், அவர் பணமும் புகழும் பெற்றிருப்பார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால், அதனை ஒரு பெண் செய்யும்போது அப்படியான எந்த வெகுமதியும் அவருக்குக் கிடைப்பதில்லை.” (டென்ஹாம் 1912:425).

மேலே இருப்பது குமாரி ஜயவர்தனா எழுதிய “Emancipation and Subordination of Women in Sri Lanka”, Feminism and Nationalism in the Third World’” – (pp.114-115) எனும் கட்டுரைப் பகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.

சிங்களக் கவிதை இலக்கிய வரலாற்றிலே ‘சீகிரி குருட்டுகீ- சீகிரியக் கிறுக்கல்கள் அல்லது பாடல்கள்’ பெறும் இடம் மிக முக்கியமானது. அனுராதபுர யுகத்தில் அதாவது, 8 9 10 ஆம் நூற்றாண்டுகளில் இக்கவிதைகள் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. புராதன இலங்கைச் சமூகம் குறித்த ஆய்வுகளைப் பொறுத்தவரையில் சீகிரிய பாடல்கள் மிக முக்கியமான வரலாற்று மூலாதாரமாகக் கொள்ளப்படுகின்றன. சீகிரிய பாடல்களை எழுதியவர்கள் சமூகத் தளத்தில் பல்வேறு மட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறது. சீகிரிய கவிதைகளைப் பொறுத்தவரையில் அவற்றில் ஒருசில கவிதைகளை எழுதிய கவிதாயினிகள் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாகவும், பல்வேறு சமூகத் தரம் கொண்டவர்களாகவும், சாதியிலும் கல்விநிலையிலும் ஆண்களை விட உயர்நிலை வகித்தவர்களாகவும் காணப்பட்டனர் எனலாம். ஆணாதிக்கச் சமூக முறைமை நிலவிய சூழலிலும், அத்தகைய பெண்களுக்கும் உரிய இடம் கிடைத்திருப்பதை சீகிரியக்  கவிதைகளை முன்வைத்து அறியக்கூடியதாக உள்ளது. இதன்படி, 8 ஆம் 9ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் பெண்கள் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகளில் மிகவும் சுயாதீனமாகச் செயல்பட்டு உள்ளனர் என்பதையும் கண்டறியக்கூடியதாக உள்ளது.

சீகிரியக் கவிதைகள் எழுதப்பட்ட காலகட்டத்தில் சிங்கள மொழியிலே இரு வகையான கவிதை மரபுகள் நிலவி வந்துள்ளன. தேசியக் கவி மரபினை ஒட்டி அமைந்த நாட்டார் கவிதை மரபு அதில் ஒன்றாகும். மற்றது, இந்தியாவின் வடமொழி இலக்கண மரபுக்கு அமைவான சீகிரியக் கவிதைகளாகும். இவ்விரு மரபுகளுக்கும் தனித்துவமான சிறப்பம்சங்கள் காணப்படுகின்றன.

சிங்களக் கவிதை இலக்கியச் செல்நெறியின் ஒரு குறுக்குவெட்டுமுகத் தோற்றத்தினைக் காட்டி நிற்கும் சீகிரியக் கவிதைகளின் மூலம் அக்காலத்து மக்களின் வாழ்வியல் பற்றிய சுவாரஷ்யமான தகவல்களை அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது. குறிப்பாக, சீகிரியக் கவிதைகளை எழுதிய கவிதாயினிகளின் கவிதைகள் மூலம் அக்காலப் பெண்களின் சமூகநிலை, அவர்களின் ஆடை அலங்காரங்கள், அவர்தம் கலைத்திறன்கள் முதலான இன்னோரன்ன அம்சங்கள் குறித்து அறிய முடிகின்றது.

குமாரி ஜயவர்தனவின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கஜமன் நோனா, அவரின் இளைய சகோதரி டொனா அர்னோலியா பெருமாள், அவரின் மகள் டொனா கதரினா, திசாவை ஒருவரின் மகளான தராகம குமாரி ஹாமி, திஸ்ஸாநாயக்க லமாதெனி முதலானோரை முன்னோடிச் சிங்களக் கவிதாயினிகள் எனலாம்.

பெண்கள் இலக்கியத்தில் பங்கேற்பது மிகவும் அரிதாகக் காணப்பட்ட மாத்தறை யுகத்திலே தோன்றிய கஜமன் நோனா (1746- 1814) மிக முக்கியமான கவிதாயினியாகத் திகழ்ந்தார் என்பதை ஏலவே குறிப்பிட்டோம். அவ்வாறே, நவீன இலக்கிய யுகத்தின் மறுசீரமைப்பிலும் அவரது செல்வாக்கு முக்கியமானதாகக் காணப்படுகின்றது. ஆண்களோடு சரி சமமாக நின்று துணிச்சலோடு கவிதைகளைப் படைத்தளித்த கஜமன் நோனா கட்டமைத்த ஆளுமையானது, பிற்காலத்தில் பல்வேறு கலை இலக்கியத் துறைகள் சார்ந்தும் பங்கேற்க முன்வந்த பல பெண்களுக்கும் மிகச்சிறந்த முன்மாதிரியாக விளங்கியதை மறுக்க முடியாது.

கஜமன் நோனா பொதுச் சமூகக் கலை இலக்கியப் போக்கை பிரதிபலிக்கும் ஒரு கவிதாயினி ஆவார். என்றபோதிலும், அவருடைய கவிதைகளை வெறுமனே எளிய மொழி நடையின், இலகுவான கவிதை வடிவத்தின் பிரதிபலிப்பு மட்டுமே என்று கொள்ள முடியாது. இதற்குக் காரணம், அவர் பாரத எனும் காவியத்தை எழுதிய கரத்தொட்ட  தம்மாராம பிக்கு அவர்களிடம் வேரகம்பிட்டிய ரஜமகா விகாரையில் கவிதையியலை முறைப்படிக் கற்றுத் தேர்ந்தவராக இருந்தமை ஆகும். ஆண்களுக்கு மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்பு இருந்த அக்கால கட்டத்தே சிங்கள இலக்கிய, இலக்கணத்தில் துறைபோன பண்டிதரான ஒரு பௌத்த விகாராதிபதியிடம் போய் எவ்வாறு கவிதை இலக்கணமும் சிங்கள இலக்கியமும் கற்றிருப்பார் என்ற வியப்பு எழுவது தவிர்க்க முடியாததாகும்.

சிங்கள மொழியின் மீதும் இலக்கியத்தின் மீதும் கொண்ட தணியாத காதலினால் கஜமன் நோனா தனது 13 ஆவது வயதில் சாரமும் பனியனும் அணிந்து தலைமுடியைப் பக்கவாட்டில் அழுந்தவாரி ஓர் ஆண்பிள்ளை போல் வேடம் தரிக்கவும் துணிந்தார். தன் மாமனாராகிய அபய குணவர்தன சமரஜீவ அவர்களின் உதவியோடு மாறுவேடம் பூண்டு வேரகம்பிட்டிய பௌத்த விகாரையில் தங்கியிருந்துதான் அவர் அக்கல்வியைப் பெற்றார் என்பதும் கற்றுத் தேர்ந்தபின் தன் செயலுக்கான காரணத்தைத் தெளிவுபடுத்தித் தன் ஆசானிடம் மன்னிப்புக் கோரினார் என்பதும் மிகவும் சுவாரஷ்யமான ஒரு வரலாற்றுக் குறிப்பாகும். கஜமன் நோனா மரபார்ந்த மொழி இலக்கணத் துறையில் தேர்ச்சி பெற்றிருந்தாலும், அவரின் கவிதைகள் பாரம்பரியக் கவி இலக்கண மரபுக்கு ஏற்ப அன்றி, சாதாரண மக்களைப் பிரதிபலிக்கும் வகையில் நாட்டார் மரபுக்குரிய எளிய இனிய நடையில் மக்கள் இலக்கியமாகவே மேற்கிளம்பின என்பது கூர்ந்து கவனிக்கத்தக்க ஒரு சிறப்பம்சமாகும்.

கஜமன் நோனாவுக்குப்பிறகு தோன்றியவர் ரன்ச்சாகொட லமயா. இவர் கஜமன் நோனா போலன்றி சமூகத்தின் அடிநிலை மக்களில் இருந்து தோன்றிய ஒருவர். அவருடைய கவிதைகளில் வெளிப்பட்ட எதிர்ப்புணர்வும் நகைச்சுவையும் அவருக்கே உரிய தனித்துவப் பண்புகளாக விளங்கின. ரூன ஹாமினே மற்றொரு கவிதாயினி. அவர் வைத்தியத்துறையில் சிறந்து விளங்கினார். கண்டி யுகத்தில் தோன்றிய பிரமிளா அம்மையாரும் பிரபலமான ஒரு கவிதாயினி ஆவார். திசாநாயக்க லமாதனி அம்மையாரும், “அனுராக மாலய” எழுதிய பலவத்தல மெனிகேயும் அக்காலத்தில் வாழ்ந்த முன்னணிக் கவிதாயினிகள் ஆவர்.

இப்பெண்களின் கவிதைகளில் பெரும்பாலும் அக உணர்வு வெளிப்பாடுகளே பாடுபொருளாக அமைந்த போதிலும், அவற்றில் கவிதைக்குரிய அழகியல் கூறுகள் நிரம்பி இருந்ததை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, கஜமன் நோனாவின் கவிதைகளின் வழியே அவருடைய வாழ்க்கையை அறியக்கூடியதாக உள்ளது. அவர் தன்னுடைய வாழ்நாள் முழுதும் அனுபவித்த இன்ப துன்பங்களே அவரது கவிதைகளின் பாடுபொருளாக அமைந்தன. கஜமன் நோனாவின் அழகில் மயங்கி அவரை அடைவதற்காக வந்த ஆண்களுக்கு அவரால் கவிதை வடிவிலேயே வழங்கப்பட்ட மறுமொழிகள் எதிர்ப்புணர்வை நேரடியாகவே வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. ரஞ்ச்சகொட லமயாவின் கவிதைகளை கஜமன் நோனாவின் கவிதைகளோடு ஒப்பு நோக்கிப் பார்க்க முடியாவிட்டாலும், எள்ளலும் கிண்டலும் கொண்ட எளிய கிராமிய மொழிநடையில் அமைந்திருந்த அவருடைய கவிதைகள் எதிராளியை வாயடைக்கச் செய்யும் வண்ணம் மிகவும் சுவாரசியமானவையாக அமைந்திருந்தன.

கஜமன் நோனாவுடைய கவிதைப் பண்புகளை ஒத்த, அதாவது கவிதைகளின் ஊடாக வாழ்வினை தரிசிக்கும், அக உணர்வுகளை உயிரோட்டத்துடன் வெளிப்படுத்தும் மற்றொருவராக மோனிகா ருவன் பத்திரனவை அடையாளப்படுத்தலாம். நவீன காலச் சிங்களக் கவிதாயினிகளில் கஜமன் நோனா பிறந்த அதே ருஹுனு பிரதேசத்தில் தோன்றி வளர்ந்த மோனிகா, நவீன கஜமன் நோனா எனப் போற்றப்படுகின்றார்.

மோனிகா 1971 ஆம் ஆண்டு ‘அப்பி தென்னா ஸஹ தவத் கீப்ப தெனெக்’ (நாமிருவரும் இன்னும் சிலரும்) எனும் கவிதைத் தொகுதி மூலம் சிங்களக் கவிதை உலகில் பிரவேசித்தவர். இவர் எழுபதுகளில் சிங்களக் கவிதை உலகில் முன்னோடிக் கவிதாயினியாகப் போற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய கவிதைகள் பெரும்பாலும் அகநிலைப்பட்டவையாக, தன்னுணர்வு சார்ந்து வாழ்வைத் தரிசிக்கும் போக்குடையவையாக இருக்கும் அதேவேளை, முழு மாநிலத்தையும் நேசிக்கும் கருணைப் பண்பையும் கொண்டிருந்தன. 1975ஆம் ஆண்டில் அவரால் வெளியிடப்பட்ட, ‘ஒபே யெஹலிய எய கெஹனிய’ (உங்கள் தோழி – அவள் பெண்) எனும் நெடுங் கவிதைத் தொகுப்பு அதற்கான மிகச் சிறந்த உதாரணமாகும்.

“சிந்தும் விழி நீரின் கீழ் துயர் புதைத்த

எல்லாப் பெண்களுக்காகவும்

சமர்ப்பிக்கிறேன் கவி வரிகளை………..

என்ற வரிகள் அவருடைய மனிதநேயத்தை, துயருற்று உழலும் பெண்கள் மீதான உணர்வுத் தோழமையைப் பிரதிபலிக்கின்றன.

இவரது கவிதைகளில் வாழ்வின் மீதான தேடல், துன்பங்களால் அலைக்கழியும் பெண்கள், மனிதர்கள், குழந்தைகள் குறித்த அவரது பார்வைக் கோணங்கள், மரபார்ந்த சந்த நயம், உவமை – உருவக அணிகள் என்பவற்றைத் தாண்டி அதற்குப் பதிலாகக் கவித்துவமான எண்ணக்கருக்களைக் காட்சி ரூபமாகக் கவிதைகளை நகர்த்தும் போக்கினையும் காணலாம். சக மனிதர்கள் மீதான பரிவுணர்வை வெளிப்படுத்தும் அவரது கவிதைகளில் ஒரு பதச் சோறாக,  ‘’லெட்சுமிகே சித்துவில்ல – லட்சுமியின் எண்ணம்” எனும் கவிதையை முன்னிறுத்தலாம்.

“பனிக்குளிரில் பல்லெல்லாம்

கிடுகிடுக்கும் ; உடம்பெல்லாம்

வெடவெடக்கும்; படியேறி

நடப்பே(ன்) நான் தோட்டத்தி(லே.

மலைமுகட்டில் கொழுந்தெடுக்க

சுத்துமலை சுத்திவர

தோட்டக்காட்டு எல்லைவரும்

எல்லையிலே நிற்குமந்த

தேயிலைப் பத்தைவரும்

பத்தையினைக் காங்கையிலே

கைகாலில் ஒதறல்வரும்.

எளங்குருத்து அசைகையி(லே

இமைரெண்டும் படபடக்கும்

பனித்துளிக(ள்) கொட்டுறப்போ

கண்ணுக்குள்ள தண்ணிவரும்.

சுத்தியுள்ள புல்வெளியே!

புல்மொளச்ச நல்மண்ணே!

அன்றொருநா(ள்) ஓம்மடியில்

நானொளிச்ச புள்ளயெங்க?

வருஷங்க(ள்) பத்திரண்டு

ஆயிட்டது எம் மவனே

தலைதூக்கி இனி மெதுவா(ய்)

எந்திரிச்சி வா ராசா.”

என்ற அவரது கவி வரிகள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட மலையகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளியான தமிழ்ப் பெண்ணொருத்தியின் உணர்வு வெளிப்பாடாக அமைந்துள்ளமையைக் காணலாம்.

பொதுவாகச் சிங்களக் கவிதாயினிகளின் கவிதைகளில் பாடுபொருள்கள் என்ற வகையிலே அக உணர்வுகள், சமூகச் சிக்கல்கள் குறித்த விமர்சனம், பெண் நிலை குறித்த மனப்பதிவு, திருமணம், குடும்பம், குழந்தைகள், கணவன் – மனைவி உறவு, அரசியல் மற்றும் சமய நிறுவனங்கள் என்பவை மீதான எதிர்ப்புணர்வு எனும் பன்முகமான தளங்களில் தமது பார்வையை முன்வைக்கும் வகையிலும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டும்  அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்களின் படைப்புகளில் கிராமிய மக்களைப் போலவே நகர மக்களையும் அவர்தம் துயரங்களையும் வாழ்வியல் போராட்டங்களையும் குறிப்பாக, மத்தியதர வர்க்க வாழ்வின் அன்றாட அலைக்கழிப்புக்களையும் தம்முடைய அனுபவங்களின் அடியாக வெளிப்படுத்தி வரும் போக்கினை அவதானிக்கலாம். அவ்வகையில், விளிம்புநிலையாளர்கள் குறித்த ஒத்துணர்வினை வெளிக்காட்டும் விதமாக அமைந்த, குஷானீ ஷசி ப்ரபாவின் ‘தனியார்மயமாக்கல்’ எனும் கவிதையின்,

அறிவித்தல்!

“கறுப்பு வெள்ளையர் தம்

கரன்சி ஆசையை

நிவர்த்திக்குமுகமாய் ~ பொது

மக்களின் வயிற்றுப்பசி

ஏலம் விடப்படும்

எனும் கவிதை வரிகளையும், சுமுது பத்திரன எழுதிய, ‘தரு செனஹச – பிள்ளைப்பாசம்’ எனும் கவிதையின்,

“நிசிதோறும் அவள் வனப்பை

ருசிபார்ப்போர் பட்டியலோ

நாளுக்கு நாள் மாறும் ~ மிகு

வெறுப்புடனேனும் தன் பாவத்

தொழிலுக்குத் தினந்தோறும்

இரவுகளில் தெருமுனையில்

அவள் வந்து நிற்கின்றாள்.

சின்னஞ்சிறு குடிலில்

‘அப்பனி’ல்லாப் பச்சைமண்

 ‘வந்துபோனவன்களெல்லாம்

அச்சிசுவினது ‘அப்பன்’தானோ?

சுமைதாங்கியாகி அவள்

தன்னுடலை விற்றாலும்

அவளும் ஒரு மகவைப்

பெற்றெடுத்த தாயல்லவா?”

எனும் வரிகளையும், சுகர்சனி தர்மரத்தினவின்,

பஸ்ஸில் ரயிலில்

நின்று தளர்ந்து கால்கள் துவள்கையில்

கரங்கள் நீள்கின்றன

ஐயா, உங்கள் மனைவியும்

அபாயகரமான பயணத்தில்

தனித்திருப்பார்.

கேட்கிறதா கேட்கிறதா

வீட்டின் மூலையில் சமையலறையில்

பாத்திரங்களின் கலகலப்பு

கழுவும், அடுக்கும், நடமாடும்

சப்தங்கள்

மாமிச உணவுகளின் வாசனைகள் எழுகிறதா?”

எனும் வரிகளையும் எடுத்துக் காட்டுக்களாகக் கொள்ளலாம்.

நவீனகாலச் சிங்களக் கவிதாயினிகள் பலர் தற்போது கவிதையிலக்கிய உலகில் காலடி எடுத்து வைத்துள்ளனர். இவர்களில் சிலர் தமது முன்னோரை விஞ்சிச் செல்லும் திறனும் ஆளுமையும் மிக்கவர்களாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது. இவர்கள் அனைவரையும் இணைக்கும் பொதுப் புள்ளியாகக் கவிதைகளின் ஊடே வாழ்வினைத் தேடிச்செல்லல், கவிதைகளின் ஊடாக வாழ்வினை தரிசித்தல் எனும் அம்சங்கள் இடம்பெறுகின்றன எனலாம்.

இளம் சிங்களக் கவிதாயினிகளின் கவிதைகள் காதல், அதன் அழகியலும் அற்புதமும், அதன் இருண்ட பக்கங்கள், துயரம், பிரிவு, வேதனை, சிதைந்த எதிர்பார்ப்புகள் என்பவற்றையும் பாடுபொருளாக உள்ளடக்கியுள்ளன. அந்தவகையில்,

“என் வாழ்வு

இருட்டான இரவாய் இருந்துவந்துள்ளது;

நிலவொளியாய்  நீ

பொழியும் வரை.

விசாலித்த இவ்வுலகமே

என்னளவில் அர்த்தம் சிதைந்ததாய்,

உந்தன் நேசம்

அடையப்பெறும்வரை (நவாதென் ஒபய் – நீயே தரிப்பிடமாய்)

எனும் விஜாயினீ நாளிகா கருணாதிலகவின் கவிதை வரிகளையும், இரோஷினி ருவந்திகா எழுதிய, ‘’பியகரு பலாபொருத்து – அச்சமூட்டும் எதிர்பார்ப்புகள்’’ எனும் கவிதையின்,

“நான்மட்டும் அனாதரவாய்…

தனித்துப் பரிதவித்து

உள்ளம் பேதலித்து..

………………

வெறுமையான நிமிஷங்களால்

இயலாமைத் தவிப்புடனே

புத்தகத்தில் விழிபதித்தேன்

அந்தோ !

உள்ளம் உனைநோக்கி(யே)

ஓடோடக் காண்கின்றேன்.”  எனும் வரிகளையும் உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இவை தவிர, அனோமா ராஜகருணா, சீதா ரஞ்சனி, விபுலி நிரோஷா ஹெட்டியாரச்சி, குமாரி குமாரகமகே, மாலதி கல்பனா அம்ரோஸ், கௌஷல்யா ஜயலத், சுகர்சனி தர்மரத்ன, அனுராதா நில்மினீ, கத்யானா அமரசிங்ஹ, நதீ கம்மெல்லவீர முதலாக நீண்டு தொடரும் பட்டியலில் இடம்பெறும் சிங்களக் கவிதாயினிகளில் பலர் அரசியல் விமர்சனம், போரின் அவலங்கள், சமாதான விழைவு, அடக்குமுறை எதிர்ப்பு, மானிட நேயம் முதலான கருப்பொருட்களை மையப்படுத்தி ஏராளமான கவிதைகளை எழுதி உள்ளனர்.

அவற்றில் ஒருசில எடுத்துக்காட்டுக்களை மட்டும் வகைமாதிரிகளாக நோக்குவது பொருத்தமானது. அவ்வகையில், விபுலி நிரோஷி ஹெட்டியாரச்சியின்,  ‘பாலச்சந்திரன்’ என்ற கவிதை படுகொலை செய்யப்பட்ட பாலச்சந்திரனை நினைந்து உருகும் வகையில் அமைந்துள்ளது. அவரது, ‘கெஹெணு அபி – பெண்கள் நாம்’ எனும் கவிதை, பாதுகாப்பு அதிகாரிகளின் இரவுநேரத் திடீர்ச் சோதனைகளினால் சாதாரணப் பொதுமக்கள், குறிப்பாக ஒற்றைப் பெற்றோராய் இருக்கும் பெண்கள் அனுபவிக்கும் அசௌகரியங்களைப் பேசுகின்றது. இக்கவிதை, ‘வீட்டில் ஆண்கள் யாருமில்லையா?’ எனக் கேட்கும் அதிகாரிகளின் அதட்டலான கேள்விக்கு,

“ஓ, வேறு யார்?

நாம் தான் இவ்வீட்டில்

எஞ்சியிருக்கும் ஆண்கள் என்று பதில் சொல்வதாக நிறைவடைகின்றது.

கௌசல்யா ஜயலத் மிக முக்கியமான சிங்களக் கவிதாயினிகளுள் ஒருவர். இவரது ‘அபி கொய் தரம் கலுபாடத – நாம் எந்தளவு கறுப்பானவர்கள்?’ எனும் கவிதையில், அரச வன்முறைகள் குறித்த விமர்சனத்தை முன்வைத்து,

“……..முதலில் கறுப்பு ஜூலை

இப்போது கறுப்பு ஜனவரி

மீதி மாதங்களும் கறுப்பாகும்வரை உறங்கும்

நாம் எந்தளவு கறுப்பானவர்கள்?”

எனக் கேள்வி எழுப்புகின்றார். இதையொத்த ஓர் உணர்வினை வெளிப்படுத்தும் சுகர்சனி தர்மரத்னவின், ‘ஜூலி மாசய கலு உனே எய்? – ஜூலை மாதம் ஏன் கறுப்பானது?’ என்ற கவிதை 1983 ஆடிக் கலவரத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவன்முறை வெறியாட்டத்தை வலியோடு பதிவு செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.

‘தருகல்- குழவிக் கல்’ எனும் கௌசல்யா ஜயலத்தின் மற்றொரு கவிதை, இராணுவ முகாமைச் சுற்றி அமைக்கப்பட்ட கல்வேலியில் அம்மிக் குழவிகள் பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு எழுதப்பட்டதாகக் கூறி ஆரம்பமாகின்றது.

“……ரசம் செய்து தோசை சுட்ட கைகள்

அக்னிச் சுவாலையில் கருகியிருக்கலாம்

கல்லின் விழியிலும் கண்ணீர் துளிர்த்திருக்கும்

துயரக் கதையொன்று ஒளிந்திருக்கக்கூடும்

உருண்டைகளில் மிளகுக் காரமிருந்திருக்கும்

அச்சுவையறிந்த படையணியினர்க்கும்

தமிழ் அம்மாக்களைப் பலிகொடுத்துவிட்டு

வந்துசேரவே வாய்த்திருக்கக்கூடும்

கல்லும் உருண்டைகளைத் தின்று விழுங்கியிருக்கும்

கொண்டாடுவதற்காக அவர்கள்

கொண்டு வந்தார்களா

ஒளித்து வைப்பதற்கென்றே

இக்கற்களைத் தூக்கி வந்தனரா?”

எனும் வரிகளில் சூறையாடப்பட்ட தமிழர் உடைமைகள் குறித்த இரங்கலுணர்வு அழுத்தமாக முன்வைக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.

போர் மீதான வெறுப்புணர்வையும், தமிழ் மக்கள் மீதான உணர்வுத் தோழமையையும் வெளிப்படுத்தும் சிங்களக் கவிதைகளை எழுதிய கவிதாயினிகளுள் குமாரி குமாரகமகே முக்கியமானவர். இவரது ‘செத்துப்போன நவம்பர் மாதம்’ என்ற கவிதை,

“நினைவுச் சின்னம், மெய்க்கீர்த்தி, கிரியைகள்

ஏதுமற்றுப்போன மகன்

துயில்வதற்கோர் சவப்பெட்டியோ இடுகாடோ

அற்றுப்போன மகன்

அங்கு

பெருக்கெடுத்தோடிய குருதியில்

வேறுபாடுகள் இருக்கக்கூடுமோ?”

என்று போரில் மடிந்த அனைத்து மானிட உயிர்களுக்காகவும் துயருறுகின்றது.

போரினால் தமிழ் மக்கள் அடைந்த இன்னல்கள் குறித்து பல கவிதைகளை எழுதி இருக்கும் மற்றொரு சிங்களக் கவிதாயினியான மாலதி கல்பனா அம்ரோஸ், ”மோகன்” எனும் கவிதையில்,

“நிரந்தர வன்மத்தால் எரியுண்ட தேசத்தில்

கரிபடிந்த வாழ்வின்

மௌனச் சிதிலங்களிடையே

நெஞ்சுவெடித்துப் போய்

சொந்தபந்தங்கள் மெல்ல மெல்லச் சாகையில்

குறை சீனியில், நிறை சீனியில்

தேநீரும் கோப்பியும் ஊற்றியூற்றி

சில்லிட்ட இதயங்களுக்கு வெதுவெதுப்பூட்டுவது

அடி மனசில் செத்தும் உயிர்த்துமாய்த் துடிதுடிக்கும்

ஒரு கனவு நட்சத்திரத்தின் ஒளியினாலா?” என்று கேள்வி எழுப்புகின்றார்.

நிமலராஜனின் படுகொலை தொடர்பில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்த முனையும் நதீ கம்மெல்லவீர,

 “இந்த மண்ணில் உன்னை நான்

ஈன்றெடுத்து விட்டதற்காய்

மன்னித்துவிடு என்னை

அதே முகம் கொண்டிருக்கும்

(மகன்) விழிகள் பார்த்தபடி

ஆயிரமாவது தடவையாய்

முணுமுணுக்கின்றேன், நான்…”

என்று மனிதநேயமுள்ள சிங்களச் சமூகத்தின் மனச்சான்றாய்க் குரலெழுப்புகின்றார். இவர்களோடு,

“எல்லா நாட்களைப் போலவே

இன்றும் இச்சூரியன் உதித்தாலும்

இன்று புதிதென எண்ணுவோம்

எல்லா நாளையும் போலவே

மலர்ந்தாலும் இப்பூக்கள் இன்றுமே

இவை புதிதென எண்ணுவோம்

புத்துயிர்ப்பாக்கிய உள்ளத்தால்

புதுவிதமான என்ணத்தால்

நல்லவை விளைந்திட

அல்லவை அகன்றிட

உறுதி நாம் பூணுவோம்

என நம் அனைவர் வாழ்விலும் நல்லவை விளைந்து தீயவை அகன்றிடும் எனும் புது நம்பிக்கை ஒளியை ஏற்ற முனையும் பன்முக ஆளுமை சீதா ரஞ்சனியின் பல்துறை இலக்கியப் பங்களிப்பையும், ஓர் ஊடகவியலாளராய் சமூக மேம்பாட்டுக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் மேலேழும் வலிமையான குரலையும் நாம் கருத்திற்கொள்ளுதல் அவசியம்.

இவ்வாறாக, இதுவரை காலமும் சிங்களக் கவிதாயினிகள் பலர் காதல், அரசியல் பிரக்ஞையுணர்வு, சமூக விமர்சனம், பெண்ணியம், உலகளாவிய மானிட நேயம், தாய்மை, அடக்குமுறைக்கான எதிர்ப்பு, போரவலங்கள், சமாதான விழைவு முதலான இன்னோரன்ன பாடுபொருள்களை உள்ளடக்கி, கவித்துவம் மிக்க ஏராளமான கவிதைத் தொகுதிகளை வெளியிட்டு வந்துள்ளனர்.  எனினும், அவை சிங்கள இலக்கிய உலகில் போதிய கவனயீர்ப்பைப் பெறுவதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி இருந்தமை குறித்து பலரும் தமது விசனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

அவ்வகையில், 1971 ஆம் ஆண்டு முதல் இவ்வுலகை விட்டு மறையும்வரை சுமார் 28 வருடங்கள் கவிதைகள் எழுதிய மோனிகாவின் ‘அசன் பத்தினி தேவதாவி’ (பத்தினித் தெய்வமே கேள்) கவிதைத் தொகுதிக்கு முதல் முறையாக 1999 ஆம் ஆண்டிலேயே அரச சாகித்திய விருது கிடைக்கப்பெற்றது. இதற்கிடையில் 1993ஆம் ஆண்டு யமுனா மாலினி பெரேரா ‘தித்த மகரந்தய’ (கசந்த தேன்) எனும் கவிதை தொகுதிக்காக அரச சாகித்திய விருதினைப் பெற்று, அவ்விருதைப் பெற்ற முதலாவது சிங்களக் கவிதாயினி என்ற பெருமையை அடைந்தார். மோனிகா ருவன் பத்திரன 2002ஆம் ஆண்டில் தன்னுடைய, ‘ஹிப்போக்கிரட்டிஸ் ஹா ரோகிணிய’ எனும் கவிதைத் தொகுதிக்காக இரண்டாவது முறையாகவும் அரச சாகித்திய விருது பெற்றார். அண்மைக் காலத்தில் இவ்விருதை பெற்றவராக சுகர்ஷனி தர்மரத்ன கவிதாயினி திகழ்கிறார்.

2012ஆம் ஆண்டில் வெளிவந்த சுஹர்சனியின், ‘கிரிஹிச தரனய’ (சிகரம் தொடுதல்) கவிதைத் தொகுதிக்காக 2013ஆம் ஆண்டு அரச சாகித்திய விருது கிடைக்கப் பெற்றதன் பின்னர் வேறு எந்தக் கவிதாயினியும் விருது பெற்றமைக்கான தகவல்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை. அதேவேளை, சுஹர்சினியின் சுதுவத ஹெந்தி கெகனிய (வெள்ளுடை அணிந்த பெண்), தனுஜா லும்பினி தம்பவிட்டவின், ‘தும்புரு கொல மொனரு லிஸ்ஸன பபுவ’ (கபிலத்தாள் மயில்கள் – வழுக்கும் இதயம்), சுனந்தா ரணசிங்ஹவின், ‘தெனிதலா பிமக்க சிஹின இம’ (சமவெளியொன்றின் கனவெல்லை) போன்ற படைப்புகள் அரச சாகித்திய விருதின் இறுதிச்சுற்றுக்காகத் தெரிவாகியமையும் பதிவு செய்யப்படுதல் வேண்டும். இது தவிர, சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி ‘வித்யோதய’ இலக்கிய விருதையும், சுஹர்சினி தர்மரத்ன ‘கொடகே’ தேசிய இலக்கிய விருதையும் பெற்றுள்ளனர் என்பதோடு, அனுராதா நில்மினி ‘ரஜத புஸ்தக’ விருதுக்கான இறுதிச்சுற்றுக்கு தெரிவானமையும் குறிப்பிடத்தக்கது.

அண்மைக் காலத்தில் வெளிவந்த கவிதைத் தொகுதிகள் எனும்போது, ரொஸேல் ஃபர்ணான்டோவின், ‘ஒவ் ஏக்க ஹாதுவக் – ஆம் அது ஒரு முத்தம்’ (2019) (இது அவருடைய முதலாவது கவிதைத் தொகுதி), சுகாஷினி தர்மரத்னவின் ‘எஹெம வரதக் கரலா நே மம – நான் அப்படியொரு தவறு செய்யவில்லை’ (2019) (இது அவரது ஐந்தாவது கவிதைத் தொகுதி.), தேவிகா மதுவந்தி கோவின்னகே உடைய முதலாவது கவிதைத் தொகுதியான, ‘எக்க கவியக் ருபியலய் – ஒரு கவிதை ஒரு ரூபா’ (2018), அனுராதா நில்மினியின், ‘ரிதும் பிரீ பிரிமெதும் – வலிதரும் வருடல்கள்’ (2019) தொகுதியும் (இது அவருடைய நான்காவது கவிதைத் தொகுதி) முக்கியமானவை எனலாம். ஆக, உணர்வெழுச்சியும் அரசியல் பிரக்ஞையும் சமூக விமர்சனமும் கொண்ட கவிதாயினிகளின் பல கவிதைத் தொகுதிகள் வருடந்தோறும் வெளிவந்த வண்ணமே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக, கஜமன் நோனா முதல் இக்காலம் வரை ஏராளமான சிங்களக் கவிதாயினிகள் தோன்றித் தமது படைப்புகளை இலக்கிய உலகிற்கு அளித்துள்ள போதிலும் அவர்களின் அப்படைப்புகளுக்கு சிங்கள இலக்கிய வெளியில் சரியான இடம் வழங்கப்பட்டுள்ளதா என்று மேலெழும் கேள்வி மிக முக்கியமானதாகும்.

குறிப்பு:

இவ்வாய்வுக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கலாநிதி குமாரி ஜயவர்தனவின் ஆங்கிலக் கட்டுரைப் பகுதியும், ஆய்வில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள சிங்களக் கவிதை வரிகளும் இக்கட்டுரையாசிரியையால் தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்டு, எடுத்தாளப்பட்டுள்ளன.

லறீனா அப்துல் ஹக்-இலங்கை

லறீனா

 

(Visited 319 times, 1 visits today)

2 thoughts on “சிங்களக் கவிதாயினிகள்: ஒரு சுருக்க அறிமுகம்-லறீனா அப்துல் ஹக்”

Comments are closed.