சாம்பலாய்ப் படியும் மனிதர்கள்- பத்தி-டிசே தமிழன்

“I keep on dying again.

Veins collapse, opening like the

Small fists of sleeping

Children.

Memory of old tombs,

Rotting flesh and worms do

Not convince me against

The challenge. The years

And cold defeat live deep in

Lines along my face.

They dull my eyes, yet

I keep on dying,

Because I love to live.”

(‘Lesson’ by Maya Angelou)

டிசே தமிழன்புத்தகங்கள் எப்போதும் புன்னகைகளையே பரிசாகத் தருகின்றன என்று சிறுவர்கள் கூறுகின்றார்கள். நான் திறந்து வாசிக்கும் புத்தகங்களிலிருந்து அநேகமாய் வலிகளே வெளியேறுகின்றன. பிரியும் பக்கங்களிலிருந்து இறங்கும் வலிகளைப் பின்தொடரும் ஒவ்வொருபொழுதிலும் என்னை அவை அவிழ்க்க முடியாத புதிர்களுக்குள் சிக்கவைத்துவிட்டு வெளியேறி விடுகின்றன. நானோ, இது புத்தகத்தின் வாதையா இல்லை என் அனுபவங்களின் வாதையா என்று மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றேன்.

கனடாவுக்கு வந்து ஒரு வருடம் இருந்திருக்குமா? அதுவரை அனுபவித்திராத காலநிலை, ஆங்கிலமொழிப் பரிட்சயம் அவ்வளவாய் இல்லை என்கின்ற அவதிகளினூடாக விழி பிதுங்கிக்கொண்டிருந்த காலம். நகைச்சுவைக்குணம் மிகுந்தவனாய், கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவனாய் அறிமுகமாயிருந்தான் அவன். புலம்பெயர்ந்த அநேகருக்கு போர் தந்தவலிகளைப் போல, அவனுக்குள்ளும் இரத்தக்கறை படிந்த கடந்தகாலத்தின் பக்கங்கள் உறைந்துபோய்க் கிடந்தன.

சிறுவயதில் அவனது தாயார் அவனது கண்முன்னாலேயே இந்திய இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பிற நண்பர்கள் கூறக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் அதை விரிவாகக் கேட்கும் தைரியம் எனக்கு ஒருபோதும் வந்ததில்லை. அவனது துயரநதி பெருக்கெடுத்துப் பாய்ந்தால் அதைக்கட்டுப்படுத்தும் ஆறுதல் வார்த்தைகள் என்னிடம் இல்லை என்பது ஒருபுறமிருக்க, எந்தவிதத்திலும் அவனது தாயாரை அவன் திரும்பிப் பெறமுடியாது என்ற சோர்வுந்தான் என்னை இதுகுறித்துப் பேசுவதை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

அப்போதுதான் எனக்கு கணனி என்பதே என்னவென்று அறிமுகமாயிருந்தது.  கோடைகாலத்தில் நான் எடுத்த கணனி சம்பந்தப்பட்ட பாடம், கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரியாகப் பயமுறுத்திக்கொண்டிருந்தது. என்னால் தொடர்ந்து இதைக் கற்கமுடியாது என்று சோர்வாய் இருந்தபொழுதில் இந்த நண்பன்தான் ‘எல்லாவற்றின் அறிமுகங்களும் இப்படித்தான் பயமுறுத்தும், நாட்கள் செல்லச் செல்ல அவற்றின் முடிச்சு அவிழ நமக்கு அவை நெருக்கமாகிவிடும்’ என்று பரிவான வார்த்தைகள் பேசி என்னை உற்சாகப்படுத்தியவன்.  பிறகு கணனியில் இருந்த சுவாரசியத்தை விட -வருடத்தில் குறுகிய காலம் வரும் கோடையில்- வண்ணமயமாய்த் திரியும் காரிகைகளில் ஈர்ப்பு வந்து அப்பாடத்தைத் தொடராது இடைநடுவில் நிறுத்தியிருந்தாலும், இன்றும் புதிதாய் எதையாவது கற்றுக்கொள்ளும்போது அவனது அந்த உற்சாக வார்த்தைகள்தான் உடனடியாக மனதில் வந்து உட்கார்ந்து கொள்ளும்.

பிறகு ஒருநாள் நண்பன் இறந்துபோனான். அவன் தேடிய மரணத்தின் வழி மிகக் கொடூரமானது. தனக்குத்தானே தீ மூட்டிக் கொண்டான். நெருப்பின் உக்கிரம் தாங்காமல் தான் தப்பிவிடக்கூடுமோ என்று யோசித்தோ என்னவோ தன்னுடலை நீண்ட பொலித்தீனால் இறுக்கக்கட்டி பெற்றோலை ஊற்றியிருக்கின்றான். சம்பவம் கேள்விப்பட்டு அடுத்த நாள் போய்ப் பார்த்தபோது பசும்புல்வெளியில் தன் சுவடுகளை விட்டுச் சென்றிருந்தது தெரிந்தது.  கடைசிக்கணத்தில் நண்பன் எங்களுக்கு என்ன சொல்ல விரும்பியிருப்பான் என்பதை கருகிய அந்தப்புற்கள் மட்டுமே அறியும்.

ஏனிந்த முடிவை எடுத்தான் தோழன்? அவனைச் சிலிர்க்க வைத்து, பின்னர் குழம்பிப்போன காதல் என்றார்கள். அவனது தாயின் மரணத்தை நேரில் கண்ட மனப்பிறழ்வு என்றார்கள்.  காரணங்களைக் கண்டறிந்து என்ன செய்யப்போகின்றோம்? எங்களுக்காய் திரும்பி அவன் உயிர்த்தெழுந்து வந்து பாடசாலை வாசலில் சிரித்துக்கொண்டு நிற்கவா போகின்றான்?

எனினும் அவன் மரணத்தோடு-என்றுமே அழித்துவிடமுடியாததாய்- ஒரு குற்றவுணர்வு எனக்குள் குந்திக்கொண்டது. அவனது மரணத்துக்கு சில வாரங்களுக்கு முன்புதான் நானும் தற்கொலை செய்ய முயற்சித்திருந்தேன். வகுப்புக்களில் அளவுக்குமதிகமான மெளனத்தையும், நூலகங்களில் தனித்திருக்கும் தனிமையும் கண்டு, என்னில் ஒருவித பரிவான உணர்வு அவளுக்குள் தலைதூக்கியிருக்கலாம். அதை ‘தெய்வீக’க்காதல் எனக் கற்பிதங்செய்துகொண்டேன் நான். ‘எனக்கு இப்போது பதினாறு வயது, உனக்கு என்னைப் பிடித்திருந்தால் இன்னும் நான்கு வருடங்கள் காத்திரு’ என்று கூறி இன்னுமின்னும் கனக்க சரளமான ஆங்கிலத்தில் சலசலவென்று கதைத்துக்கொண்டே போனாள் அவள். எனக்கு அவளின் உரையாடலில் வந்த காதல் என்ற ஒரு வார்த்தையே நிறையக் கனவுகளை வளர்க்கப் போதுமானதாயிருந்தது. நான்கு வருடங்கள் காத்திரு என்றவள், நாற்பது நாட்களுக்கும் குறைவான நாட்களில் முகத்தைத் திருப்பி முறைத்துக்கொண்டபோது மனது உடைந்துபோனது.

சங்ககாலத்தில் கைக்கிளைக்காதலால் மடலேறி மாய்த்துக்கொண்ட யாரோ ஒருவன் எனக்கு உறவாயிருந்து அவனது மரபணுக்கள் என்னுள் கடத்தப்பட்டிருக்க வேண்டும் போலும்.  தற்கொலைக்கு முயற்சித்தபோது -அதைக் கச்சிதமாய் நிறைவு செய்வதற்கான துணிவின்மையும் மற்றும் அம்மாவின் கடைசி நேர நுண்ணுணர்வும் சேர்ந்து- என்னைக் காப்பாற்றி இப்போது இதை எழுத வைத்துக் கொண்டிருக்கின்றது. இப்படி நான் முயற்சித்தேன் என்றும் அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன் என்றும் அந்த நண்பனிடம் அன்று மனம் திறந்து பேசியிருந்தால், அவனும் தன்னம்பிக்கை பெற்றிருக்கக்கூடும். தற்கொலை மட்டுமே ஒற்றைவழியல்ல; வாழ்வதற்கு பல வழிகள் இருக்கின்றன என்று யோசித்து, தனது மரணத்தை இயற்கை தேர்ந்தெடுக்கட்டும் என்று தோழன் முடிவெடுத்து எங்களில் ஒருவனாய் இன்று அவன் வாழ்ந்து கொண்டிருக்கவும் கூடுமல்லவா?

இந்தத் தவறை மீண்டும் விடக்கூடாது என்பதில் -ஆகக்குறைந்தது எனக்கு நெருக்கமானவர்களிடம்- கவனமாயிருக்கின்றேன். பிறகொருபொழுதில் தோழியொருத்தி நிறைய தூக்க மாத்திரைகள் எடுத்து அதிஸ்டவசமாய்த் தப்பி, அடுத்த முறை தற்கொலையைத் திருத்தமாய் செய்வேன் என்று என்னிடம் அடம்பிடித்துக் கொண்டிருந்தாள்.  வைத்தியசாலையில் இருந்து வந்து அடுத்தநாளே -என்ன எழுதுகின்றேன் என்று தெரியாமல்- பக்கம் பக்கமாய் தற்கொலை குறித்து நிறைய எழுதி அவளிடம் கொடுத்திருக்கின்றேன்.  இப்போது அதை நானோ இல்லை தோழியோ வாசித்துப் பார்த்தால் எவ்வளவு குழந்தைத்தனமாய் அது இருக்கும் என்பது வேறுவிடயம்.

ஒருநாள் மஞ்சள்நிற ரோஜாப்பூக்களுடன் அவளைச் சந்தித்து -மனந்திறந்து பேசட்டும் என்று- ஒரு முழுநாளை அவளுடன் வளாகத்தின் study loungeல் கழித்ததும் நினைவிலுண்டு. ‘ஒரு நாளும் பூக்கள் எனக்காய் வாங்கித் தராத நீ, நான் சாகப்போகின்றேன் என்றவுடன் ரோஸஸை வாங்கி தருகின்றாயா?’ என்றார். ‘அப்படியொன்றுமில்லை; பூக்கள் விற்கும் பெண்ணில் ஒரு crush வந்து அவரைப் பார்க்கப் போய் இந்த பூக்களை வாங்கவேண்டியதாய்ப் போய்விட்டது, அதுதான் வாங்கினதை இனி வீணாக்கக் கூடாது என்றுதான் உங்களிடம் தந்தேன்’ என்று கூற, ‘மவனே…’ என்று ஆரம்பித்து அவர் திட்டத்தொடங்கியபோது, தோழி விரைவில் இயல்புநிலைக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கை வந்தது.

நிறைவேறாத ஆசைகள் கனவுகளாய் அடிக்கடி வந்துகொண்டிருக்கும் என்பார்கள்.  எனக்குள் தற்கொலை குறித்த எண்ணங்கள் கனவுக்கும் நனவுக்கு இடையிலான பாதையில் அடிக்கடி மூடுபனியாய் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கின்றன. அந்த வகையில்தான் சில்வியா பிளாத்தும், சிவரமணியும் எனக்கு நெருக்கமாகி இருக்கின்றார்கள் போலும். சிவரமணி இறந்துவிட்டார் என்று அக்கா யாழ் வளாகத்திலிருந்து ஒரு பின்னேரப்பொழுதில் கலங்கிய முகத்துடன் சொன்னபோதுதான் தற்கொலை குறித்த முதற்குறிப்பு எனக்குள் நுழைந்திருக்கவேண்டும்.

சிவரமணி எனக்கு முதலில் கவிஞையாக அறிமுகமானவரல்ல; அக்காவின் தோழியாகத்தான் அறிமுகமானவர். சிறுவயதுகளில் அக்காவின் அல்பங்களில் அவரின் படத்தைப் பார்த்து-கன்னக்குழி விழ அழகாகச் சிரித்துக்கொண்டிருப்பவர்- ஏன் இப்படியான முடிவை தேடினார் என்றுதான் அதிகம் யோசித்திருக்கின்றேன். ‘கேட்ட கேள்விக்கு விடையில்லாதபோது மெளனமாயிருக்கப் பழகவும்’ என்ற வலி(மை) நிறைந்த வார்த்தையை அக்கா கத்தரித்து வைத்திருந்த சிவரமணியின் படத்திலிருந்துதான் மனதுக்குள் ஒட்டிக்கொண்டது. இந்த வார்த்தை பல இடங்களில் அமைதியாக இருக்கச் செய்து தேவையில்லாத மன உளைச்சல்கள் என்னை நெருங்கவிடாது தடுத்திருக்கின்றது. சில்வியா பிளாத் தற்கொலை குறித்து வெளிப்படையாக எழுதியதைப் போன்று சிவரமணி தற்கொலை குறித்த குறிப்புக்களை நமக்காய் விட்டுச்சென்றதில்லை. சில்வியா ‘சாவதும் ஒரு கலை’ என்று சொன்னதோடு மட்டுமின்றி, தனது நீண்டகவிதையொன்றில் எழுதியதுமாதிரியே தன் தற்கொலையின் வழியையும் தேர்ந்தெடுதெடுத்தவர். சில்வியாவின் கவிதைகளை முதன்முதலில் வாசிக்கத் தொடங்கும் ஒரு வாசகரின் பொருட்டு சில்வியா மீண்டும் தற்கொலை செய்துகொள்கின்றார்,  அந்த வாசகர் தற்கொலை செய்துகொள்ளக்கூடாது என்ற பதற்றத்துடன்.

இன்றையபொழுதில் எத்தனையோ தற்கொலைச் சம்பவங்களை கேள்விப்பட்டும் வாசித்தும் விட்டாயிற்று. பெறுபேறுகள் குறைகின்றது என்ற பயத்தில் -நதிக்குள்-, அம்மா தன்னை அதிகம் திட்டிவிட்டார் என்பதற்காய் -நெடுஞ்சாலையில்-, நீ என்னை நேசிக்கவில்லையென்றால் இறந்துவிடுவேன் என்று கண்ணித்திரையில் எழுத்துக்கள் உறைந்துகிடக்க – அடுக்குமாடிக்கட்டடத்தில்- என எத்தனையோ சம்பவங்கள் நினைவின் அலையில் புரள்கின்றன.  ஏன் இதை எழுத ஆரம்பித்த சென்ற வாரத்திற்கும், எழுதி முடிக்கும் இந்த வாரத்திற்கும் இடையிலான வார இறுதியில்கூட, தமிழர் ஒருவர் தனது மனைவியையும் மகளையும் கொலை செய்துவிட்டு – குடும்ப வன்முறை பெரும்பங்கு வகித்தது என்றாலும்- தானும் தற்கொலை செய்திருக்கின்றார் என்று ஊடகங்கள் கூறிக்கொண்டிருக்கின்றன.

பனிக்காலம் ஆரம்பிக்கின்றது. வந்து இறங்கிய புலத்தில் வேர்களையும் பதித்து அடுத்த சந்ததிகளின் விழுதுகளும் வளரத்தொடங்கிவிட்டன. ஆனால் பனிப்புலத்தை உழுது -ஈழத்தில் இருப்பதைவிட மோசமாய்- சாதி, சமயம், புரளி, அந்தஸ்து என்று ‘அருமையான’ விளைச்சல்களை அமோகமாய் பெற்றுக்கொண்டிருக்கின்றோமே தவிர சக உயிர்களின் மதிப்பை இன்னும் உணர்ந்தோமில்லை. சாதி, சமயம், கெளரவம் இன்னபிறவற்றால் மன அவசத்தையோ தற்கொலையையோ, வன்முறையையோ தடுத்து நிறுத்திவிடமுடியாது என்று எப்போது எமக்கு உறைக்கப்போகின்றது?

இனி, சூரியன் புதைந்துபோன வானப்பின்னணியைப் போல எம் மனங்களையும் எரித்துச் சாம்பராக்க-winter blue- விரைவில் வரப்போகின்றது. வெளியே நினைத்த நேரத்தில் உலாத்தித்திரிந்து புத்துணர்ச்சி பெறுவதைத் தடுத்து, பனியும் காற்றும் பயங்கரமாய்ச் சுழன்றாட இழந்துபோன எவற்றையோயெல்லாம் அசைபோட்டு மனது குழம்பிச் சிதறப்போகின்றது.

கொஞ்சம் கனிவு தரும் வார்த்தைகள்; மனந்திறந்து பேச சில நிமிடங்கள் என்று சக மனிதருக்காய் சிறுபொழுதை ஒதுக்கும்போது – உங்களை அறியாமலே- நடக்கவிருக்கும் ஒரு தற்கொலையை நீங்கள் நிறுத்திவிடவும் கூடும். ஆதியில் மடலேறியவனின் மரபணுவை கொண்ட என்னைப் போல, யாரேனும் ஒருவர் தான் இன்று வாழ்ந்துகொண்டிருப்பதற்கு, நீங்கள்தான் காரணமென்று நாளை நன்றியுடன் ஒரு குறிப்பை அன்பு ததும்ப உங்களுக்காய் எழுதவும் கூடும்.

டிசே தமிழன்-கனடா

டிசே தமிழன்

 

 

 

 

(Visited 84 times, 1 visits today)
 

2 thoughts on “சாம்பலாய்ப் படியும் மனிதர்கள்- பத்தி-டிசே தமிழன்”

Comments are closed.