‘கற்பனையுலகின் சாகாவரம்’-சினிமா விமர்சனம்-பாகம் 11-விஜய ராவணன்

The Big Fish (2003 , English)

“எங்க வீட்டுநாய் எம்புட்டு பெருசு தெரியுமா… என்னைவிட உன்னைவிட நம்ம சசி அக்காவ விட வளத்தி… நின்னுட்டு இருந்தா நாக்கு தரை வரைக்கும் தொங்கும்!!!”

“சும்மா கதை விடாதே…”

“நீ நம்பாட்டிப் போ. என் நாய் அம்புட்டு உசரம் தான்….”

“சரியான புளுவூனி. இனி உன்கிட்ட கதை கேட்க வரமாட்டேன் பாரு…..”

பாதிக்கதையில் கோபத்தோடு எழுந்துபோகும் நண்பனின் முகம் நினைவு வரும் எல்லாருமே இயல்பிலேயே ஒரு கதைசொல்லி தான். Big Fsh திரைப்படத்தில் வரும் ‘எட்வர்ட் ப்ளூம்’ போல.

விஜய ராவணன் பாறைகளில் செம்மண் ஓவியங்களாகக் கிறுக்கி வைத்த குகை மனிதன் சொன்ன கதைகளின் மிச்சம் தான் புனைவுகளாக இன்னமும் நம்முள் எஞ்சி இருக்கின்றன. கற்பனைகள் தூவப்பட்ட சாமான்யனின் நினைவுகளும் அனுபவங்களும் பெருங்காப்பியங்களை விட சுவாரசியமானவை.

‘எட்வர்ட் ப்ளூம்’ தன் மகனுக்குச் சொல்லும் கதைகளில் துயரங்களுக்கோ வெறுப்புகளுக்கோ இடமில்லை. வெறும் சந்தோஷங்களும் திகைப்புகளும் மட்டுமே நிறைந்தவை. கூடவே நம்பகத்தன்மைக்கு அப்பாற்பட்ட கற்பனைகளும்…

தான் சந்திக்கும் நபர்களிடமும் தனக்கான பிரத்யேகக் கரகரத்த குரலில் ‘எட்வர்ட் ப்ளூம்’ சொல்லும் கதைகளில், நம் எல்லோரது பால்யக் கதைகளைப் போல அவர்தான் கதாநாயகன்…. தன் வாழ்க்கைப் பக்கங்களைச் சிறுகசிறுகப் புனைவுகளால் நிறைத்துக் கொண்டே போகிறார். அதில் எந்தவொரு தயக்கமுமின்றி கற்பIனை உருக்கள் இயல்பாக உலாவுகின்றன. சுயத்தை மறந்த கதையாடல் இரவெல்லாம் நீண்டு கொண்டே போகிறது.

ஆனால் தன் சிறு வயது முதலே அப்பா திரும்ப திரும்பச் சொல்லும் புனைவுக்கதைகளைக் கேட்டு கேட்டு சலிப்படைந்து போன ‘வில்புளூம்’ க்கு ஒருகட்டத்தில் கதைகளின் மீது தீராவெறுப்பே மேலெழுகிறது.

“என்னிக்காவது நீங்க கதைய விட்டுட்டு உண்மைய பேசிருக்கிங்களா….” என்று கோபப்பட்டு அப்பாவைப் பிரிந்துபோகும் வில்புளூமுக்குத் தாமதமாகவே புரிகிறது…. நிதர்சனங்களும் கற்பனைகளும் பிரித்தறிவதற்கு அப்பாற்பட்டு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்று.

The Fall (2006 film, English)

நம் அன்றாட தருணங்கள் கதைகளால் கட்டமைக்கப்பட்டவை… ஒவ்வொரு நிமிடமும் ஏதோவொரு கதை எங்கோ சொல்லப்பட்டு தான் வருகிறது. அப்படிப் பகிரப்படும் கதைகள் கேட்பவனின் இசைவைப் பொறுத்து பரிணாமம் அடைந்து கொண்டே போகும். கற்பனைகளின் எல்லைக்கோட்டைக் கடந்து கதை மாந்தர்கள் விழித்திரை முன் பெருகிவோடும் தருணம் அது.

விஜய ராவணன் இளவரசியின் அழகில் மயங்கிப் பச்சை ஆமை மீதேறி ஏழு கடல் தாண்டிப் போகும் இளவரசன் கதையின் நம்பகத்தன்மையை நாம் சிறுவயதில் கேள்விக்கு உட்படுத்துவதில்லை. எச்சில் ஒழுக வாய்த்திறந்து கேட்ட கதைகளின் சுவாரசியமும் அதை அனுமதித்ததில்லை. கதைகளின் எல்லைகள் வரையறுக்கப்படுகையில் புனைவின் சுவாரசியம் குன்றிவிடும். கண்ணாடி இழை போன்ற அதன் மென் இறகுகள் நசுங்கிப்போகும்.

படப்படிப்பில் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஸ்டண்ட் நடிகனான ‘Roy’ சொல்லும் கற்பனைக்கு அப்பாற்பட்ட புனைவுக்கதைகள் மீது சிறுமி ‘Alexandria’ வுக்கு எந்தவொரு முரண்பாடும் இல்லை. மாறாக அக்கதைகளைத் தனக்குள்ளாக மேலும் விரிவடைய செய்கிறாள். கதாபாத்திரங்களின் மனித சாத்தியமற்ற செயற்பாடுகளும் அக்கற்பனை உலகின் பிரம்மாண்டமும், மருத்துவமனையின் அலுப்பூட்டும் சூழலில் இருந்து அவளை விடுவித்து உவப்பளிக்கின்றன..

கதைகளின் உயிர்ப்பு அதை விவரிக்கும் காட்சிகளின் பிரமிப்பூட்டும் கட்டமைப்பில் மிளிர்கிறது. உடல் ஈரம் மின்ன நீர் சொட்ட சொட்ட ஆற்றில் விழுந்த கருங்குதிரை கயிறு கட்டி பாலத்தின் மீதிருந்து தூக்கப்படும் முதற்காட்சியில் தொடங்கி ஒவ்வொரு காட்சியும் புருவத்தை உயர்த்தச் செய்யும் அழகியலின் வெவ்வேறு தீற்றல்கள். நான்கு வருட காலத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் படம்பிடிக்கப்பட்ட ‘The Fall’ ரம்யமான காட்சிகளின் அட்டகாசத் தொகுப்பு.

“நான் சொன்ன கதைகள் அனைத்தும் வெறும் பொய்களாலும் கற்பனைகளாலும் நானே கட்டமைத்தவை…” என்று கண்ணீர் மல்க Roy சொல்லும்போதும் சிறுமி அதை நம்ப மறுக்கிறாள். “இது உன் கதை மட்டுமல்ல என்னோடதும் தான்…” என மீதிக் கதையைச் சொல்லி முடிக்குமாறு மன்றாடுகிறாள். தான் கேட்கும் கதைகளினூடே சிறுமி கற்பனித்திருக்கும் நிதர்சனங்களுக்கு அப்பாற்பட்ட கதையுலகில் அவளும் ஒரு புனைவுக் கதாபாத்திரம். ஒரு தேர்ந்த கதை சொல்லிக்கான வெற்றி அது.

சிறுவயதில் நாம் ரசித்துக் கேட்ட ஃபேன்டசி  கதைகளும் நம்பகத்திற்கு அப்பாற்பட்ட அதன் கற்பனைக் கூற்றுகளும் மனமுதிர்ச்சி அடைந்ததும் நகைப்பாகத் தோன்றினாலும், அன்றாடத்தின் சலிப்புமேலிடும் இரவுகளிலிருந்து நம்மை மீட்டெடுப்பது என்னவோ பால்யக் கதைகளில் வந்த பச்சை ஆமையின் நினைவுகள் தான்.

 Tumbbad (2018 ,Hindi)

வளமும் செழிப்பும் அருளும் பெண் தெய்வம் தான் இவ்வுலகைப் படைத்தாள். பதினாறு கோடி தெய்வங்களையும் அவளே பெற்றெடுத்தாள். இப்புவியே அவளின் கருவறை அதன் ஆழத்தில் தான் குன்றா குவியலாகத் தங்கமும் தானியங்களும் கொட்டிக் கிடக்கின்றன. அவளின் முதல் மகன் ஹஸ்தர் கடவுள்களின் இலக்கணத்திலிருந்து பிறழ்ந்தவன். அன்னையின் கர்ப்பத்தில் கொட்டிக் கிடக்கும் பொற்குவியலின் மீது ஆசைபட்டு அதை அவன் ஒருவனே மொத்தமாக அபகரித்தபோதும் கூட தன் செல்ல மகனை அவள் பெரிதாகக் கடிந்து கொள்ளவில்லை. ஆனால் எப்போது அவன் தானிய களஞ்சியத்தையும் கைப்பற்ற நினைத்தானோ அப்போது ஆத்திரம் அடைந்த பிற கடவுகள்கள் ஹஸ்தரைக் கூட்டாகத் தாக்க வருகின்றனர். உயிருக்கு அஞ்சி ஓடும் மகன் மீதான தாய்ப்பாசத்தில் தன் கருவறைக்குள் மீண்டும் அடைக்கலம் கொடுக்கிறாள். ஆனால் ஒரேயொரு நிபந்தனையோடு!       தான் பெற்றெடுத்த பிற கடவுள்களைப் போலில்லாமல் ஹஸ்தர் இருப்பின் அடையாளங்கள் முற்றாக இப்புவியிலிருந்து அழிக்கப்பட்டுவிடும். சபிக்கப்பட்ட ஹஸ்தர் அம்மாவின் கருவறைக்குள் காலங்காலமாகப் பதுங்கி இருக்கிறான். தானியங்கள் கிட்டாத அகோரப் பசியோடு…

எழுதப்படா புராணக் கதையின் கற்பனைப் பிரபஞ்சத்திலிருந்து விரிகிறது ‘Tumbbad ‘ திரைப்படத்தின் ஊகப்புனைவுகவிஜய ராவணன் ளின் மர்மங்கள். புகழ் பெற்ற ‘Ship of Theseus’ படத்தின் இயக்குனரான ‘Anand Gandhi’ யின் முற்றிலும் மாறுபட்ட கதைக்களம்.

தங்கத்தின் மீதான ஆசையில் ‘Tumbbad’ கிராமத்தின் உயர்க்குடி குடும்பம் ஹஸ்தரை மீண்டும் உயிர்ப்பிக்கிறது. ஃபேன்டசி கதைகளுக்கு வித்தான கற்பனைகளின் நம்பகத்தன்மையைச் சற்றும் குறைக்காத நேர்த்தியான கதையோட்டம்.

புனைவுகளின் கட்டமைப்புக்குள் அடைபட்டிருக்கும் கதைகளுக்கு அதன் ஃபேன்டசி தன்மை தான் அவ்வப்போது விடுதலை அளிக்கிறது. ஆயிரம் கால்களையும் எண்ணற்ற சிறகுகளையும் வரமாய்த் தருகிறது.  கனவுப்புனைவுலகில் கற்பனைகளுக்கு அளவுகோல் இல்லை என்ற அறிவுரையோடு எட்டுத் திசைகளுக்கான கதவுகளையும் திறந்து விடுகிறது. அப்படி விடுதலை பெறும் கதையாடல்கள் ‘Tumbbad’ போல் யதார்த்தத்திற்கும் மாய உலகிற்கும் இடையே காற்றின் வேகத்தில் பயணித்தபடி இருக்கும். கற்பனைகளின் மரணமற்ற வாழ்வை நோக்கி…

விஜய ராவணன்- இந்தியா

விஜய ராவணன்

(Visited 89 times, 1 visits today)