ஆனந்த ரமணனின் ‘ஆறாம் நிலம்! ‘-போருக்குப் பிந்திய புதிய களம்!-ரூபன் சிவராஜா

ரூபன் சிவராஜாஆறாம் நிலம் நம்பகத்தன்மையும் இயல்புத்தன்மையும் நிறைந்த போக்கினைக் கொண்டிருக்கின்றது. கதை, களம், கதை மாந்தர்கள் என திரைப்படத்தின் மைய அம்சங்களில் நம்பகத்தன்மையைப் போதியளவு கொண்டுள்ளது.

ஈழம் சார்ந்து உருவாக்கப்பட்ட திரைப்படங்களிலோ அல்லது ஈழத்தில் எடுக்கப்பட்ட படங்களிலோ இதுவரை தொடப்படாத ஒரு களம் இதில் பேசப்படுகின்றது. போர்க்காலத்தில் புதைக்கப்பட்ட மிதிவெடிகள் போருக்குப் பிந்திய பத்தாண்டுகளின் பின்னும்கூட முற்றிலும் அகற்றப்படாத சூழல் நிலவுகின்றது.

இராணுவம் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என்பது ஒருபுறம். மதிவெடிகள் விதைக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதி நிலம். இரண்டுமே மக்களின் மீள்குடியேற்றத்திற்குத் தடையான அம்சங்கள். மக்களின் வாழ்வாதார நெருக்கடி என்பதற்கு அப்பாலும் அதற்கு அரசியல் உரிமை சார்ந்த பரிமாணங்களும் உள்ளன.

ஆனந்த ரமணன் எழுதி இயக்கி, ஐ.பி.சி தயாரித்துள்ள ஆறாம் நிலம் திரைப்படத்தின் மையக் களம் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட நிலம். அந்த நிலத்தோடு தொடர்புபட்ட பல்வேறு வாழ்வியல் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் இதில் உள்ளனர். எல்லாப் பாத்திரங்களும் போருக்கு முகம்கொடுத்த, போருக்குப் பின்னான வாழ்வியல் நெருக்கடிகளை நேரடியாக அனுபவிக்கின்ற குடும்பங்கள், தனிமனிதர்கள்.

இன்னொரு வகையில் சொல்வதானால் அது எமக்கு நெருக்கமான ஒரு வாழ்வை, சமூகத்தை, அரசியலை, அதன் இயல்பான அம்சங்களோடும் பின்னணிகளோடும் காட்சிபூர்வமாகப் பிரதிபலிக்கின்றது.

கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட நிலம் – காணாமல் போனோரைத் தேடும் போராட்டம் – முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை ஆகியவற்றைச் சுற்றிக் கதை நகர்கிறது. இவற்றை ஒன்றோடொன்று தொடர்புபடுத்திய விதமும் நகர்த்திய விதமும் நம்பகத்தன்மையும் சமகாலப் பிரதிபலிப்பும் கொண்டுள்ளது.

காணாமல் போன கணவனைத்தேடும் பெண் மலைமகள். அவள் ஒரு பெண்குழந்தைக்குத் தாய். கணவனின் தாயும் இவர்களோடு வசிக்கிறார். ‘அப்பா எப்ப வருவார்’ என்ற ஏக்கக் கேள்வியோடும், கனவுகளோடும் தனக்கென ஒரு தனியான உலகத்தைத் சிருஸ்டித்துவைத்திருக்கும் பெண் குழந்தைப் பாத்திரம் இதில் முக்கியமானது. அப்பாவிற்காக (அல்லது தனக்காக அப்பாவுடன்) தான் சிருஸ்டித்து வைத்திருக்கும் உலகிற்குள் வேறு எவரையும் அந்தக்குழந்தை அனுமதிக்கவில்லை. இது மிக நெகிழ்வானதும் உணர்வுபூர்வமானதுமான சித்தரிப்பு.

‘அப்பா எப்ப வருவார்’ எனத் திரும்பத்திரும்ப மகள் வாய்மொழியாகக் கேட்பதைத் தவிர்த்து (குறைத்து) காட்சி பூர்வமாக வேறு உத்தியுடன் வெளிப்படுத்தியிருக்கலாம். போருக்குப் பின்னான இன்றைய நிலமை தொடர்பாகவும், போராட்ட காலப் பெருமைகள் தொடர்பாகவும் உரையாடல்களாகத் திரும்பத்திரும்ப சொல்லப்படுவதும் சற்றுச் சலிப்பைத் தருகிறது.

கணவனைத் தேடும் பெண், கண்ணிவெடி அகற்றும் பணியில் குழுபொறுப்பாளனாக வேலை செய்யும் முன்னாள் போராளி, காணாமல் போன கணவனின் தாய், சிறிலங்காப் புலனாய்வாளருடன் நெருங்கிய தொடர்பைப் பேணும் விதானையார் ஆகிய முக்கிய பாத்திரப்படைப்புகளின் ஊடாகவும் இன்னும் பல துணைப் பாத்திரங்களும் கதை நகர்வில் முக்கிய பங்குடன் உருவாக்கப்பட்டுள்ளன.

000000000000000000000000

ரூபன் சிவராஜாமுதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்திருப்பவர்கள் நவயுகா மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோர். கணவனைத் தேடும் பெண்ணாக, பிள்ளைக்குத் தாயாக, போருக்குப் பின்னான வாழ்வின் அத்தனை நெருக்கடிகளுக்கும், சமூக அழுத்தங்களுக்கும், மனப்போராட்டங்களுக்கும் முகம்கொடுக்கும் பெண்ணாக மிகத் தேர்ந்த நடிப்பின் மூலம் அந்தப் பாத்திரத்திற்கு உயிர்கொடுத்திருக்கின்றார் நவயுகா. அவருடைய உடல்மொழியும் முக உணர்வுகளும் பார்வையாளருக்குக் கடத்தப்படுகின்றன. முன்னாள் போராளியாக, கண்ணிவெடி அகற்றும் குழுவின் பொறுப்பாளனாக பாஸ்கியினுடைய நடிப்பு இயல்புத் தன்மையுடன் வெளிப்பட்டிருக்கின்றது. ஏனைய பாத்திரங்களும் தமது பங்கினைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

முன்னாள் போராளிகளின் வாழ்வியல் அவலம், போதியளவு நம்பகத்தன்மையுடன் காண்பிக்கப்படுகின்றது. முன்னாள் போராளி, மலைமகளைக் காதலிக்கிறான். அவளுக்கும் அவன் மீது ஈர்ப்பு உண்டு. கணவன் உயிருடன் உள்ளானா இல்லையா என்ற தவிப்புக்கும் தன்னை விரும்புபவன் மீதான ஈர்ப்பிற்குமிடையிலான மனப்போராட்டத்திற்குள் அவள் அவஸ்தைப்படுகிறாள்.

வெளிநாட்டு ஊடகவியலாளருக்கு மலைமகள் கதை சொல்லுவதிலிருந்து கதையுடன் ஒன்றிப் போக முடிகிறது. அதுவரை சற்றுத் தொய்வாக நகர்கிறது. திரைப்படத்திற்குரிய அணுகுமுறை குறைந்த அதேவேளை ஒரு ஆவணப்படத்திற்குரிய தன்மைகளை அதிகம் கொண்டிருக்கின்றது.

கண்ணிவெடி அகற்றும் பணிக்குரிய அந்த நிலம், அதற்குரிய தொழில்நுட்ப நுணுக்கங்களுடன் படமாக்கப்பட்டிருக்கின்றமை இதன் அதீத சிறப்பு. அந்தப் பணி இடம், அதற்கான பணியாளர் ஒருங்கிணைப்பு, உடை என்பன கச்சிதமான சித்தரிப்பினை வெளிப்படுத்துகின்றது. அந்தக் களம் நம்பகம் நிறைந்துள்ளது. அந்தச் சூழலைக் கண்முன் கொண்டுவரும் வகையிலான தொழில்நுட்ப நுணுக்கங்கள் கவனம் கொள்ளப்பட்டுள்ளன.

தமிழ் திரைப்படங்களில் மிகைப்படுத்தல்கள், நம்பகத்தன்மையற்ற கதைக்கட்டமைப்பு, இலட்சியவாதத்தை, கதாநாயகத்தன்மையை முன்னிறுத்தும் போக்கு என்பன மேலோங்கிக் காணப்படுகின்றன. ஆறாம் நிலம் நம்பகத்தன்மையும் இயல்புத்தன்மையும் நிறைந்த போக்கினைக் கொண்டிருக்கின்றது. கதை, களம், கதை மாந்தர்கள் என திரைப்படத்தின் மைய அம்சங்களில் நம்பகத்தன்மையைப் போதியளவு கொண்டுள்ளது.

கதையின் முடிச்சுகளுக்கு இறுதியில் முடிவு சொல்லாமல் விட்டமை சிறப்பு. அதில் யதார்த்தம் பிரதிபலிக்கின்றது. கதை, களம், கதை மாந்தர்கள் என போதியளவு நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கின்றது.

சமரசங்களுக்கு இடம்கொடுக்காமல் அந்தக் கதைக்களம் எதனைக் கோரிநிற்கின்றதோ அதற்குரிய இயல்பான கவனங்களோடு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘ஆறாம் நிலம்’.

பின்-முள்ளிவாய்க்கால் சமூகத்தின் சவால்கள், புலனாய்வாளர்களின் தொல்லைகள், அவர்களுக்குத் துணைபோகும் தமிழ் அதிகாரிகளின் பாலியல் சுரண்டல் என கதை சமகால நெருக்கடிகளைப் பிரதிபலிக்கின்றது. இதன் அரசியல், அழகியல், வாழ்வியல் விரிவான உரையாடல்களுக்கு உரியவை.

000000000000000000000000

ரூபன் சிவராஜாஈழ மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தமிழகச் சினிமாவின் செல்வாக்கு அளப்பெரியது. அவ்வப்போது சமூக வாழ்வியலைப் பிரதிபலிக்கின்ற, தாக்கத்தை ஏற்படுத்துகின்ற படங்கள் வந்தாலும், தமிழகச் சினிமாவின் போக்கு என்பது அதிகமதிகம் வணிகமயப்பட்டது. வன்முறையை உற்பத்தி செய்வது. பெண்களைப் போகப்பொருளாகக் பிரதிபலிப்பது. காதல் என்ற ஒற்றைப் புள்ளியைச் சுற்றிய படங்களே அங்கு மீளமீள உற்பத்திசெய்யப்படுகின்றன.

மலையாளத் திரைப்படங்கள் அப்படி அல்ல. இந்திய சினிமாக்களில் மலையாள சினிமாவுக்குத் தனியிடம் உண்டு. மனிதர்களின் மெல்லிய உணர்வுகளைப் பேசுகின்ற, விளிம்புநிலை மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்ட, பேசாப்பொருளைப் பேசுகின்ற, யுதார்த்தத்திற்கு நெருக்கமான படங்கள் கேரளாவிலிருந்து தொடர்ச்சியாக வெளிவருகின்றன.

மிகப் பெரும்பாலான தமிழ்ப் படங்கள், ஹீரோ – வில்லன் என்ற கறுப்பு வெள்ளையான சித்தரிப்புச் சட்டகத்தையும் காதல் பற்றிய மிகையுணர்வுச் சித்திரங்களையும், சித்தரிப்புகளையும் தாண்டவில்லை. மலையாளப்படங்கள் அப்படியான சட்டகங்களைத் தாண்டிய சாதாரண வாழ்வியலையும் மனிதர்களுக்குள் இருக்கக்கூடிய நுண்ணிய உணர்வுகளையும் பிரதிபலிக்கின்றன. புனித விம்பங்களால் கட்டமைக்கப்பட்ட ஹீரோ பாத்திரங்கள் அங்கு குறைவு. மனித உறவுச் சிக்கல்கள், மனிதர்களின் சமூக உறவுச் சிக்கல்கள், ஆண்-பெண் உறவுச்சிக்கல்கள் என விரிந்த கதைக்களங்களையும் அவை கொண்டிருக்கின்றன.

தமிழகச் சினிமா என்பது நூறு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருகின்ற பெருவணிகத் தொழிற்துறை. அதன் செல்வாக்குக் காரணமாக ஈழ, மற்றும் புலம்பெயர் திரைப்படங்கள் எப்பொழுதும் தமிழகச் சினிமாவுடன் ஒப்பிடப்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வந்திருக்கின்றது. திரைமொழி, கலைத்துவ அழகியல் மற்றும் உருவாக்க நேர்த்தி உட்பட்ட சினிமாவுக்குரிய தொழில்நுட்ப மற்றும் தரம் சார்ந்த ஒப்பீடு அது.

இந்நிலையில் ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் திரைப்பட உருவாக்கம் தொடர்பான முன்னெடுப்புகள் இடம்பெற்றுவருகின்ற போதும இதுவரை தனக்கான ஒரு தனித்துவ அடையாளத்தினையோ அல்லது தரம் சார்ந்த உயர்நிலையையோ எட்டமுடியவில்லை. அதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. தமிழகச் சினிமாவைப் பிரதியெடுத்தல் அல்லது முன்னுதாரணமாகக் கொள்தல் என்பதைத் தாண்டிய திரைப்படம் தொடர்பான பார்வையின்மை, திரைக் கலையைக் கற்பதற்குரிய கல்விநிறுவனங்கள் இன்மை, ஈழத் திரைப்படங்களுக்கான தயாரிப்பு, மற்றும் சந்தைப்படுத்தல்(திரையிடல்) என்பன ஒருங்கிணைக்கப்பட்ட அல்லது நிறுவன மயப்பட்ட நிலை இல்லை என இதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன.

திரைப்படத்துறை மட்டுமல்ல. பொதுவாகவே கலை, பண்பாட்டு இலக்கிய செயற்பாடுகள் நிறுவன மயப்பட்டதாக நிலைகொள் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய கட்டமைப்புகளாக இல்லை. அரசில்லாத மக்களாக ஈழத்தமிழர்கள் உள்ளமையும் இந்நிலைகளுக்குரிய காரணங்களில் முக்கியமானது.

தமிழக வணிக சினிமாவினைத் தாண்டி ஈழத்தமிழ், புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் சென்றடைவதற்கு ஈழ-புலம் பெயர் திரைப்படங்கள் தமக்கான கதைத் தெரிவிலும் தொழில்நுட்ப நேரத்தியிலும் கவனம் செலுத்தவேண்டும். அத்தோடு திரைப்பட வடிவத்திலும் கவனம் செலுத்துவது முக்கியமானது. அந்த வடிவமென்பது தமிழகச் சினிமாவிற்கு மாற்றான வடிவத்தைக் கண்டடைதலைக் குறிக்கின்றது. இந்தப் பின்னணியில் நோக்குகையில், ‘ஆறாம் நிலம்’ அத்தகைய மாற்றுச் சினிமாவிற்கான திரை வடிவத்தினையும் உள்ளடக்கத்தினையும் கொண்டிருக்கின்றது என்பதைத் துணிந்து சொல்லலாம். மாற்றுச் சினிமாவிற்கான தொடக்கமாக அதனை அடையாளப்படுத்த முடிகிறது.

ரூபன் சிவராஜா-நோர்வே

ரூபன் சிவராஜா

 

(Visited 408 times, 1 visits today)