சினிமா விமர்சனம்- நித்தியமானதொரு பிரபஞ்சம் ( Dead of Night (English, 1945)- பாகம் 07- விஜய ராவணன்

“நீங்கள் நம்பிக்கொண்டிருப்பதைப் போல் ‘Big Bang’ விதியின் படி இப்பிரபஞ்சம் திடீரென்று ஒரு பெருவெடிப்பில் உண்டானதல்ல!” என்று இங்கிலாந்து விஞ்ஞானி ‘Hoyle’ சொன்னபோது அறிவியல் உலகம் அவரை ஆச்சரியமாகவும் விநோதமாகவும் திரும்பிப் பார்த்தது.

“எப்படி இந்தப் பிரபஞ்சம் இதற்கு முன் இருந்ததோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறது. இனியும் அப்படியேதான் இருக்கும்! எதுவும் மாறப்போவதில்லை. மாறியதும் இல்லை.அதேநேரம் அண்டம் விரிவடையத்தான் செய்கிறது, அப்போது உண்டாகும் வெறுமையிலிருந்து புதுபுது நட்சத்திரங்களும் கோள்களும் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன, ஆனால் எந்த மாறுபாடும் ஏற்படுத்திடாத நிலையான விகிதத்தில்!! அதனால்தான் இப்பிரபஞ்சம் என்றென்றும் ஒரேபோல் இருக்கிறது! இனியும் இருக்கும், காலவரம்புகளுக்கு அப்பாற்பட்டு, ஆதியும் அந்தமும் இல்லாத மாயவெளியாய்………….

ஒரு பிரபஞ்சம் என்பது அப்படித்தானே இருக்க முடியும்? நித்தியமானதாய்… அதெப்படி திடீரென்று ஒரு பெருவெடிப்பில் உண்டாகிவிட முடியும்?”

‘Hoyle’  தன் இரு நண்பர்கள் ‘Hermann Bondi’ மற்றும் ‘Thomas Gold’ இணைந்து மேற்சொன்ன ‘Steady state Theory’யை ‘1948’ யில் முன்வைத்த போது,

“உங்களது இந்த ‘Steady state theory’ யின் அடிப்படை தொடக்கப்புள்ளி எது?” என்ற கேள்விக்கு அவரது ஒரே பதில் ‘1945’யில் வெளியான, ஆதியும் அந்தமும் அற்ற ‘Dead of Night’ திரைப்படம் என்பதுதான்.

இரண்டாம் உலகப்போரின் கூரியப் பற்களில் ரத்தமும் சதையுமாய் மானிடம் குத்திக் குதறப்பட்ட காலகட்டத்தில் வெளிவந்த Horror anthology, ‘Dead of Night’. மர்மங்களின் அடிநாதத்தால் இறுகப் பின்னப்பட்ட ஐந்து இயக்குனர்களின் மாறுபட்ட கதைகள்!

விஜய ராவணன்

பாழுங்கிணறாய்ப் பேச்சு வற்றிப்போன உலர்ந்த உதடுகளின் மௌனத்தின் ஆழத்தில் சொல்லப்படாத கதைகள் நிறையவே மண்டிக் கிடக்கின்றன. அவை தனக்கான தருணத்தை எதிர்நோக்கியபடி காத்திருக்கின்றன. அப்படிக் கேட்பாரற்று மௌனித்துப் போன உதடுகள் ஒன்றாகக் கூடும் தளங்களில், தன் செவிகளை பிற உதடுகளுக்குக் கடனாய்க் கொடுத்துவிட்டு பதிலுக்கு தங்களுக்கான செவிகளை கடனாகப் பெற்றுக் கொள்கின்றன. அப்போது அங்கு பிறப்பெடுக்கும் கதைகள் யதார்த்த வெளியில் மட்டும் தவழ்வதில்லை. வெறும் யதார்த்தவாதத்தில் என்ன இருக்கிறது? அகக்கொக்கரிப்புகளையும் புலம்பல்களையும் தவிர…. யதார்த்தத்தின் பழகிய சலிப்பை மட்டுப்படுத்தி பேச்சை சுவாரசியமாக்க, மாயத்தின் வினோத சிலந்தி வலையில் பின்னப்பட்ட கதைகளைக் கேட்கவே செவிகள் ஆர்வமாகத் திறந்திருக்கின்றன.

‘Foley’ என்பவரைச் சந்திக்க புறநகரில் உள்ள அவரது வீட்டிற்கு முதல்முறையாக கட்டிட வடிவமைப்பாளர் ‘Craig’ வருகிறார். ‘Foley’ யின் வீட்டையும் அங்கு ஏற்கனவே குழுமியிருக்கும் ‘Foley’ வின் நண்பர்களையும் பார்த்ததும் அவருக்கு ஆச்சரியமாகவும் பதட்டமாகவும் தோன்றுகிறது. அதற்கான காரணத்தை ‘Craig’ விவரிக்கும் தருணத்திலிருந்து தொடரும் விவாதங்களில் ஐந்து வெவ்வேறு கதைகள் பிறக்கின்றன… ஒன்றுக்கொன்று வேறுபட்ட வெவ்வேறு நிறப் பூனைக்குட்டிகளைப் போல்…

‘room for one more inside, sir!’ என சட்டென்று அண்ணாந்து பார்த்துச் சொல்லும் கறுப்புக் குதிரை வண்டிக்காரன் புன்னகையில் தொனிக்கும் மர்மம், விடையற்ற கேள்வியாய் எல்லா கதைகளிலும் அதே இருண்மையுடன் நீள்கிறது.

Thriller, Suspense, Ghost, mystery, phycology, black humor, split personality disorder என பல மாறுபட்ட தளங்களைத் தொட்டு விரியும் அக்கதைகள் மீண்டும் தாய்க் கதையின் சிறகினடியில் தஞ்சம் புகுகின்றன. அதன் கதகதப்பு தான் ஒட்டுமொத்த கதைக்களத்தின் சாஸ்வதம்.

‘Dead of Night’ யின் மூலக்கதை, மற்ற ஐந்து கதைகளுக்கான வெறும் முன்னுரையோ முடிவுரையோ அல்ல மாறாக அது தன்னளவில் தனியொரு கதையாக… தனித்து இயங்கும் மையக்கோளாகச் சுழல்கிறது… பிற கதைகள் தனக்கான விட்டத்திற்குள் அதைச் சுற்றி இயங்குகின்றன. அந்தப் புள்ளியில் தான் ‘Dead of Night’ பிற Horror anthology திரைப்படங்களிலிருந்து வேறுபட்டு முடிவற்ற வெளியில் வட்டமடித்தபடியே இருக்கிறது.

விஜய ராவணன்

இரண்டாம் உலகப்போரின் காலகட்டத்தில் ஒரு திரைப்படம் என்பது அந்நாட்டின் போர் வெற்றிகளைப் பறைசாற்றவும் ஒருதரப்பட்ட நியாயத்தை எடுத்துரைக்கவும் தன் நாட்டுப் படைகளின் போர்க்குற்றங்களை மறைக்கும் திரையாகவும் எதிரியின் ரத்தக்கறை படிந்த கரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு மட்டுமே பெரும்பாலும் பயன்பட்டு வந்த சூழலில் வெளிவந்த ‘Dead of Night’ இன்றுவரை பல Thriller மற்றும் Horror anthology படங்களின் அகழ்வாராய்ச்சித் தளம்.

ஒரு நிரூபிக்கப்பட்ட அறிவியல் விதியை Dead of Night திரைக்கதையாக்கவில்லை. மாறாக தன் திரைக்கதையால் ‘Steady State Theory ‘ என்ற புதியதொரு அறிவியல் விதிக்கு வித்திட்டது! அந்தப் புள்ளியில் ‘Dead of Night’ ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும் உருமாறுகிறது.

ஆனால் 1960,70களில் அசுர வளர்ச்சி பெற்ற cosmic microwave தொழில்நுட்பத்தின் காரணமாக, ‘Steady State theory’ தவறு என்று நிரூபிக்கப்பட்டது. அப்படியென்றால் இந்த மகாபிரபஞ்சம் கூட ஆதியும் அந்தமும் அற்றது அல்ல! மாறாக…

நீங்கள் நம்பிக்கொண்டிருப்பதைப் போல் Big Bang விதியின்படி இப்பிரபஞ்சம் திடீரென்று ஒரு பெருவெடிப்பில் உண்டானது தான்!

விஜய ராவணன்-இந்தியா

விஜய ராவணன்

(Visited 102 times, 1 visits today)