கடவு-நூல் விமர்சனம்-பொ.கருணாகரமூர்த்தி

பொ.கருணாகரமூர்த்தி37 ஆண்டுகளாக தனித்துவத்துடன் எழுதிவரும் திலீப்குமார் தமிழில் இதர எழுத்தாளர்கள் பேசாத பக்கங்களை பெண்களின் பாலியல் பிரச்சனைகள், சமப்பாலுறவாளர்கள் (லெஸ்பியன்ஸ்) பற்றியெல்லாம் துணிவாக தன் எழுத்தின் ஆரம்பகாலத்திலேயே பேசியிருக்கிறார்.   ’மௌனி’, ஜி. நாகராஜன்’ வரிசையில்  தமிழ்வாசகர்களிடையே இவர் பெரிதும் பிரஸ்தாபிக்கப்படாதது விந்தைதான்.   கணையாழி,  காலச்சுவடு, சுபமங்களா,  இந்தியா ருடே.  மீட்சி,  தினமணி,  அலைகள் ஆகிய இதழ்களில் எழுதப்பட்ட இவரது 14 கதைகள் ‘கடவு ’எனும் கதையுடன் சேர்த்துக் கிரியாவால் தொகுக்கப்பட்டு   2000 ஆண்டு நூலுருவில்  வெளியாகியது.

தொகுப்பின் முதற்கதையாகிய  ‘கடவு’அதற்கும் முதல்  எங்குமே பிரசுரிக்கப் படாதது.  அக்கதையில் வரும் கங்குப்பாட்டிதான் அங்கே முதன்மைப்பாத்திரம். பாட்டி வெகு இளம் வயதிலேயே விதவையாகிவிட்டவர். வாழ்வின் கணிசமான பகுதியை வகையான பிராமண விதவைகளைப்போலவே அமைதியாக கோயிலும் குளமும், பூஜையும் புனஸ்காரமுமாக தானுண்டு தன்வீடுண்டென்று வாழ்ந்து வந்தவர்,  அவர் சுபாவத்தில் அக்குடியிருப்பில் வாழும் இதரபெண்களுடன்கூட முகங்கொடுத்துப் பேசமாட்டார், முசுடுமாதிரி இருப்பார். பின்னர் அத்தகைய வாழ்வு அர்த்தமற்றதாகத் தோன்றவும் திடீரென்று தன்னை மாற்றிக்கொண்டுவிடுகிறார்.  பின்னர் எல்லோருடனும் பேச ஆரம்பிக்கிறார். எல்லாப்பெண்களிடமும் அவர்களினதும் அவர்கள் குடும்பத்தினரினதும் நலம் விசாரிக்கின்றார். அவர்களுக்கோ அவர்களின் குழந்தைகளுக்கோ உடன் நலமில்லாதுபோய்விட்டால் மருந்தும், எந்தக்கிரகத்தின் என்ன குறைபாட்டுக்கு என்ன விரதம் அனுட்டிக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லித்தருகிறார். இப்படியாக கங்குப்பாட்டியின்  சாங்கியங்கள் அதிகரிக்க அவர் சிநேகிதிகளின் வட்டம் விஸ்தாரமாகிறது.  மாலைவேளைகளின் அவர்வீடு அக்குடியிருப்பின் பெண்கள் வயதுவேறுபாடின்றி  குழுமும் அரட்டையரங்கமாக மாற்றிவிடுகிறது.

“ஏண்டி லலிதாஜி கல்யாணமாகி ஆறுமாசமாகிறதே, இன்னும் அப்படியே கட்டுக்குலையாமல் இருக்கியே……. என்ன வஸ்து , கபிலவஸ்துவுக்கு வருவதில்லையா…..? அல்லது நீதான் கபில வஸ்துக்கதவுகளை மூடியடைத்துவிட்டாயா?”

“எனக்குத்தான் இஷ்டமில்லைப்பாட்டி…. எனக்கு வஸ்துவைப் பார்த்தாலே பயமாக இருக்கு”

“ஆறுமாசந்தானே ஆகிறது, குஜராத்தி ஆண்களுக்கு இரண்டு விஷயங்கள்தான் முக்கியம், ஒன்று சப்பாத்தி, மற்றது   கபிலவஸ்து.   ஞாபகம் வைச்சுக்கோ. தேவையானால் டாக்டரிடம்போம்மா” என்பார்.

அப்பெண்கள் அனுபவிக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கும் தடாலடியாகப் பரிகாரங்களைக் கொட்டிவிடுவார். பாட்டி அப்பெண்களுடன் உரையாடும் சாங்கமும், பாலியலுறுப்புகளுக்கும், பாலியல்நடத்தைகளுக்கும் அவர் சங்கேதமாக வைக்கும் பெயர்களும், அவரின் தேர்வுமொழியும் அவரின் பெண்தோழிகளைப்போலவே, வாசகனுக்கும் அவர்மேல் சுவாரஸியத்தை அதிகரிக்கவைக்கிறது.

ஒருத்தி  சலிச்சுக்குவாள்  “ கபிலவஸ்துவில் சந்தோஷமுமில்லை, திருப்தியுமில்லை, இதை வைத்திருப்பதால் பெண்களுக்கு என்ன இலாபம்?”

“வஸ்துதாரிகளை கபிலவஸ்தின் அந்தப்புரத்துள் அழைப்பதற்கு நீங்கள்தான் சரியான பத்ததி சொல்லித்தரவேண்டும்.”

“அட கடவுளே………. இதெல்லாமா அவங்ககூடப் பேசமுடியும்?”

“எங்ககாலத்தில் வஸ்துவைக் கண்ணால காணாமலே குழந்தைகளாய்ப் பெற்றுக்கொண்டிருப்போம் உங்ககாலம் எவ்வளவோ பரவாயில்லையடி, பேசித்தான் ஆகவேண்டும்”

“நீ   உன் சின்னவயதில் ரொம்ப அழகியாக இருப்பாயாமே…… நீ உன் இளமைக்காலத்தை நேசிக்கவில்லையா ? உனக்கு வருத்தமோ சந்தோஷமோ எதுவுமில்லையா?” என்று ஒருத்தி கேட்கவும் பாட்டி  “ மனிதர்கள் எந்தக்காலத்தையும் நேசிக்கக்கூடாதடி, சொல்லப்போனால் காலம் என்ற ஒன்று கிடையவே கிடையாது தெரியுமோ? கடவுளைப்போல் காலமும் மனிதனின் கற்பனைதான்.”   இவ்வளவு ஜாலியாக இருக்கும் பாட்டி திடீரெனக் கனதியான தத்துவமெல்லாம் பேசுவார்.

இவ்வாறெல்லாம் பேசி அந்தக் குடியிருப்பையே அதகளப்படுத்திக்கொண்டிருந்த பாட்டி  திடுப்பென  ஒருநாள் இறந்தும் போய்விடுவாள். தாங்கமுடியாமலிருக்கும்.

தொகுப்பிலே இன்னொரு கனதியான கதை  ‘மூங்கில் குருத்து’ என்பது.

அதிலும் ஒரு விதவைத்தாய், அவரது இரு மகன்கள் தையல்கடைகளிலும், தனியார் பலசரக்குக் கடைகளிலும்  ஊழியம் செய்வதனால் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையைச் சிரமத்துடன் தள்ளுகிறாள். இறந்துபோன அவர்களின் தந்தையாருக்கு மூங்கில் குருத்தில் சமைக்கும் கறி மிகவும் பிடிக்கும். அவருக்கு திவஷம் வந்தது.  திதிக்கு முதல்நாளே அவர்களின் மூத்தமகள் மூங்கில் குருத்துக்களைக்கொண்டுவந்து கொடுத்திருந்தார்.  அவ்விதவைத்தாயார் தன் கணவனுக்கு விருப்பமான கறியென்பதால் திவஷத்தன்று தவிர மற்றைய நாட்களில் அவர் மூங்கில் குருத்தைச் சாப்பிடுவதேயில்லை,.  மகன்கள் இருவருக்கும் உரிய நாளில் சம்பளம் கிடைக்காது போனதால்  அவ்வாண்டு திவஷமே செய்யமுடியாமல் போகிறது.

சரி, சிக்கனமாகத் திவஷம் செய்வோம்,  “திவஷம் செய்யவரும் பிராமணனுக்கு  ஹொட்டலில் (அளவு) சாப்பாடு வாங்கிக்கொடு” என்று மகனிடம் சொல்கிறார், பணமுடையால் அப்படிக்கூடப்பிராமணனை அழைத்து திவஷம் செய்யமுடியாமல்ப்போகிறது.

வீட்டில்கிடந்து  வாடிப்போகும் மூங்கில் குருத்தைக்கடைசியாகக் குப்பையில் வருத்தத்துடன் போடவேண்டி நேருகிறது.   எமக்கும் மனது வாடிப்போகிறது.

000000000000000000

தொகுப்பிலுள்ள இன்னொரு மறக்கமுடியாத கதை ‘ ஐந்து ரூபாயும் அழுக்குச்சட்டைக்காரரும்’ என்பது.  அவர் அழுக்கு ஜிப்பாவுடனும் வேட்டியுடனும் கதைசொல்லியின் அலுவலகத்துக்கு வருகிறார். கதைசொல்லிக்கு அவரை முதலில் யாரென்றே தெரியவில்லை. வந்தவர் தன்னை “ நான் தோழர் கருணாகரன், மதுரையிலிருந்து வருகிறேன், உங்கள் மேலாளரைப் பார்க்கவேண்டும் ” என்று அறிமுகஞ் செய்கிறார்.  மேலாளர் அன்று வெளியூர் போயிருக்கவும்  ‘அவரை நீங்கள் நாளைதான் பார்க்கமுடியும்’ என்றிவர் பதில் தரவும்  வந்த தோழரின் முகம் தொங்கிப்போகிறது.

தோழர் கருணாகரன் ஐம்பதுகளில் இலக்கியத்துறையில் தீவிரமாக இயங்கியவர். தமிழ்ச்சிறுகதைக்குத் தீவிரமான நவீனப்பண்புகளை வழங்கியவர். என்றெல்லாம் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். கதைசொல்லியானவர் அவரது நாவல் ஒன்றைப்படித்துவிட்டு அதன் வர்க்ககுணமற்ற இயல்பான மனிதர்களும், அவரது மொழிநடையின் எளிமையும், முதிர்ச்சியையும்கண்டு அவரைச் சந்திக்கவேண்டுமென்ற விருப்புடன் இருக்கிறார்.

தோழர் கருணாகரன் வாழ்வில் பலமாற்றங்கள், அவர் மனைவி பிள்ளைகளுடன் ஒற்றுமையில்லாமல் சண்டைபிடித்துக்கொண்டு கஞ்சாப்பழக்கத்துக்கும் குடிக்கும் அடிமையாகி ஒரு நாடோடியைப்போல அலைந்துகொண்டு திரிகின்றார். கதைசொல்லி கொடுக்கும் சிகரெட்டையும் காப்பியையும் விருப்புடன்   பெற்றுக்கொண்டு பருகுகின்றார்.

கதை சொல்லித்தோழர் தான் அவரது பிரியமான வாசகர் என்றும், தனக்குங்கூடச்சிறுகதை எழுதும் முயற்சிகள் உண்டென்றும் அவருக்குச் சொல்கிறார்.

அவர்களிடையே நடக்கும் சுவையான உரையாடலின் ஒரு பகுதி.

“சிலநாட்களின் முன்னர் உங்கள் ஆரம்பகாலக்கதைகளை மீண்டும் படித்தேன். அவற்றை நீங்கள் எழுதியகாலத்தில் கம்யூனிஸ இயக்கத்தில் தீவிரப் பங்குபற்றியிருந்தீர்கள். ஆனால் அக்கதைகளில் தீவிர சித்தாந்தச்சார்புகள் எதுவும் புலப்படவில்லையே…..?”

“அந்நாட்களில் கம்யூனிஸ இயக்கத்தில் முக்கிய பங்குவகித்தவர்கள் அனைவரும் நல்ல படிப்பாளிகள், அவர்களுக்கிருந்த பரந்த படிப்பின் காரணமாக அவர்கள் எவரும் என் இலக்கியப்போக்கைச் சந்தேகிக்கவில்லை. மற்ற எழுத்தாளர்களும் என்னை விமர்சிக்கவில்லை, ஆனால் நான் இயக்கத்திலிருந்து விலகியதும் என்னைத்தீவிரமாக விமர்சித்தார்கள். ஆனால் நான் அப்படி இருக்கவில்லையோவென்று இப்போது நினைக்கத்தோன்றுகிறது. மார்க்ஸியத்தின் அழகியல் கோட்பாட்டில் என்னால் ஊன்றிப் போகமுடியாமல் போனது விநோதந்தான்…….” என்றுவிட்டு உரக்கச்சிரித்தார் தோழர் கருணாகரன்.

கதைசொல்லித்தோழருக்கும்  அன்று   நிதிநிலமைசரியில்லை, அலுவலகக்கணக்கில் ஐந்து ரூபாய் குறைகின்றது, அதை எப்படி ஈடுசெய்வதென்ற கவலையிலிருக்கின்றார்.  ஐந்துமணிக்கும் மேலாகிறது கதைசொல்லிக்கும் வீட்டுக்குக் கிளம்பவேண்டும். தோழர் கருணாகரனோ கிளம்புவதாக இல்லை. தாம் இனிக்கிளம்பவேண்டியதை அவருக்கு அழுத்திச்சொல்லவும்

அவர் அருகில் வந்து மிகவும் உரிமையுடன்  “எனக்கு 25 ரூபாய் கொடு” என்று கேட்கிறார், அவர் தனது நிலமையைச்சொல்லவும்  “சரி ஆபீஸ்பணத்தில் 25 ரூபாய் கொடுத்துவிட்டு  தோழர் கருணாகரனுக்குக் கொடுத்தேன் ” என்று உம்முடைய  முதலாளியிடம்   சொல்லிவிடு” என்கிறார்.

“அப்படியெல்லாம் செய்து எனக்குப் பழக்கமில்லை, நான் அதைச் செய்யவும் முடியாது, அப்படி நான் செய்வதானது எனக்கும் மேலாளருக்குமான உறவைச் சீர்குலைத்துவிடும்” என்று கதைசொல்லி மறுக்கவும் ‘25 ரூபாய்கள் கொடு’ என்பதையே திருப்பித்திருப்பிச் சொல்லிக்கொண்டிருந்தார். கதைசொல்லியிடம் பணம் பெயரப்போவதில்லை என்பதை ஊகித்துக்கொண்ட தோழர் கருணாகரனுக்கு ஆத்திரம் பொங்கவும் “ தாயோளி இப்போ நீ எனக்கு 25 ரூபாய் கொடுக்கிறாயா இல்லையா” வென்று அவரின் கன்னத்தில்  ஓங்கி ஒரு  அறைவிடுகின்றார். கோபமடைந்த அவரும் பதிலுக்கு தோழரை நெஞ்சில் குத்தவும்  சுதாகரித்துத்  தள்ளாடி எழுந்துநிற்பார் தோழர் கருணாகரன். அவரை காவல்க்காரனை அழைத்து அவ்விடத்தினின்றும்   அப்புறப்படுத்துவார். அவர் போயானதும் கதைசொல்லி வழமையாகச்சாப்பிடும் உணவகத்துக்குப்போய்ச் சாப்பிட்டுவிட்டு வெளியே வரவும் வாசலில் காத்திருந்த தோழர் கருணாகரன் கதைசொல்லியின் கைகளைப்பிடித்துக்கொண்டு ”உன்னிடம் அப்படிப் பேசியதற்காக மன்னிப்புக்கேட்கிறேன், உன்னுடைய சிறுகதைத்தொகுதியை எப்போது வெளியிடப்போகிறாய்” என்று கேட்கிறார். அவருக்கோ தோழர் தன்னைக்கேலிசெய்வதைப் போலிருக்கிறது. பின்னர் மீண்டும் தோழர்  “ஒரு இரண்டு ரூபாயாவது கொடு” என்று இறைஞ்சவும் அவரும் தன்னிடமிருந்த கடைசி இரண்டு ரூபாயை எடுத்துக்கொடுக்கிறார்   தூறிக்கொண்டிருந்த மழையில் பிசுபிசுப்பான சாலையில் குழல்விளக்கொளியிலிருந்து இருளில் தோழர் கருணாகரன் சென்று மறைந்துவிடுகின்றார். இரண்டொரு மாதத்தில் அவர் மறைந்ததான மரணச்செய்திமட்டும் வருகின்றது. அக்கதையைப்படித்தால் திலீப்குமார் வார்த்திருக்கும் தோழர் கருணாகரன் எனும் பாத்திரம் உங்கள் நினைவைவிட்டும்  மறையாது!

இலக்கிய சிந்தனை, மத்திய அரசின்  ‘பாஷா பாரதி’  ராபேர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் ‘சாரல்’ விருதுகளைப்பெற்ற இவரின் இக் கடவு சிறுகதைத் தொகுப்பைத் தவிர  மூங்கில் குருத்து (சிறுகதைத்தொகுப்பு -1985 கிரியா), மௌனியுடன் கொஞ்சத்தூரம்’ (கட்டுரைகள் – 1992 வானதி ) ஆகிய நூல்களும், லெஸ்பியன் உறவுகளை மையச்சரடாகக்கொண்ட ‘ராமாவும் உமாவும்’ என்கிற நாவலுடன்  ‘ஒரு  ‘எலிய’ வாழ்க்கை’,  ‘நா காக்க அல்லது ஆசையும் தோசையும்’, ஒரு குமாஸ்தாவின் கதை ஆகிய  3 சிறுகதைகளும் ‘ராமாவும் உமாவும்’ எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டு     கிரியா வெளியீடாக சமீபத்தில் வெளிவந்துள்ளன.

000000000000000000

கடவு : பக்கங்கள் 192,     விலை ரூபா 160,00 ₹,      கிரியா வெளியீடு.

பொ கருணாகரமூர்த்தி- ஜெர்மனி

பொ கருணாகரமூர்த்தி

(Visited 193 times, 1 visits today)
 

2 thoughts on “கடவு-நூல் விமர்சனம்-பொ.கருணாகரமூர்த்தி”

Comments are closed.