நேர்காணல்மொழிபெயர்ப்பு-தலாய் லாமா -பொ கருணாகரமூர்த்தி

‘நல்லதையே எதிர்பார்த்திரு, அவ்வேளை மோசமானதுக்கும் தயாராயிரு’

தலாய்லாமா

பொ கருணாகரமூர்த்தி

தலாய் லாமா அவர்கள் ஹம்பேர்க் விஜயம் செய்தபோது Deutsche Welle தொலைக்காட்சியில் தனது தீபெத் மீதான ‘நம்பிக்கைகள்-எதிர்பார்ப்புகள்’ , ஈரான், சிரியா நிலமைகள், சீனாவில் பெருகிவரும் தீபெத்திய பௌத்தர்கள் பற்றியும் முழுமையாகப்பேசினார்.

Dalai Lama in Hamburg 25.8.2014

000000000000000000000000000000000

புனிதமானவரே, சீனா பொருளாதாரத்திலும், அரசியல் ரீதியிலும் பலமிக்க ஒரு நாடாக வளர்ந்து வருகிறது. பேஜிங்கும் தொடர்ச்சியாக அர்த்தமுள்ள சுயாட்சியதிகாரமுள்ள தீபெத்துக்கான போராட்டத்தின் முகமாவுள்ள உங்களைத் தள்ளிவைப்பதில் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்துகிறதே………. சீனா இவ்வளவு பலம் பொருந்தியதாக 1989 இல் இருந்திருந்தால் உங்களுக்கு நோபல் பரிசு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்திருக்குமா? இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நான் எனது அரசியல் பொறுப்புக்கள்/பளுக்களிலிருந்தும் 2011 இலிருந்தே ஓய்வுபெற்றுவிட்டேன். இங்கே உங்கள் கேள்வியின் தன்மை முழுவதும் அரசியலாக இருக்கிறது. இருந்தாலும்………. ஆமாம், சீனக்குடியரசின் மக்கள் பொருளாதார ரீதியாகவும், ராணுவபலத்திலும் பலம்பொருந்தியவர்களாக ஆகிக்கொண்டே வருகிறார்கள். அதேவேளையில் அநேகர் எமது அடிப்படை உரிமைகளை உணர்ந்தும் ஆதரவளித்தும் வருகிறார்கள், ஏனெனில் நாங்கள் சீனாவிடமிருந்து பூரணவிடுதலையைக்  கோரவில்லை.

நாங்கள் 1974 களிலேயே பரிபூரண விடுதலையைக் கோருவதில்லையெனத் தீர்மானித்திருந்தோம். எமது அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்ட உரிமைகள வெல்வதற்கே பாடுபடுகின்றோம். அவை அமுல் படுத்தப்படவேண்டும். அதுவே எமது கோரிக்கை. திரு. Liu Xiaobo (2010 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்ற இவர் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்) உள்ளிட்ட நிறையச் சீனமக்கள் எம்மை ஆதரிக்கிறார்கள்.

கடந்த 4 ஆண்டுகளாக சீனாவிலும், எமது மிதவாதபோக்கை ஆதரித்தும், சீன அரசின் நிலைப்பாட்டை விமர்சித்தும் சீனாவுக்கு வெளியிலும்  எம் நிலைப்பாட்டை ஆதரிக்கும் 1000 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இது எமது விமர்சனம் அல்ல. சீனாவுக்குள்ளே எழும் விமர்சனம். அவ்விமர்சனத்தின் பின்னால் நிறைய பௌத்தசீனர்கள் இருக்கிறார்கள். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குமுன் சீனாவிலுள்ள சீனத்தாய்நிலத்தில் எத்தனை பௌத்தர்கள் வாழ்கிறார்கள் என்கிற கணக்கெடுப்பை நடத்திய ஒரு பல்கலைக்கழகம் அங்கே 300 மில்லியன் பேர் இருப்பதைக் கண்டறிந்தது. இவர்கள் பலரும் படித்தவர்கள். அத்துடன் தீபெத்திய பௌத்தத்தின்மேல் ஆர்வம் கொண்டவர்கள். இவர்களைவிட இன்னும் சீன கொம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், அரசின் உயர்மட்ட அதிகாரிகளும் தீபெத்திய பௌத்தத்தின்மேல் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.

 “ உண்மை மற்றெதைவிடவும் வலுவானது, காலத்தோடு நின்றுபிடிக்கவல்லதும் அதுதான்”

அரசியல் நடைமுறை மட்டங்களில் சீனாவுக்கு தன் மீதான இமேஜ்/பிம்பம் முக்கியம்.  அதன் இராணுவபலத்தாலோ, பொருளாதார ஸ்திரத்தாலோ உலகத்துக்கு ஆக்கபூர்வமான பங்களிப்புகள் எதையும் தந்துவிடமுடியாது. சீனக்குடியரசின் மக்களுக்கு அதிக மரியாதையும், கௌரவமும், அங்கீகாரமும் புற உலகத்திடமிருந்து வேண்டியதாயுள்ளன. சீனமக்களுக்கும் தம்மீதான பிம்பங்களைப்பற்றி அக்கறையுள்ளவர்களாகவே உள்ளார்கள். சீனாவில் 1.3 பில்லியன் ஜனங்கள் வாழ்ந்தாலும் தார்மீகபலத்தில், அங்கீகாரத்தில் பின்தங்கியே உள்ளதாகப் பல சீனப்பிரஜைகள் என்னிடங்கூறியுள்ளனர்.

இப்பொழுது, அதிபர்  Xi Jinping ஊழலுடன் மல்லாடுகிறார். அண்மித்தைய அவரது ஐரோப்பிய விஜயத்தின்போது பாரீஸில் ’ ‘சீனக்கலாச்சாரத்தில் பௌத்தத்துக்கு முக்கிய பங்கு’ உள்ளது, ஆதலால் பௌத்தர்கள் இன்னும் பொறுப்பு வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒரு கொம்யூனிஸ்ட் தலைவர் வெளிப்படையாக பௌத்தத்தைப் புகழ்வதும், அதன்மேல் நேர் விமர்சனம் வைப்பதுவும் எனக்கு மிகவும் அசாதாரணமான ஒன்று. ஆக மாற்றங்கள் வர ஆரம்பித்துள்ளன.

ஆனால், புனிதமானவரே, தீபெத்தில் ஏதாவது முன்னேற்றங்கள் தென்படுகின்றனவா?

எங்களுடைய போராட்டம் துப்பாக்கி முனைக்கும் சத்தியத்துக்கும் இடைப்பட்டது. உடன் கணிப்பில் துப்பாக்கியே பலமானதாகவும் வெற்றியைத் தீர்மானிப்பதாகவும் உள்ளது. தொலைநோக்கிய கணிப்பில் சத்தியம் சக்திமிக்கது, வலுவானது. அந்த நம்பிக்கை எனக்குள்ளது.

சீனாவின்  தீபெத்சார்பான  கொள்கைகள்  சீனமக்களுக்கு தொலைநோக்கில் உண்மையில் பயனுள்ளவைதானாவென சீனத்தலைவர்களும், கல்வியாளர்களும் சிந்திக்கத்தலைப்பட்டுவிட்டார்கள். அதற்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கியுள்ளன. மாற்றங்கள் தென்படுகின்றன.

இதுவரையில் எனது கணிப்பு சீனாவின் தலைமைத்துவம் சிறுபான்மைத் தீபெத்தியர்களைக் கையாள்வது தொடர்பாக சிந்திக்கிறது /  Xinjiang பிரதேசத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதும் , அங்கே முதலீடுகளைச் செய்வதும்  அவர்களின் இரட்டை அணுகுமுறையாகும்.

முதலீடு செய்வது நல்லதே. அதேவேளை சுற்றுச்சூழலையும் அவர்கள் கணக்கில் எடுக்கவேண்டும். அவர்கள் நோக்கம் எவ்வளவு விசுவாசமான தாயிருந்தாலும் பலத்தைப் பிரயோகித்தலானது எதிர்விளைவுகளையும் உண்டுபண்ணிவிடும். ஈராக் பிரச்சனையையும் அதிபர் புஷ்ஷையும் பாருங்கள். ஈராக்கில் ஜனநாயகம் என்ற அவரின் நோக்கம் நல்லதாயிருந்தது. ஆனால் அவரது வழிமுறைகள் தவறானவை. அதனால் எதிர்பாராத எதிர்விளைவுகள் ஏற்படலாயின. சீனாவிலும் அடிப்படையில் அதையொத்த நிலமைதான்.

ஈராக்கைப்பற்றிய பேச்சு வந்தால் எனக்கு எழுகின்ற இந்தக் கேள்வியே நிறைய ஜெர்மனியரையும் குழப்புகிறது.  அவர்களின் ‘இஸ்லாமிய அரசு’ என்கிற கோட்பாட்டை எப்படி அணுகுவது / கையாள்வது என்பதே அது. உங்களின் பொறுமை மற்றும் பேச்சுவார்த்தைக்குத் தயாராயிருப்பது எனும் அணுகுமுறைகளால் உலகம் உங்களை மிகவும் விரும்புகிறது, நேசிக்கிறது. நாங்கள் இப்போ வடக்கு ஈராக்கின் குர்திஷுகளின் ‘இஸ்லாமிய அரசு’க்கான போராட்டத்துக்கு ஆயுதங்களை வழங்குவதா இல்லையா என்பதை ஜெர்மனியில் நாங்கள் மிகவும் விவாதிக்கின்றோம். அது எமது முந்திய கொள்கைகளையும் உடைப்பதாக அமைந்துவிடும். பேச்சுவார்த்தைக்கு மறுதரப்பு சம்மதிக்காதபோது அல்லது பேச்சுவார்த்தை முறிவடையும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?

நான் ஒரு பௌத்தஉளவியல் மாணவன், காரண காரியத்தத்துவத்தை உறுதியாக நம்புபவன். குழந்தைகள், பெண்கள் அடங்கலாக மனிதர்களை இரக்கமில்லாமல் கொல்வது நினைத்தே பார்க்கமுடியாத கொடுநிகழ்வுதான். நான் நம்புகிறேன் இது சில சிலநோக்கங்களின் விளைவுதான்.

ஈரான் பிரச்சனையில் சதாம் ஹுசேனை வீழ்த்த அமெரிக்கா வன்முறையற்ற ஒரு வழிமுறையைக் கையாண்டிருந்தால் இன்றைய நிலமைகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். 21ம் நூற்றாண்டின் எண்ணியே பார்த்திருக்க முடியாத இந்த நிலமை, இதற்குமுந்திய நூற்றாண்டுகளின் தவறுகளின் விளைச்சல்தான் என நான் நினைக்கிறேன். உங்களின் புத்திமதி என்னவாக இருக்கும்?

எளிமையாக நான் சொல்லுவேன்: வன்முறையை பிரயோகிக்காமல் இருப்பதே எப்போதும் நல்லதும், பாதுகாப்பானதுமாகும். ஆனால் நிதர்சனத்தில் எத்தனையோ மக்கள் துன்பப்பட்டுக்கொண்டேயுள்ளார்கள். உலகம் மாறாமலே இருக்கிறது,  அது ஒரு தார்மீகமற்ற நெறிபிறழ்ந்த போக்குங்கூட.

சிறப்பான ஒரே வழி கூடிப்பேசுவது. அது இயலாதுபோனால்…. நிலவரத்தின்படி, சூழ்நிலைகளின்படி……. முடிவுகளுக்கு வருவது கடினம்.

திரும்பவும் தீபெத்துக்கு வருவோம். தீபெத்பற்றிய சீனஅரசின் அணுகுமுறை மாற்றங்கள் தொடர்பாக மிகவும் நன்னம்பிக்கையுடையவராக இருந்தீர்கள். தீபெத்தின் Lhasa வுக்கும்  Potala வுக்கும் மீண்டும் விஜயம் செய்யலாம் என்கிற நம்பிக்கை உள்ளதா?

ஜெர்மனி 4 நாட்கள் விஜயத்தின் ஆரம்பத்தில் ஈராக்கிலும், சிரியாவிலும் “இஸ்லாமிய அரசை’ நிறுவமுனையும் (IS) போராளிகளை கடுமையாக விமர்சித்தார். அவரது விஜயத்தைச்சில பௌத்த அடிப்படைவாதிகளின் எதிர்த்தார்கள் (23.08.2014)

சீனாவை 60 ஆண்டுகளுக்கும் மேலாக அவதானித்ததில் அதற்கு 4 சகாப்தங்கள் உண்டு என்பேன்.  Mao Zedong சகாப்தம்,  Deng Xiaoping சகாப்தம், Jiang Zemin சகாப்தம், Hu Jintao சகாப்தம் என்பன அவை. இந்நாலு சகாப்தங்களிலும் அங்கே நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. Mao Zedong சகாப்தம் கருத்தியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.

அதையடுத்து Deng Xiaoping சகாப்தம்:

அவர் பொருளாதாரத்தை முதன்மைப்படுத்தினார். ‘கருத்தியலைவிடவும் வாழ்க்கைத்தரமே முக்கியம்’ என்றார். முதலாளித்துவத்தையோ சந்தைப்பொருளாதாரத்தைத் தொடரத்தயங்கினாரில்லை.

அதன்பிறகு Jiang Zemin சகாப்தம்: இவர் புதிய நடைமுறை யதார்த்தங்களில் கொம்யூனிஸ்ட் கட்சி உழைக்கும் வர்க்கத்தினது கட்சியல்ல என்பதை கண்டுபிடித்தார். அவர் “Three Represents ” எனும் கருத்தியலை உருவாக்கி பணக்காரர்களையும், ஆய்வறிஞர்களையும் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

Mao Zedong வின் சகாப்தத்தில் அது நினைத்துப் பார்க்கவே முடியாததாயிருந்தது. பின்னர் வந்தது Hu Jintao வின் சகாப்தம். தனவந்தர்களுக்கும் ஏழைகளுக்குமிடையேயான இடைவெளி வளர்ந்து சென்றதால் அவர் ஒரு ‘இணக்கமான சமுதாயத்தை’ வலியுறுத்தினார்.

எனவே, அதே கட்சி,  சில புதிய முயற்சிகள், உருவாக்க திறன், ஒரு புதிய சிந்தனைகளுடன்  முரண்பட வேண்டியிருந்தது.

Hu Jintao  ‘இணக்கமான சமுதாயம்’என்று அறிவித்தபோது நான் அதை ஆதரித்தேன். ஆனால் 10 வருடங்களில் எவ்வளவுக்கு ‘இணக்கத்தை’விரும்பினோமோ அவ்வளவுக்கு அது மோசமாகியது. அந்த இலட்சியமும், நோக்கமும் சிறந்தன. ஆனால் கையாண்ட வழிமுறைகள்….? அவர்கள் அதிகாரபலத்தைப் பிரயோகித்தார்கள். சீன அரசின் குடிமக்கள் (சிவில்) பாதுகாப்புக்கான செலவீனம், நாட்டின் பாதுகாப்புக்கான செலவினத்தை விடவும் அதிகரித்தது. இந்தப் புவிக்கோளத்தில் 200 நாடுகள் இருக்கென நினைக்கிறேன். அவை எவற்றிலுமே இல்லாத நடைமுறை இது.

ஆனால்  Xi Jinping இன் கொள்கைகளும், நடவடிக்கைகளும் மிகவும் யதார்த்தமானவை. Xi Jinping கூறியதைப்போல “ நடப்புக்களில் இருந்து உண்மையைத் தேடுங்கள். ” புதிய தலைமை அந்த புத்திமதியை கடைபிடிக்கிறதென நம்புகிறேன்.

Hu Yaobang (சீர்திருத்த விருப்புடைய, லிபரல் கம்யூனிஸ்ட்கட்சியின் காரியதரிசி 1980 – 1987) அந்த அணுகுமுறையைக் கையாண்டார்.

அதிபர் Xi Jinping ம் அதே அணுகுமுறைக்கு ஆதரவானவர்போலவே தென்படுகிறார்.

அதிபர் Hu Yaobang  1980 களில் Lhasaவுக்கு விஜயம் செய்தபோது அவர் பேச்சுக்களும், விமர்சனங்களும் மிகவும் மிகவும் யதார்த்தமாக இருந்தன. அப்போது எல்லோரும் அவரில் நம்பிக்கைகொண்டார்கள். அதிபர் Hu Yaobang  நெடுங்காலம் ஆட்சியில் இருந்திருப்பாராயின்  ‘தீபெத்-பிரச்சனை’க்குத் தீர்வு எட்டப்பட்டிருக்கும்.  அதிபர் Xi Jinping உம் அதேவகையிலான யதார்த்தமான அனுகுமுறையையே கடைப்பிடிப்பாரெனத் தெரிகிறது. அப்படி ஒரு நம்பிக்கை உள்ளது. எது எப்படியோ: :   நல்லதையே எதிர்பார்த்திருப்போம்,  – அவ்வேளை மோசமானதுக்கும்  தயாராயிருப்போம்.

மிக்க நன்றி புனிதமானவரே.

தலாய் லாமா காஷ்மீர்ப் பேச்சுவார்த்தைகளில் அழுத்திவாதிட்டதாவது:

“தீபெத்தியர்கள் கோருவது  நிஜமான சுயநிர்ணயம், விடுதலை அல்ல.”

Deutsche Welle தொலைக்காட்சிக்காக செவ்விகணவர்: Matthias von Hein.

Audios and videos on the topic

Deutsche Welle.

தமிழில் : பொ.கருணாகரமூர்த்தி

பொ கருணாகரமூர்த்தி

(Visited 32 times, 1 visits today)
 

One thought on “நேர்காணல்மொழிபெயர்ப்பு-தலாய் லாமா -பொ கருணாகரமூர்த்தி”

Comments are closed.