மொழிபெயர்ப்பு நேர்காணல்-பிரகீத் ரட்நாயக்க( Prageeth Rathnayake )-பொ கருணாகரமூர்த்தி

‘உள்வாங்குவது என்பதும் ஒதுக்கிவைப்பதும் என்பதும் எப்போதுமே அரசியல் வினைப்பட்ட ஒன்று’
pirageeth Rathnayake

உங்களைப் பற்றியும் சொல்லுங்கள் ( பள்ளி, பணி, தொலைக்காட்சி, பொழுதுபோக்குகள்)

நான் தற்பொழுது தேசியத்தொலைக்காட்சியின் இயக்குனராகவும், அரங்கமைப்புக் கலைஞராகவும் பணியாற்றுகிறேன். அத்துடன் காட்சிக்கலைகளுக்கான பலகலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணிசெய்கிறேன்.

Hungama ஆரம்பப்பாடசாலை Talaunana உயர்தரப்பாடச்சலை  Tangalle Boys’ தேசியக்கல்லூரி என்பன நான் ஆதாரக்கல்வி பயின்ற பாடசாலைகளாகும். அதன் பின்னர்  காட்சிக்கலைகள் மற்றும் அரங்காற்றுக்கலைகளுக்கான பல்கலைக்கழகத்தில் பயின்றேன். தனியான பொழுதுபோக்கு என்று எதுவுமில்லை. என் ஆர்வம், பொழுதுபோக்கு, சந்தோஷம் எல்லாமே ஓவியம் வரைதல் என்றானது.

வரைதலுக்கான அகத்தூண்டலை எங்கிருந்து பெறுகிறீர்கள்?

எனது தந்தையார் ஓர் உள்ளூர்ச் சித்திரக்கலைஞர். அவருக்கு அக்கலை சார்ந்த பெரும் கல்விப்புலமை இருந்ததில்லை, ஆனாலும் கலைசார்ந்த ஞானத்தைத் தன்  குரல் வளத்தால் பெற்றிருந்தார். அக்காலத்தில் பொருளாதார, மற்றும் ஊடக வளங்கள் வலுவாக இல்லாதபோதும் கலையே அவரது விருப்புக்குரியதாக இருந்தது. என் பால்யத்திலிருந்து இன்றைவரையிலான வளர்ச்சியில் அவரது பாதிப்பு என்னிடம் இருந்திருக்கிறது. அது ஒரு சுவையான நினைவேந்தல். அவர் ஒரு உருவப்பட விவரணப்படக் கலைஞராகவும், கொட்டுருக்களை எழுதுபவராகவும், பிரித் ஓதும்கூடங்களை, கல்யாணமண்டபங்களை, மணவறைகளை வடிவமைப்பவராகவும்; விளம்பரத்திரைகளை, சுவரொட்டிகளை, வரைபவராகவும் பணிகள் புரிந்திருக்கிறார். அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தொலைக்கோடிக்கிராமான ஹங்கமவை எண்ணிம சகாப்தம் நெருங்கமுதலே சிறந்த கலைஞருக்கான விருதைத்தன் திறமைத்துவம் வாய்ந்த கரங்களால் பெற்றிருக்கிறார். அவர் சிறந்த இசைக்கலைஞராகவும் விளங்கியமையால் மாத்தறை ருஹுணு ஒலிபரப்புச்சேவையின் இசைத்துறையின் இயக்குனராகவும் பணிபுரிந்து 2014 இல் அதன் (Twilight) ’சந்தியொளி விருதை’யும் பெற்றார்.

கலை என்பதுதான் என்ன?

வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால், ஆயிரக்கணக்கான  ஆண்டுகளுக்கு முன்னால் வேட்டைசார்ந்த சடங்குகளுக்கும் மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டத்திற்கும் தொடர்பு இருந்தது புரியவரும். அந்தத் தொடர்பே கலையாக உருவானது. அத்தொடர்பே காலகோட்டில் தொடர்ந்து சமகால அலசல்கள்வரையில் கலைகளாக வந்து சேர்ந்துள்ளன. அங்கிருந்து காலம் இங்கே நகர்ந்து வந்துவிட்டது. அதனோடு சேர்ந்து நாமும் நகர்ந்து வந்துவிட்டோம்.  அந்த நகர்வுகளை மையப்படுத்திக் கலை பற்றிய சொல்லாடல்களைச் செய்யலாம். எனது வரையறையின்படி, கலை என்பது சமூகத்தின் நிலைகளைக் கவனிப்பதிலிருந்தும், அதனை வரலாற்றோடு பொருத்திப் பார்த்துப் பண்பாட்டை உருவாக்குவதற்கான புரிதல் எனச் சொல்வேன் . ஆழமான அறிவு அல்லது அவரது அகத்தை மையப்படுத்திய உரிப்பொருள் அல்லது உடனடிப்பொருண்மைகள் கொண்டு எவரொருவரும் அவரது தலைசிறந்த எழுத்தை/படைப்பை உருவாக்கிவிடக்கூடும். நமது சமகாலக் கருத்துகள் உருவாக்கிய தலைசிறந்த படைப்புகளை அதன் சமகால – ஒற்றைப்பரிமாண அர்த்தத்தைத் தாண்டி வாசித்துப் பொருள்கொள்வதெப்படி என்று தெரியாமல் அவற்றைக் கடத்திக்கொண்டிருக்கிறோம். கலை உருவாக்கம் பற்றிய உருவாக்கம் என்னும் சிந்தனையோட்டத்தைக் கொஞ்சம் தூரமாக விலக்கிவைத்து வளர்த்தெடுக்கவேண்டும்.  தனியாக எதுவும் உருவாகாது என்ற உண்மையை நம்பவேண்டும். ஒரு கலையை உருவாக்குபவரின் சிந்தனைக்கும் அவரது படைப்புக்கும் தொடர்பிருக்கிறது. ஒரு புத்தக வாசிப்புகூட  அதனை உள்ளக வாசிப்பது மட்டுமல்ல;  அது உருவாக்கும் வெளிப்புறத்தொடர்போடு இணைத்து வாசிப்பதுமே. ஒரு கலைப்பொருளை அது காட்சிப்படுத்தப்படும் அரங்கோடும், ஒரு அரங்க நிகழ்வை நிகழ்த்தப்படும் வெளியோடும் இணைத்துப் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும்.  உள்வாங்குவது என்பதும் ஒதுக்கிவைப்பதும் என்பதும் எப்போதுமே அரசியல் வினைப்பட்ட ஒன்று.

ஒரு கலைப்படைப்பின் பகுதியொன்று இரண்டு பக்கமும் சம அளவில் நகர்கிறதா என்று கவனிக்கவேண்டும். அப்படியில்லாமல் ஒருபக்கம் மட்டும் கூடுதல் நகர்வைக் கொண்டிருந்தால் அதன் அமைப்பிலேயே தர்க்கப்பிழை இருக்கிறது என்பதைக் கண்டறியவேண்டும். உதாரணத்திற்கு ஒரு பிம்பத்திற்கு அதற்கெனத் தனித்த உணர்வெல்லாம் கிடையாது. அந்தப் பிம்பத்திற்கு வெளிப்புறமாக அணிவிக்கப்படும் ஆடையின் பண்பாடு, அரசியல், பொருளியல், சமூகவியல் மற்றும் அறிவியல் காரணங்களும் அடையாளங்களும் கொண்டே உருவாகும். இவை ஒவ்வொன்றின் காரணமாகவும் அதன் பொருள் மாறிக்கொண்டே இருக்கும். இரண்டாவதாக அப்படியொரு பிம்பம் அதற்கிருந்ததில்லை. இவையெல்லாம் சேர்ந்த பின்பே அந்த பிம்பம் பிறக்கிறது. மார்ச்செல் டுசெம்ப் என்ற கலைஞர் மூத்திரச்சட்டியொன்றைக் கலைக்கூடம் ஒன்றில் கொண்டுவந்து வைத்தார். அதற்கு முன்பு இல்லாத அர்த்தங்களைக்  கலைப்பார்வையாளர்கள் உருவாக்கித் தந்தார்கள். புதிய அர்த்தங்கள் தரப்பட்டன. ஒருபொருளைப் பற்றி எழுதி ஒட்டப்பட்ட குறிப்புகளைக் கொண்டு உருவாகும் அர்த்தத்தை அப்படியே எடுத்துக்கொள்வதில்லை. அது நமது மூளைக்குள் உருவாக்கும்  அமைப்பு உருவாக்கும் விளைவுகளின் வழியாகவே புரிந்துகொள்கிறோம்; விளக்குகிறோம்.  இந்த இடத்தில் ஒருவரது மொழியும் இணைந்துகொள்கிறது. மொழியல்லாத கலைகளைக் குறித்துப் பேசும் மொழியும் அர்த்தங்களை மாற்றுகிறது.  நெய்யப்பட்ட ஒரு துணியில் இழையோடும் கலையின் மேன்மையைக் கூடுதலாக்குவது ஊடுபாவான மொழியின் பணியே. தரமான பனுவல்களைத் திரும்பத்திரும்ப வாசிப்பதன் மூலமும் உள்வாங்குவதன் மூலமும் ஒருவர் அகநிலை வாசிப்பையும் புறநிலைவாசிப்பையும் நிகழ்த்துபவராக ஆகமுடியும்

உங்கள் கலைகள் எதன் பாதிப்பில்……?

என்னுடைய மூத்த சகோதரர் சுஜித் ரத்நாயக்க உண்மையில் ஆரம்பத்தில் என் தந்தையால் வளர்த்தெடுக்கப்பட சொற்பொழிவு தொடர்பான கலைகளில் அடிப்படை சித்தாந்த மாற்றங்களை ஏற்படுத்தினார். கலைமூலங்கள் கிராமத்திலிருந்துதான் கிடைத்தன. கலை பற்றிய அறிவியலை சரியாக சுஜித் என்னிடம் சேர்ப்பித்தார்.நான் பல்கலைக்கழகத்தில் காட்சிக்கலைகள் (விஷுவல் ஆர்ட்ஸ்) கற்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது நான் பல ஆசிரியர்களைச் சந்தித்தேன்.சிலர் அமெரிக்காவிலிருந்து வந்தனர், வேறும் சிலர் ரஷ்யாவில் இருந்தும்  இந்தியாவில் இருந்தும் வந்தனர். அவர்கள் என்னிடம் சேர்ப்பித்தவற்றையும் நான் அறிவேன்.

நீங்கள் அநேகமும் கைகளால்  வரைய விரும்புகிறீர்கள்.  இயற்கையை வரைவதில்த்தான் ஆர்வம் அதிகமா……….. அதற்கான காரணங்கள் எதுவும் இருந்தால் சொல்லுங்கள்?

ஓவியம் வரைதல் எனக்குப்பிடிக்கும். அதிகமான  பயிற்சி எனக்குக் கிடைத்ததும்    ஓவியத்துக்குத்தான்  என்பேன்.

கேன்வேஸில்  வரைந்து  முடிக்க வேண்டிய ஒரு கலைக்கு அதிகம் பேச்சுக்கள்  அவசியம்  இல்லை, கட்டமைப்பியல் கலையானாலென்ன, அதைக்கடந்த கலைவெளியிலான பிறிதொன்றாயானாலென்ன அதற்குத் தன்னை வெளிப்படுத்தும் அழுத்தமிருக்கவேண்டும். எவ்வகையான கலைகளுனுடன் இருக்கிறோம், சமகாலக்கலைகளை  எதிர்கொள்ள என்னதான்  இங்கே படைக்கப்பட்டுள்ளன. கன்வேஸில் உருவாகும் கலைகளின்  கட்டுக்கள்  உடைக்கப்பட்டுவிட்டன. வெளிப்பாட்டுச்சுதந்திரத்தின் முன்னேற்றகரமான  படிநிலைகள்  அவை. கலைகளின் எல்லைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளதால் கோடுகளின், வர்ணங்களின், கோலவுருக்களின் மீதிருந்தவிதிகள் கலைவெளியில் அர்த்தமற்றவையாகிவிட்டன.

நீங்கள் கலையை சமர்ப்பிக்க விரும்பும் ஊடகம் எது ? ஏன்?

கன்வேஸில் அகிறிலினால் தீட்டுவதே எனக்குப் பிடிக்கும். ஊடகங்களுக்கும், கொதிநிலை ஊடகங்களுக்கும் (volatile media) தண்ணீர் வர்ணங்களையும் பயன்படுத்தப் பிடிக்கும்.

உங்கள்  கலைக்கொள்கை,  கோட்பாட்டை விளக்க முடியுமா?

எனது கோட்பாட்டை எந்தச் சோதனைகளுக்கும் உட்படுத்தப்படாத  ‘கருதுபொருள்வாதம்’ எனலாம். சில விஷயங்களை கருத்தியல் ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாது.

கருத்தியல் ரீதியாக, கலைபற்றிய ஒரு அறிவை உருவாக்குதல் கடினம். இது சிறிய ஆனால் பளுவானதும் அலுப்பூட்டுவதுமான ஒரு வேலை. நான் எப்படி வரைவது, எதை வரையலாம்  என்ற கேள்விகளுக்கான பதில்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் நான் நிறைய யோசிக்கவும் பயிற்சி செய்யவும் வேண்டும். இதுவே ஒரு அடையாள நெருக்கடியும் ஆகும். எம் சமுதாயத்தில்  கடுமையான நெருக்கடிகள் உண்டென்று நம்புகிறேன். நான் எந்த சமூகத்தின் பிரதிநிதி என்று  கேட்டால் வரக்கூடிய பதில்தான் எனது அடையாளம்.

இந்த நேரத்தில் (பைனரி எதிர்ப்பு) தோல்வியுற்றதுபோது  மூலதனம் அதன் இலாபம், தர்க்கம் எனும் அனைத்து மதிப்புகளின் சீரழிவிற்கும் வழிகோலும். மூலதனத்தின் தர்க்கமும் அதன் அடர்ந்த அலங்காரங்களும் கலையில் விரவி உள்ளன.  கலைகள் மென்மக்களுக்குப் பதிலாக இராட்சதர்களின் கைகளுக்கு மாறிவிட்டன. கலைகள் பண்டமாக மாற்றங்கண்டுவிட்டன. அப்பண்டங்களே மானிடனின் அடையாளங்களாக மாறிவிட்டன. இன்னும் சொல்லின் அடையாளங்கள் நெருக்கடியாக மாறிவிட்டன. நெருக்கடிகள் நாகரீகமாக மாறிவிட்டன.

நாங்கள் மனசாக்ஷியின் பின்னுள்ளவர்கள் ஆனோம், துரோகத்தனமும் விட்டேத்தித்தனமுந்தான் இயற்கை என்றாகிவிட்டது, மற்றும் அரசியல் அரசியலற்றதாகிவிட்டது.

நன்மக்களுக்கு பதிலாக கலைகள்  மாறிவிட்டன. கலைகள் பருப்பொருட்களாக மாற்றப்பட்டுள்ளன. பொருட்கள்  அடையாள நெருக்கடிக்குட்பட்டு  விட்டன. நெருக்கடியே  நாகரீகம் என்றாகிவிட்டது.

சமூகம் (‘லும்பன்’) அல்லக்கைகளின் சமூகமாகிவிட்டது. புதிய  அறிவியல் இதுதான். நான் அறிவியலின் பாதிப்புடன்  இந்தச் சமூக உறவைச் / சிக்கலைக்   கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். போலி மானிடத்தின் மனச்சாக்ஷி சமூகத்தின் விபச்சாரந்தான் என்றானது.  எதிலும்  குறைகாணல் இயல்பென்றானது.

நான் ‘வெள்ளையில் வெள்ளையை’ வரைய முதுகெலும்பற்ற மனித உறவுகள் வழியாக முயற்சிக்கிறேன். நான் தனியாக, தனிமைப்படுத்தப்பட்ட  பாத்திரங்களை வரைய வேண்டும்,  இன்னும்   மக்கள்  தனியாகிப்போன கதைகளையும் வரையவேண்டும்.

மொழிபெயர்ப்பு: பொ.கருணாகரமூர்த்தி,

அனுசரணை:  அ.ராமசாமி

அ.ராமசாமிபொ.கருணாகரமூர்த்தி

00000000000000000000000000000000000

pirageeth Rathnayakeதாயகத்தின் பெரும்பான்மை இனத்தவரான பிரகீத் ரட்நாயக்க சிங்கள சமூகத்தில் குறிப்பிடத்தக்க ஓவியர்களில் ஒருவர். நடு சஞ்சிகையின் “கலை கூடம்” பகுதிக்குத்  தனது ஓவியங்களை மகிழ்வுடன் பகிர்ந்தளித்தவர். தேசியத்தொலைக்காட்சியின் இயக்குனராகவும், அரங்கமைப்புக் கலைஞராகவும் பணியாற்றி வரும் பிரகீத் ரட்நாயக்கவின் ஓவியங்கள் பல தாயக, சர்வதேச ஓவியக்கண்காட்சிகளில் பங்கு பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரது ஓவியங்கள் மானிட இருப்பின் கறுப்பு பக்கங்களை கேள்விக்கு உட்படுத்தி, அவைகளை நவீன உத்திகளில் மக்கள் மனதில் பதிய வைத்ததில் வெற்றி கண்டுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.நாம் நேர்காணலுக்காக அவரை அணுகிய பொழுது பேதங்கள் பாராது மிகவும் மகிழ்ச்சியுடன் எம்முடன் ஒத்துழைத்தமைக்கு நடு குழுமம் சார்பில் நன்றியினை தெரிவிக்கின்றோம். இந்த நேர்காணலை செவ்வனே மொழிபெயர்த்த பெர்லினை சேர்ந்த பொ.கருணாகர மூர்த்திக்கும் அவருடன் அனுசரணையாளர்களாக இருந்த பேராசிரியர் அ.ராமசாமி ( இந்தியா) ஆகியோருக்கும் மிக்க நன்றி.

நடு குழுமம் 

 

(Visited 124 times, 1 visits today)