க.கலாமோகனின் தொடரும் விலகல் மனம்-விமர்சனம்-அ ராமசாமி

நீண்ட இடைவெளிக்குப் பின் கலாமோகனின் சிறுகதை ஒன்றை வாசிக்கும் வாய்ப்பைக் கனலி இணைய இதழ் தந்துள்ளது. 1999 இல் எக்ஸில் வெளியீடாக வந்த நிஷ்டை தொகுதிக்குப்   பிறகு சிவகாமியின் ஆசிரியத்துவத்தில் வரும் புதிய கோடாங்கியில் சில அபுனைவுகளையும் புனைவுகளையும் எழுதினார். அதன் பிறகு நீண்ட இடைவெளி. இப்போது மிருகம் என்ற தலைப்பில் இந்தக் கதையை எழுதியுள்ளார். இருபதாண்டுகளுக்கு முன்பு  வந்த  நிஷ்டை  தொகுப்பில் இருந்த  கதைகளை  வாசித்த பின்பு அதன் ஆசிரியரான க.கலாமோகனைப் பற்றிய  அப்போதைய மனப்பதிவாக இருந்தது இதுதான்:   “நிகழ்கால வாழ்க்கையில் தான் வாழ நேர்ந்த வெளிகளில் சந்திக்கும் மனிதர்களோடான உரையாடலையும் உணர்வுகளையும் பதிவுசெய்துவிட வேண்டும்; பதிவுசெய்யும்போது கடந்த காலத்தின் துரத்தல்களையோ, எதிர்காலத்தின் இலக்குகளையோ பற்றி மிகையான சொற்களால் சொல்லிவிடக் கூடாது. அதே போல் வாழ நேர்தலில் எதையும் மறைத்து எதுவும் ஆகப்போவதில்லை; சொல்ல நினைப்பதை சொல்லத்தெரிந்த மொழியில் வடிவத்தில் சொல்லிவிட வேண்டும் என்பதாக இருந்தது”.

நிஷ்டையின் 12 கதைகளிலும் எழுதப்பெற்ற வெளிகள் பெரும்பாலும் அகதியாக அலைந்து திரிந்த ஐரோப்பிய நாடொன்றின் வெளிகளாகவே இருந்தன. அக்கதைகளில் வரும் அகதிகளுக்குத் துரத்தப்பெற்ற வாழ்க்கை இருந்தது என்றாலும், அதைப்பற்றிப் பெரிதான புனைவுகள் இடம் பெறவில்லை. விரிவாகக் கடந்த காலத்தின் சாகசங்களைப் பேசிக் கொண்டிருக்காமல், இப்போது சந்திக்கும்- சந்தித்த மனிதர்களையே வாசிப்பவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களின் பெரும்பாலோர் அவரைப்போலவே வெவ்வேறு நாடுகளிலிருந்து அகதியாகவும் துரத்தப் பட்டவர்களாகவும் வந்த மனிதர்களாகவே இருந்தார்கள். அவர்களின் அன்றாட வாழ்க்கையைத் தாண்டிச் செல்ல – அடிப்படைத் தேவைகளான- வசிப்பிடம், உணவு, உடை ஆகியவற்றோடு உடலின் பசியான பாலியல் வேட்கையையும் தீர்த்துக் கொள்ளத் திட்டவட்டமான முறைமைகள் எதுவும் இல்லாதவர்களாக இருந்தார்கள். இப்படியான சூழல் உருவாக்கும் நெருக்கடிகளில்  மக்கள் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் அன்பு, நம்பிக்கை, உண்மை, நேர்மை, புனிதம் போன்றவற்றிற்கு இடமில்லை என்பதைச் சொல்லிக் கொண்டிருக்காமல் மீறலான வாழ்க்கையை நடத்துபவர்களின் உலகமாக இருப்பதைத் துண்டு துண்டான சித்திரங்களாக எழுதித்தந்திருந்தார்.

இந்தக் கதைகள் வாசிப்பவர்களுக்குத் தரும் செய்தி ஜி.நாகராஜனின் கதைகளில் வருபவர்களைப் போல ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நாளாகவே கடந்துபோகிறவர்களே. தந்தையின் மரணச் செய்தியைக் கூட ஒரு செய்தியாக வாங்கி விலகிச் செல்லும் மனநிலையை எழுதிய மூன்று நகரங்களின் கதை, உடைமையுறவு என்று சொல்லிக் கொள்ள முடியாத பெண்களைச் சந்தித்ததைச் சொல்லும் தெரு, கனி போன்ற கதைகள் உதிரியாக அலையும் மனிதர்களின் வாழ்க்கையின் கோடுகள். சந்திக்க நேரும் ஒவ்வொரு மனிதர்களும்  தான் வாழும் – வாழ நேர்ந்த வாழ்க்கையின் மீது பிடிப்பையும் நம்பிக்கையையும் கொண்டிராத விலகல் மனப்பான்மையைக் கொண்டவர்களின் கதைகள் அவை. அக்கதைகளில் வெளிப்பட்ட மனநிலையின் தொடர்ச்சியை இப்போது வந்துள்ள விலகலை இப்போது வந்துள்ள விலங்கு  கதையிலும் காணமுடிகிறது.

கால் நூற்றாண்டைத் தாண்டிய பின்னும்  புலம்பெயர் நாடுகளின் மனிதர்களின் சமூக வாழ்க்கையையும் அந்தரங்க வாழ்க்கையையும் விலகி நின்று பார்க்கும் கீழைத் தேய வாழ்க்கையின் படிமங்களை –இந்திய/ இலங்கையர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள நினைப்பவர்களுக்குப் பளிச்சென்று புலப்படும் வேறுபாடு ஆண் – பெண் உறவுகளும்,குடும்ப அமைப்பைப் பற்றிய கணிப்புகளும் தான். உடலின் வேட்கைக்கான ஒன்றாகப் பார்க்கும் மேற்கின் ஆண் – பெண் உறவுக்கு மாறாக அதற்கு நிரந்தரத் தன்மையைத் தர நினைப்பது கீழைத்தேயம். அதன் தொடர்ச்சியாகச் சொத்துடமை, அதனை வாரிசுகளுக்குக் கடத்துதல் என நீளும் நீட்சியைக் கொண்டது.  கலாமோகனின் கதைகளில் வரும் கீழைத்தேய மனிதர்கள் – இலங்கையர்கள் இத்தகைய தற்காலிகத் தன்மை மீது அசூயை கொள்ளாதவர்களாக வருகிறார்கள். அதே நேரம் அதன் மீது விருப்பமும் ஆர்வமும் கொண்டு பின்பற்ற நினைப்பவர்களாகவும் காட்டப் படுவதில்லை.

உடலுறவுத்தேவை சார்ந்த மனநிலை ஐரோப்பிய /மேற்குலக வாழ்க்கையில் பெருமளவு மாற்றங்களை நோக்கி நகர்ந்துள்ளது. குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதைச் சுமையாகக் கருதிய மனநிலையில் பிள்ளைப்பேற்றைத் தடுக்கும் கருவிகளையும் மருந்துகளையும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்திய முதலாளிய வணிகம் பாவனைப் புணர்ச்சிகளை ஊக்குவிக்கிறது.  உடலுறவு தரும் இன்பத்தை / உடலின் தீராத்தாகத்தையும் வேட்கையையும் தீர்த்துக்கொள்ளக் கருவிகளைச் செய்து கொடுத்து எதிர்பால் நபர்களின் தேவையைத் தவிர்க்கத்தூண்டியது. அதன் அடுத்த கட்டமாக  எதிர்பாலினரின் தேவையின்றி ஆண்களுக்குத் தேவையான பெண்களையும், பெண்களுக்குத் தேவையான  ஆண்களையும் பொம்மைகளாகச் செய்து விற்றுப் புணர்ச்சியின் உச்சபட்ச அனுபவத்தைக் கற்பனை செய்துகொள்ளத் தூண்டிக்கொண்டிருக்கிறது.  பொம்மைகளின் இடத்தில் வளர்ப்பு மிருகங்களும் இருக்கின்றன எனப் பேசுகிறது கலாமோகனின் மிருகம் கதை.

அந்தக் கதை இப்படித் தொடங்குகிறது:

‘எலெனாவை எனக்குத் தெரியும். ஆனால் நான் அவரைச் சந்திப்பது அபூர்வமாகவே.மதுச்சாலைகளிலும் தோட்டங்களிலும் சில வேலைகளில் கலைகள் காட்டும் கண்காட்சி சாலைகளிலும். இவளது வீட்டுக்கு நான் சில தடவைகளில். ஆனால் நான் அங்கு சென்றதும் பயப்பட்டு விடுவேன். காரணம் அவள் வளர்க்கும் நாய்தான். அது மிகவும் பெரியது. மிகவும் நீளமான பற்கள். அது ஒரு பயங்கர மிருகத்தைப் போல.’

எலெனாவைப் பற்றிய அறிமுகத்தை அவளது நாயோடும், அதனுடன் அவளுக்கிருக்கும் நெருக்கத்துடன் அறிமுகப்படுத்தும் கதையில் அல்ஜீரியா நாட்டு ஆணுக்கும் நாய்க்குமான உறவோடு கூடிய நிகழ்வொன்றும் இடம் பெற்றுள்ளது. காதலியைப் போல உடனிருந்த நாயின் மாமிச வேட்கைக்குப் பின் அதைக் கொன்றவன். அதே போல் கதையில் இடம்பெறும் ரவி என்ற இலங்கை அகதியின் வாழ்வில் மிருகங்கள் குறித்து அச்சமே இருந்தது என்பதையும் கதை குறிப்பாகத் தருகிறது. ஐரோப்பியரல்லாதவர்களின் வாழ்வில் விலங்குகளின் இடம் எத்தகையது எனக் காட்டும் அந்தப் பகுதியைக் கதையில் இணைத்துள்ள கலாமோகன், விலங்குகள் வளர்ப்புகளுக்கான சட்டங்கள், தண்டனைகள் பற்றிய அக்கறைகள் கொண்ட ஐரோப்பிய பொதுவாழ்க்கையையும் சொல்லிவிட்டு,  எலெனாவுக்கு நாயுடன் உள்ள உறவைக்  குறித்து எழுதுகிறார். அவர்கள் இருவரும் பழகத் தொடங்கியபின் நடக்கும் உரையாடலின்   பகுதிகள் சிலவற்றை வாசிக்கலாம். ரவியோடு இப்படி உரையாடுகிறாள் :

“மாலை வணக்கம்” கேட்டு திரும்பினேன். அழகிய பெண் அருகில் ஒரு நாய் கையில் ஒரு பியர் . அவள்தான் எலெனா.

“நான் எலெனா. நீங்கள் இந்தியர் என நினைக்கிறேன். உங்களது நாடுகளிலும் இத்தகைய கண்காட்சிகள் நடக்கின்றனவா?

எனது பெயர் ரவி. நான் இலங்கையில் பிறந்தவன். நான் அங்கு ஒருபோதுமே ஓவியக்கண்காட்சிகளுக்கு சென்றதில்லை. ஆனால் அங்கு படைப்புகளை அழிக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

000000000000000000000000000

“எனக்கு ருக்கியில் நிறைய விருப்பம்” என்றாள்

“உங்களோடு வாழ்வோருக்கும் இந்த விருப்பம் இருக்கலாம் ”என நினைக்கிறேன்

“நான் ஒரு ஆணுடன் அல்லது பெண்ணோடும் வாழ்வதில்லை நான் ரூக்கியுடன் தான் வாழ்கிறேன்”

“பிராணிகளும் மிருகங்களும் மனிதர்களை காட்டிலும் மேலானவர்கள்”

0000000000000000000000000000

ரோக்வெய்லர் என்னைப் பார்த்து வாயைத் திறந்தது. எனக்குள் நடுக்கம் பயப்படவேண்டாம் ரவி என அதனை அவள் தனது மடியில் கிடத்தினாள். அவளது உதடுகளை முத்தமிட்டது ரூக்கி.

எனது பயத்தைக் காட்டாமல், “ரூக்கிக்கு ஆடுகளிலும் விருப்பம் உள்ளதா?” எனக்கேட்டேன்.

இல்லை.

“ஒரு போதும் தொட்டது இல்லை. கண்டால் கோபம் வரும்.

0000000000000000000000000000

ரவி எனக்கு தூக்கம் வருகிறது. இது உங்கள் வீடு . சாப்பிடுங்கள். நாளை சந்திப்போம். கோப்பையில் ஓர் இறைச்சித்துண்டும் இல்லை.

ரூக்கியுடன் தூங்கும் அறைக்கு சென்றாள். நான் அன்று சாப்பிடவில்லை. இரவில் நிறைய சப்தங்கள் வந்தன. காலையில் விழித்தால், ரூக்கியை ஒரு கிழிந்த பிரேசியருடன் கண்டேன்.

0000000000000000000000000000

இந்த உரையாடல்கள், எலெனாவுக்கு நாயின் மீதான விருப்பங்களையும், ரவிக்கு அந்த உறவின் மீதான விலகலையும் உணர்த்தும் விதமாக நகர்கிறது என்பதே கவனிக்க வேண்டியது

மனிதர்களிடம் கிடைக்கும் அந்தரங்க அனுபவத்தை மிருகங்கள் வழியாகப் பெற முடியும் என நம்பும் மனிதர்களின் நம்பிக்கைக்கு வயது பல்லாயிரம் ஆண்டுகள். மனித உருவமும் மிருக உருவமும் கலந்து உருவான தெய்வ உருவங்களின் தொன்மக்கதைகளைக் கீழைத்தேயப் புராணங்களும் மேலைத்தேய இதிகாசங்களும் தருகின்றன. அதன் நிகழ்கால உதாரணங்களாக மனிதர்கள் விலங்குகளோடு தங்களின் அந்தரங்கத்தை/ படுக்கையைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.  ஆணிடம் கிடைக்கும் உடலுறவுத்தேவைக்காக அவனைத் தன்னோடு வைத்துச் சுமந்து திரிய வேண்டுமென நினைப்பதில்லை ஓர் ஐரோப்பியப் பெண்.   அந்த இன்பத்தைத் தன்னை நேசிக்கும் விலங்கு ஒன்றிடமிருந்து பெற முடியுமென்றால், அதனையே பராமரித்து வைத்துக்கொள்வதை விரும்புகிறாள் எனக் காட்டும் கதையாக விலங்கு கதையை எழுதியுள்ளார் கலாமோகன். கீழைத்தேயப் பண்பாட்டை முன்வைத்து இந்த அனுபவத்தை – மிருகத்தோடு தனது வாழ்க்கையைப் பிணைத்துக்கொண்டே எலெனாவைக் குறித்து மதிப்பீடுகள் எதனையும் வைக்காத ரவியின் வழியாகத் தனது விலகல் மனத்தைக் காட்டியுள்ளார் என்பதுதான் அவரின் எழுத்தடையாளம்.

அ ராமசாமி-இந்தியா

அ.ராமசாமி

 

 

(Visited 100 times, 1 visits today)