சிறகடிக்கத் துடிக்கும் சொற்கள்- சினிமா தொடர்-பாகம் 05-விஜய ராவணன்

சிறகடிக்கத் துடிக்கும் சொற்கள்- The King’s Speech ( English , 2010)

விஜய ராவணன்தொண்டைக்குழியில் வெட்கி நிற்கும் சொற்கள் ஒருகட்டத்தில் தயக்கத்தை உதிர்த்து விடுதலையாகி, மேற்கூரையிலும் நான்கு சுவர்களிலும் முட்டி மோதி வெளிப்பட்டே தீரும். தேர்ந்த சொற்பொழிவாய் நீண்டதொரு பேச்சாய் அவை பொதுவெளியில் அச்சமின்றி காலடி பதிக்கும் தருணங்களில் கேட்பவனை அதிர்ச்சியில் ஆழ்த்தும். நேர்த்தியான சொற்கூட்டித்தின் அணிவகுப்பைக் கண்டு கேட்பவன் மிரண்டு போவான். எதிர்ப்பின்றி சரணடைவான். பதறிக் கொண்டிருந்தவன் சொற்களின் குளிர்ச்சியில் சாந்தம் அடைவான். அந்தரங்கமாய் உணர்ந்து கண்ணீர் சிந்துவான். நேர்த்தியான ஒவ்வொரு சொல்லும் எடைக்கல்லின் கனமும் மயிலிறகின் ஸ்பரிசமும் கொண்டிருக்கும்.

தேர்ந்த பேச்சாளன் ஒருவிதத்தில் திறமையான மாயாஜாலக்காரன் தான். எந்தவொரு நொடியிலும் தன் மீதான கவனத்தை அவன் சிதற விடுவதில்லை. அதேநேரம் தன் பேச்சில் உள்ள உண்மைத்தன்மையை ஆராய விடுவதும் இல்லை.

அவனுக்கு கேட்பவனின் முகங்கள் தென்படுவதில்லை. அவன் கண்களுக்கு புலப்படுவதும் புலப்படாமல் உணர்வதும் எல்லாமுமே செவிகள்! செவிகள் மட்டுமே! அதன் அரணைத் தான் பேச்சாளன் தகர்த்து உள்நுழைய வேண்டும். கேட்பவனின் மூளையைச் சென்றடைய அவனுடைய உள்ளுணர்வைத் தன் வசப்படுத்த அதுமட்டுமே தான் நுழைவாயில். அதற்காகவே அவனிடம் கூர்மை தீட்டிய சொற்கள் இருக்கும்.

சூழ்நிலைகளை உணர்ந்து சீரான ஏற்ற இறக்கத்துடன் தங்கு தடையின்றி ஆழ்மனதிலிருந்து அழுத்தமாய் வெளிப்படும் வார்த்தைகள் வீரியமானவை! பெருமழை குளிர்ச்சியாய் சுட்டெரிக்கும் உஷ்ணமாய் வெளிப்படும்…

ஐரோப்பா கண்டத்தின் பெரும்பகுதியும், எத்தனையோ பழைய பிரபலமான அரசுகளும் ‘Gestapo’ வின் பிடியிலும் ‘நாசி’யின் மோசமான கரங்களிலும்  விழுந்திருக்கலாம் இல்லை விழுந்துவிடலாம்… ஆனால் நாம் ஒருபோதும் தலைவணங்கப் போவதில்லை! நாம் இறுதிவரை செல்வோம்… நாம் பிரான்சில் போரிடுவோம்… நதிகளில்… கடல்களில் போரிடுவோம்… இன்னும் அதீத நம்பிக்கையோடும் வலுவோடும் காற்றில் போரிடுவோம்… என்ன விலை கொடுத்தாயினும் நம் தீவை காப்போம்… கடற்கரையிலும் போரிடுவோம்… விமானத் தரையிறங்குத் தளங்களிலும் போரிடுவோம்…வயல் வெளிகளிலும் போரிடுவோம்…வீதிகளிலும் போரிடுவோம்… மலைகளிலும் போரிடுவோம்… சரணடையப் போவதுமட்டுமில்லை!! ஒருவேளை, நம் தீவின் பெரும்பகுதி விழுந்துவிடலாம் இல்லை பசியில் வாடலாம் அப்போதும் நம் கடல் கடந்த ராஜ்ஜியங்கள், பிரிட்டிஷ் கடற்படையின் பாதுகாப்போடும் ஆயுதபலத்தோடும் நம் போராட்டத்தைத் தொடரும், கடவுளின் கணக்குப்படி வலுவான பிரம்மாண்ட புது உலகம் முன்வந்து பழைய உலகத்தை மீட்டு விடுதலையாக்கும் வரை…

ஜெர்மனியின் வெற்றி நடைமுன் மொத்த ஐரோப்பாவும் விழுந்து நொறுங்குகிறது… வல்லரசு பிரான்சே ஒரே வாரத்தில் விழுந்து விட்டது…. அடுத்தது நாம் தான்… பிரிட்டிஷ் பேரரசு தான்… அச்சத்தில் ஒடுங்கி நிற்கும் மக்களை மீட்டாக வேண்டும்… தோல்வியில் சோர்ந்து கிடக்கும் பிரெஞ்ச் படைகளையும் தட்டி எழுப்பவேண்டும்…  அதேநேரம் வரவிருக்கும் இருண்ட நாட்களைப் பற்றியும் முன்னவே எச்சரித்து தயார்படுத்த வேண்டும்…

அத்தகைய இக்கட்டான தருணத்தில் தான் 1940 June 4 யில் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் Winston Churchill இப்படி உரையாற்றுகிறார். உலக வரலாற்றில் சிறந்த பேச்சாளராக அறியப்பட்ட Churchill மட்டுமல்ல அதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மன்னனாக இருந்த ‘King George VI’ என்ற ‘Albert’ கூட ஆரம்பத்தில் திக்குவாய் தான்.

“The King’s Speech“ சரளமாக பேசத்துடிக்கும் ஒரு நாவின் போராட்டத்தை மையப்படுத்தி, இரண்டாம் உலகப்போர் துவங்குவதற்கு ஓரிரு ஆண்டுகள் முன்னிருந்து உலகப்போர் துவங்கும் வரையான காலகட்டத்தில் நடந்தேறும் வரலாற்று புனைவு. மிரண்டு பிடிக்கும் நாக்கை வசப்படுத்தும் முயற்சியே கதைகளம். இருவேறு துருவங்களிடையே மலரும் வரலாற்று நட்பின் பின்புலத்தோடு….

தந்தை ‘King George V’ நாட்டில் இல்லை. இன்று அவரது இரண்டாவது மகன் Prince Albert, The Duke of York தான் உரையாற்றியாக வேண்டும். அரங்கம் நிறைந்திருக்கிறது. இதுபோக அப்போதைய பிரிட்டிஷ் ஆளுமைக்குள் கடலைப்போல் பரந்து விரிந்திருக்கும் எல்லா நாடுகளிலும் இப்பேச்சு ஒலிபரப்பப்டும். வாசிக்க வேண்டிய காகிதம் கையில் படபடத்துக் கொண்டிருக்கிறது. உலகமே செவிமடுக்கக் காத்திருக்கிறது. ஆனால் வார்த்தைகள்! அவை தொண்டைக் குழியிலேயே தங்கி விட்டன. கைகொடுத்துத் தூக்கிவிடும் தெம்பு நாவுக்கு இல்லை. முகம் வெடவெடத்து வியர்க்கிறது. வார்த்தைகள் திக்கித் திணறி அச்சத்தில் நசுங்கி சிதைந்து வெறும் சக்கையாய் வெளிவருகின்றன. அதே மேடையிலே அந்தத் தருணமே பேச்சு செத்து மடிகிறது. Prince Albert நிராயுதபாணியாய் நிற்கிறார் அவமானங்களைச் சுமந்தபடி…

என்னென்னவோ செய்தும் எத்தனையோ பேச்சுப்பிறழ்வு மருத்துவர்களைப்  பார்த்தும் பொதுவில் உரையாற்றும்போது ஏற்படும் தடுமாற்றம் மட்டும் ‘Prince Albert’க்கு தொடரவே செய்கிறது. அப்போதுதான் மனைவி ‘Elizabeth’ கணவரை  ‘Lionel Logue’ விடம் அழைத்து வருகிறார்…

“இனிவரும் காலத்தில் அரசன் என்பவன் குதிரையேறி வாள்போர் செய்ய வேண்டியவன் அல்ல… இது ரேடியோவின் காலம்… உரையாற்றத் தெரியாதவன் எத்தகைய நிர்வாகத் திறமைகள் இருந்தாலும் எப்படி சிறந்த தலைவனாக உருவெடுக்க முடியும்?” என்று அப்பா ‘King George V’ சொல்லும் போது Prince Albert க்குத் தன் இயலாமை மீது கோபமும் எரிச்சலும் தான் மேலிடுகிறது.

ஒரு பேச்சாளன் முதலில் தன்னை வெற்றிக் கொண்டாக வேண்டும். தான் உதிர்க்கும் வாத்தைகளை முதல் ஆளாய் அவன்தான் செவிமடுக்க வேண்டும். ஒருவேளை தான் தோற்று விட்டால்….? என்ற அச்சத்தை முதலில் களைய வேண்டும். அணை உடைத்து சொல்லோட்டம் பிரவாகிக்கும் போது திக்குதல் ஒரு தடைகல்லாய் இருக்காது.

Prince Albert மன்னர் குடும்பத்தில் ஒருவராய்ப் பாக்காமல் பேசத் திணறி தன் உதவியை நாடி நிற்கும் நண்பனாய்ப் பார்க்கும் Lionel Logue இதை நன்கு அறிந்தேயிருந்தார்…

தோற்றுத் தலைகுனியும் சொற்பொழிவில் தொடங்கி, வென்று கைகொடுக்கும் சொற்பொழிவு இடையேயான ‘The King’s Speech’ யின் பயணம், சிறந்த திரைப்படவிருது உட்பட நான்கு ஆஸ்கார் விருதுகளை வென்றது.

வரலாற்றைப் புரட்டி போட்ட ஒவ்வொரு நிகழ்வும் தாக்கமான சொற்பொழிவில் தொடங்கி சொற்பொழிவிலேயே முடிகின்றன. திறமையான அரசன் வாளை ஓங்கும் முன் முதலில் தன் நாவைத் தான் சுழற்றுகிறான்.

“நீங்களும் நானும் சேர்ந்தே தான் கஷ்டங்களையும் ஆபத்துகளையும் பகிர்ந்து கொண்டோம். அதற்கான வெகுமதிகளும் எல்லாருக்குமானது தான். முழு ஆசியாவும் தோற்கடிக்கப்பட்டதும், இலட்சியங்கள் நிறைவேறி விட்டது என்ற வெறும் திருப்தியைத் தாண்டி பணம், பதவி என்ற ஒவ்வொருவரின் ஆசையும் முற்றிலுமாய் தணிந்திருக்கும். யாரெல்லாம் நாடு திரும்ப நினைக்கிறீர்களோ தாராளமாகப் போகலாம் என்னுடனோ இல்லை நான் இல்லாமலோ… அப்படித் திரும்பிப் போகிறவர்கள் என்னோடு நிற்பவர்களைப் பார்த்துப் பொறாமைப்படும்படி நிச்சயம் பார்த்துக் கொள்வேன்….”

தொடர் போரினால் துவண்டு நிற்கும் தன் சேனையை நோக்கி இந்திய படையெடுப்பு முன் ‘Alexander’ உரையாற்றுகிறான்.

தேர்ந்த நாவின் சாட்டையடிக்கு செவிகள் எப்போதும் நிபந்தனையின்றித் தன்னை அர்ப்பணித்து விடுகின்றன…

விஜய ராவணன்-இந்தியா 

விஜய ராவணன்

 

(Visited 86 times, 1 visits today)