அன்றாடத்தின் அசாத்தியங்கள்-சினிமா தொடர்-பாகம் 04-விஜய ராவணன்

கிழக்கிற்கும் மேற்கிற்கும் ருசியற்று நகரும் அன்றாடப்பொழுதுகள் கண் இமைக்கும் நேரத்தில் தலைகீழாய் மாறிவிடும். ஒரு தொலைபேசி அழைப்போ… எதிர்பாராத சந்திப்போ… ஒரு சொல்லோ…. கலையாத கனவோ ஏதோவொன்று போதும் சாமன்யனின் சாதாரண நாளை திசைத்திருப்ப…. அப்படியிருக்க விடுமுறைப் பயணம் எத்தனை அசாத்தியங்களை உள்ளடக்கியதாக இருக்கும்?

பரிச்சயமற்ற நபர்… புதிர்த்தன்மை பேசும் கண்கள்…… கடல் அலைகளின் பொருள்விளங்கா மௌனம்…. விடுமுறை கொண்டாட்டத்தில் திடீர் சறுக்கல்…. சில நொடிகளில் எதிர்பாராமல் அடுத்தடுத்து என்னென்னவோ நடந்துவிட, மீளமுடியாத பாதாளத்தில் விழுந்து நொறுங்கும் உணர்வு தெறிப்புகளை மிகையின்றி காட்சிபடுத்துகிறது ‘The RETURN’ மற்றும் ‘ABOUT ELLY’

The Return (Russia, 2003)

விஜய ராவணன்

சகோதரர்கள் இருவருமே போட்டிபோட்டு தலைதெறிக்க ஓடுகின்றனர். யார் முதலில் ஓடிச்சென்று அம்மாவிடம் மற்றவரைப்பற்றி புறஞ்சொல்லப் போகிறார்கள் என்பது அண்ணன் தம்பி இருவரின் ஓட்டத்திற்கான காரணம். ஓடிவந்த வேகத்தில் இருவரும் ஒருவரையொருவர் சப்தம்போட்டு குறைசொல்லத் துவங்கியதுமே அமைதியாக இருக்கும்படி அம்மா செய்கை செய்கிறாள்.

“உள்ளே தூங்கிக் கொண்டிருக்கிறார்…”

“யார் ?” என்று இருவரும் விழிக்கின்றனர்.

“அப்பா !!…”

இருவரும் படபடப்போடு படுக்கையறையை எட்டிப் பார்க்கின்றனர். மேலுடல் மட்டும் தெரிய வெளிர்நீல போர்வை போர்த்தியபடி தலையை இடப்பக்கமாய்ச் சாய்த்து அப்பா உறங்கிக் கொண்டிருக்கிறார், ‘Andrea Mantegna’ வின் ‘இறந்த இயேசு கிறிஸ்து’ ஓவியத்தைப்போல். பன்னிரண்டு வருடங்கள் கழித்து அப்பா வீடு திரும்பியிருக்கும் அந்நாள் சகோதரர்கள் Andrey  மற்றும் Vanya வுக்கு எளிதாக கடக்க முடியாதவொன்றாய் மாறிவிடுகின்றது.

இத்தனை வருடம் எங்கே போயிருந்தார்?? என்ன வேலை செய்தார்? ஏன் திரும்பி வந்தார்? இந்தமுறை எவ்வளவு நாள்? அப்பா என்ற உறவு எப்படிப்பட்டது? எத்தனை எத்தனை கேள்விகள்… யாரிடமும் பதில் இல்லை… யாரும் அதை உரக்கக் கேட்கவும் இல்லை….

பலவருட இடைவெளியை ஒருசில நாட்களிலேயே நிறைத்துவிட நினைக்கும் ‘அப்பா’ என்ற உறவின் தோல்விகளும் வெற்றியும் நிறைந்ததுதான் ‘THE RETURN’.  ELENA, LEVIATHAN என்று பின்னாட்களில் ‘ANDREY ZVYANGINTSEV’ அடுக்கிப்போன வெற்றிகளின் தொடக்கப்புள்ளி ‘THE RETURN’ தான்.

எல்லாரும் உணவுமேசையில் காத்திருக்கின்றனர். இருண்ட அறையின்  கருப்பைக் கீறியபடி அப்பா வெளிப்படுகிறார். அந்தக் கருமைதான் அவரைச் சூழந்திருக்கும் மர்மமா? சிறுவர்கள் உட்பட எல்லார் கோப்பைகளிலும் அவராகவே ஒயினை நிரப்புகிறார். கிளாசை உயர்த்திக் காட்டிப் பருகச் சொல்கிறார். நாளை உங்களை சுற்றுலா கூட்டிப்போகப் போகிறேன் என்று மகன்களிடம் கூறுகிறார். எல்லாமே அதிரடிதான். அப்பா என்ற அரியணையில் ஏறி அமர அவர் அதிக நிமிடங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. அரியணை ஏறியதுமே அந்த உறவுக்கான கண்டிப்பும் மிரட்டலும் அதட்டலும் ஒழுங்கும் ஆளுமையும் ஒருசேர வந்துவிடுகிறது. அம்மா என்ற கனிந்த பெண்மையின் பன்னிரண்டு வருட கரிசனத்தை, புதிதாய் பொறுப்பேற்றுயிருக்கும் அப்பாவிடம் எதிர்ப்பார்க்க முடியுமா?? அப்படியென்றால் அவர் கெட்டவரா? நல்லவரா? இல்லை அப்பாக்கள் என்றாலே இப்படித்தானா?? நல்லவர்களா? கெட்டவர்களா?? இத்தனை வருடங்களாய்ப் பழகிப்போன அம்மாவின் ஸ்பரிசமில்லாத பயணம் எப்படி இருக்கப் போகிறது?

ஆள் இல்லா தீவிற்கு மகன்களுடனான மீன்பிடி பயணம்…. தனித்தீவு என்றபோதே அழகும் காரணமற்ற பதைபதைப்பும் ஒருசேர ஓங்கிவிடுகிறது. மரச்சட்டமிடப்பட்ட எண்ணெய் ஓவியத்தைப் போல் ‘ANDREY ZVYANGINTSEV’ வின் காமெரா கண்களில் காட்டப்படும் இயற்கையின் தனிமையும் மௌனமும் சிறுவர்களின் உணர்ச்சி வெடிப்புகளை இன்னும் நுணுக்கமாய்ச் சித்தரித்து விடுகின்றது.

அண்ணன் ‘Andrey’ வுக்கு அப்பாவின் ஒவ்வொரு அசைவும் உவப்பளிக்கிறது. அவரது நடை….. ஆகிருதி… பேசும்விதம்… பணம்நிரம்பிய பர்ஸ்…. புது புது விஷயங்களை நிகழ்த்திக்காட்டும் நுணுக்கம்… நேர்த்தியாக சவரம்செய்த முகம்… அப்பாவுடனான ஒவ்வொரு நிமிடங்களையும் உள்வாங்குகிறான்… ஆச்சரியத்துடன் ரசித்து தனக்குள் ரசிக்கிறான்.

ஆனால் ‘Vanya’ வுக்கு இந்த திடீர் உறவுத் திணிப்பு ஜீரணிக்கவில்லை…. அவர் எடுத்துக் கொள்ளும் உரிமை… இரக்கம் காட்டாத கண்டிப்பு…. எரிச்சல் தருகிறது.

“எதுவும் சொல்லணுமா ?”

“இல்ல…”

“இல்ல அப்பா என்று சொல்…” என்று கார் நடுக்கண்ணாடியில் இறுக்கமாய் அமர்ந்திருக்கும் ‘Vanya’ வை உற்றுப் பார்க்கிறார். இயல்பாய் தவழ்ந்து வரவேண்டிய வார்த்தை பற்களின் அழுத்தத்தில் நசுக்கப்படுகிறது

யார் இவர்? எதற்கு வந்தார்? வராமல் அப்படியே இருந்திருக்க வேண்டியதுதானே…. மனதுக்குள் பொருமிக் கொள்கிறான். சில சந்தர்ப்பங்களில் முகத்துக்கெதிராய் தன் கோபத்தை வெறுப்பாய் உமிழ்கிறான்.

“நாம் இன்னொரு நாள் நீர்வீழ்ச்சிக்குப் போகலாம்…” என்று அப்பா சொல்லும்போது,

“அதுக்காக நாங்கள் இன்னொரு பன்னிரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டுமா ?” என்று உரக்கக் கேட்கிறான். அப்பா என்ற கதாபாத்திரத்திற்குத் தன் நாடகத்தில் அத்தனை எளிதில் அவன் வாய்ப்பளிக்க விரும்பவில்லை.

பல வருடங்கள் கழித்து திரும்பியிருக்கும் அப்பாவிற்கும் மகன்களுக்கும் இடையேயான மனவோட்டத்தையும் விருப்பு வெறுப்புகளை மட்டுமே பேசி ‘Drama’ என்ற ஒற்றை ‘genre’ க்குள் மட்டும் இப்படத்தை ANDREY ZVYANGINTSEV அடைக்க விரும்பவில்லை. காட்சிகளின் பின்னணியில் மனதை உறுத்தும் எதுவென்று தெரியாத ஆனால் தெரிந்து கொள்ள விழையும் மர்மத்தை நாம் அறியாத உருவில் கூடவே பயணிக்க வைக்கிறார்.

தனியாக யாருக்கோ போன் பேசுவதும் முடிவுகளை மாற்றுவதும் எதையோ தேடுவதுமாய் மாயமுடிச்சிட்ட புதிர்கள் நிறைந்த அப்பா பாத்திரம், கோபப்படும் மகனை தூரநின்று ரசிக்கவும் செய்கிறது. மனைவி தனியொருவளாய் வளர்த்து ஆளாக்கியதன் பெண்மையின் சாயல் மகன்களிடம் நிறையவே மிச்சம் இருக்கின்றன. அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆண்மைக்கு இன்றியமையாத பொறுப்பையும் தைரியத்தையும் உடல் உழைப்பையும் கற்பிக்க வேண்டும். அதுவும் குறுகிய காலத்தில்… அதற்காகத்தான் கரடுமுரடாக நடந்துகொள்கிறாரா….? இல்லை அப்படி நடந்துகொள்வதாய்த் தோன்றுகிறதா??

மீண்டும் அதே கேள்வி… நல்லவரா? கெட்டவரா? அப்பா என்ற வார்த்தையை இவ்விரண்டுக்குள் பொருத்திப்பார்க்க முடியுமா? அந்தத் தனித்தத் தீவின் கருநீல கடற்கரையில் காத்திருக்கும் படகைப் போல் ‘அப்பா’ என்ற வார்த்தையும் தன்னைப் பாசமாய் சுமக்கப்போகும் நாவிற்காகக் காத்திருக்கிறது…

விஜய ராவணன்

உயரமான டவுரின் மீது ‘Vanya’ நிற்கிறான். அவனைத் தவிர அண்ணன் ‘Andrey’ உட்பட மற்ற சிறுவர்கள் டவரின் மேலிருந்து ஏரிக்குள் குதித்து ஈரம்சொட்ட குளித்து முடித்து வெளியேறி நிற்கின்றனர். குனிந்து பார்க்கும் ‘Vanya’ வின் கால்கள் நடுங்குகின்றன. கண்களை மூடிக்கொள்கிறான். அவனும் குதித்தாக வேண்டும் இல்லையென்றால் எல்லாரும் கிண்டல் செய்வார்கள்…

“சரி குதிக்க வேண்டாம்… ஏணில இறங்கு…”

‘Vanya’ மறுத்துவிடுகிறான். அது அவமானம். ஆனால் குதிக்கவும் தைரியமில்லை. பயத்தில் உடைந்து அழுகிறான். அண்ணன் உட்பட கீழே யாரும் இவனுக்காக காத்திருக்கவில்லை. வானம் ஏரியின் நிறத்தில் இருண்டுவிட்டது. இவன் மட்டும் தனியாக… கருவெளியில் அழுது கொண்டிருக்கும் ஒளிமங்கிய குண்டுபல்பைப் போல்…. சப்தம் கேட்கிறது… அம்மா மேலேறி வருகிறாள். குளிரிலும் தோல்வியின் அச்சத்திலும் துவண்டு அழும் மகனின் மீது துண்டைச் சுற்றி அணைத்துக்கொள்கிறாள்.

“வா கீழ போகலாம்…”

“இல்ல மாட்டேன்… எனக்குக் குதிக்கணும்…”

“இன்னொரு நாள் குதிக்கலாம்… இப்போ ஏணி வழியா இறங்குவோம்…”

“எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க…”

“நான்மட்டும் தானே இருக்கேன்…. யாருக்கும் தெரியாது…”

“உனக்குத் தெரியுமே…”

அம்மாவும் மகனுடன் உடைந்து அழுகிறாள்…

இப்படத்தின் தொடக்கக் காட்சி இது.

ஒரு சிறுவனின் தயக்கத்தை, பயத்தை, தோற்று அழும் மகனை அள்ளிக்கொள்ளும் தாய்மையை இத்தனை நுட்பமாய் ANDREY ZVYANGINTSEV ஏன் காட்ட வேண்டும்? ஒவ்வொரு காட்சிக்கும் அதனதன் அழுத்தமான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன…

ஆனால் துயரமான விடயம், திரைப்படம் வெளிவந்த சில தினங்களில் நண்பர்களின் வற்புறுத்தலில் ‘Andrey ‘ என்ற அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘Vladimir Garin’ அதே டவரிலிருந்து எரிக்குள் குதித்து இறந்து விடுகிறான். புனைவுக்கும் நிஜத்திற்குமான இடைவெளியை விளையாட்டாய்த் தாண்டமுயன்று மறைந்துபோன Vladimir Garin, ‘Andrey ‘வாக இன்னமும் தன் தம்பியோடு போட்டிபோட்டு ஓடிக்கொண்டிருக்கிறான்…

000000000000000000

About Elly (Iran, 2009)

விஜய ராவணன்

சந்தர்ப்ப சூழ்நிலைகள் அதன்போக்கில் நம்மை எப்படியெல்லாம் நிறமாற்றி விடுகிறது. மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் சிரிக்கிறோம் குதூகலிக்கிறோம் ஒருவர் மீது ஒருவர் இயல்பிலேயே மிகவும் அக்கறை உள்ளவர்களாய்க் காட்டிக் கொள்கிறோம்… எல்லோரது கருத்துக்களையும் வரவேற்கிறோம் பாராட்டுகிறோம்…. அதுவே சூழல் எதிர்மறையாய் மாறும் தருணங்களில்….? வெறுப்பும் ஆற்றாமையும் கோபமும் இகழ்ச்சியும் புறந்தள்ளும் உணர்வு மட்டும்தான், சுண்டக்காய்ச்சியப் பாத்திரத்தின் கறையாய் மனதின் ஆழத்தில் தங்கி விடுகிறது. ஒருவிதத்தில் நாம் எல்லாருமே சூழ்நிலையை பிரதிபலிக்கும் கண்ணாடிதான். அதைத் தாண்டி வேறேதுவும் இல்லை…

‘ABOUT ELLY’ நெருக்கடியானத் தருணங்களில் தடம்புரளும் மனிதனின் போலித்தன்மைகளைத் தோலுறித்துக் காட்டும் படம். மிகவும் நிதானமானவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் பாகுபாடின்றி அன்பைப் பொழிபவர்களாகவும் நாம் போடும் வேஷங்களைக் கலைத்து ‘உண்மையில் நீ இதுதான்… உனக்குள் மண்டிக்கிடப்பவை எல்லாம் வெறும் பொய்களும் அச்சமும் கோபங்களும் மட்டுமே…’ என உண்மையை நம் முகத்தெதிரே உமிழ்ந்து ஓங்கி அறைகிறது.

‘Tehran’ லிருந்து, கணவன் மனைவி குழந்தைகளோடு மிகப்பரிச்சயமான மூன்று குடும்பங்களும் அவர்களோடு மேலும் இரு நண்பர்களும் மூன்று நாட்கள் சுற்றுலாவாக கடற்கரை ஊருக்கு வருகின்றனர். இவர்கள், ஈரானிய படங்களில் பொதுவாக சித்தரிக்கப்படும் மத்திய வர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. BMW காரில் வந்திறங்கும் மேல்தட்டு ஈரானியர்கள்… இறுக்கமான மதக்கட்டுப்பாடுகள் கொண்டவர்களும் கிடையாது, ஹிஜாபைத் தவிர.

மனைவிமார்கள் கணவர்களை கிண்டல் செய்கிறார்கள். ஆண்களும் அதை ரசித்து சிரிக்கிறார்கள். கிழக்கத்திய இசை ஒலிக்கிறது. உரக்கக் கத்தியபடி அதிவேகத்தில் காரை ஓட்டுகிறார்கள். சந்தோஷமும் கேலிப்பேச்சுக்களும் அங்கு இரு பாலருக்கும் பொதுவானதாகவே நிறைந்து இருக்கிறது.

‘Elly’ மட்டும் தயக்கத்துடனே சிரிக்கிறாள். மற்றவர்களின் கேளிக்கையிலிருந்து சற்று விலகியே இருக்கிறாள். அக்கூட்டத்தில் அவளுக்கு ‘Sepideh’  தவிர வேறு யாரும் பழக்கமில்லை. அவள்தான் ‘Elly’ யை வற்புறுத்தி கூட்டிவந்திருக்கிறாள். சமீபத்தில் திருமணமுறிவு ஏற்பட்டு ஜெர்மனியிலிருந்து திரும்பியிருக்கும் குடும்ப நண்பன் ‘Ahmad’ க்கு பொருத்தமானவளாய் ‘Elly’ இருப்பாள் என்று நினைக்கிறாள். இருவரும் அறிமுகமாகிக் கொள்வதற்காகவே தங்களுடன் சுற்றுலாவுக்கு அழைத்து வந்திருக்கிறாள். யாருக்கும் இதில் எந்த எதிர்ப்புமில்லை. மாறாக ‘Ahmad’வுடன் சேர்த்து அவ்வப்போது விளையாட்டாய் ‘Elly’ யை கேலி செய்கினறனர். Elly யும் மெலிதான புன்முறுவலோடு அதை கடந்து போகிறாள். கோபப்படவுமில்லை… எரிச்சலடையவுமில்லை. ஆனால் அவளது சிந்தனையெல்லாம் வேறெங்கோ இருக்கிறது. விடையற்ற விடுகதையைப் போல் ஒருவித புதிர்த்தன்மையோடு Elly மட்டும் ஏனோ தனித்திருக்கிறாள்…

சுற்றுலா ஏற்பாடுகளையும் அக்குழுவின் பொதுவான முடிவுகளையும் எடுப்பது ‘Sepideh’ தான். இதில் அவள் கணவன் உட்பட யாருக்கும் எந்த மனஉறுத்தல் இல்லை. முடிவெடுக்கும் உரிமையை கணவன்மார்கள் மனைவியிடம் தாராளமாய் விட்டிருந்தனர். பெண் என்ற ரீதியில் மனைவியின் முடிவுகள் தர்க்கமாக்கப் படவில்லை.

திட்டமிட்டிருந்த விடுதி கிடைக்கவில்லை. கடற்கரையொட்டிய பராமரிப்பற்ற வீடு அவர்களுக்காக ஒதுக்கப்படுகிறது. அவ்வீட்டின் புழுதிப் படிந்த, ஜன்னல் கண்ணாடி உடைந்த, தாழ்ப்பாளற்ற கதவு எதுவும் முகம் சுளிக்க வைக்கவில்லை. மாறாக அதைக் காரணம் காட்டி ஒருவரையொருவர் கிண்டல் செய்கின்றனர். சப்தமாய்ச் சிரிக்கின்றனர். ஆடிப் பாடுகின்றனர். கீறிய ஜன்னல் கண்ணாடி வழியே சில அடிதூரத்தில் தெரியும் ‘Caspian’ கடல் அவர்களை மௌனமாய் வேடிக்கைப் பார்த்தபடி இருக்கிறது. ஆளரவமற்ற கடற்கரையில் அழகான கண்ணாடி மாளிகையாய் சிரிப்பு எல்லோர் முகத்திலும் நிறைந்து இருக்கிறது. மினுங்கும் அதன் பல வண்ணங்களை நாம் ரசித்து கொண்டிருக்கும் போதே நம் கண் முன்னே சில்லுசில்லாய் உடைந்து நொறுங்குகிறது.

‘ASGHAR FARHADI’ பொதுவாக கையாளும் யுக்திதான். சரளமான கதையோட்டத்தில் திடீரென்று முழுதாய் விளக்கப்படாத ஒரு நிகழ்வு…. அதைத் தொடர்ந்து திசைமாறும் கதைப்போக்கு… எதிர்பாரா திருப்பங்கள்…. அடுத்தடுத்து அவிழும் முடிச்சுகள்… வேஷம் கலைக்கும் கதாபாத்திரங்கள்…

சுயநலம் அப்பழுக்கின்றி வெளிவருகிறது. நாக்கு முழு விடுதலையோடு சுழல்கிறது. குற்றஉணர்வு உள்ளிருந்து அரிக்கத் தொடங்கியதுமே ஆட்காட்டி விரல் மற்றவரை காரணம் காட்டுகின்றன. யாருக்கும் தவறை ஒத்துக்கொள்ளும் தைரியமில்லை. குழந்தைகளைத் தவிர எல்லோர் நாவும் இயல்பாய் பொய்பேசுகிறது. திடீரென்று பெண்களின் சுதந்திரம் திரும்பப் பெறப்படுகிறது. கணவன் மனைவியை அடிக்கிறான். பெண்கள் உரக்கக்கத்தி சண்டையிடுகின்றனர். நண்பர்கள் என்ற வட்டம், தன் குடும்பம் என்று சுருங்கி இறுதியில் தான் மட்டும் என்ற ஒற்றை புள்ளியில் வந்து நிற்கிறது. உண்மையில் மனிதனிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

ஆஸ்கார் விருது பெற்ற A SEPERATION, THE SALESMAN போன்ற இவரின் பிற படைப்புகளைக் காட்டிலும் ‘ABOUT ELLY’ யில் மனித முகங்களின் அக உணர்வுகள் முழுதாய் வெளிப்படும் வரை ‘ASGHAR FARHADI’ ஆழமாய் குடைந்து கொண்டே போகிறார். ஈரானியத் திரைப்படங்களுக்கே உரிய எளிமைத்தன்மை… நிதர்சனங்களின் இலை மறைவுக்குப் பின்னால் அடுத்தது என்ன? என்ற கேள்விகளுடன் நகரும் ஒருவித மர்மமான திரைக்கதைப் பாங்கு…  நிச்சயம் ‘‘ASGHAR FARHADI’ போன்ற சிலரால் மட்டுமே இது இயல்பாய் சாத்தியப்படும். ஈரான் மண்ணின் கலாச்சாரம், வாழ்க்கைமுறையை பிரதிபலிக்கும் இயக்குனராய் மட்டுமே தன்னைச் சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை. மாறாக, முட்டுச்சந்தில் மோதிநிற்கும் மனிதனின் எண்ணவோட்டம், சூழ்நிலை தரும் மனஅழுத்தம், சமுதாயத்தில் ஆண்பெண் உறவுநிலை, பெண்ணிற்கான வரைவுகோடு, சராசரி மனிதனின் பொருளாதார நெருக்கடி என உலகம் முழுமைக்குமானதொரு படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விழையும் ‘ASGHAR FARHADI’ கண்டிப்பாக உலக சினிமாப் பலகையில் அழிக்கமுடியாத பெயர்தான்.

கடற்கரை மணலில் புதைந்திருக்கும் காரை இறுதியில் எல்லாரும் சேர்ந்து தள்ளுகிறபோது முன்பிருந்த சிரிப்பு அங்கில்லை… கேலிப்பேச்சில்லை… மகிழ்ச்சிக்கான ஒரு கூறும் இல்லை…. ஆழமான குற்ற உணர்வும் உறவு முறிவுகளின் ஊமை உறுத்தல் மட்டுமே உப்புக்காற்றோடு கலந்திருக்கிறது…

விஜய ராவணன்-இந்தியா                                                                       

விஜய ராவணன்

(Visited 84 times, 1 visits today)