மணல் வீடு-சிறுகதை- விஜய ராவணன்

விஜய ராவணன்வீடுபார்க்க முன்வாசல், பின்வாசலோடு நேர்த்தியாக இருந்தது. மூன்று பெரிய அறைகள். காற்றோட்டம் உள்ள ஜன்னல்கள். வீட்டுவாசலில் நாய்க்குப் பதிலாக பழைய காலத்தைப் போல  விருந்தாளிகளை உபசரிக்கத் திண்ணை.

வீட்டைச் சுற்றிலும் பெரியதடுப்புச் சுவர். வீட்டுக்கூரை, கோபுரம்போல் கம்பீரமாக உயர்ந்து இருந்தது .இத்தனை பெரிய வீட்டுக்குச் சொந்தக்காரனான நான் வெளியே நின்றபடி வீட்டின் அழகை ரசித்துக்கொண்டு இருக்க, எங்கிருந்தோ வந்த அலை வீட்டுத் தடுப்புச் சுவரை உடைத்துத் தள்ளி,வீட்டின் உள்ளேயும் புகுந்து சமையல் அறையையும், படுக்கை அறையையும் நீருக்கு இரையாக்கியது. கோபுரமும் கரைந்தது. கடல்நீரில் வீட்டை இழந்த நான் அம்மாவின் மடியில் விழுந்து அழ, “மண்வீடுதானடா, விடு! நாளைக்கு வேற கட்டிக்கலாம்.” என்று கடற்கரையில் அழுதுகொண்டிருந்த, ஆறுவயதே ஆன என்னை அம்மா கூட்டிக்கொண்டு நடந்த காட்சியை, இன்று தாடியைத் தடவியபடியே அதே கடற்கரையில் இருந்து, மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தேன்…

இருபத்தைந்து வருடங்கள் கழித்தும் அந்தப் பழைய நினைவு இந்தக் கடலைப் போல இன்றும் என் மனதில் பசுமையாய்ப் புதைந்திருந்தது. நான் ஆறு வயதில் சந்தித்தக் கடல், அன்று இருந்த அதே அமைதியோடு இன்றும் கரையோடு மௌன பாஷை பேசிக்கொண்டு இருந்து. கரையில் இருக்கும் என்னை அடையாளம் கண்டு கொண்டதைப் போல், கடல் அலைகள் கரைக்கு வந்து என் சிறு வயது நிகழ்வுகளைச் சொல்லிக் கேலி செய்துவிட்டு மீண்டும் கடலுக்குள் ஒளிந்துக்கொண்டன. என்னோடு கண்ணாம்பூச்சி ஆடும் இந்த கடல் அலைகளோடு  நானும் சிறுவனாய் ஈரமண்ணில் கால் பதித்து அதைத் தொட்டுப் பிடிக்காமல், கரையில் அமர்நபடி கடல் பேசும் மௌன பாஷையை கேட்டுக் கொண்டிருந்தேன்..சிறு வயதில் எனக்குப் பிடித்திருந்த அலையின் சத்தத்தை விட , இன்று  ஏனோ கடலின் அமைதியே பிடித்திருக்கிறது.

சிறுவயதில் கண்ட கனவு, நாளை நினைவாகப் போகும் மகிழ்ச்சியில் கையில் வைத்திருந்த சில காகிதங்களுடன் கடலை ஆணவத்தோடு பார்த்தபடி அமர்ந்திருந்தேன். சென்னைக்கு மிக அருகாமையில் என்று சொல்லப்படும் செங்கல்பட்டு ரயில்நிலையத்தின் அருகில், புதிதாய் வாங்கப் போகும் ஐம்பதுலட்சம் ரூபாய்க்கான  வீட்டுமனையின் வங்கிக் கடன் பத்திரங்கள்தான் அவை.. என் கையில் இருக்கும் இந்த பத்திரங்கள் தான்,என் ஆணவப் பார்வைக்கான காரணம். சம்பளத்திற்கு மிஞ்சிய ஆசைதான். “கடலின் முழு நீளத்துக்கும், தான் நீந்தி விட வேண்டும்”, என்று நினைக்கும் சிறு மீனின் பேராசையைப் போன்றது தான். இருந்தாலும், பிறருக்காக வாழும் ஆடம்பர வாழ்க்கையில் நான்மட்டும் பின்தங்கி விட விரும்பவில்லை.

கோடிட்ட இடங்களில் இன்னும் சில கையெழுத்துக்கள் தான் பாக்கி, நாளை முதல் நானும் ஒரு வீட்டின் சொந்தக்காரன். கரையில் கட்டப்பட்ட எத்தனை மணல் வீடுகளை இந்த கடல் சுவடு தெரியாமல் அழித்திருக்கிறது. ஆனால் இந்தமுறை கடலால் கூட, நான் கட்டப்போகும் வீட்டை ஒன்றும் செய்யமுடியாது என்ற போதிலும் மகிழ்ச்சியை விட மனதில் ஒருவித தயக்கமும், அச்சமுமே அதிகமாய் இருந்தது. எப்பொழுதும் கடலில் இறங்கி அலையின் தீண்டலை அனுபவிக்கும் நான், இன்று கை கொடுத்து வாழ்த்த வந்த கடல் அலையைக் கூட விரும்பாதவன் போல் காலில் காலணிகளோடு கடல்நீர் படாதவாறு விலகியே இருந்தேன். காரணம், கையில் இருந்த புதிய மனையின் வங்கிக் கடன்  பத்திரங்கள். கடலிடம் அடிமைப்பட்டிருக்கும் கப்பல்கள் போல, வங்கி தரும் கடனுக்கு அடுத்த இருபத்தைந்து வருடங்கள் நான் அடிமையாகப் போகும் கவலை. என் கையளவு சம்பளத்தில் வங்கிக் கடனை அடைத்து ஏனைய செலவும் போகக் கடலளவு சேமிப்பும் செய்து சந்தோஷமாய் வாழ்ந்து விடலாம் என்ற என் எண்ணத்தைப் பார்த்துக் கடலும் மௌனமாய்ச் சிரித்தது.

வருங்காலத்திற்காக நிகழ்காலத்தை இழந்து விடுவோமோ என்ற பயத்தோடு சிந்தனையில் மூழ்கி இருந்த என்னை ஒரு சிறுவனின் குரல் தட்டி எழுப்பியது. சில பட்டன்கள் காணாமல் போயிருப்பதை பொருட்படுத்தாத சட்டையுடன், கறுப்பு நிற டிரௌசரோடு இருந்த அவன், ”அண்ணா! வேர்க்கடலை வாங்குங்கண்ணா!“ என்றான்.

அவனைப் பார்த்ததும் ,’இந்தக் கடலைப்பொட்டலம் விற்று வாழ்க்கை நடத்தும் இவன், எப்போது சொந்தமாக வீடு வாங்கிச் சந்தோஷமாய் இருக்கப் போகிறான்? இவன் வாழ்நாள் முழுவதும் இந்த கடற்கரையைத்  தான், தன் சொந்த வீடாகவும் , தொழில் செய்யும் இடமாகவும் நினைத்து இருந்து விடுவானா? இல்லை சிரிப்பும் சந்தோஷசமும் இவன் வாழ்வில் தடை செய்யப்பட்ட ஒன்றா?’, என்று என் மனது, என்னுடைய சிந்தனைகளுக்கு அவன் உருவம் கொடுத்து யோசித்துக்கொண்டிருந்தது.

“அண்ணா! ஒருபொட்டலம் ஆறு ரூபா தான்ணா, வாங்கிக்கோண்ணா” என்று சொல்லி என் முகத்துக்கு எதிரே அவன் கடலைப்பொட்டலத்தை நீட்டவும், பணத்தின் பின்னலில் சிக்கி இருந்த என் நினைவு மீண்டும் நிஜ உலகிற்குத்  திரும்பி வந்தது.. நாளை லட்சாதிபதியாய் ஆகப் போகும் நான் ஆறு ரூபாய்க்கு கடலை சாப்பிட்டால் என்ன என்று , சட்டைப் பையில் துழாவி எடுத்து ஆறு ரூபாயை அவனிடம் நீட்டினேன்.  அதை வாங்கிக் கொண்ட அவன் மீண்டும் என்னிடம்,

“அண்ணா! கடைசி ரெண்டு பொட்டலம் தான்ணா பாக்கி இருக்கு. பத்துரூபா கொடு, போதும்ணா, ரெண்டா வாங்கிக்கோ!”என்று அவன் சொல்லவும், இரண்டு பொட்டலங்கள் வாங்குவது என நான் பத்து ரூபாய் கொடுக்க, இவ்வளவு நேரம் நான் தேடிக்கொண்டிருந்த சந்தோஷம் மொத்தமாய் அவன் முகத்தில் தெரிந்தது. நான் கொடுத்த பத்து ரூபாய் தாள் அவனை ஒரே நிமிடத்தில், பத்து வீட்டுக்கு சொந்தக்காரனாக்கி விட்டதோ என்று ஆச்சரியம் படும் அளவு  அவன் முகத்தில் சந்தோஷம். அவன் முகத்தில் காணாமல் போயிருந்த சிரிப்பை இந்த பத்து ரூபாய் கண்டுபிடித்து உரிய இடத்தில் சேர்த்து விட்டது போலும்..

என்னிடம் கடைசி இரண்டு பொட்டலங்களையும் விற்றுவிட்டு, கிடைத்த பத்து ரூபாயுடன், இப்பொழுது கையில் எந்தவித பாரமும் இல்லாமல் “தாங்ஸ்ணா” என்றபடியே கடலை நோக்கி அந்தச் சிறுவன் ஓடி மறைந்தான். ஆனால் நானோ கரையில் இன்னும் நாளையைப் பற்றிய கவலையிலேயே மூழ்கி இருந்தேன். இத்தனை நேரமும் என் சட்டைப் பையில் இருந்த அந்த பத்து ரூபாய்க்கு திடிரென்று எப்படி இந்த அளவு சக்தி வந்தது? வீடு வாசல் எதுவும் இல்லாத அந்தச் சிறுவனால் எப்படி சந்தோஷமாய்ச் சிரிக்க முடிகிறது ? இதைப் போன்ற பல ரூபாய் தாள்கள் என் சட்டைப் பையில் இருந்தும், என்னால் ஏன் கவலை இல்லாமல் வாழ முடியவில்லை ? “ என்று என் மனதிடம் பல கேள்விகளைக் கேட்டு விட்டு  மறைந்திருந்தான் அந்த சிறுவன்.

சந்தோஷம் என்பது பத்து ரூபாய்ப் பொட்டலத்திலும் பல  லட்சரூபாய் வீட்டிலும் ஒரே அளவில் தான் நம் கண் முன்னே இருக்கிறது. நாம் தான் அதைக் கண் திறந்து பார்ப்பதில்லை. பத்து ரூபாய்ப் பொட்டலம், அந்த சிறுவனுக்கு அளித்த சந்தோஷத்தைப் பல லட்சரூபாய் வீடு எனக்குஅளிக்காத உண்மையை அவன் உணர்த்தினான். பல லட்சம் கடன் வாங்கி வங்கியில் வீட்டுப்பத்திரம் வைத்திருப்பவனை விடச் சட்டைப் பையில் பத்து ரூபாய் வைத்திருப்பவனே மகிழ்ச்சியுடன் இருக்கிறான் என்பதை என் கையில் இருக்கும் அவன் விற்ற கடலைப் பொட்டலம் சொல்லாமல் சொல்லியது.

இப்போது தெளிந்த சிந்தனையோடு கரையில் அமர்ந்திருக்கும் என்னைப் பார்த்து, கடல் அலைகள் சிரித்தபடியே “வா வா” என்று தன்னோடு விளையாட மீண்டும் ஒரு முறை அழைப்பு விடுக்க, காகிதங்களாய் இருந்த போதிலும் சுமை அதிகமாய் இருந்த வங்கிக் கடன் பத்திரங்களைக் காற்றிலே பறக்கவிட்டேன். அவைகளுடன் என்னுள் மறைந்திருந்த இன்றைய பயமும், நாளைய கவலையும் காற்றோடு காற்றாய்க் கலந்தது.

இரையின் பாரம் தாங்காமல் பறக்கத் திணறும் பருந்தை விட, சுதந்திரமான காக்கையின் வாழ்வே சிறந்தது எனக் காலணிகளைக் கழற்றி, பேண்ட்டை உயர்த்திய படியே கடலை நோக்கி ஓடினேன் .

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் என்னுள் இருந்த சிறுவன் மீண்டும் பிறந்து வந்தான், கடற்கரையில் மணல்வீடு கட்டி மகிழ.

விஜயராவணன்-இந்தியா

விஜயராவணன்

(Visited 316 times, 1 visits today)
 

2 thoughts on “மணல் வீடு-சிறுகதை- விஜய ராவணன்”

Comments are closed.