சினிமா விமர்சனம்-காலமற்ற பெருவெளி-பாகம் 08- விஜய ராவணன்

காலச் சக்கரத்தினடியில் நைந்து புதைந்த கரையான் அரித்த வாழ்க்கைப் பக்கங்களைத் திருத்தி எழுத முடிந்தால், அப்பயணம் எப்படிப்பட்டதாய் இருக்கும்? அப்பயணத்தின் சாத்திய கூறுகள் தான் எத்தனை எத்தனை!! தேங்கிப்போன வழமையில் சிக்குண்ட கால்கள் ஒரு வேட்டை நாயைப்போல் வேகம் கொண்டு ஓட அந்தக் காலமற்ற பெருவெளியில் திக்குத்திசைகள் ஏராளம்.

‘La. Jetee’ (French, 1962)

விஜய ராவணன்

நிழற்படத்தின் சட்டகத்துக்குள் சிறைபட்டு வெறிக்கும் முகத்தை உற்றுப் பார்ப்பவனுக்கு, தன் பிம்பம் பேசும் உண்மைகள் எளிதில் கடக்க முடியாததாகவே இருக்கிறது. தன் இயலாமையை உரக்கப் பேசி உணர்த்த நிழற்பட உருவிற்கு வார்த்தைகள் தேவைப்படுவதில்லை தான் இருந்தும் நிஜத்தின் வலிகளைத் தனக்குக் கிடைத்த சிலநொடி வெளிச்சத்தில் இயல்பாய்க் காட்டிவிடுகிறது.

புகைப்படங்கள் பிரித்துப் போட்டுக் காட்டும் தன் முகம் அவன் விரும்பும் ஒன்றாக எப்போதும் இருப்பதில்லை. தன் புகைப்படத்தின் நீள்சதுரப் பரப்பில் சிரிக்கும் உருவம் ஒருவேளை தன் கற்பனையாகவோ… இல்லை தன்னைப் பற்றி தன்னைவிட நன்கறிந்த ஒருவனின் மாயப்புன்னகையாகவோ இருக்கலாம்.

ஒவ்வொரு உருவும் தன்னளவில் சுமக்கும் நினைவுகளை, மறதியின் புழுதி படியாமல் ஏதோவொரு ஒளிமங்கா புகைப்படமாகத் தான் காலத்தின் சுவரில் அறைந்து வைத்திருக்கின்றன. விதி வாய்ப்பு தரும் போதெல்லாம், புழுதிபடிந்த கரங்கள் அப்புகைப்படங்களைத் தேடித் துடைத்துப்பார்த்து கண்ணீர் விடவே எத்தனிக்கிறது. அதில் தான் எத்தனை எத்தனை நிம்மதி! ஆனால் அவை எதுவும் பலவண்ணப் புகைப்படங்கள் அல்ல!  அனைத்துமே, நினைவுகளும் ஆசைகளும் ஒரு புனைவைப்போல் இரண்டறக் கலந்திருக்கும் கறுப்புவெள்ளைப் புகைப்படங்கள்!

நாட்களின் வேகச்சுழற்சியில் அந்தக் கறுப்பின் நிறம் மங்க மங்க காலத்தின் சாம்பல் நிறத்தை அது அடையும் தருணத்தில் அப்புகைப்படம் தனக்கு மேலும் நெருக்கமானதாக ஒருவன் உணருகிறான். அதை நோக்கியே பயணப்படுகிறான், எதையும் கடக்கத் துணிந்தவனாய்… காலத்தையும்!

“ஒருவனது மறக்க முடியாத நினைவுகள் ஏனைய காட்சிகளில் இருந்து ஒரேவிதத்தில் மட்டும்தான் வேறுபடுகிறது, அவை காலப்போக்கில் மனதில் ஏற்படுத்தும் காயத்தினால்…. “ என்று தொடங்கும் ‘La.Jetee’, இருவேறுபட்ட காலங்களின் வெவ்வேறு புள்ளிகளின் நடுவே நினைவுகளைப் பற்றியபடியே ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது, முன்னும் பின்னுமாய்… பின்னும் முன்னுமாய்… வெறும் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்களாக!!

காலப்பயணத்தை நோக்கிய மனிதனின் தேடல் காலத்தைப் போலவே முற்றுப்பெறாத ஒன்று. மீளமுடியாத காலச்சுழலுக்குள் சிக்கிக் கொள்ளும் மானிட முயற்சிகளைக் கருவாகக் கொண்ட எண்ணற்ற படைப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன… அதன் தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது… திக்கற்ற காலப்பெருவெளிக்குள் தொலைந்து போவதில் இயல்பிலேயே பார்வையாளனுக்கும் விருப்பம் அதிகம்.

நவீன தொழில்நுட்பத்தின் துணையோடு களமிறங்கும் எத்தனையோ பிரம்மாண்ட அறிவியல் புனைவுப் படங்கள் இன்றளவும் கடக்கமுடியாத தூரத்தை, ‘La.Jetee’ வெறும் Still photography யை பயன்படுத்தி எளிதாகத் தாண்டிவிடுகிறது.

இயக்குனர் ‘Chris Marker’ யின் வெறும் இருபத்தைந்து நிமிட இக்குறும்படம் ஒரு நேர்த்தியான புகைப்படக் கண்காட்சி! ஆதியும் அந்தமுமற்ற காலப்பரப்பின் மாய யதார்த்தத்தை நிழற்படங்களின் மௌன உதடுகள் அழுத்தமாய் முணுமுணுத்தபடியே இருக்கின்றன. வாய்மொழி தேவையற்ற அப்புகைப்படங்கள் சித்தரிக்கும் அகக்குமுறல்கள் ஆழமானவை! நேர்மையானவை! அதன் கறுப்பு வெள்ளை அழகியலின் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது மானிட மூர்க்கமும் அதன் எதிர்விளைவுகளும்.

விஜய ராவணன்நித்தம் நம் விழித்திரையில் விழுந்து மறையும் முகங்கள் அத்தனையும் என்றைக்குமாக நம்முடனே பயணிப்பதில்லை. நாம் அறிந்திடாத நொடியில் வெறும் நினைவுகளின் கிறுக்கல்களாய் அவை உருக்குலைந்து விடும். ஆனால் சில முகங்கள் நித்தியமானவை. காலத்தின் அழித்தொழிப்புக்கும் அப்பாற்பட்டவை… ‘La.Jetee’ கதாநாயகன் தன் சிறுவயதில் கண்ட அந்தப் பெண்ணின் முகம்போல்…

அவன் நிலம் அழிந்த பின்னும் அம்முகம் தான் அவனது இருப்புக்கான ஆதாரம். அவனை விரட்டும் வாழ்நாள் சாபம்! அழியா நினைவுகளில் தேங்கிக்கிடக்கும் அந்தப் பரிச்சயமற்ற முகமே, காலத்தின் வரையறுக்கப்படா எல்லை கடந்த அவனது பயணத்துக்கான கலங்கரை விளக்கம்.

உலகின் அத்தனை முகங்களும் அப்படியானதொரு பிரத்யேக விழிகளுக்காகத் தான் காலத்தின் ஏதோவொரு மூலையில் காத்திருக்கின்றன…. செல்லரித்துப்போன கறுப்புவெள்ளைப் புகைப்படங்களாக….

நான் என்னும் நாங்கள்- Coherence  2013 (English)

விஜய இராவணன் என் அடி ஆழத்திலிருந்து எனக்கு மட்டுமே கேட்கும் குரல் தான் என் ‘நான்’ னின் குரல் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்றுமே அக்குரல் என்னோடு ஒத்துப்போனதில்லை. என்னுடன் இணக்கமாக இருந்ததில்லை. நான் சிரிக்கையில் உள்ளுக்குள் கேவிகேவி அழும். நான் புறவுலகின் முன் முதுகை வளைத்து அடிபணிகையில் கீழ்மையான வார்த்தைகளைச் சொல்லி உரக்கக் கத்தும். அதனால்தான் என்றுமே என் ‘நான்’ னின் குரலை நான் வெளியே கேட்க அனுமதிப்பதில்லை. என் ‘நான்’ உரக்கக் கத்த எத்தனிக்கும் போதெல்லாம் பொசுபொசுவென மயிரடர்ந்த என் கரங்கள் அதன் மெல்லிய குரல்வளையை இறுக்கிவிடும். அதன் கூக்குரல் இடிந்துபோன கட்டிடத்தில் ஒலிக்கும் யாருக்கும் கேட்காத கூப்பாடுதான்.

ஒவ்வொரு முறையும் இப்படித்தான் என் ‘நானை’ வென்று கொண்டிருக்கிறேன். இல்லை வென்று விட்டதாக நம்பிக்கொண்டிருக்கிறேன். அந்த எண்ணம் மட்டுமே ஆசுவாசம். ஆனால் உண்மை என்னவெனில், தான் ஒடுக்கப்படும் போதெல்லாம் என்னுள் இருந்து என் ‘நான்’ வெளியேறி விடுகிறது, எனக்கே தெரியாமல்! அதுவும் என் உருவில்!

தன் இஷ்டம்போல் சுதந்திரமாக உலாவுகிறது. அந்தச் சுதந்திர வெளியில் என் ‘நான்’ என்னுடைய புறக்கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. இருக்க வேண்டிய அவசியமுமில்லை.

என்னிடம் மீண்டும் திரும்பாத என் ‘நான்’ இப்படி வெளியேறும் போதெல்லாம் அதன் வெற்றிடத்தை நிரப்ப புதுப்புது ‘நான்’ களை தொடர்ந்து பிரசவித்துக் கொண்டேயிருக்கிறேன். அடிப்படையில் நான் யார்? என் வற்றாத ‘நான்’ களின் வெறும் கருவூலம் மட்டும் தானா?

சொல்லப்போனால் என் ‘நான்’ களுக்கு என்னைவிட மனதைரியம் சற்று அதிகம்தான். விலக நினைத்தும் முடியாமல் வெறுமனே விழுங்கிக் கொண்ட வாழ்க்கைப் பொழுதுகளை என் ‘நான்’ அச்சமின்றி மாற்றி எழுதி விடுகிறது. தன் கடந்தகாலத்தின் உவப்பளிக்காத நிகழ்வுகளை சீரமைக்கக் கிடைத்த வாய்ப்பை எந்த ‘நான்’ தான் தவறவிடும்? ‘நான்’ என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடைபட்டிருக்கும் எண்ணற்ற ‘நான்’கள் அப்படியானதொரு தருணத்திற்காகவே காத்திருக்கிறன…’Coherence’ திரைப்படத்தைப் போல்…

வால் நட்சத்திரம் ஒன்று பூமியை மிக நெருக்கத்தில் கடக்கும் ஒரு பின்மாலை நேரம் நண்பர்கள் சிலர் இரவு விருந்துக்காக சந்தித்துக் கொள்கிறார்கள். போலி முகங்களும் கேலிப் பேச்சுகளும் சிரிப்போசையும் அங்கு பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. பல நாட்களுக்குப் பின் முன்னாள் காதலன் காதலி மீண்டும் சந்திக்கும் கிளர்ச்சியும் மதுவின் மெலிதான போதையும், அகநிஜத்தின் ஆற்றாமையை எப்போதும்போல் தற்காலிகமாய் மட்டுப்படுத்திவிடுகிறது.

‘இத்தனை நாட்கள் விதியின் போக்கில் அடங்கிக்கிடந்தது போதும்… இது எனக்கான வாய்ப்பு…’ என தான் அடைபட்டிருக்கும் கூட்டிலிருந்து வெளியேறத் துடிக்கும் அவர்களின் ‘நான்’களுக்கு, சுதந்திர மூச்சுக்காற்றின் ஸ்பரிசத்தை அனுபவிக்க இப்போதைய தேவையெல்லாம் ஒரு வாய்ப்பு மட்டும்தான் ! ஒரேயொரு வாய்ப்பு!

பூமியை மிக நெருக்கத்தில் கடக்கும் வால் நட்சத்திரத்தால் அறிவியல் ரீதியாக நிகழும் மாற்றங்கள் அந்த வாய்ப்பைத் தந்துவிடுகிறது.

‘ஒரு மூடிய அட்டைப்பெட்டிக்குள் பூனையொன்றும் விஷக்கிண்ணம் ஒன்றும் இருக்கிறதென்றால் ஒன்று பூனை உயிரோடிருக்க வேண்டும் இல்லை இறந்திருக்க வேண்டும். இரண்டில் ஒன்றுதான் சாத்தியம்.

ஆனால் ‘Quantum physics’ விதியின்படி இரண்டுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதாவது பூனை உயிரோடும் அதேநேரம் இறந்தும்… பெட்டியைத் திறக்கும் நொடியில் தான் அந்த இரண்டு நிலைகளும் குமிழி போல் உடைந்து நிதர்சனத்திற்கு ஒரே நிலையாகத் திரும்புகிறது’

அந்த ஒரே பூனையின் இரண்டு பிம்பங்களில் ஒன்று உயிர் பிழைக்க வேண்டுமென்றால் இன்னொன்று இறக்க வேண்டும். இதில் எது நிஜம்? எது பொய்?

தனிப்பட்ட தேடல்களோடும் வாழ்வின் மீதான விழைவோடும் ஒவ்வோரு ‘நானும்’ மிகுந்த வாஞ்சையுடன் தான் வாழ விரும்புகின்றன, தன்னைப் போன்ற இன்னொரு ‘நானை’ எதிர்கொள்ளும் தருணம் வரை….

இரக்கமற்ற உலகில் என் புறத்தோற்றத்தில் உலவும் ‘என்னுடைய ‘நான்’ களின் முதல் எதிரியும் உற்ற நண்பனும் ‘நான்’ தான். ‘நான்’ மட்டுமே தான்…

“ஹாலோ ! டேய்… நேத்து அச்சுஅசலா அப்படியே உன்ன மாதிரியே ஒருத்தன நம்ம ஊர்ல பாத்தேன்டா… ஆமா நீ எப்போ ஊருக்கு வர?”

விஜய இராவணன்-இந்தியா

விஜய ராவணன்

 

 

 

(Visited 53 times, 1 visits today)