காடுலாவு காதை-பாகம் 15-தமிழ்க்கவி

தமிழ்க்கவிகாலையில் போன கந்தப்பு மத்தியானம் சாப்பாட்டுக்கும் வரவில்லை. மணியன்தான் சாப்பாடு கொண்டு போய் கொடுத்தான். இப்ப நல்லா இருண்டும் போச்சு. என்னதான் நிலவெறிச்சாலும் நேரம் இரவுதானே. பாக்கியம் பதட்டமாக இருந்தாள்.

“என்னண்ணை எப்பிடிச் சொல்லுறாய். ஊவள் லெச்சிமிய மணியனோட போய் பாரடி எண்ண மாட்டாளாம். அவனோட போனா பிடிச்சுத் திண்டிடுவானே?”

“டீ என்னத்துக்கு பெட்டப்பிள்ளைய அவனோட ங… கொஞ்சம் பொறு, சேனாதிய கூப்பிடுவம்.” என்றவர்  அதில் நின்றவாறே உரத்த தொனியில் “சேனாதீ…. சேனாதீ…” என்று சத்தமிட்டார். தொலைவில் கடையடியிலிருந்து அவன் மறுத்தான் குரல் வைத்தான்.

“ஓஒஒஒய் ந்தா……… வாறேஏஏஏஏன்……” அவன் வந்ததும் பாக்கியம் முந்தி,

“சேனாதி ஒருக்கா மணியனோட போயிட்டு வாடா ! இன்னும் கொத்தானக் காணேல்ல” என்றாள்.

“ஓமக்காச்சி” என்றவாறே இருவரும் புறப்பட்டு படலைக்கு வர கந்தப்பு எதிர்ப்பட்டான்.

“எங்கடா போறியள் இந்த நேரம் ?”

“உன்னைத் தேடித்தான் அத்தான்” சரிசரி வாங்கோ என்று அவர்களை திருப்பி அழைத்துக் கொண்டு விட்டுக்கு திரும்பிய கந்தப்பு, நேராக வேலிக்கரை வேப்பமரத்தடியில் வைத்து வணங்குகிற வைரவர் கோவிலுக்குப்போய் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கிய பின்தான் வீட்டுக்குள் வந்தான்.

வாசலுக்குள் குனிந்து நுளையும் போதே,

“மெய்யேப்பா கிணறு தண்ணி கண்டிட்டன்”

“ங……. சத்தியமா?”

“உண்ணாணச் சொல்லுறன் நாளைக்கு பொங்க வேணும்.”என்றான்.

அதிகாலையிலேயே ‘முருங்கைக்காயன்’ நெல் மூடையை அவிழ்த்து ஒருபுசல் நெல்லை எடுத்து வண்டியில் போட்டுக்கொண்டு நகரத்திலிருந்து தர்மலிங்கம் மில்லுக்கு கொண்டு போனான். நேல்லைக் குற்றி அரிசியாக்கி அப்படியே பொங்கலுக்கு தேவையான சர்க்கரை,பயறு, சாம்பிராணி, கற்பூரம் என் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வண்டி திரும்பியது. கந்தப்புவின் மனதில் இருந்த சந்தோசத்துக்கு நிகராக கழுத்திலிருந்து சலங்கைகள் ஜல்ஜல்லெனக் குலுங்க ஒய்யாரமாக நடந்தன கபிலன் நரையன் சோடி மாடுகள். இந்த ஒரிணை மாடுகளும் கந்தப்பு கெக்கிராவையில் இருவத்தைஞ்சு பவுணுக்கு அவிழ்த்தது. அதாவது இருநூற்றைம்பது ரூவா. அப்ப பணத்தை பவுண்கணக்கில்தான் சொல்வார்கள். ‘இந்த கிணத்து வெட்டும் ஓய வாற தைப்பூசத்தோட இதுகளுக்கு நலமடிக்கவேணும். இல்லையோ மறியில பாயுங்கள் பிறகு வேலை செய்ய வலுவில்லாமப் போகும்’ என்று கந்தப்பு மனசுக்குள் எண்ணிக் கொண்டான்.

வீட்டில் பாக்கியமும் சருவப்பானை, சட்டிகள், கடகம், சுளகு, திருவலை, கத்தி போன்ற பொருட்களை தயாராக வைத்திருந்தாள். வெற்றிலை கொடியிலும், பாக்கு மரத்திலம் ஆய்ந்து கொண்டனர். வாழைக்குலை ஏற்கெனவே பழுத்துக் கிடந்தது. மாடுகளை அவிழ்க்காமலே பொருட்களை ஏற்றியதும் வண்டி கோவில்குளம் நோக்கி புறப்பட்டது.

“நல்ல காலம் நகைய அடைவு வச்சது. எல்லாம் கூடி வந்திருக்கு” பாக்கியம் மகிழ்ச்சியில் திளைத்தாள். “இனி கோடையிலும் பயிர் செய்யலாம்.”

“பொங்கல் பானை இறக்கி படைச்ச பிறகுதான் ஆராயிருந்தாலும் தண்ணியில கை வைக்கலாம்.” கந்தப்புவின் கறாரான உத்தரவுக்கு கட்டுப்பட்டு மலர்,மணியன் லெச்சிமி ஆகியோர் மனதைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். படையல் முடிந்து கற்பூரதீபம் காட்டும்போது லெச்சிமி ஒரு துளி நீரை சுவைத்துப் பார்த்து விட்டாள்.

“சோக்கான தண்ணி இளநீர் மாதிரி இருக்கு” என்று கூவினாள்.

“கழுதை வாடி வந்த தேவாரத்தைப் படி”

“தேவாரமோ… ? எனக்கென்னெண்டு தெரியும்? எங்கட பள்ளிக்கூடத்தில தேவாரமில்லையே” என்று சின்னையாவுக்கு அறிவுறுத்தினாள் லெச்சிமி.

அந்தக்காலத்தில் மதக்கல்வி முக்கியமில்லை அவர்களுக்கு பாடசாலையில் பொதுப்பாடல்தான்.

“அன்பே அருள் நாதா எங்கள் ஐயா குரு நாதா துன்பம் துயர் நீக்கி எங்கும் தூய அருள் தருவாய்.”

கந்தப்பு சிரித்தவாறே எல்லோருக்கும் விபூதி கொடுத்தான். பொங்கல் பானையை மேடேற்றி தவிட்டைமர நிழலில் கொண்டு வந்து வைத்தான். அதிலிருந்து எல்லோரும் பொங்கலை உண்டனர்.

“தண்ணி ருசி எப்பிடி பாக்கேல்லயே. ?” என்றார் சின்னையா. சில இடங்களில் உவர் நீரும் வருவதுண்டு.

“தண்ணி சீறி என்ர முகத்தில அடிச்ச போதே அது என்ர முத்துமாரித் தாயின்ர கருணையில என்ர வாயில விழுந்திட்டுது. சோக்கான தண்ணிதான்.

“இந்தா மணியம்…… இதில கொஞ்சம் தண்ணி பிடிச்சுக் கொண்டு வா” என்று சிறு கலயத்தை கொடுத்து விட்டான். மணியன் படிகளின் வழியாக கிடுகிடென இறங்கி, ஊற்றி;ல் கலயத்தை வைத்து கையால் அள்ளிநிரப்பி எடுத்து வந்தான். அனைவரும் குடித்தனர். அப்போது மலர்,

“அப்பூ அங்க அங்க பாருங்கோ……..” என்றலறினாள். அவள் காட்டிய திசையில் கிணற்றின் வடப்பக்கத்தின் மேட்டில்  ஒரு அழகிய நாகபாம்பு இவர்களைப் பார்த்தபடி நின்றது.

காடு விரியும்

தமிழ்க்கவி-இலங்கை

தமிழ்க்கவி

(Visited 93 times, 1 visits today)