காடுலாவு காதை 04-பத்தி-தமிழ்க்கவி

காடுலாவு காதை 04கந்தப்பு கதை சொல்வதென்றால் அதில் ஒரு சுவாரசியம் இருக்கும். இடைக்கிடையில் சிறு இடைவெளிகளை வேண்டுமென்றே விட்டு விட்டு கேட்பவர்களின் கவனம் தன்னிடமே இருக்கிறதா என்றும் பார்த்துக் கொள்வான். அதிலும் இந்த பெரிய மிருகத்தின் வேட்டையில் அவன்தானே தனியனாக போய் சாதித்தது. அப்ப அவன்தானே கதாநாயகன். ஆவன் இந்த வீழ்ந்து கிடக்கும் விலங்கினைப்பற்றிய வேவு நடவடிக்கையிலிருந்து தொடங்கினான்.

“இது எத்தினநாளா எனக்கு போக்குக் காட்டிக் கொண்டு திரிஞ்சது. இப்ப ரெண்டு நாளா அசுமாத்தத்தை காணேல்ல. லெச்சிமி ‘சூட்டான’ (பன்றியின் சுட்ட ஈரல்) தின்னிறதில் மும்முரமா நின்றாலும், அப்புவின்ர வாய்க்கால கொட்டுப்படுற கதை எல்லாத்தையும் அவளின்ர மூளைக்குள்ள ‘சேவ்’ பண்ணிக்கொண்டுதான் இருப்பாள். ஏனெண்டா இதை தொங்கல் வரைக்கும் சுமக்கப்போறவளும் அவள்தானே. கந்தப்பு கதையை தொடர்ந்தான். இப்ப பன்றி இறைச்சி வாங்க வந்திருந்த சிலரும் கதைகேட்டுக் கொண்டிருந்தனர்.  இந்த வேட்டையானது அவர்களுக்கு ஒரு வருமானத்தை ஈட்டித்தருவது.

கழுத்தாங்குத்தியில நல்ல கொழுப்பு பிடிச்ச பகுதியா வகிர்ந்து பெரிய சட்டி நிறைய அவர்களுடைய அடுப்படிக்கு போயிரும். மீதமுள்ளது சிறு துண்டுகளாக்கப்பட்டு நிறுத்து விற்பனை செய்யப்படும். அன்றைக்கு அந்த கிராமத்தில் அநேக வீடுகளில் அதுதான் கறி. சும்மா ஓன்றும் கொடுப்பதல்ல . ஒரு றாத்தல் இறைச்சி இருபதுசதம். இதுகூட ‘வெடிகாற செல்லப்பாவுக்கு’ எதிராக அப்பு எடுத்த நடவடிக்கைதான். அவன் மட்டுமே வேட்டைக்காரனாக இருந்தபோது இருபத்தைந்து சதமாக இறைச்சி விற்றான். கந்தப்பு துவக்கு வாங்கி வெடிவைக்கத் துவங்கியதும் இறைச்சி ஒருறாத்தல் இருவது சதமாக குறைச்சிட்டார். அதை பிறகு முப்பது சதமா கந்தப்பு ஏற்றியது வேறுகதை.

இறைச்சி இப்படி திடீரென்று விற்பனையாவதால் எல்லோரிடமும் காசிருக்காது. பலர் கடன்தான். அதையெல்லாம் கொப்பியில் குறித்து வைத்து பின்னர் பாடசாலை விட்டு வந்ததும் வீடு வீடாகச் சென்று வசூலிப்பதும் லெச்சிமியும் மணியனுந்தான்.

இப்படியான வேட்டைக்கதைகள் பல பரிமாணங்களைக் கண்டிருந்தது. அந்தக்காலத்தில் துப்பாக்கிகள் வவுனியா நகரில் இரண்டு கடைகளில் விற்பனையாகியது . பீ எஸ் மௌலானா கடை. அடுத்தது  கப்பலார் கடை. தோட்டாவும் அங்கேயே வாங்கலாம். துவக்கு நூறு ரூபா. தோட்டா பத்துச்சதமாக இருந்து, பின் முப்பது சதமாக உயர்ந்தது. துவக்கை வாங்கியவர்கள் அதற்கு லைசென்ஸ் வாங்க பொலீசில் பதிய வேண்டும். இரண்டு காரணங்களுக்காக மட்டுமே துவக்கு வழங்கப்பட்டது. ஒன்று உயிர்ப்பாதுகாப்பு. மற்றது பயிர்ப்பாதுகாப்பு. கந்தப்பு பயிர்ப்பாதுகாப்பாக ஒரு அனுமதிப்பத்திரம் பெற்றிருந்தார். வருடாந்தம் ஐம்பது சதம் கட்டி அதை புதுப்பிக்கவேண்டும்.

மந்து கொத்தி நெல்லும் கொத்தியாயிற்று. இனித்தான் பாரிய வேலைகள் இருந்தன. ஈரிலைப்பயிராக மாறியதும் காட்டு முயல்களும் தட்டுப்பெட்டி ஆமையும் பயிரை மேய ஆரம்பித்தன. காலையில் எழுந்தால் காணிமுழுதும் ஆராய்ந்து ஆமைபிடிப்பதே அவர்களுக்கு பெரிய வேலையாக இருந்தது. பயிர் வளர வளர சுணையேறும். சுணையாகிவிட்டால் ஆமை தின்னாது. ஆனால் மான்கள் அப்படியல்ல ஆட்களில்லாதபோது பகலிலும் இரவிலும் கூட சேனைப்புலவில் மேயவரும்.

புதுக்காடுகள் இடிந்தழிந்து போன குளங்களின் அருகே வழங்கப்பட்டவை. அழிந்த குளங்களானாலும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. அதுவே காடு வெட்டுவோர் திருத்துவோருக்கு குடிதண்ணீராகவும் இருந்தது. ஒரு மண்கலயத்தைக் கொண்டு அந்த குருமன் பற்றையூடாக குனிந்து போய் தண்ணீர் அள்ளி வருவது லெச்சிமிதான். ஒரு ‘கவ் அன்கேட்’ Cow and gate’  மாப்பேணியில் அதை வார்த்து எரிந்து கொண்டிருக்கும் பாரிய கட்டையின் தணல்மீது வைத்துக்  கொதித்ததும் தேநீர் போடுவார்கள். மற்றப்படி தண்ணீரை அப்படியே குடிப்பதுதான். இந்த சுட்டாறிய நீர் என்பதெல்லாம் அவர்களது காதுக்கு எட்டாத விடயம். எனவே தொற்று நோய்கள் பருவத்துக்கு பருவம் ஒவ்வொரு வீட்டையும் கிராமத்தையும் பேய் போல பிடித்து ஆட்டும்.

“அ……………….அதெல்லாம் அம்மன் குறைபாடுதான். உதுக்கொண்டும் மருந்து தின்னக்கூடாது. பக்குவமா நோயாளியை வீட்டுக்க மறைச்சு வச்சு, வேப்பிலையும் மஞ்சளுமா கட்டியும் பூசியும் பாக்கிறதுதான்.

லெச்சிமிக்கு கையெல்லாம் சிரங்கு வந்திருந்தது. அதற்கும் இயற்கை வைத்தியந்தான். அதற்காக பாடசாலைக்குமட்டும் செல்ல முடியாது. மற்றப்படி எல்லா வேலையும் செய்யலாம். அவள் கடி தாளாமல் அழுது கொண்டிருக்க கந்தப்பு அவளுக்கு ஏதோ இலைகளை அரைத்து பூசிக் கொண்டிருந்தான். அவள் அழஅழ இந்த வேலை நடந்தது. திடீரென முன்புறமிருந்த காட்டிலிருந்து யாரோ கூப்பிடுவது போல சத்தம் “கூ…………..” என்று கேட்டது.

கந்தப்பு லெச்சிமியின் வாயைப் பொத்தினான். “கத்தாதை பொறு” என்றான். அவனது விழிகள் உருண்ட விதம் கண்டு லெச்சிமி அமைதியானாள். சுற்று நேரம் பொறுத்து மீண்டும் அதே “கூ…………..” வென்ற சத்தம். கந்தப்பு பச்சிலையை ஒதுக்கி வைத்துவிட்டு காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான்.

“என்னப்பூ………. பகல்லயே பேய் கூப்பிடுது.

” கிசு கிசுத்தபடி லெச்சிமி கந்தப்புவை நெருக்கி உட்கார்ந்தாள். அதே கிசுகிசுப்பில் கந்தப்பு சொன்னான்.

“அது பேயில்லை, மான். இப்பத்தான் தலையாரி வந்திருக்கு. இஞ்ச ஆக்கள் நிக்கிறமோ எண்டு வேவு பாக்கிது.”

“ஃஙா…………, பாத்திட்டு என்ன செய்யும்.”

“தன்ர கூட்டத்துக்கு குரல் குடுக்கும். ஆனா இது குடுக்காது.“

“ஏன்………..?”

“எனெண்டா அது நிக்கிற இடம். இஞ்சயிருந்து காத்து வீசிற திசை. அதுக்கு காத்துச் சுத்திப்போடும்.”

“காத்துச் சுத்திறதோ எப்பிடி………..?”

“காத்தில மனிச வாடை கலந்து போகும். எங்களத் தொட்ட காத்துத்தானே அங்க போகுது.”

“நாங்கள் கொட்டிலுக்க போய் இருப்பம்.”

“இருந்தா…காத்து அங்கயும் வருந்தானே……….?”

லெச்சிமி பேசாமல் தந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். கந்தப்பு சற்றுப் பொறுத்தான். எனினும் பின்னர் மானினங்கள் திரும்பிப் போயிருக்கும் என்ற முடிவுக்கு வந்தான். லெச்சிமியை குளத்துக்கு கூட்டிச்சென்று ஒரு பாறையின் மீது உட்கார வைத்துவிட்டு குடத்தில் நீரை அள்ளிக் கொண்டு வந்து அவளைக் குளிப்பாட்டினான்.

நல்ல வேளையாக பெரிய குளத்துக்குப் போகவில்லை. போனால் அவளை குளத்திலேயே இறக்கி விட்டிருப்பான். அவளுடைய சிரங்குப் புண்களையெல்லாம் மீன்களே கடித்துக் குதறியிருக்கும். அப்படி மீன்கள் கடித்தால் புண்கள் விரைவில் ஆறிவிடும். அதற்காக அவள் தண்ணீரில் துடித்துக் கதறியிருப்பாள். கந்தப்பு லெச்சிமியை தோளில் சுமந்தபடியே பிரதான பாதை வழியாக சுற்றி புலவுக்கு கொண்டு வந்தான். வழியில் சந்தியா எதிர்ப்பட்டார். குளக்கட்டின் கீழுள்ள புலவு அவருடையது. “என்ன உதுக்க கொண்டே அசுத்தம் பண்ணிப்போட்டு வாறியே…….?”

“சீச்சீ……….. நான் கல்லில இருத்திப்போட்டு அள்ளிக் கொணந்துதான் வாத்தனான். நாங்களும் அதைத்தானே குடிக்கிறம்.” என்றான் கந்தப்பு. சந்தியா ஒரு புன்னகையுடன் விலகிப்போனார்.

நான்கைந்து நாட்களிலேயே அவளுடைய கை காய்ந்து சுகமாகிப் போனது. காலையிலேயே கந்தப்பு கொட்டப்பெட்டிக்குள் பாக்குப்பிளகுகளையும் வெற்றிலைகளையும் திணித்துக் கொண்டான். அத்துடன்  சுண்ணாம்பு டப்பாவையும் நிரப்பி திணித்தான் கொட்டப்பெட்டியின் பக்கத்து அறையில் வெட்டிய புகையிலைத்துண்டங்களை வைத்தான். அதை மூடியால் மூடித் தன் மடியில் கட்டியிருந்த சாரத்தின் மடிப்பில் வைத்து கட்டிக்கொண்டான். அவர் எங்கோ புறப்படுகிறார் என்பது தெரிந்தாலும் புறப்படும் போது ‘எங்க போறியள்”  என்று கேட்பது தமிழர்களுக்கு பெரிய சகுனப்பிழையாகும். பாக்கியம் தேநீர் கோப்பையை கொண்டு வந்து அவனுக்கு முன்பாக வைத்து விட்டு, “துலைக்கோ……….?” என்று கேட்டாள்.

“வேலி அடைக்க வேண்டாமேப்பா…கொஞ்சம் கதியாலும், வரிச்சும், காட்டுக்  கொடியும் வலிச்சுக் கொண்டரப்போறன். உவன் சின்னத்தம்பியையும் வரச் சொன்னன்…….. இன்னும் காணேல்ல.”

“அப்பூ…நான்வாறன். எனக்கு பள்ளிக்கூடமில்லத்தானே…?”

“நீயும் வரத்தான் வேணும். பின்ன மணியனையுங் கூப்பிடு.”

“ஏனப்பா அதுகள……..? அதுகும் பொம்பிளப்பிள்ளைய…” பாக்கியம் சலித்தாள்.

“என்னப்பா செய்யிறது………? அதுகள் வந்துதுகள் எண்டா அங்கின வெட்டவெட்ட பாதையில இழுத்துப் போடுங்கள்தானே…….?”

கந்தப்பு சின்னத்தம்பியை பார்க்காமலே புறப்பட்டான்.

“மெய்யேப்பா………., சின்னத்தம்பி வந்தா உதில சுடலைக்காட்டுப்பக்கமா வரச் சொல்லு” என்று பாக்கியத்திடம் சொல்லிவிட்டு புயப்பட்டான். லெச்சிமி  கந்தப்புவுடன் ஓடி நடந்தாள். மணியன் பின்னால் தலையை தொங்கப் போட்டவாறே சென்றான்.

(காடு விரியும்)

தமிழ்க்கவி- இலங்கை

தமிழ்க்கவி

(Visited 146 times, 1 visits today)