வாங்கோவன் பறைவம்-பாகம் 09-பொங்கல் தளிசை …பத்தி-உழவாரப்பொன்னையர்

எல்லாருக்கும் பொன்னையாண்ணையின்ரை பொங்கல் வாழ்த்துக்கள் கண்டியளோ! கொப்பியைத் திறந்தா, “சிவமயம்” எண்டு ‘உ” இழுத்துப் போட்டுத் தொடங்கிற மாதிரித் “தை பிறந்தால் வழி பிறக்கும்” எண்டு சரியோ, பிழையோ சொல்லிப் பழகியாச்சு…………. இப்பத்தையான் குஞ்சுகள், திகதியே போடமாட்டனெண்டுதுகள். அதுகளின்ரை படிப்பு முறையள் அப்பிடிக் கிடக்கு. அந்த நாளையிலை, செய்கைவழிக் கோடு, திகதியள் எண்டு எல்லாம் ஒழுங்காப் போட்டு, கொப்பியை, கொப்பி மாதிரி வைச்சிருக்காட்டி, மொழி பறக்கும் கண்டியளோ! எத்தினை அடியளைத் தான் வாங்கியிருப்பம். இப்பத்தையானுகளுக்கு, அடியெண்டாலே, என்னெண்டு தெரியாது. அடிச்சா, பொலிசைக் கூப்பிடுவமெண்டு, அதுகளே சொல்லிற காலமாயெல்லோ கிடக்கு. சரி. அதைப் பிறகு கதைப்பம்.

பொங்கல் நேரத்திலை பொங்கலைப் பற்றிப் பறைவம். பொங்கல் வர முதலே, மனசுக்குள்ளை ஒரு சந்தோசம் ஓடத் தொடங்கீடும். அது ஒரு காலம். ஒரு மாதத்துக்கு முதலே, அடுக்குப் பண்ணத் தொடங்கீடுவம். தென்னம் பாளையள்,கமுகு மட்டையள், பன்னாடையள் எண்டு, எல்லாம் வளவு முழுக்கப் பொறுக்கிச் சேர்த்து, முதல் நாளே சாணியள்ளி வைச்சு, முத்தம் மெழுகி, உலக்கை வைச்சு வெள்ளை மாவிலை கோடு கீறிக்,கோலம் போட்டு, செவ்விளநீக் குலை இறக்கி, தலை வாழையிலை வெட்டி, கும்பத்துக்கு தேவையான அடுக்குப் பண்ணி, அறுகம்புல்லு, பிள்ளையார் பிடிக்கச் சாணகம்,மாவிலை,மஞ்சளிலை எண்டு, வீடே என்ன சுறுசுறுப்பாச் சந்தோசமா இயங்கும். பார்க்கவே உற்சாகம் தான். இனி இளந்தாரியள், சீன வெடியள் கொழுத்திறதும், மத்தாப்புகள்,பூரிசுகள், சக்கர வானமெண்டி வெடிச்சுத் தள்ளிறதும் என்ன ஒரு சந்தோசம். வீரனெண்டு முந்தியொரு நாயிருந்தது. கோதாரி விழுந்த குசும்புப் பெடியள், அதின்ரை வால்லை, வெடியைக் கட்டி விட்டா, பாவப்பட்ட சீவன், அங்கையும், இஞ்சையுமெண்டு குதிக்கால் குண்டியிலை பட ஓடித் திரியும். இப்பவும், அந்த நாளையான் பொங்கலுகள் கண்ணுக்கை நிக்குது. கிராமத்தான் பொங்கலுகள் தான் பொங்கலுகள் பாருங்கோ.

இப்ப எங்கை? முதலாம் தேதிக்கு கைப்பி நியூ இயர் சொல்லிறாக்கள் தான் கூடிப் போச்சு. உள்ளுக்கை என்ன ஓட்டை ஒடிசலோ, வெளியிலை எல்லாம் “காய்..பாய்” சொல்லிற வெளிநாட்டுக் காரராகீட்டம். காஸ்குக்கரிலை, காலிலை செருப்புப் போட்டுக் கொண்டு பொங்கிறாக்களாயிட்டினம் நம்மடை “ஜென்ரில் மான் வமிலியள்“. உந்தக் கோதாரி விழுந்த பேஸ்புக்கிலை, படம் போடிறதுக்காண்டிப் பொங்கிறாக்கள் தான் வெளிநாடுகளிலை, கன பேராய்க் கிடக்குது. தமிழர் மரபுத் திங்கள், அது இதெண்டு அங்கனேக்கை கொஞ்சம், திறமாச் செய்யிறாங்களெண்டு பாத்தால், கனக்க விசயம் பாருங்கோ, ஒரு கண்றாவியும் விளக்கமில்லாமல் தான் நடக்குது. முறை தலையளையெல்லாம் மாறிச் சாறி, ஆளாளுக்கு தெரிஞ்ச மாதிரி ஆடி முடிக்கினம்.

யாழ்ப்பாணத்தார் எப்பவும் ஏலக்காயையும், கயூவையும் அள்ளிக் கொட்டி, சக்கரைப் புக்கை தான். சில குடும்பங்கள் எப்பனா, வெள்ளைப் புக்கையும் பொங்கிப், பிறிம்பா குசினியடுப்பிலை சாம்பாறும் வைப்பினம். அதுக்குள்ளை கிடக்கிற சுருங்கிப் போன தக்காளிப் பழத்துக்குள்ளை, குழம்பு ஊறிப் போய் என்ன சோக்காயிருக்கும். இப்பத்தையான் தக்காளிப் பழங்களும், ஆக்கிளின்ரை வாயள் மாதிரித் தான். ஒரு உப்புப் புளிப்பில்லாத பழங்கள். இல்லை, எங்கடை நாக்குகள் தான் மரத்துப் போச்சுதோ ஆர் கண்டது? வன்னிப் பக்கங்கள்ளை, சக்கரைப் புக்கையை விட, வெள்ளைப் புக்கை தான் வேமஸ் கண்டியளோ, அதுவும் அளம்பில்,குமுளமுனைப் பக்கம் வாழையிலையிலை தட்டத்திலை வைச்சுத் தருவாங்கள் ஒரு மணிப் பொங்கல் கண்டியளோ!

மருந்து மாதிரிக் கொஞ்சம் சக்கரைப் புக்கை, மிச்சம் முழுக்க எருமைத் தயிரிலை கிண்டின சோக்கான பால்ப் புக்கை, நல்ல காரமான சிவப்புச் சம்பல் வேறை. இப்பத்தையான் உப்புப் பொரியல் மாதிரி இல்லாமல், அளவான நல்ல நீளமான மொறு மொறு மிளகாய்ப் பொரியல், எல்லாத்தையும் விட முக்கியமான சாமான் என்னெண்டா, எருமைத் தயிர். கன்சிகான்ரை இடுப்பு மாதிரி, சும்மா, அங்கையும், இஞ்சையுமெண்டு தொளதொளவெண்டு குலுங்கிக் கொண்டிருக்கும். மூக்கு முட்ட, ஒரு பிடி பிடிச்சமெண்டா, நல்லா மொச்சு அடிக்கும் நித்திரை. உண்ட களை தொண்டனுக்கும் உண்டெண்டு, பிறகென்ன அண்டு முழுக்க கும்பகர்ணணாட்டம் குறட்டையடிக்க வேண்டியது தான்.

உப்பிடி, ஊருக்கு ஊர், பொங்கலுகளின்ரை ருசி மாறினாலும், சந்தோசம் ஒரே மாதிரித் தானிருதது. இப்பவும் பறவாயில்லை. எண்டாலும், ஏனோ தெரியேல்லை, அண்டையான் பொங்கலுகளை நினைக்க ஒரு ஏக்கம், எல்லோருக்கும் இருக்குத் தான். இனி, மாட்டுவண்டிச் சவாரியள், கிளித்தட்டு, தாச்சிமறிப்பு, சிரட்டைப் பந்து, கெந்திக் கோடு எண்டு விளையாட்டுக்கள் வேறை. வயலுகள் கதிர் முத்தி, நல்லா விளைஞ்சிருக்கிறதைப் பாக்க, சந்தோசமா இருக்கும். மாரித் தண்ணியிலை, தோட்டங்கள்,மரங்கள் எண்டு எல்லாம் நல்லா, மொச மொச எண்டு வளர்ந்திருக்கும் வேறை. இனிப் பிறகு, நதியான்ரை படம் போட்ட பொங்கல் காட்டுகள், சிலோன் ரேடியோவிலை நேயர் விருப்பம், “பொங்கலும் பொங்குது. பாலும் பொங்குது” எண்டு பாட்டு வேறை.
ம்…நினைச்சுக் கொண்டே வாழிறதும், ஒரு வாழ்க்கை தான் போலை.

பொங்கத் தொடங்கேக்கையே, நல்ல மேளக் கச்சேரியளை றேடியோவிலை போட்டு, எல்லாரும் சந்தணப் பொட்டுக்களோடை, கலகலப்பாத் தானிருக்கும். சின்னனுகள் கோடாலி வெடியளை கொழுத்திறதும், இரண்டு ரூபாய் துவக்கிலை, வெடிச் சுருளை வைச்சு படீர் படீர் எண்டு அடிக்கிறதுமெண்டு எல்லாம் சந்தோசம் தான். அண்டு இரவு வரைக்கும் பொங்கல் தான். பானைக்குள்ளை அடிப்பிடிச்ச புக்கைக்கு அடிபடுகிறதே ஒரு சந்தோசம். கருகின வாசத்தோடை, அந்தப் புக்கை என்ன சொல்லும் தெரியுமே? ம்…..இப்பிடிப் பொங்கலைப் பற்றிப் பறையிறதுக்கு, காலத்துக்கு காலம்,ஊருக்கு ஊரெண்டு எங்கடை வாழ்க்கையின்ரை வடிவான விசயங்கள் எக்கச்சக்கமிருக்கு. அது சரி, ஆர் தன்னும்…இந்தப் பொங்கலை எங்கடை பொடியள், எங்கனும் சுவர் வழிய, சித்திரமாக் கீறினதைக் கண்டனியளோ? ம்….கூம்…என்ரை கண்ணுக்கு இன்னும் எத்துப் படவேயில்லை. எங்கடை ”எஸ்.போ” அவற்றை ”நனவிடை தோய்தல்” லை , ஒரு காலத்தின்ரை பொங்கலைப் பற்றி வடிவா எழுதி வைச்சிருக்கிறார்.

இப்ப, முகம் கழுவாமல், பல்லு மினுக்காமல், கண்டறியாத பேஸ்புக்கிலை, ”காய்…கப்பிப் பொங்கல்” எண்டு அடிச்சு விடிற எங்கடை பம்பா வெங்காய மூளையளுக்கு, இப்பிடியொரு காலத்தின்ரை ருசியை, இப்பிடி எழுதியாவது, ஞாபகப்படுத்துவம். எல்லாருக்கும், பழைய பொங்கல் வாழ்த்துகள் கண்டியளோ!
வருசம் நல்லா இருக்கட்டும். சந்திப்பம்.

உழவாரப் பொன்னையா

உழவாரப் பொன்னையா

(Visited 125 times, 1 visits today)
 

2 thoughts on “வாங்கோவன் பறைவம்-பாகம் 09-பொங்கல் தளிசை …பத்தி-உழவாரப்பொன்னையர்”

Comments are closed.