‘இனி ஒரு போதும்’-நூல் விமர்சனம்-பொ.கருணாகரமூர்த்தி

இனி ஒரு போதும்தமிழ்க்கவியின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆய்வுகள், பத்தி எழுத்துக்களன்ன இலக்கியமுயற்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஈழப்போராட்டத்தின் பங்களிப்போடான அவரது பன்முகத்துவம் தமிழர்களுக்கெல்லாம் பரிச்சயமானவை.

போரிலக்கிய நாவல்கள் வரிசையில்  தமிழ்க்கவியின் ’ஊழிக்காலம்’ (2013) அதன் சித்தரிப்பு முறைக்காகவும் குறிப்பாக இறுதிப்போர்க்காலத்தில் ஓரிடத்தில் நிலையாகக் குந்தி வாழமுடியாமல் அவரவரும் தத்தம் குடிசைகளைப் பிடுங்கிப் பிடுங்கியடுக்கிக்கொண்டு சட்டி பெட்டிகள், குழந்தைகள் குருமானுகளோடு ஊரூராக காடுமேடாக அலைந்து திரிந்த அவலத்தைப் பிரதியெடுத்த  வாழ்வியல் பதிவாக அதைக்கண்டோம். மரணம் துரத்திக்கொண்டிருந்த வேளையிலும், மனிதன் இயல்பான தன் குணங்களை இழந்து நின்றதையும், காமத்தைச் சுகித்துவிடத் தவித்ததையும் துய்த்ததையும் கண்டு அதிர்ந்தோம்.

’இனி ஒரு போதுமினதும்,  ஊழிக்காலத்தினதும் (2017) களமும் காலமும் ஒன்றே ஆயினும்  இப்புதினம் கதைகூறும் தன்மையில் முன்னதினின்றும் வேறுபட்டது. அது ஊழிக்காலத்தில் வாழநேர்ந்த ஒரு குடும்பத்தின் கதையை அதன் அங்கத்தவரும் முதன்மைப் பாத்திரமுமான அம்மம்மா பார்வதி, அவரது பெண்வயிற்றுப்பெயர்த்தி மீனா, அவளது காதலன் மது, இவர்களின் வாய்மொழியில் நிதானமாகச் சொல்லிச்செல்கிறது. என் அதீத கற்பனையாகக்கூட இருக்கலாம், தமிழ்க்கவி நினைத்திருந்தால்  ‘இனி ஒரு போதும்’ புதினத்தின் பாத்திரங்கள் அனைத்தையும் அவர் ‘ஊழிக்காலத்தி’னுள் சேர்த்தும் இழைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறல்லாமல் அப்பாத்திரங்களைத்  தனியாக இந்நாவலில் உலவவிட்டு அவர்கள் கதையை தனியாக வார்த்திருப்பது தமிழுக்குத்தனிவரவு. வன்னி மண்ணிலேயே  பிறந்துவளர்ந்த தமிழ்க்கவிக்கு அப்பிரதேசத்தில் தெரியாத மூலை முடுக்குகள் எதுவுமில்லை.

இப்புதினத்திலும் பார்வதி பாத்திரமாக எனக்குத் தமிழ்க்கவியே தெரிகின்றார். கிளிநொச்சியில் வாழும் பார்வதியம்மாவின் குடும்பம் பெரியது, அவர் பிள்ளைகள் போர்ச்சூழலாலும், அவரவர் பணிபோன்ற காரணங்களாலும் மல்லாவியிலும், புதுக்குடியிருப்பிலுமாக பிரிந்து வாழுகின்றார்கள். பார்வதியின் மூத்தமகள்  கவிதாவை ஏற்கெனவே திருமணமான குமார் தூக்கிக்கொண்டுபோய் மல்லாவியில் வைத்து வாழ்கிறான். அவன் நல்ல உழைப்பாளியாயினும் பார்வதிக்கும் கவிதாவின் கணவன் குமாருக்கும் அத்தனை ஒத்துவராது. அவர்களின் குழந்தை மீனாவுக்கு ஒன்றரை வயசிருக்கும்போது குமார் கவிதாவை வேலைக்காக மத்தியகிழக்கு நாடொன்றுக்கு அனுப்பிவைக்கிறான். பார்வதி குழந்தை மீனாவைத் அழைத்துக்கொண்டுவந்து புதுக்குடியிருப்பில் தன்னோடு வைத்துக்கொள்கிறார். மல்லாவிக்கு அவர்களிடம் சென்ற பார்வதி மீனாவைத் தன்னுடன் கூட்டிப்போக முடிவெடுத்துவிட்டு ”நான் மீனாவையும் என்கூட கூட்டிட்டுபோறன்” எனவும் “ஏன் இஞ்சை சோறில்லையாமோ” என்கிறான் குமார். மறுநாள் காலையில் புறப்படும்போது மீனாவிடமும் ‘அப்பாவிட்டையும் போட்டு வாறேன் என்று சொல்லடி’ என்று  சொல்லவும் அவன் வேண்டா வெறுப்பாக “ போ……….. ஆனால் திரும்ப இஞ்ச வராதே” என்கிறான்.

பார்வதி புதுக்குடியிருப்புக்குப் பயணஞ்செய்யும் இயக்கத்தினருக்கான விஷேடபேருந்தில் பெயர்த்தி மீனாவும் பயணஞ்செய்ய முடியாதாகையால் அவளைப் தனியார் சீருந்தொன்றில் ஏற்றிவிட்டு அதன் நடத்துனரிடம் அவளைப் புதுக்குடியிருப்பு பேருந்து நிலையத்தில் இறக்கிவிடும்படி சொல்லிவிடுகிறார். முறிகண்டியில் இறங்கிய மீனா தனது பேருந்து கிளம்பிவிட்டதை அறியாமல் செம்மலைபோகும் வேறொருபேருந்தில் ஏறிக்கொண்டு தொலைந்துபோக இருந்தவரை அதன் நடத்துனர் பொறுப்பாகக்கொண்டுபோய் இயக்கச்செயலகம் ஒன்றில் சேர்ப்பிக்கவும் பார்வதி மீளவும் இயக்கத்தோழர் ஒருவருடன் செம்மலைக்குப்போய் மீனாவை மீட்டு வருகிறார்.

அம்மம்மாவுடன் வளரும் மீனா புதுக்குடியிருப்பிலுள்ள ஒவ்வொரு வகுப்பிலும் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் அமர்ந்து படிக்கும் பாடசாலை ஒன்றில் சேர்ந்து பயில்கின்றாள். அலரகவைகளில் துருதுருவென் இருக்கும் மீனா புத்தகப்படிப்பைவிடவும் விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம்காட்டுகிறாள். பார்வதியின் வளவுக்கு அணுக்கமாகவுள்ள ஒரு ஒளி/ஒலிப்பதிவுக்கூடத்தில் பணிபுரியும் இளைஞன் மது மீனாவினால் ஈர்க்கப்படுகிறான். விளையாட்டுப்போட்டியின்போது அவள் அழகாகக் குதித்து ஓடுவதை அவன் படம்பிடித்துவிட மீனா அதைத்தெரிந்துகொண்டு அப்படத்தைத் தன் மாமன் சுதன்மூலம் பெற்றுக்கொள்கிறாள். மது இவர்கள் வீட்டுக்கொல்லைக்கு நீர்மொள்ள வரும்போதெல்லாம் மீனாவின் மனமும் அவளை அறியாமல் அவன் பின்னாலே சென்றுவிடுகிறது. தன் சுபாவத்தால் ‘அய்யய்யோ………….. அம்மம்மாவுக்கு தெரியாமல் நான் ஏதோ பிழைசெய்கிறேன் போலிருக்கு’ என்று மீனா பயந்தாலும் மதுவைத்தன் மனதில் ஏற்றிவைப்பதையும் நினைப்பதையும் மட்டும் அவளால் நிறுத்த முடிவதில்லை.

புதுக்குடியிருப்பிலிருந்து பார்வதியின் மகன் சுதனும் மனைவி ஜனனியும் அவர்களின் குழந்தை அபிராமியை   மீனாவும் பார்வதியும் கவனித்துக்கொள்ள, எங்கோ ஒரு அலுவலகத்துக்கு வேலைக்குப் போய்வருகிறார்கள். அது என்ன அரச அலுவலகமா, அரசுசாரா அமைப்பின் அலுவலகமா , தனியார் அலுவலகமா, இயக்க அலுவலகமா என்பது  சொல்லப்படவில்லை.

வீட்டில் அம்மம்மாவோ, மாமன் சுதனோ அத்தை ஜனனியோ இல்லாத நேரங்களில் மது ஏதாவதொரு சாக்கைவைத்துக்கொண்டு அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்துபோகத்தொடங்குகிறான். ஆரம்பத்தில் பார்வதி அவனது வருகையை வித்தியாசமாக எடுக்கவேயில்லை. மதன் அந்தப்பக்கமாகச் சுழன்றுகொண்டு திரிவதைக் கவனித்துவிடும் அயலிலுள்ள பாட்டியொன்று இரகசியமாக பார்வதியிடம் அதைப்பற்றித் தூபம்போடவும் ’எணேய்….. பெட்டையள் இருக்கிற இடத்தில பெடியள் வாறதும் அவரவரவருக்கு விருப்பங்களிருந்தால் கலந்து பேசுறதும் இயல்புதானே………’ என்று சமாளிப்பதன் மூலம் அவர்கள் காதலை அங்கீகரித்து விடுகிறார். மீனா இயல்பில் மென்மையானவள், யாரையும் கடியவோ மனம்நோகவைக்கவோ தெரியாத ஒரு வெள்ளந்தி. பின்னாட்களில் இயக்கத்தில் இருக்கும்போது பொறுப்பாளர்கள் எதுக்காகவேனும் அவளைக் கடிந்தாற்கூடச் சட்டைபண்ணாது சிரித்துகொண்டிருப்பாளாம்.

’போய்ஸ்’போன்ற பார்ப்போரைக் கிளர்த்தும் வகையிலான சினிமாப்படங்கள் எல்லாம் இயக்கத்தினால் ஈழத்தில் தடைசெய்யப்படுகின்றன. மதுவின் ஒலி/ஒளிப்பதிவுக்கடையில் இயக்கத்தால் தடைசெய்யப்பட்டிருந்த படம் ஒன்றினை பிரதி எடுத்ததால் இயக்கத்தின் காவற்படையால் மது கைது செய்யப்படுகிறான், கடைசியில் அவனை பார்வதியே அவரது இயக்கத்திலிருந்த செல்வாக்கினால் விடுதலை செய்வித்துவிடுகின்றார்.

மது காணாமற்போய்விட்டார்கள் என் எண்ணியிருந்த அவனது தாயாரும் குடிகாரத்தந்தையும் இவ்வளவுகாலமும் இந்தியாவில் அகதிகளாக இருந்துவிட்டு நாட்டுக்குத் திரும்புகிறார்கள். மதுவின் இன்னொரு சகோதரனும் வெளிநாடெதுக்கோ ஓடித்தப்பித்துவிடுகிறான். அப்பப்போ கொஞ்சப்பண உதவி மதுவுக்கும் அவன் குடும்பத்துக்கும் அவனால்க் கிடைக்கிறது.

ஒருநாள் மதுவின் தாயார் சரசு பார்வதிவீட்டுக்கு வருகிறார். அவரது நெழிவுசுழிவுகளும், வாயை ஊறியூறிக்கதைக்கும் பாங்கும் அவர் ஒரு தேர்ந்தநடிகை என்பது அவருக்குப் புரிந்துவிடுகிறது. காரும் வீடும் பங்களாக் கனவுடனும் வந்த அவருக்கு பெண்ணியம், ஜாதியம், சீதனம் போன்ற விடயங்களில் பார்வதியின் முற்போக்கான சிந்தனைகளுக்கு முற்றிலும் எதிரானதாக சரசுவின் வியூகங்களும், எதிர்பார்ப்புகளும், அமைந்திருக்கின்றன.  அதனால் மது – மீனா திருமணம் நிறைவேறுவது இழுபறியாக நீண்டுகொண்டே போகிறது. இவர்கள் முதலில் திருமணப்பதிவையாவது செய்துவைப்போமென்று கேட்க, அவர்கள் நாங்கள் வீடுதிருத்தவேண்டும், கடையைப் பெருப்பிக்கவேண்டுமென்று சாக்குப் போக்குகள் சொல்லித் தட்டிக்கழிக்கின்றனர்.  மது அடாவடிபண்ணும் தாயாரையோ, அப்பனையோ, குடும்பத்தையோ உதறிவிட்டுவந்து மீனாவைக்கைப் பிடிக்கும் துணிச்சலும் தைரியமுமுடைய தீவிரவகையிலான காதலன் என்று சொல்லமுடியாது. காதல் விஷயத்தில்  அவனது கோழைத்தனமும் அசமந்தப் போக்கும் நாளாதினத்தில் பார்வதியிடத்திலும் அவன்மேல் வெறுப்பை வளர்க்கின்றன. மது மீனாவீட்டுக்கு வருவதையும் கொஞ்சங்கொஞ்சமாக நிறுத்திவிடுகிறான் ஆயினும் அவனுக்கான மீனாவின் ஏக்கங்கள் மட்டும் குறைவதில்லை. ’அம்மம்மாவுக்கும் இப்போது வரவர மதுவைப்பிடிக்கவில்லை’ என்பது மீனாவையும் உள்ளூரக் கலங்கச்செய்றது.

பார்வதியின் தினப்படி இயக்கங்களின் நிரலைப்பார்த்தால் அது பன்முகத்தன்மையுடன் இயங்கும் தமிழ்க்கவியின் இயக்கங்களுடன் இசைந்துபோகின்றன. அவரை ஏலவே எழுத்துக்களாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாலும் அறிந்துவைத்திருக்கும் வாசகர்களுக்கு அது ஒன்றும் வியப்பல்ல. தமிழ்க்கவி விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர் என்பதோடு, தன் புத்திரர்கள் இருவரையும், ஒரு பெயரனையும் களத்தில் வாரிக்கொடுத்த எம் கண்முன் வாழும் தியாகத்தாய் என்பதை யாம் அறிவோம்.

புதினத்தின் ஆரம்பத்திலேயே  பார்வதி ‘இன்று எனக்குப் படப்பிடிப்பு இருந்ததால் அந்த விளையாட்டுப்போட்டி நிகழ்ச்சிக்குப்போக முடியவில்லை’ என்று கூறுவது  இவரை அத்துணை அறிந்திராத தமிழக, மலேஷிய, சிங்கை வாசகர்களுக்கு ஒருவேளை ‘ஓ……. இவர் ஒரு நடிகையோ, ஒப்பனைக்கலைஞரோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளரோ எனும் குழப்பத்தை லேசாக வரவழைக்கலாம்.

இனி ஒரு போதும் புதினத்தில் வரும் பார்வதியை தமிழ்க்கவியின்  பிரதியுருவென்றோ கொண்டாலும், பார்வதியெனும் பாத்திரச்சித்தரிப்பில் நிறைய அடக்கியே வாசித்திருக்கிறார், அவரது இயக்கச் சாங்கியங்கள் அனைத்தும் விளம்பப்படவில்லை. அருந்தலாக கொஞ்சம் போலுமே சித்தரிக்கப்பட்டுள்ளன.

ஓயாத அலைகள் இரண்டின்போது, விடுதலை இயக்கம் தம் நிர்வாக மையமாக வைத்திருந்த, தலைமைக் கேந்திரமான கிளிநொச்சி நகரத்தையும்  இராணுவத்திடம் இழக்க நேருவதோடு, பார்வதி குடும்பமும்  கிளிநொச்சியை விட்டு மெல்ல  வெளியேறிப்  புதுக்குடியிருப்பில் குடியேறுகிறது

‘புதிய போராளிகள் இணையும் செயலகம்’ என்று சந்திக்குச்சந்தி பதாகைகளை மாட்டிவைத்து ஆட்களைச்சேர்க்க இயக்கம் முயன்றுகொண்டிருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் கிராமசேவகர்கள்மூலம் வதிவாளர்களின் குடும்பவிபரப்பட்டியலைப்பெற்றுக்கொண்டு படைக்கு ஆட்களைப்பிடித்தனர். சிலர் தம் பிள்ளைகளை யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் படிப்பதற்கென்ற சாக்கில்கூட்டிக்கொண்டுபோய் மறைத்து வைத்தனர்.

சமாதானகாலத்தில் மாவிலாற்றில் இராணுவத்துக்கான  நீர்வழங்கல் வாய்க்காலை விடுதலைப்புலிகள்  மறித்து வைத்திருந்தார்கள். இராணுவம் எத்தனை இறங்கிவந்து கேட்டும் அவர்களோ விடுவதாயில்லை. இறுதியில்  இராணுவம் பாரிய எடுப்பில் அவர்கள்மீது போர்தொடுத்து அவர்களை அங்கிருந்து விரட்டியதென்பதுவும் அதனைத்தொடர்ந்த நிகழ்வுதான். அதன் விளைவாகவே விடுதலைப்புலிகளின் பிடி மூதூர், வெருகல், மணற்கேணிப் பிராந்தியங்களிலும்  விட்டுப்போனதுந்தான் நாம் அறிந்த வரலாறாக இருக்கிறது. ஆனால் விடுதலைப்புலிகளின் மாபெரும் இப்பின்னடைவை  இதுவெல்லாம் கிழக்குமாகாணப்போர் முடிந்து இனி வன்னியே அடுத்தபோர்க்களம் என்பதாலும் கட்டாயமாக ஆட்களைச்சேர்க்கும் இந்த ஏற்பாடுகள் நடந்தன என்று வெகு இயல்பாகவும் சுருக்கமாகவும்  தமிழ்க்கவி கடந்துசெல்கிறார். ஏன்……கருணாவைத் திட்டிக்கூடத் ஒரு வரியை அவர் இங்கே எழுதவில்லை.

விடுதலைப்புலிகள் வீட்டுக்கொரு பிள்ளையென்று வலுக்கட்டாயமாகப் பிடித்துசென்றதுபோது, குடும்பங்களிலிருந்த இளசுகளுக்கெல்லாம் விரைந்து மணம் முடித்து வைக்கப்பட்டன. திருமணங்கள் திடீரெனப்பெருகவும் பதிவுத்திருமணங்கள் மேலும் இயக்கம் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இவை எதுவுமே தமிழ்க்கவிக்குப் பிடிக்காதபோதும் அவர் எவரையும் இப்பனுவலில் காட்டிக்கொடுக்கவில்லை.

போர் முடிவின் இறுதிக்கட்டம். குடும்பங்கள் சிதறிப்போயிருக்கின்றன. யார் எங்கேயென்று எவருக்கும் தெரியவில்லை. பங்கர்களுக்குள் மாற்றுடைகளின்றி உயிர்தப்பிப் பதுங்கியிருப்பவர்கள் பசியில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். மது தனக்கு இழைத்த துரோகத்தாலும், வீட்டிலுள்ள உறவுகளுடனிருந்த உரசல்களாலும் வாழ்க்கை காதல் எல்லாம் வெறுத்து வீட்டைவிட்டு வெளியேறித் தன்னார்வத்தில்  இயக்கத்தில் சேர்ந்துகொண்ட மீனாவும் ஒரேயொருமுறைவந்து தலையைக்காட்டிவிட்டுச் சென்றுவிடுகிறாள். பார்வதியின் ஒரு தாய்ப்பறவைக்கேயுரிய தன் குஞ்சுகளை வல்லூறுகளிடமிருந்து காபந்துபண்ண வாஞ்சையும், பரிதவிப்பும் ஈரமாக அவரின் புதினம் முழுவதும் விரவியிருப்பதைக் காணலாம்.

மீனாவைத் தேடிக்கொண்டிருக்கும் பார்வதியிடம் ”என்னை நினைவிருக்கிறதா அக்கா” என்றபடி பதின்மூன்று ஆண்டுகாலத்தின்பின் அவரது ஆரம்பகாலப் போராளித்தோழி ‘வசந்தி’யைச் சந்திக்கின்றார். அவள் சற்றே இளைத்து முதுமை தட்டியிருந்தாள் எனும் மேலதிக விவரணம் அவர் ஒருவேளை  ‘தமிழினி’யாக இருக்கலாமோவென்று ஊகிக்க வைக்கிறது.

மெல்லமெல்ல இராணுவம் மக்களையும் போராளிகளையும் சூழ்ந்துகொள்கிறது. போராளிகள் ஆயுதங்களையும், சீருடைகளையும் வீசிவிட்டு ஓடுகிறார்கள். அவருடன் சேர்ந்து இயங்கிய பழைய போராளி புலியழகன் ஒரு பேருந்தை உடைத்ததால் கிடைத்த  ஒரு மூடை கோதுமைமாவை மிதியுந்தொன்றில் வைத்துக்கொண்டுவந்து பார்வதியிடம் தந்து  ‘ஆறுபேருக்கு புட்டவித்துத்தரவும் மீதியை யாருக்காவது கொடுத்துவிடும்’படியும் கேட்கிறான்.  ‘அப்போ கறிக்கு என்னசெய்ய” எனவும் ’இதோ எங்களிடம் பங்கரில் மீன்டின்கள் இருக்கின்றன, எடுத்துவாறேன்’ என்றுவிட்டு ஓடுகிறான். அவன் போன திசையில் எறிகணையொன்று விழுந்து வெடித்துக்கேட்கிறது, பின் அவன் திரும்பவே இல்லை.

தமிழ்க்கவி தமிழிலக்கணங்கள் தெரிந்தவர், பொருள் மயக்கம்தரும் வார்த்தைகளைப் பெய்பவரோ,  வழுவமைதியுடன் பனுவல்களையோ எங்கும் பொதிபவரோவல்ல. ஆற்றொழுக்கான நடையின் சொந்தக்காரர், செம்பகுதியும் பேச்சுத்தமிழில் பன்னப்பட்ட இப்புதினத்தின் இறுதிப்பிரதியையும்  அவரே செம்மைநோக்கிய பின்னால் அச்சேற்ற அனுமதித்திருப்பாராயின் பதிப்பில் இத்தனை எழுத்துப்பிழைகள் நேர்ந்திருக்காது, குறிப்பாக மாறிமாறியென வரவேண்டிய விடங்களில் மாரிமாரியென வந்திருப்பது மிகவும் உறுத்துகிறது.

’இனி வானம்’ வெளிச்சிரும்’, ’இருள் இனி விலகும்,’ ’ஊழிக்காலம்’, புதினங்கள் வரிசையில்  ‘இனி ஒரு போதும்’ அவரது நாலாவது புதினம். முழு ஈழ ஆயுதப்போராட்டத்தினதும் நிறைவான சாட்சியாகிய தமிழ்க்கவி நீண்டநாள் ஆரோக்கியமாக வாழ்ந்து இன்னும் சொல்லப்படாத தன் அனுபவங்களை எமக்குத்தரவேண்டும் என்பது தமிழர்களின் வேணவா.

*

இனி ஒரு போதும்: (புதினம்)

ஆசிரியர்: தமிழ்க்கவி

மேன்மை: வெளியீடு

பக்கங்கள் 212,

விலை: 650 இல. ரூபாய்கள்.

பொ.கருணாகரமூர்த்தி -ஜெர்மனி

பொ.கருணாகரமூர்த்தி

(Visited 208 times, 1 visits today)
 

2 thoughts on “‘இனி ஒரு போதும்’-நூல் விமர்சனம்-பொ.கருணாகரமூர்த்தி”

Comments are closed.